எனக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பட்டியலில், நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்பதும், நிம்ஹான்ஸில் படித்த மேல் படிப்பும், என் குரு, டீச்சர்களும் அடங்கும். ஊக்கமும் , கற்றலும் , பொறுமைக்குப் பஞ்சமே இல்லாத வேலை பார்த்த இடமும் பெரிய ஆசீர்வாதங்களே! க்ளையன்ட் (மனோதத்துவத் துறையில் நோயாளிகளை க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே! இவர்களின் துணிவான மன உறுதியை நான் “ஜான்சி கீ ராணி” என்பேன்.
ஒரு முப்பது வயதான “ஜான்சி கீ ராணி” மாயாவின் பயணத்தை உங்களிடம் விவரிக்கப் போகிறேன்.
மாயா என்னை மருத்துவ நிலையத்தில் சந்தித்தபோது “டாக்டர் ! என் தோள் பட்டை, கை, பாதங்களில் எப்போதும் வலி இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, மாலை வேளையில் அசதி அதிகமாக வாட்டுகிறது. தினசரி வேலைகளை முடிப்பதற்குள் சோர்ந்து போகிறேன் . அதனால் வேலைகளை முடிக்கவும் நேரமாகிறது. சமீப காலமாக எதற்கெடுத்தாலும் சுள் என்று கோபம் வருகிறது. சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் மறந்தே விட்டது. ஞாபக மறதியும் அதிகமாகிறது. ஒருவேளை டென்ஷனாக இருக்குமோ என்று இவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்போது வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை வருகிறது. வீடே போர்க்களம் போல் தோன்றுகிறது . இந்த வலிகளை என்னால் தாங்க முடியவில்லை . ஆகையால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறேன்” என்று கூறினாள்.
எட்டு வருட கல்யாணத்திற்குப் பிறகு விவாகரத்தைப் பற்றி யோசிக்கிறாள். காரணம்.. வலி .. வலிகள்…
வலி என்பது, தானாக வருவது அல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை நன்கு அறிந்துகொண்டு ஒரு ஹோலிஸ்டிக் வாழ்க்கையை மேற்கொண்டால்தான் வலி நம் வசப்படும். இல்லையேல் நாம் வலியின் பிடியில் வீழ்வோம். ( வலியின் அடிமை? )
மாயா தன் கணவர் கோபால், குழந்தைகள் ரோஹித் ( 8 வயது), ரோஹன் (6 வயது) , மாமனார், மாமியாருடன் இருக்கிறாள். அவள் மாமனார், தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி வெளியூர் பயணம் செய்வதால், மாமியார் வீட்டைக் கவனிக்கிறார். இவர்கள் குடும்பமோ , சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கும் குடும்பம். ‘வீட்டுப் பராமரிப்பு-கணவர்- குழந்தை இவர்களைக் கவனித்துக் கொள்வது என்று இருப்பது தான் பெண்களின் கடமை’ என்று நினப்பவர்கள். அவள் கணவர் கோபாலும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற அபிப்ராயம் உடையவர். கோபால், எம். பி .ஏ. முடித்து வேலையில் இருக்கிறவர். மாயாவின் தந்தை பெரிய தொழில் அதிபர். அவளுடைய செல்வாக்கைப் பார்த்துதான் கோபால் அவளைத் திருமணம் செய்ய எண்ணினார். கல்யாணமானதும், மாயாவின் அப்பா நிறுவனத்திலேயே கோபால் வேலையில் சேர்ந்தார். கோபால் நிதானமாகச் செயல்படுபவர். அவருக்குத் தன் மாமனாரின் வேகம் சற்றும் பிடிக்கவில்லை.
மாயாவின் தந்தைக்கு வயது 60. இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். எல்லாம் டான்-டான் என்று இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர். தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் இப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர் .அப்பாவின் இந்தக் குணங்கள் மாயாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு ஒரு புதிய பயம் வந்து சேர்ந்தது. அவள் அம்மா பொறுமையின் சிகரம். தன் கணவன் சொன்னபடி நடப்பவள். தன் இன்னல்களை டைரியில் மட்டும்தான் எழுதுவாள். மாயா தன் அம்மாவை அடிக்கடி வியந்து பார்ப்பாள். அவளுடைய ஒரே அண்ணனுக்கு அப்பாவின் வழிமுறை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பா ஆட்சேபிக்கும் அத்தனையும் அவனுக்குப் பிடிக்கும் – நீள முடி, ஜிப்பா, கோலாப்பூரி செருப்பு, ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு இன்னும் எத்தனையோ. கடைசியில் அவரை எதிர்த்துக் கல்யாணம் செய்து, அவர் உறவை அறுத்துக் கொண்டான். ஆனால் மாயாவிடம் வைத்திருந்த பாசத்தினால் அவளிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தான் . மாயாவுக்கு அண்ணனின் பொது சேவை, பரிவு எல்லாம் பிடித்திருந்தது.
மாயா, தன் அப்பா சொற்படி ஆர்கிடெக்ட் படித்து அவர் நிர்வாகத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாள். கோபாலைத் திருமணத்திற்கு சரி என்று சொன்னதும் அவரே. அப்பாவைப் பொறுத்த வரை கோபால் பணத்திலும், அந்தஸ்த்திலும் மிகச் சாதாரணம். இதனால், மாயாவுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கூடும் என எண்ணினார். கோபாலைத் தன் நிறுவனத்தில் சேர்த்தது மாயாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவளைப் பொறுத்த வரை, ‘ ஒருவர் தன் முயற்சி , திறமைகளால் முன்னேற வேண்டும்; சிபாரிசினாலோ, மற்றவர் தோளிலில் ஏறியோ அல்ல’ என்ற கொள்கையில் தீர்மானமாக இருந்தவள்.
இப்படி, பல சமயங்களில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை – அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படிச் சேமித்தால், நாளடைவில், அதன் உறுத்தலை உணர்த்தவே உடலில் எங்கேயாவது வலி தோன்றலாம். அல்லது இருக்கிற வலியும் அதிகமாகலாம்.
மாயாவின் பிறந்த வீடும் , புகுந்த வீடும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தன. அவளும் கணவன் வீட்டிற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் பல முறை தன் பிறந்த வீட்டு வழக்கங்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு வீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஆரம்பித்தாள்.அப்போதுதான் அவளிடம் முரண்பாடு நுழைந்து விட்டது.
ஒப்பிட்டு-முரண்பாடு செய்வது சஞ்சலம் உருவாக்கும் விதைகளே.
கல்யாணமாகி மூன்று மாதங்களில், அவள் மாமனார் அவர்கள் வீட்டை டிஸைன் செய்யச் சொன்னார். உற்சாகமாகத் தன் ஆர்கிடெக்ட் வேலையைச் செய்து முடித்தாள். அவர்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினாள். ஆனால் ஒரு பொது இடத்தில், மாமனாரும், கோபாலும் இதைக் கிண்டல் செய்து பேசினார்கள். இது மாயாவின் மனதைக் காயப்படுத்தியது. யாரிடம் இதைச் சொல்ல முடியும் ? இதையும் தன் மனத்திலேயே உள் வாங்கி வைத்துக் கொண்டாள்.
குழந்தைகள் பிறந்தபின், கண்டிப்பான பராமரிப்பைக் கடைப்பிடித்தாள். மாமனார், மாமியாரோ கண்டிப்பே கூடாது என்றார்கள். வளர்ப்பு முறை வேறுபாடு மாயாவை நச்சரித்தது. மாமியார்தான் சமைப்பார்; எப்போதும் குழந்தைகளுக்குப் பிடித்த வகைகள் செய்வார். அவர்களிடமே குழந்தைகள் இருந்தார்கள். இதனால் மாயாவுக்கு வருத்தம், ஏமாற்றம். வேறு வழியின்றி மாயா வீட்டின் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.
மாயாவின் அப்பா மாயாவைத் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்று விரும்பினார். அவளுக்குப் பிடித்த ரிசர்ச் துறையில் பணி செய்யவேண்டும் என்றும் திட்டமிட்டார். கோபாலிடமும் , அவள் மாமியாரிடமும் கூறி அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அலுவலகத்தில் இதை வரவேற்ற கோபால் வீடு திரும்பியதும், ஏளனமாகப் பேசி, மாயாவை வீடு-கணவர் என்று இருக்கச் சொன்னார். அவள் மாமியாரும் இந்த அபிப்பிராயத்தையே ஆமோதித்தாள். மாயாவுக்கு தலை கிறுகிறுத்தது. வலியின் வீரியம் அதிகமானது.
உடலின் வலியை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அதைச் சொல்லவும் முடியும், ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள் . ஆனால் மனம், உணர்ச்சி என்று ஆரம்பித்தால் பல கோணங்களில் போய்விடும். இதனாலேயே, நம் மூளையும் சூழலுக்கு ஏற்றவாறு மன பாரத்தை – உணர்ச்சிகளை உடல் வலியின் வடிவில் தெரிவிக்கும். (உணர்ச்சிகளைத் வெளிப்படுத்துவது என்றும் உசிதம்).
மாயா வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாள். ஆனால் அவளால் அவற்றைக் சரிவரச் செய்ய முடியவில்லை. வலியின் வேகம் அதிகமானது. வேலை செய்யச்செய்ய வலி அதிகரித்துக் கொண்டுவந்தது. கோபம் அதிகரித்தது. வலி தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.
வலி தனியாக வருவது இல்லையே; உடல்-மனம்-சூழல் எல்லாம் இணைந்ததுதானே!
இந்தச் சூழ்நிலையில்தான் மாயா எங்களை அணுக நினைத்தாள். எங்களிடம் வருவதற்கும் மிகச் சங்கடப் பட்டாள். ஒருவேளை தன் மேலேயே தவறு என்றாகி விடுமோ என்றும் பயந்தாள். கோபால் சொல்வது போல், தான் “சாக்கு மூட்டையா”? என்ற எண்ணம் வேறு அவளை அலைக்கழித்தது. அவளுடைய அப்பாவும் மனோ தத்துவ நிபுணர்களிடம் செல்வது ‘பலவீனம்’ என்றே நினைத்தார். ( உண்மையில் மனோதத்துவக் கல்வியில் இப்படி உதவி கேட்பதைத் தான் தைரியம் என்று சொல்லுவோம்)
பாவம் மாயா! என்னிடம் ஏழு முறை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வராமல் பிறகு ரத்து செய்து விட்டாள்.
கடைசியில் அவள் வலி அவள் தயக்கத்தை மீறி எங்களிடம் வரச் செய்தது. தயக்கத்துடன் வந்தவளிடம், அவள் வலியைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். எந்தத் தகவலையும் துருவிக் கேட்கவில்லை. அவள் போக்கில் சென்றேன். ஆறுதல் அடைந்தாள்.
மறுபடியும் வந்தாள். இந்தத் தடவை அவள் வீட்டின் நிலவரத்தைப்பற்றி மேலும் அறிந்தேன்.
வலி என்பது தனியாக எங்கிருந்தோ வருவது இல்லையே! நம் கண்ணோட்டங்களால் நம் சூழலை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களையும், சூழ்நிலைகளைக் கையாளும் விதங்களையும் அறிவதனால் வலியைக் கையாளுவதும் புரியும். இவைகளே வலியின் சிகிச்சைக்கும் உதவும்.
மாயாவுக்கு ஒரு சந்தேகமும் உதித்தது. வேற்று மனிதரிடம் குடும்ப விஷயம் சொல்லலாமா? நியாயமான சந்தேகம். அவளிடம், எங்கள் தொழில்முறையை விவரித்தேன்: சுற்றியிருக்கும் தகவல்கள் நம் சிகிச்சையின் கருவிகளாகும். அவள் விவரித்த வலியை ஒப்பிட்டு உதாரணங்கள் காட்ட, புரிந்து கொண்டாள். மேலும், இங்கு பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்பதை வலியுறுத்தினேன். நம்பிக்கை மலர்ந்தது.
சில நரம்பியல் மாத்திரைகள் – உரையாடல்கள் – மேலும் சில ஹோம் வர்க் என்று தொடங்கினோம். சில வாரங்களில் அவளுடைய அசதி நன்றாகக் குறைந்தது, எரிச்சல், கோபம் அவள் கட்டுப்பாட்டில் வந்தது. மெதுவாகச் சிரிக்கவும் ஆரம்பித்தாள்.
அடுத்த கட்டமாக, மாயா-கோபால் உறவு நிலையை மையமாக வைத்து இருவரையும் இணைந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்பதால் அதைப்பற்றி நிறையப் பேசினார்கள். அனுகூலமாகத் தொடங்கியது, கணவன்-மனைவி, பெற்றோர் என்ற உறவு முறையைப் பற்றி எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்கிறேனோ என்று கொஞ்சம் கூச்சத்திலும் ஆழ்ந்தார்கள்.
பிறகு மாயா சுதாரித்து, கோபாலைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்தாள். கோபாலும் உரையாடினார். இந்த உரையாடலின் போதுதான் கோபாலுக்குச் சமைக்கும் திறனும், மாயாவிற்குப் பாடும் திறனும் இருக்கின்றன என்பதை இருவரும் உணர்ந்தார்கள். விஷயங்களைப் பகிர்ந்ததில், நெருங்கி நடப்பது, முகம் பார்த்துப் பேசுவது என, பல விதங்களில் நெருக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்த நிலையில், மாயா, கோபால், தன் தந்தைபோல் இருக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறினாள். அதுபோல கோபாலும் சமையலில் தன் அம்மாவின் கை மணம் மாயாவுக்கு இல்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்தார். இருவரும், பல ஒப்பீடு முரண்பாடுகளை விவரித்தார்கள்.
வசதியான வாழ்க்கை மீது தனக்கிருந்த ஆசையே மாயாவைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம் என்று கோபாலும் ஒப்புக்கொண்டார், அவளின் பணக்கார வாழ்க்கை அவள் மீது ஒரு பொறாமையை உண்டு பண்ணியது. இதனால் அவளை அடிக்கடி கோபித்துக் கொண்டார். மாமனார் மேல் உள்ள அச்சங்களையும் இவளிடமே காட்டினார். அவரிடம் சரி சொல்வது, பிறகு மாயாவிடம் மறுப்பு தெரிவிப்பது என்றே தான் நடந்துகொண்டதாக கோபாலும் ஒப்புக் கொண்டார். மனம் திறந்து பேசியதில், ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாயாவின் அண்ணனும் இதை வெளிப்படையாகப் பாராட்டினான். தன் பங்குக்கு ஏதேனும் செய்ய விரும்பினான். கோபால் மாயா இருவருடனும் கலந்துரையாடி, அவர்களை விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்தான். ரோஹித்- ரோஹனைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.
திரும்பி வந்ததும், படுத்த படுக்கையாக இருந்த மாமனாரைத் தான் இதுவரை கவனிக்கவேயில்லை என்பதை மாயா உணர்ந்தாள். மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வதும் தனக்குச் சந்தோஷமான வேலை என்பதை உணர்ந்து செய்ய ஆரம்பித்தாள். ஆசை, பாசம், பராமரிப்பு கூடியது .கோபதாபங்கள் வெளியேறின. வலியும் குறைந்தது,
எதிர்பாராமல், கோபாலின் உடல் நிலை சரிந்தது.டாக்டரைச் சந்தித்தார்கள். பரிசோதனையில் தீங்கற்ற டூமர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. டூமரை எடுத்து விடுவது நன்று என்ற முடிவை அனைவரும் ஆமோதித்தார்கள். வெளி நாட்டில் 3 மாதம் சிகிச்சை என்பதால் குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் இருப்பது என்று முடிவானது. மாயாவுக்குக் கஷ்டம் என்று கோபால் வேறு ஏற்பாடு செய்ய நினைத்தார். மாயாவுக்கு இதில் உடன்பாடில்லை., “நான் வருகிறேன்” என்பதை உறுதியுடன் தெரிவித்தாள். கோபாலுடன் சென்றாள். மாயாவின் அண்ணனும், தந்தையும் தங்கள் பங்குக்குப் பல உதவிகள் செய்தனர்.
திரும்பியதும், மாயா என்னைப் பார்க்க வந்தாள்.
வலி தனக்கு நன்றாகவே குறைந்துவிட்டதால் வேலைகளை வெகுசீக்கிரமாகவும், நன்றாகவும் செய்ய முடிகிறது என்றாள். மகிழ்ச்சி பொங்க, விமான நிலையத்தில் தன் மாமனார்-மாமியார் அவள் அம்மா-அப்பாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்ததைச் சொன்னாள். மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்த தன் அண்ணன் – அப்பா இருவரும் சேர்ந்து அருகில் நிற்பதையும் பார்த்துக் கொண்டாடியதையும் சொன்னாள். கோபாலின் டூமர்-சிகிச்சை – கவனம்- ரிக்கவரீ தன்னையும்-அவரையும் இன்னும் நெருக்கம் ஆக்கியதைக் குதூகலமாகச் சொன்னாள்.
வலியின் மாத்திரையும் தன் பங்குக்கு வேலை செய்தது; அதைவிட மாயா தனக்குள்ளும், தன்னைச் சுற்றி உள்ள இன்னல்களையும் கவனித்துத் தீர்வு செய்ததில் அவள் வலி அவள் கைவசத்தில் வந்தது. இதனால் “ எந்தச் சூழ்நிலையிலும் வலியைச் சமாளிக்கும் தைரியம் எனக்கு வந்துவிட்டது. என் வலியை நான் வென்றிடுவேன்” என்று சொல்லி விடை பெற்றாள் மாயா – ‘ஜான்சி கீ ராணி’
மாயாவை இப்படிப் பார்ப்பது நல்ல ஆசீர்வாதம் தானே ? என்ன சொல்கிறீர்கள்?
மாயாவின் பரிமாணத்தை எங்கள் பாஷையில் ‘ரெஸிஸ்டன்ஸ் ட்ரான்ஸ்ஃபரன்ஸ்’ என்று சொல்வோம்.
பல முறை, “அட, எப்படிச் சொல்வது”? என்று இருந்தால், அது வலியாகத் தோற்றம் கொள்ளலாம்!
வலியின் வலி அதிகமாவதும் குறைவதும் நம் உணர்வுகளால்!
உடல் – மனம் – மூளை- சூழல் இவற்றில் நாம் கவனம் செலுத்துகையில் வலி நம் வசம்! இல்லையேல், வலியின் அடிமை நாம்! ( அது நமக்குத் தேவையில்லை).