இதுவரை…….இடைக்காலச் சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்தபோது சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட வாணகப்பாடி நாட்டு சிற்றரசன் வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான்.
புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதனமான இரத்தின மாலையையும் ஈழத்தில் மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர் பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்குத் தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத் தீவுக்கு வருகிறான்.
வந்தியத்தேவன் மணிமகுடமும் இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டெடுத்து வந்து அவர்களின் கலத்தில் ஏறியதும் , கடல் கொள்ளைக்காரர்கள் கைகளில் சிக்குகிறான். அவர்கள் கைகளிலிருந்து சாதுர்யமாக தப்பித்த வந்தியத்தேவனுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன், மணிமகுடமும், இரத்தின மாலையும் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறித் தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களுடன் திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.
இனி……………………..
அத்தியாயம் 12. நந்தினியின் சபதம்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு..
நந்தினி, அமர புஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன் மற்றும் அவர்களைச் சேர்ந்த வீரர்கள் கூடிய கூட்டம் ஒன்று, ராசிபுரம் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில், இரவு நடுசாமத்தில் கூட்டப்பட்டிருந்தது. அவர்கள் யார் வருகைக்காகவோ காத்திருந்தினர்போல் தோன்றியது.
ஒரு சலசலப்பு! வெளியில் யாருடைய வருகைக்காகவோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் உள்ளே ஓடிவந்து “வந்துவிட்டார்கள்! வந்துவிட்டார்கள்!!” என்றான்.
உள்ளே ரவிதாசன் முன்வர கருத்திருமனும், சோமன்சாம்பவானும் ஓர் நீண்ட பெரிய பெட்டியைத் தூக்கி வந்து கீழ் வைத்து அவர்கள் முன் நின்றார்கள்.
“மகாராணி!உங்கள் முன்னோர் பாதுகாத்து வந்த விலை மதிக்கமுடியாத மணிமகுடமும் இரத்தின ஹாரமும் இதோ! பல எதிர்ப்புகளை சமாளித்து எடுத்து வந்துள்ளேன்” என்று பெருமிதம் பொங்கக் கூறினான் ரவிதாசன். அவன் இருகண்களிலும் மின்னல் பளிச்சிட்டது.
இதற்காகவே கொண்டு வரப்பட்டிருந்த பட்டுக் கம்பளம், நந்தினி முன் விரிக்கப்பட்டது.
கருத்திருமனும் சோமன்சாம்பவானும் மிகவும் ஜாக்கிரதையாக பெட்டியை அவள் முன் வைத்தனர். ரவிதாசன் அதில் பதிந்திருந்த மீன் சின்னத்தைத் தன் அங்கவஸ்திரத்தால் துடைத்தான்.
“மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்.அதற்கான பரிசு உரிய காலத்தில் கிடைக்கும்” என்றாள்.
பக்கத்திலிருந்த பட்டுப் பையிலிருந்து வீர பாண்டியன் அவளிடம் ஒப்படைத்திருந்த பெட்டியின் சாவியை எடுத்தாள். ஒரு கையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், சாவியை பொருத்திப் பூட்டைத் திறக்க முயன்றாள்.
முடியவில்லை!
சாவி பூட்டின் துவாரத்தைவிட பெரியதாய் இருப்பதை உணர்ந்தாள்.
“என்ன இது ரவிதாசன் அவர்களே? திறக்க இயலவில்லையே? விளக்கம் தேவை” என்றாள்.
ரவிதாசன் “என்னிடம் சாவியைக் கொடுங்கள்” என்று வாங்கித் திறக்க முயன்றான்!
பயனில்லை! அவனும் திகைத்தான்!
நந்தினி “நல்லது. ஏதோ தப்பு நடந்திருக்கிறதுபோல் தோன்றுகிறது. பூட்டை உடையுங்கள்” என்று கணீர் குரலில் கட்டளையிட்டாள்.
பூட்டு உடைக்கப்பட்டது.
பெட்டியை நந்தினி திறந்தாள்.
உள்ளே..
‘மணிமகுடமும் இரத்தின ஹாரமும்’ இல்லை!
அவைகளுக்குப் பதிலாக..
‘நிறைய கற்கள்’ இருந்தன!!!!
நந்தினி அதிர்ச்சியால் மயங்கிக் கீழே விழுந்தாள்.
ரவிதாசன் கண்கள் சிவந்தன. கருத்திருமன் விரல்களை நெறித்தான். சோமன்சாம்பவன் தலையிலடித்துக் கொண்டான்.
அமரபுஜங்கன் ஓடிச் சென்று நந்தினி முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்ற எல்லோரும் “அய்யோ, எப்படி?” என்று புலம்பினார்கள்.
நந்தினி கண் விழித்தாள். பற்களை நறநற என்று கடித்து “இது வந்தியத்தேவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும். நன்றாக நம்மை ஏமாற்றிவிட்டான்” என்றாள்.
ரவிதாசன் ‘மஹாராணி..” என்று ஆரம்பித்தான்.
அவனை ஆவேசமாகப் பார்த்த நந்தினி,
“நீங்கள் இங்கிருந்து போனதிலிருந்து என்னவெல்லாம் நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?என்று அடங்காத கோபத்துடன் ரவிதாசனை வினவினாள்.
ரவிதாசன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“ஆக, நீங்கள் சென்று அதனை எடுத்து வரவில்லை..வந்தியத்தேவன் எடுத்து வந்ததை அவனிடமிருந்து பறித்து வந்திருக்கிறீர்கள்.. அப்படித்தானே?”
ரவிதாசன் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தோன்றாமல், ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
நந்தினி அவனை மேலும் பேசவிடாமல் மறித்து “அப்படி பறித்து வந்ததும் வேறு.. சரி.. வந்தியத்தேவன் இறந்ததை உங்கள் கண்களால் பார்த்தீர்களா?” என்றாள்.
“இல்லை, ஆனால்..”என்று ரவிதாசன் முடிக்கவில்லை,
நந்தினி மீண்டும் அவனைத் தடுத்து, “கைதேர்ந்த சோழக் கடற்படை வீரர்கள் அவன் உயிரை மீட்டிருக்கலாம்! நம் குல உயிர்நாடியான பொக்கிஷங்களை நம்மிடமிருந்து அபகரித்து எதிரி சோழர்களிடம் அவன் சேர்ப்பித்து விட்டிருக்கக்கூடும். அவன் நம் கையில்தான் உயிரை விடவேண்டும் என்பது விதி. வந்தியத்தேவா! மீண்டும் எங்களை முட்டாளாக்கி விட்டாய்! நீதான் எங்கள் முதல் எதிரி. சோழ வர்க்கத்தின் கதையை நாங்கள் முடிக்குமுன் உன் உயிர் எங்களால் எடுக்கப்படும். இது நாங்கள் எடுக்கும் புது சபதம்” என்று அனல் பறக்கக் கூறினாள்.
நந்தினி தன் கையை நீட்டினாள்! எல்லோர் கைகளும் அவள் கையோடு இணைந்தன!
(அடுத்த இதழில் முடியும்)