
சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் வொண்டர் உமன்.
ஆங்கிலக் கார்ட்டூன் கதைகளிலிருந்து படமாகத் தாவிய கதைதான் வொண்டர் உமன்.
ஆங்கிலத்தில் இரண்டு வகைக் கார்ட்டூன்கள் உண்டு. ஒன்று மார்வெல் காமிக்ஸ் . மற்றொன்று டிசி காமிக்ஸ்.
டிசி உலகத்தின் நாயகர்கள் சூப்பர் மேன், பேட் மேன், வொண்டர் உமன் போன்றவர்கள். இவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று உருவகிக்கப்படுவார்கள். வார்னர் திரைப்பட நிறுவனம் டிசி காமிக்ஸின் உரிமைகளை வாங்கித் திரைப்படங்கள் எடுக்கிறது.

மார்வெல் உலகத்தின் நாயகர்கள்: ஸ்பைடர் மேன் , ஹல்க், அயர்ன் மேன் போன்றவர்கள். இவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்து சூப்பர் சக்திகளைப்பெற்றுத் தீரச் செயல்கள் புரிபவர்கள். வால்ட் டிஸ்னி நிறுவனம் மார்வெல் உரிமையை வாங்கித் திரைப்படங்கள் எடுக்கின்றன.

இந்த வரிசையில் டிசியின் வொன்டர் உமன் திரைப்படம் இப்போது வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு பெண்தான் படத்தின் ஹீரோ. ( நம்ம ஊரிலே எடுத்தா அந்தக் காலத்து விஜயசாந்தியைப் போட்டிருக்கலாம்) .
ஜீயஸ் என்ற கடவுள் தன் சாயலில் மக்களைப் படைத்து அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறார். ஆனால் ஆரிஸ் என்ற போர்க்கடவுள் மக்களை, ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடியச் செய்கிறான். அதனால் ஜீயஸ், அமேஸான் என்ற தீவில் பெண்களை மட்டும் வைத்து அவர்களுக்குத் திறமைகளைக் கொடுத்து உலகைப் போரிலிருந்தும் ஆரிஸிடமிருந்தும் காப்பாற்ற ஒரு ஆயுதத்தையும் படைக்கிறார்.
டயானா என்ற இளவரசி, ஸ்டீவ் என்ற பிரிட்டிஷ் கேப்டன் கூறியபடி உலகைக் காக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு முதலாம் உலகப் போர் நடக்கும்போது ஜெர்மனிக்குச் செல்கிறாள். அங்குள்ள தளபதியை ஆரிஸ் என்று எண்ணி அவனைக் கொல்கிறாள். ஆனால் போர் மீண்டும் தொடர்வதைக் கண்டு அவள் திகைத்து, உண்மையான பிரிட்டிஷ் தளபதி ஆரிஸாக இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுடன் சண்டையிடுகிறாள். ஸ்டீவும் டயானாவிடம் ஐ லவ் யு என்று சொல்லிவிட்டு , தன் உயிரைக் கொடுத்து ஜெர்மனியின் அழிவிலிருந்து லண்டனைக் காப்பாற்றுகிறான்.
அப்போதுதான் ஆரிஸ் மூலம் டயானாவிற்குத் தெரியவருகிறது – தான் தான் ஆரிஸைக் கொல்லப் படைக்கைப்பட்ட ஆயுதம் என்று. முடிவில் டயானா ஆரிஸைக் கொன்று உலகைக் காக்கிறாள். ஸ்டீவின் நினைவோடு வாழ்கிறாள்.

படம் விறுவிறுப்பாகப் போனாலும் ஏதோ டப்பிங் படம் பார்த்த உணர்வுதான் வருகிறது.