“வேட்டு போட்டாச்சு. பெருமாள் புறப்புட்டுட்டார். இன்னும் சித்த நாழில நம்ம வீதிக்கு வந்துடுவார். சின்னதா ஒரு கோலத்த போட்டுட்டு வான்னா, எவ்வளவு நாழி எழச்சு எழச்சு போட்டுண்டே இருப்ப. உள்ள போய் முகத்த அலம்பிண்டு தலைய சரி பண்ணிண்டு வா”
“தோ வரேம்மா” என்றபடியே சற்று தள்ளி நின்று போட்ட கோலத்தை ஒரு தடவை ரசித்துப் பார்த்து விட்டு, கதவருகே நின்ற அம்மாவிடம் பல்லைக் கடித்தபடியே, “ஏம்மா இவ்வளவு பெருசா வீதி பூரா கேக்கற மாதிரி கத்தற.. எனக்குத் தெரியாதா”
“ஏண்டி, நீயும் ராஜியும் போடாததையா உன் பொண்ணு போட்டுட்டா. ரெண்டு பேரும் மார்கழி மாசம் வீதியடைச்சுப் போடற கோலத்தப் பாக்க ஊரே திரண்டு வருமே”
பக்கத்தாத்து கோமு பாட்டி முட்டாக்கை இழுத்து விட்டபடியே எங்காத்து திண்ணைல உக்கார்ந்துண்டா. பாட்டிக்கு எண்பது வயசாச்சு. ஆனா இப்பவும் தன் வேலையைத் தானே பார்த்துண்டு சுறுசுறுப்பாக எப்பவும் இருப்பா.
”போடி கமலா, சீக்கிரம் போய் வேற புடவையும் மாத்திண்டு வா. இன்னிக்கிக் குதிரை வாகனம். தேர் முட்டி கிட்ட கிச்சாவாத்து திண்ணைல மொதல்ல போய் இடம் பிடிச்சுண்டா பெருமாள நன்னா சேவிக்கலாம். அங்க சித்த நாழி நிப்பார்.”
குதிரை வாகனத்துல பெருமாள் வரது கண்கொள்ளா காட்சியா இருக்கும். நான் வேகமா உள்ள போகத் திரும்பினபோது, எதுத்தாத்து ரெங்கன் மூச்சிறைக்க ஓடி வந்தான்.
“இன்னிக்கி நம்ம வீதிக்குப் பெருமாள் வரமாட்டார்.. முக்காத்துப் பிச்சி மாமி செத்து போய்ட்டா” என்றபடியே தகவலை மற்றவர்களுக்கும் சொல்ல ஓடினான்.
“ரெங்கா என்னப்பா சோதனை. வயசான கிழவியெல்லாம் விட்டுட்டு சின்னவள கூட்டிண்ட்டியே” என்றபடி பாட்டி பிச்சி மாமியாத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.
“என்னடி சொல்றான் இவன்” என்றபடியே கதவைப் பிடித்தபடி அப்படியே திண்ணையில் உட்கார்ந்தாள் அம்மா.
“கார்த்தாலதானேம்மா பாத்துட்டு வந்த”
அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நிலை குத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள். அம்மா எதற்கும் சுலபமாக கலங்குபவள் இல்லை. சற்று திடமானவள்தான்.
“வா உள்ள போகலாம்” என்று அவள் கையைப் பிடித்தேன். எப்பவும் மறுப்பவள் இன்று கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
கூடத்துத் தூணில் சரிந்தபடியே அமர்ந்தவள் வாய், ராஜி, ராஜி என அரட்டியபடி இருந்தது. கொஞ்ச நாழி முன்னால கோமு பாட்டி சொன்னாளே அந்த ராஜிதான் பிச்சி மாமி. ரொம்ப வருஷமா எல்லாரும் பிச்சி மாமின்னு கூப்டே பழக்கமாயிடுத்து.
அம்மாவின் பால்ய சினேகிதி. எப்பலேர்ந்து இந்தப் பிச்சி மாமி பித்து பிடிச்சவளாட்டம் ஆயிட்டானு பல தடவ கேட்டும் அம்மா கிட்ட இருந்து சரியா பதில் வந்ததில்லை.
இன்னிக்கித்தான் அம்மா சென்னைல இருந்து வந்தா.. சாரங்கன் மாமா ரெண்டு வாரம் முன்னால இறந்து போய் காரியம்லாம் முடிஞ்சு கார்த்தால வந்தா. வந்து காபி குடிச்சு குளிச்ச உடனயே “ராஜிய பாத்துட்டு வரேன்”னு கிளம்பிட்டா.
“என்னம்மா உன்னோட ஆருயிர் சினேகிதியப் பாக்காம பத்து நாளா தவிச்சுப் போய்ட்டயா” என்ற என் கேலியைப் பொருட்படுத்தாமல் கிளம்பிப் போய்ட்டா.
இப்ப திடீர்னு ராத்திரி அவ உயிரோட இல்லன்னு சொன்னா அதிர்ச்சியாத்தானே இருக்கும். என்ன வேலை இருந்தாலும், தன் சினேகிதியுடன் ஒரு மணி நேரமாவது செலவிடாமல் இருக்க மாட்டா அம்மா. இது எனக்கு நினைவு தெரிந்த நாளா நடக்கிறது… அப்பேற்பட்ட சினேகிதியின் இழப்பு கண்டிப்பாக இடியாகத்தான் இறங்கியிருக்கும். அப்பாவுக்கு கேன்சர் வந்தபோதும், ஆறு மாதத்தில் அவர் இறந்தபோதும் அதைத் தைரியமாக எதிர் கொண்டாள்.. அதே போல் இதிலிருந்தும் மீண்டு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன், “எழுந்திரும்மா, அவாத்துக்குப் போய்ட்டு வந்துடலாம்”
“இல்லடி நான் வர மாட்டேன். என் ராஜி கூட நா கார்த்தாலதான் பேசினேன். அவள இந்த கோலத்துலப் பாக்க எனக்கு இஷ்டமில்லை”
பிச்சி மாமி அம்மாவிடம் மட்டும்தான் பேசுவாள். வேறு யார் என்ன கேட்டாலும், சில சமயம் வெறும் சிரிப்பு அல்லது வெற்றுப் பார்வைதான்.
எவ்வளவு சொல்லியும் அம்மா கேக்கவே இல்லை. அவாத்துலயும் சொல்லி அனுப்பிட்டு காத்திருந்து பாத்துட்டு கடைசில பாடிய எடுத்துட்டா.
அம்மா ரெண்டு நாள்ல சரியாய்டுவான்னு பார்த்தா. எப்பப் பாரு ராஜி ராஜின்னு ஒரே புலம்பல். ஜுரமே வந்துடுத்து. ஜுர மாத்திரையக் கொடுத்து தூங்க சொல்லிட்டு, வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து படுத்தேன். நடு ராத்திரி இருக்கும், ராஜி ராஜின்னு அம்மாகிட்ட இருந்து குரல். அடுத்தாப்ல, “அண்ணா ராஜி உன் கிட்டயே வந்துட்டாண்ணா, ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்கோ, ராஜிம்மா போறுண்டி இவ்வளவு நாள் பிச்சியா நடிச்சது.”
“அம்மா அம்மா என்னம்மா சொல்ற” என்றதும் மலங்க மலங்க விழித்தாள். உடல் அனலாய் சுட்டது. இன்னொரு மாத்திரையை கொடுத்துட்டு அவ தல மாட்லயே உக்காந்திருந்தேன். கார்த்தால பால்காரன் விடாமல் மணி அடிக்கும் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தேன்., அம்மாவைத் தொட்டு பார்த்தேன். வியர்த்து விட்டிருந்தது.
ஒரு வாரத்தில் உடல் சரியாகி கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாலும் அம்மா முன்ன மாதிரி இல்ல. அன்னிக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் மொட்ட மாடில காத்தாட உட்கார்ந்திருந்தப்ப மெதுவா அம்மா கிட்ட, “அன்னிக்கி ஜுர வேகத்துல என்னன்னவோ உளறினமா, அதான் என்னன்னு கேக்கலாம்னு”
“என்ன உளறினேன்”
“இல்ல, அண்ணா, ராஜி உன்கிட்ட வந்துட்டா அப்டி இப்டின்னு, ஒண்ணும் புரியல”
“உளறலடி உளறல, எல்லாம் நெஜம். என் ராஜியே போய்ட்டா. உசிருக்கு உசிரானா அண்ணாவும் போய்ட்டான். இனிமே சொன்னா என்ன, சொல்றேன்.”
“ராஜி எனக்கு சினேகிதி மட்டும் இல்லை, அவா நமக்கு தூரத்து சொந்தம். அண்ணாவும் அவளும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டா. என்கிட்டத்தான் ரெண்டு பேருமே முதல்ல சொன்னா. எனக்கா ரொம்ப சந்தோஷம். ஆருயிர்த்தோழியே மன்னியா வந்தா, இருக்காதா பின்ன, ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமா இருக்கும். அவ அவ்வளவு அழகு”
நான் நிமிர்ந்து பார்த்தவுடன், “நீ பாக்கறச்ச பித்து பிடிச்ச கோலத்துல எல்லா அழகும் மறஞ்சு போச்சுடி”
“ரெண்டாத்துலயும் சம்மதம். நிச்சயம் பண்ணணும்கிற நேரத்துல, ஊர்லேர்ந்து வந்த ராஜியோட தாத்தா, ” ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாமா ” என்று ஆரம்பித்தார். ராஜியோட அப்பா, “மனப் பொருத்தம் இருக்கு, சொந்த பந்தமுமாச்சு. அது போறாதா”
“அதெப்படிடா, உங்கம்மா நேக்கு அக்கா பொண்ணுதான், ஆனாலும் எட்டு பொருத்தமும் அமஞ்சதுனாலதான் கல்யாணம் பண்ணிண்டேன் தெரியுமோன்னோ. ஏன்? நீயும் அத்தை பொண்ணதான் கல்யாணம் பண்ணிண்ட, உனக்கு ஜாதகம் பாக்கலியா”
“இல்லப்பா அவா ரெண்டு பேரும் இஷ்டப்பட்டுட்டா. அதுனாலதான் நான் மத்த ஏற்பாட ஆரம்பிச்சேன். அதுக்கென்ன அவாள்ட்ட பிள்ளையோட ஜாதகம் வாங்கி பாத்துடலாம்”
ஜாதகம் பார்த்ததில், பொருத்தமும் சரியில்லாதது மட்டுமில்லாமல் பிள்ளை ஜாதகப்படி அவனுக்கு ரெண்டு தாரம் உண்டுன்னும் ஜோசியர் சொல்லிட்டார். தாத்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேனுட்டார். ராஜியோட அப்பா பெண்ணின் முக வாட்டத்தைப் பார்த்து, அப்பாவிடம்,
“பூ கட்டி வேணா பாக்கலாமா”
“ப்ரகஸ்பதி, உனக்கு ஒன்ணும் புரியாதா. அதான் ஜோஸியன் தெளிவா சொல்லிட்டானே. அந்த பிள்ளய கட்டிண்டு ஒண்ணு இவ அல்பாயுசுல போய்டுவா. இல்லன்னா இவ இருக்கறச்சயே அவன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிண்டுடுவான். பெத்த பொண்ணுமேல அக்கறை இருந்தா இப்படி பேசுவியாடா. போ போ வேற நல்ல மாப்பிள்ளையா பாரு”
அப்பா பேச்சை தட்ட முடியாமல் அவரும் வேறு வரன் பாக்க ஆரம்பித்தார். ராஜிக்கு என்ன பண்றதுன்னே புரியல. பயந்த சுபாவம். எதுத்துப் பேசிப்பழக்கமில்லை.
என்ன பண்றதுன்னு புரியாம தவிச்சா. அதுலேர்ந்து தப்பிக்க போட்டதுதான் இந்த பிச்சி வேஷம். பைத்தியக்காரப் பொண்ண எவன் கட்டுவான். அப்ப ஆரம்பிச்சது கட்டை சாயறவரைக்கும் இந்த நாடகம் தொடர்ந்துடுத்து. இதுக்கு ஒரே சாட்சியா நான். அவ தல விதி அப்படி ஆயிடுத்து. தினமும் நான் அவளோட செலவிடற சில மணி நேரங்கள்தான் அவளுடைய சந்தோஷம். எல்லாம் முடிஞ்சு போச்சு இப்ப.” என்றபடி கண்களை துடைத்தபடியே எழுந்தாள் அம்மா.
ரெண்டு பெண்டாட்டி உண்டு என்று ஜோசியரால் சொல்லப்பட்ட சாரங்கன் மாமா கடைசிவரை கட்டை ப்ரம்மச்சாரியாகத்தான் இருந்தார்.