நம்மைத் தாக்கிய கதை வரிகள் -புலிக்கலைஞன் -அசோகமித்திரன்

ஒரு புலிக்கலைஞனின் திறமையை  இந்த வார்த்தைகளில் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் அசோகமித்திரன்!

படிக்கும் போதே  நமக்கு  ஒரு உதறல் ஏற்படும்! அப்படி நம்மைத் தாக்கிய வரிகள்:

இதைப்படித்துவிட்டு முழுக்கதையையும் படியுங்கள்!  இந்த வரிகளின் பெருமை இன்னும் அதிகமாகப் புலப்படும்!

Image result for புலிக்கலைஞன்

 

”சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.”

”ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே?”

”நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”

அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.

”பேஷ்” என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.

அவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

”பேஷ்” என்று சர்மா மீண்டும் சொன்னார்.

அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.

அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ”ஐயோ” என்றேன்.

அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ”ஓ” என்று கத்திவிட்டோம்.

அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.

அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.

”பத்திரம்பா, பத்திரம்பா” என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.

அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.

நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.

சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.

நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.

”நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா” என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.

”நீ எங்கேயிருக்கே?” என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ”ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க” என்றான்.

”ஏன்?” என்று சர்மா கேட்டார்.

”இல்லீங்க….. என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.

”எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்” என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ”நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.

 

 “வலி நம் வசம்” மாலதி சுவாமிநாதன்

Image result for psychiatrist office in india

எனக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பட்டியலில்,  நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்பதும், நிம்ஹான்ஸில் படித்த மேல் படிப்பும், என் குரு, டீச்சர்களும் அடங்கும்.  ஊக்கமும் , கற்றலும் , பொறுமைக்குப்  பஞ்சமே  இல்லாத வேலை பார்த்த இடமும் பெரிய ஆசீர்வாதங்களே! க்ளையன்ட் (மனோதத்துவத்  துறையில் நோயாளிகளை  க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே! இவர்களின் துணிவான மன உறுதியை நான் “ஜான்சி கீ ராணி” என்பேன்.

ஒரு முப்பது வயதான “ஜான்சி கீ ராணி” மாயாவின் பயணத்தை உங்களிடம் விவரிக்கப் போகிறேன்.

Related image

மாயா என்னை மருத்துவ நிலையத்தில்  சந்தித்தபோது  “டாக்டர் ! என்  தோள் பட்டை, கை, பாதங்களில் எப்போதும்  வலி  இருந்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக, மாலை வேளையில் அசதி அதிகமாக வாட்டுகிறது.  தினசரி வேலைகளை முடிப்பதற்குள் சோர்ந்து போகிறேன் . அதனால்  வேலைகளை  முடிக்கவும் நேரமாகிறது.  சமீப காலமாக  எதற்கெடுத்தாலும் சுள் என்று கோபம் வருகிறது.  சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் மறந்தே விட்டது. ஞாபக மறதியும் அதிகமாகிறது.  ஒருவேளை டென்ஷனாக இருக்குமோ  என்று இவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன்.  ஆனால் இப்போது வீட்டில்  உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை வருகிறது.  வீடே போர்க்களம் போல் தோன்றுகிறது . இந்த வலிகளை என்னால் தாங்க முடியவில்லை . ஆகையால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறேன்”   என்று கூறினாள்.

எட்டு வருட கல்யாணத்திற்குப் பிறகு விவாகரத்தைப் பற்றி யோசிக்கிறாள். காரணம்.. வலி .. வலிகள்…

வலி என்பது, தானாக வருவது அல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை நன்கு அறிந்துகொண்டு ஒரு ஹோலிஸ்டிக் வாழ்க்கையை மேற்கொண்டால்தான் வலி நம் வசப்படும். இல்லையேல் நாம் வலியின் பிடியில் வீழ்வோம். ( வலியின் அடிமை? )

மாயா தன் கணவர் கோபால், குழந்தைகள் ரோஹித் ( 8 வயது),  ரோஹன் (6 வயது) , மாமனார், மாமியாருடன் இருக்கிறாள். அவள் மாமனார், தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி  வெளியூர் பயணம் செய்வதால், மாமியார் வீட்டைக் கவனிக்கிறார்.  இவர்கள் குடும்பமோ , சம்பிரதாயங்களைக்  கடைப்  பிடிக்கும் குடும்பம். ‘வீட்டுப்  பராமரிப்பு-கணவர்- குழந்தை இவர்களைக் கவனித்துக் கொள்வது என்று இருப்பது தான்  பெண்களின் கடமை’ என்று நினப்பவர்கள்.  அவள் கணவர் கோபாலும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற அபிப்ராயம் உடையவர். கோபால், எம். பி .ஏ. முடித்து வேலையில் இருக்கிறவர். மாயாவின் தந்தை பெரிய தொழில் அதிபர். அவளுடைய செல்வாக்கைப்  பார்த்துதான் கோபால்   அவளைத் திருமணம் செய்ய எண்ணினார்.   கல்யாணமானதும், மாயாவின் அப்பா நிறுவனத்திலேயே கோபால் வேலையில் சேர்ந்தார்.  கோபால் நிதானமாகச் செயல்படுபவர். அவருக்குத்  தன் மாமனாரின் வேகம் சற்றும் பிடிக்கவில்லை.

மாயாவின் தந்தைக்கு  வயது 60. இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். எல்லாம் டான்-டான் என்று இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர். தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும்  இப்படியே  இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர் .அப்பாவின் இந்தக் குணங்கள் மாயாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு ஒரு புதிய பயம் வந்து  சேர்ந்தது. அவள் அம்மா பொறுமையின் சிகரம். தன் கணவன் சொன்னபடி நடப்பவள்.  தன் இன்னல்களை டைரியில் மட்டும்தான் எழுதுவாள். மாயா தன் அம்மாவை அடிக்கடி வியந்து பார்ப்பாள்.  அவளுடைய ஒரே அண்ணனுக்கு அப்பாவின் வழிமுறை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பா  ஆட்சேபிக்கும் அத்தனையும்  அவனுக்குப் பிடிக்கும் – நீள முடி, ஜிப்பா, கோலாப்பூரி செருப்பு, ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு இன்னும் எத்தனையோ. கடைசியில்  அவரை எதிர்த்துக் கல்யாணம் செய்து,  அவர் உறவை அறுத்துக்  கொண்டான்.  ஆனால் மாயாவிடம்   வைத்திருந்த பாசத்தினால் அவளிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தான் . மாயாவுக்கு அண்ணனின் பொது சேவை, பரிவு எல்லாம் பிடித்திருந்தது.

மாயா, தன் அப்பா சொற்படி ஆர்கிடெக்ட் படித்து அவர் நிர்வாகத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாள். கோபாலைத் திருமணத்திற்கு  சரி என்று சொன்னதும் அவரே. அப்பாவைப் பொறுத்த வரை கோபால் பணத்திலும், அந்தஸ்த்திலும் மிகச் சாதாரணம். இதனால், மாயாவுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கூடும் என எண்ணினார். கோபாலைத்  தன் நிறுவனத்தில் சேர்த்தது மாயாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அவளைப் பொறுத்த வரை, ‘ ஒருவர் தன் முயற்சி , திறமைகளால் முன்னேற வேண்டும்;  சிபாரிசினாலோ, மற்றவர் தோளிலில் ஏறியோ அல்ல’ என்ற கொள்கையில் தீர்மானமாக இருந்தவள்.  

இப்படி, பல சமயங்களில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை –  அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது  என்று தெரியாமல் அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படிச்  சேமித்தால், நாளடைவில், அதன் உறுத்தலை உணர்த்தவே உடலில் எங்கேயாவது வலி தோன்றலாம். அல்லது இருக்கிற வலியும் அதிகமாகலாம்.

மாயாவின் பிறந்த வீடும் , புகுந்த வீடும்  முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தன. அவளும் கணவன் வீட்டிற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் பல முறை  தன் பிறந்த வீட்டு வழக்கங்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு வீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்  ஆரம்பித்தாள்.அப்போதுதான் அவளிடம் முரண்பாடு நுழைந்து விட்டது.

ஒப்பிட்டு-முரண்பாடு செய்வது சஞ்சலம் உருவாக்கும் விதைகளே.

கல்யாணமாகி மூன்று மாதங்களில், அவள் மாமனார் அவர்கள் வீட்டை டிஸைன் செய்யச் சொன்னார். உற்சாகமாகத் தன் ஆர்கிடெக்ட் வேலையைச் செய்து முடித்தாள். அவர்களுக்குப் பிடித்திருக்கும்  என்று நம்பினாள்.  ஆனால்  ஒரு பொது இடத்தில், மாமனாரும், கோபாலும் இதைக் கிண்டல் செய்து பேசினார்கள்.  இது மாயாவின் மனதைக் காயப்படுத்தியது. யாரிடம் இதைச் சொல்ல முடியும் ? இதையும் தன் மனத்திலேயே உள் வாங்கி வைத்துக் கொண்டாள்.

குழந்தைகள் பிறந்தபின், கண்டிப்பான பராமரிப்பைக்  கடைப்பிடித்தாள். மாமனார், மாமியாரோ  கண்டிப்பே கூடாது என்றார்கள். வளர்ப்பு முறை வேறுபாடு மாயாவை நச்சரித்தது. மாமியார்தான் சமைப்பார்;  எப்போதும் குழந்தைகளுக்குப் பிடித்த வகைகள் செய்வார். அவர்களிடமே குழந்தைகள் இருந்தார்கள். இதனால் மாயாவுக்கு வருத்தம், ஏமாற்றம். வேறு வழியின்றி மாயா வீட்டின் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.

மாயாவின் அப்பா மாயாவைத்  தன்  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்று விரும்பினார்.  அவளுக்குப் பிடித்த ரிசர்ச் துறையில் பணி செய்யவேண்டும் என்றும் திட்டமிட்டார். கோபாலிடமும் , அவள் மாமியாரிடமும் கூறி அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அலுவலகத்தில் இதை வரவேற்ற கோபால் வீடு திரும்பியதும், ஏளனமாகப் பேசி, மாயாவை வீடு-கணவர் என்று இருக்கச் சொன்னார். அவள்  மாமியாரும் இந்த அபிப்பிராயத்தையே ஆமோதித்தாள். மாயாவுக்கு தலை கிறுகிறுத்தது. வலியின் வீரியம் அதிகமானது.

உடலின் வலியை  எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அதைச் சொல்லவும்  முடியும், ஏற்றுக்  கொள்ளவும் செய்வார்கள் . ஆனால் மனம், உணர்ச்சி என்று ஆரம்பித்தால் பல கோணங்களில் போய்விடும். இதனாலேயே, நம் மூளையும் சூழலுக்கு ஏற்றவாறு மன பாரத்தை – உணர்ச்சிகளை உடல் வலியின் வடிவில்  தெரிவிக்கும். (உணர்ச்சிகளைத் வெளிப்படுத்துவது என்றும் உசிதம்).

மாயா வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாள். ஆனால் அவளால் அவற்றைக்  சரிவரச் செய்ய முடியவில்லை.  வலியின் வேகம்  அதிகமானது. வேலை செய்யச்செய்ய வலி அதிகரித்துக் கொண்டுவந்தது.  கோபம் அதிகரித்தது. வலி தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.

வலி தனியாக வருவது இல்லையே; உடல்-மனம்-சூழல் எல்லாம்  இணைந்ததுதானே!

இந்தச் சூழ்நிலையில்தான் மாயா எங்களை அணுக நினைத்தாள். எங்களிடம் வருவதற்கும்  மிகச் சங்கடப் பட்டாள். ஒருவேளை தன் மேலேயே தவறு என்றாகி விடுமோ என்றும்  பயந்தாள். கோபால் சொல்வது போல், தான் “சாக்கு மூட்டையா”?  என்ற எண்ணம் வேறு அவளை அலைக்கழித்தது. அவளுடைய அப்பாவும் மனோ தத்துவ நிபுணர்களிடம் செல்வது ‘பலவீனம்’  என்றே  நினைத்தார்.                      ( உண்மையில் மனோதத்துவக் கல்வியில் இப்படி  உதவி கேட்பதைத் தான்  தைரியம் என்று சொல்லுவோம்)

பாவம் மாயா!  என்னிடம் ஏழு முறை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வராமல்  பிறகு ரத்து செய்து விட்டாள்.

கடைசியில் அவள் வலி அவள் தயக்கத்தை மீறி எங்களிடம் வரச் செய்தது. தயக்கத்துடன் வந்தவளிடம், அவள் வலியைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். எந்தத் தகவலையும் துருவிக்  கேட்கவில்லை. அவள் போக்கில் சென்றேன். ஆறுதல் அடைந்தாள்.

மறுபடியும் வந்தாள். இந்தத் தடவை அவள் வீட்டின் நிலவரத்தைப்பற்றி மேலும் அறிந்தேன்.

வலி என்பது தனியாக எங்கிருந்தோ வருவது இல்லையே!  நம் கண்ணோட்டங்களால் நம் சூழலை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களையும், சூழ்நிலைகளைக் கையாளும் விதங்களையும் அறிவதனால் வலியைக்  கையாளுவதும் புரியும். இவைகளே வலியின் சிகிச்சைக்கும் உதவும்.

மாயாவுக்கு ஒரு சந்தேகமும் உதித்தது.  வேற்று மனிதரிடம் குடும்ப விஷயம் சொல்லலாமா? நியாயமான சந்தேகம். அவளிடம், எங்கள் தொழில்முறையை விவரித்தேன்: சுற்றியிருக்கும் தகவல்கள் நம் சிகிச்சையின் கருவிகளாகும். அவள் விவரித்த வலியை ஒப்பிட்டு உதாரணங்கள் காட்ட, புரிந்து கொண்டாள். மேலும், இங்கு பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கங்களை  யாருடனும் பகிர்ந்து கொள்ள  மாட்டோம் என்பதை வலியுறுத்தினேன். நம்பிக்கை மலர்ந்தது.

சில நரம்பியல் மாத்திரைகள் –  உரையாடல்கள் –  மேலும் சில ஹோம் வர்க் என்று தொடங்கினோம். சில வாரங்களில் அவளுடைய அசதி நன்றாகக்  குறைந்தது,  எரிச்சல், கோபம் அவள் கட்டுப்பாட்டில் வந்தது. மெதுவாகச் சிரிக்கவும்  ஆரம்பித்தாள்.

அடுத்த கட்டமாக, மாயா-கோபால் உறவு நிலையை மையமாக வைத்து இருவரையும் இணைந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்பதால் அதைப்பற்றி நிறையப்  பேசினார்கள்.  அனுகூலமாகத்  தொடங்கியது,  கணவன்-மனைவி, பெற்றோர் என்ற உறவு முறையைப்  பற்றி எதுவும்  பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்கிறேனோ என்று கொஞ்சம் கூச்சத்திலும்  ஆழ்ந்தார்கள்.

பிறகு மாயா சுதாரித்து, கோபாலைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்தாள். கோபாலும் உரையாடினார். இந்த உரையாடலின் போதுதான் கோபாலுக்குச் சமைக்கும் திறனும், மாயாவிற்குப் பாடும் திறனும் இருக்கின்றன என்பதை இருவரும் உணர்ந்தார்கள். விஷயங்களைப் பகிர்ந்ததில், நெருங்கி நடப்பது, முகம் பார்த்துப் பேசுவது என, பல விதங்களில் நெருக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த நிலையில், மாயா,   கோபால்,  தன் தந்தைபோல் இருக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறினாள். அதுபோல கோபாலும்  சமையலில் தன் அம்மாவின் கை மணம் மாயாவுக்கு இல்லை என்ற வருத்தத்தைப்  பகிர்ந்தார். இருவரும், பல ஒப்பீடு முரண்பாடுகளை விவரித்தார்கள்.

வசதியான வாழ்க்கை மீது தனக்கிருந்த ஆசையே மாயாவைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம்  என்று கோபாலும் ஒப்புக்கொண்டார், அவளின் பணக்கார வாழ்க்கை அவள் மீது ஒரு பொறாமையை உண்டு பண்ணியது.  இதனால் அவளை அடிக்கடி  கோபித்துக்  கொண்டார். மாமனார் மேல் உள்ள அச்சங்களையும் இவளிடமே காட்டினார். அவரிடம் சரி சொல்வது, பிறகு மாயாவிடம் மறுப்பு தெரிவிப்பது என்றே தான் நடந்துகொண்டதாக கோபாலும் ஒப்புக் கொண்டார்.  மனம் திறந்து பேசியதில், ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாயாவின் அண்ணனும் இதை வெளிப்படையாகப்  பாராட்டினான். தன் பங்குக்கு ஏதேனும் செய்ய விரும்பினான். கோபால் மாயா இருவருடனும்  கலந்துரையாடி, அவர்களை   விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்தான். ரோஹித்- ரோஹனைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.

திரும்பி வந்ததும், படுத்த படுக்கையாக இருந்த மாமனாரைத் தான் இதுவரை கவனிக்கவேயில்லை என்பதை மாயா உணர்ந்தாள். மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வதும் தனக்குச் சந்தோஷமான வேலை என்பதை உணர்ந்து செய்ய ஆரம்பித்தாள். ஆசை, பாசம், பராமரிப்பு கூடியது .கோபதாபங்கள் வெளியேறின.  வலியும் குறைந்தது,  

எதிர்பாராமல், கோபாலின்  உடல் நிலை சரிந்தது.டாக்டரைச் சந்தித்தார்கள். பரிசோதனையில் தீங்கற்ற டூமர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. டூமரை எடுத்து விடுவது நன்று என்ற முடிவை அனைவரும் ஆமோதித்தார்கள்.  வெளி நாட்டில் 3 மாதம் சிகிச்சை என்பதால் குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் இருப்பது என்று முடிவானது. மாயாவுக்குக் கஷ்டம் என்று கோபால் வேறு ஏற்பாடு செய்ய நினைத்தார். மாயாவுக்கு இதில் உடன்பாடில்லை., “நான் வருகிறேன்” என்பதை உறுதியுடன் தெரிவித்தாள். கோபாலுடன் சென்றாள். மாயாவின் அண்ணனும், தந்தையும் தங்கள் பங்குக்குப் பல உதவிகள் செய்தனர்.

திரும்பியதும், மாயா என்னைப் பார்க்க வந்தாள்.

வலி தனக்கு நன்றாகவே குறைந்துவிட்டதால் வேலைகளை வெகுசீக்கிரமாகவும், நன்றாகவும் செய்ய முடிகிறது என்றாள். மகிழ்ச்சி பொங்க,  விமான நிலையத்தில் தன் மாமனார்-மாமியார் அவள் அம்மா-அப்பாவுடன் சிரித்துப்  பேசிக் கொண்டிருப்பதைப்  பார்த்துப் பரவசம் அடைந்ததைச்  சொன்னாள். மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்த  தன் அண்ணன் – அப்பா இருவரும் சேர்ந்து அருகில் நிற்பதையும் பார்த்துக்  கொண்டாடியதையும்  சொன்னாள்.  கோபாலின் டூமர்-சிகிச்சை – கவனம்- ரிக்கவரீ தன்னையும்-அவரையும்  இன்னும் நெருக்கம் ஆக்கியதைக்  குதூகலமாகச் சொன்னாள்.

வலியின் மாத்திரையும்  தன் பங்குக்கு வேலை செய்தது; அதைவிட மாயா தனக்குள்ளும், தன்னைச்  சுற்றி உள்ள இன்னல்களையும் கவனித்துத்  தீர்வு செய்ததில் அவள் வலி அவள் கைவசத்தில் வந்தது. இதனால் “ எந்தச்  சூழ்நிலையிலும்  வலியைச் சமாளிக்கும் தைரியம் எனக்கு வந்துவிட்டது. என் வலியை நான் வென்றிடுவேன்”  என்று சொல்லி விடை பெற்றாள் மாயா – ‘ஜான்சி கீ ராணி’

மாயாவை இப்படிப் பார்ப்பது நல்ல ஆசீர்வாதம் தானே ? என்ன சொல்கிறீர்கள்?

மாயாவின் பரிமாணத்தை எங்கள் பாஷையில் ‘ரெஸிஸ்டன்ஸ் ட்ரான்ஸ்ஃபரன்ஸ்’ என்று சொல்வோம்.

பல முறை, “அட, எப்படிச்  சொல்வது”? என்று  இருந்தால், அது வலியாகத் தோற்றம் கொள்ளலாம்!

வலியின் வலி அதிகமாவதும் குறைவதும் நம் உணர்வுகளால்!

உடல் – மனம் – மூளை- சூழல் இவற்றில் நாம் கவனம் செலுத்துகையில்  வலி நம் வசம்! இல்லையேல், வலியின் அடிமை நாம்! ( அது நமக்குத் தேவையில்லை).

 

கம்ப்யூட்டர்   காதல் – (எஸ் எஸ் )

 

கம்ப்யூட்டர்   காதல்

image

காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது  ஹார்ட்வேர்
இரண்டும்  சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்

மடியில் தவழும்  லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு  கரம்  தா!

ஆடைகள்  என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!

மேனி முழுதும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!

கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா

எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே

உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை

நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத்  ப்ளுரே  தெரிகிறதே
மேடம்  உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே

வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை  இருந்தால் போதும்  எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்

பென்   டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா

காதல் என்ற சமூக வலையில் 
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு  நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு

டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக்  கவலையில்லை

மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ்  போட்டுக்கொள்

ஹார்ட் டிஸ்க்  சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை

காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்

உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை

யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து  நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்

எல்லாம் நன்றாய்  முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!

அசட்டுக்கு வந்த அதிர்ஷ்டம்..! — நித்யா சங்கர் ( சென்ற இதழ் தொடர்ச்சி )

Image result for ladies college quiz competition in chennai

 

காட்சி – 3

(பூமாவின் வீடு.. இரவு நேரம்.. கமலா, பாமா, லதா மூவரும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். பூமா ஓடி வருகிறாள்)

பூமா : போச்சு.. எல்லாம் போச்சு.. நாசமாப் போச்சு.

கமலா: என்னடி உளரறே…

பூமா : யாரோ ஒருத்தர்.. பக்கத்தூரிலிருந்து வந்திருக்காராம்.
பார்த்தா நல்லா ஷோக்கா இருக்கார். பேச்சிலேதான்
அசடு வழியறது. என் பின்னாலே வந்து கன்னாபின்னான்னு
பேசிச்சு. நம்ம ஒரு கேள்விக்கு ப்ளூ க்ளௌடுன்னு
ஆன்ஸர் வச்சிருந்தோமில்லே.. அதைக் கண்டு பிடிச்சுடுத்து
போலிருக்கு. அதையும் உளறிடுத்து. கொஞ்சம் அந்தப்
பக்கமா ரவியும் நின்னுட்டிருந்தார். அவருக்கும் தெரிஞ்-
சிருக்கும்..

பாமா : (திடுக்கிட்டு) ஆ… அப்படியா..? என்னடி இப்ப செய்யறது?

லதா : (நிதானமாக) பூமா.. அதுக்கேன் கவலைப்படறே,,? அந்தக்
கேள்வியை நாம மாத்திட்டாப் போகிறது..

பூமா : ம்.. அப்படித்தான் செய்யணும்.. நம்ம கேள்வி ஒண்ணுக்-
காவது அவங்க ஆன்ஸர் சொல்ல முடியக் கூடாது. அப்படி
இருக்கணும் நம்ம கேள்விகளெல்லாம்…

கமலா: ஆமா.. யாரடி அது..? நம்ம கேள்விக்கு விடையை அவ்வளவு
ஈஸியா கேள்வியைக் கூட கேட்காம கண்டு பிடிச்சது..?

பூமா : யாருன்னு தெரியலே.. பார்க்கறதுக்கு அழகா இருந்தார். அவர்
பேர் என்னான்னு தெரியலே.. நான் கேட்கலே… ஆனா
பேசினாத் தெரியுது அவர் குணம். ஒரே அசடு.

லதா : ஆமா.. நீ அவரழகுலே மயங்கி ஏதாவது உளறியிருப்பே…

பூமா : போடி.. அவர் பேசின பேச்சே எனக்குப் பிடிக்கலே. எனக்கு
வந்த கோபம் உனக்குத் தெரியாது… அவர் எப்படி அதைக்
கண்டு பிடிச்சார்னே தெரியலே…

பாமா : ஒரு வேளை வேறு ஏதாவது நெனச்சிட்டு ப்ளூ க்ளௌடுன்னு
சொல்ல வந்திருப்பாரோ..?

கமலா: எப்படி இருந்தாலும் சரி.. நாம கேட்கப் போற கேள்வி
என்னவோ மூணுதான். இந்தக் கேள்வியை மாத்தி வேறொண்-
ணப் போட்டாப் போச்சு.

பூமா : ஓகே.. லதா.. அந்தப் புத்தகத்தைக் கொண்டு வா..

 

காட்சி — 4

Related image

(ராமானந்தா கல்லூரி ஆடிட்டோரியம்.. மாலை வேளை..
குவிஸ் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள்
கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விடுகின்றனர் மாணவிகள்.
ஒரே கை தட்டல்.. ஜட்ஜ் பேச எழுகிறார்..)

ஜட்ஜ் : மாணவ, மாணவிகளே.. மாணவர்கள் கேள்விகளுக்கெல்லாம்
தகுந்த முறையில் பதிலளித்து விட்டனர் மாணவிகள். இனி
மாணவியர் கேள்விகள் கேட்பார்கள். மாணவர்கள் பதில்
சொல்ல வேண்டும். எங்கே பூமா.. உங்கள் கேள்விகளைக்
கேட்கலாம்.

பூமா : (தொண்டையைக் கனைத்தவாறே) முதல் கேள்வி — உலகத்தை
விட மதிப்பு மிக்கது எது?.. இரண்டாவது – காற்றை விட
வேகமானது எது?.. மூன்றாவது – மனிதன் எந்த ஒரு குணத்தை
விட்டால் எல்லோராலும் விரும்பப்படுவான்?

(அமர்கிறாள்… மாணவர்கள் மெதுவாகப் பதிலைப்பற்றி
விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். நீலமேகம் தனியே
அமர்ந்து பூமாவையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..)

நீல : (தனக்குள்) ஐயோ… பியூட்டி க்வீன்….

குமா : டேய் ரவி.. குண்டையல்லவா தூக்கிப் போட்டுட்டா… கேள்வி-
களோடு தலையும் புரியலே… காலும் புரியலே..

ரவி : டேய் ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சு போச்சு. உலகத்தை
விட மதிப்பு மிக்கது ப்ளூ க்ளௌடுதாண்டா.. அதுதானே
நமக்கு தண்ணீர் தருது..

மணி : வெரிகுட்… என்ஸைக்ளோபீடியாவில் இதுவும் போட்டிருந்-
தானா மடையன்… மத்த கேள்விகளுக்கு என்னடா பதில்? ம்…

சேக : மடத்தனமா கேள்வி கேட்டிருக்காடா.. காத்துதாண்டா
உலகத்திலேயே வேகமானது.. ஆமா. எதை மனிதன்
விட்டுட்டா எல்லோராலும் விரும்பப் படுவான்..?

மணி : உயிரை விட்டுட்டா…

ரவி : (ஏளனமாக) வெரி குட்.. எப்படீடா கண்டு பிடிச்சே…
(எரிச்சலோடு) இடியட் மூஞ்சியைப் பாருடா மூஞ்சியை…

குமார்: இப்ப என்னடா செய்யறது..?

ரவி : டேய் இந்தக் கேள்விகளுக்கு இங்கே யாருக்குமே பதில்
தெரியாது… நமக்கு ஒரு கேள்விக்கு தெரியுமில்லே.. அது
போதும்.. அதை வெச்சே பூமாவைக் கவர்ந்துடலாம்.. கவலைப்
படாதே.. நான் எழுந்து சொல்லட்டுமா…?

சேகர் : ஓ கே…

ரவி : (மெதுவாக எழுந்து) உலகத்தை விட மதிப்பு மிக்கது ப்ளூ
க்ளௌடு… அதாவது மேகம்.

பூமா : (நமுட்டு சிரிப்போடு) ஸோ ஸாரி… கிடையாது…

(ரவி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து
விடுகிறான். பெண்கள் கூட்டத்தில் நகைப்பொலி எழுகிறது.
இதுவரை பேசாமல் பூமாவின் அழகையே ரசித்துக்
கொண்டிருந்த நீலமேகம் எழுந்து கத்துகிறான்)

நீல : மதர் … மைன்ட் … ப்ரௌடு…

(பெண்களின் நகைப்பொலி சட்டென்று நிற்கிறது. பூமா
நீலமேகத்தையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டு
நின்று விடுகிறாள்)

ஜட்ஜ் : ஏன் என்ன ஆச்சு..?

பூமா : (சமாளித்துக் கொண்டு) ஒன்றுமில்லை.. இப்பொழுது விடை
சொன்னவர் எங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப்
பதில் சொல்லி விட்டார். உலகத்தை விட மதிப்பு மிக்கவள்
மதர் – தாய்… காற்றைவிட வேகமானது மைன்ட் – மனம்…
மனிதன் ப்ரௌடை – கர்வத்தை விட்டு விட்டால் எல்லோ-
ராலும் விரும்பப் படுவான்.

ஜட்ஜ் : இக்கேள்விகளுக்கு பதில் சொன்னவர் யார்..?

நீல : நான்தான்.. என் பெயர் நீலமேகம்..

ஜட்ஜ் : ஐ ஸீ… இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா பூமா..?

பூமா : இல்லை… அவ்வளவுதான்..

ஜட்ஜ் : ஆல் ரைட்… இப்போட்டியின் முடிவு நாளைக்கு அறிவிக்கப்-
படும். எல்லோரும் கலையலாம்.

(ஒரு மூலையில் ரவியும் நண்பர்களும் தவித்துக் கொண்டு
நிற்கிறார்கள்)

குமார்: டேய் அந்த அசட்டுக்கு எப்படீடா தெரிஞ்சது?

மணி : நம்ம திட்டமெல்லாம் போச்சேடா….

ரவி : என்னடா செய்யறது.? அந்த ஒரு கேள்வியாவது ரைட்டா
இருக்கும்னு நெனச்சேன்.. பாவி அதையும் தப்புன்னுட்டாளே…

சேகர்: ரவி.. யூ ஹாவ் மிஸ்ட் தி சான்ஸ். மிஸ்ட் தி மிஸ் ஆல்ஸோ.

மணி : டேய், பூமா எதுக்கோ அந்த அசடுகிட்டே போறாளே..
என்ன சொல்றா கேட்போம்…

(பூமா நீலமேகத்தின் அருகில் செல்கிறாள்)

பூமா : கன்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் நீலமேகம்…

நீல : (அசட்டுச் சிரிப்போடு) தாங்க் யூ… என்னமோ…

பூமா : யூ ஆர் வெல்  செட். மகாபாரதத்திலிருந்து எடுத்துக் கொடுத்து
இருக்கோம். கண்டு பிடிச்சிட்டீங்களே…

நீல : ஹி..ஹி.. அப்படி ஒண்ணுமில்லே.. வந்து…

பூமா : நீங்க அடக்கத்துக்காக அப்படிச் சொல்லலாம். நாளைக்கு
மார்னிங் எங்க வீட்டிற்கு வாங்களேன். அடுத்த தெருவிலேதான்
இருக்கு. கட்டாயம் வரணும்.. நான் காத்துட்டிருப்பேன்.

நீல : ஹி.. ஹி.. சரி…

(பூமா செல்கிறாள். ரவியும் நண்பர்களும் நீலமேகத்தின்
அருகில் வருகிறார்கள்)

ரவி : ஹலோ.. நீலமேகம்.. நீ எப்படியப்பா கண்டுபிடிச்சே..?

நீல : போப்பா.. நானெங்கே கண்டு பிடிச்சேன்.. பிரதர்.. பூமா
அழகுலே மயங்கி ‘அம்மா என்னை அட்லீஸ்ட் மதிக்கவாவது
செய்.. நான் ரொம்பக் கர்வப்படுவேன்னு’ சொல்ல வாயெடுத்தேன்
இங்கிலீஷிலே.. அதுலே பாதி வார்த்தைகளை முழுங்கிட்டேன்.
மதர்.. மைன்ட்.. ப்ரௌடுங்கறதுதான் வெளியே வந்தது. என்ன
செய்யறது ? அவங்க அவங்க தலை விதி. ஆ.. நல்ல வேளை
‘மிஸ்ஸுன்னு சொல்றதுக்கு பதிலா ‘மதர்’னு ஒளறி வெச்சுட்டேன்.
அதுவும் நம்ம நல்ல காலம் தான். நம்ம உளறல் சரியான
ஆன்ஸராப் போச்சு. ஓகே… நேரமாச்சு. நான் வறேன்.

(நீலமேகம் போகிறான்)

ரவி : டேய், அசட்டுக்கு இப்படியாடா அதிர்ஷ்டம் வரணும்? பூமா
என்னமோ இவன் பெரிய இன்டெலிஜென்ட்னு நெனச்சிட்டிருக்கா
நமக்கல்ல தெரியும் இவன் கதை… அவளை மீட் பண்ணி
எச்சரிக்கணும்.

மணி: டேய் ரவி.. இவனை வீட்டுக்கே கூப்பிட்டுட்டாளே.. உன்னை
ஒரு நாளைக்காவது கூப்பிட்டிருக்காளா..?

குமார்: விடிய விடிய படிச்சதுதாண்டா மிச்சம்.

சேகர்: ரவி யூ லாஸ்ட் ஹெர்… காதலிலே தோல்வியுற்றான் காளை
யொருவன்..

ரவி : டேய். பேசாம இருங்கடா..

(போகிறார்கள்)

காட்சி – 5

(பூங்கா.. மாலை நேரம்… நீலமேகம் சென்று கொண்டிருக்கிறான்.. பூமா பின்னால் செல்கிறாள்..)

நீல : இதோ பாருங்க மிஸ்.. உங்களுக்கு வார்னிங் கொடுக்கறேன்.
ஏன் என் பின்னாலேயே வர்ரீங்க… சூடு, சுரணை, மானம்னு
ஒண்ணுமே யில்லையா..?

பூமா : முன்னேயெல்லாம் சூடு ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. ஆம்பிளே பக்கத்துலே நெருங்க முடியாது. ஆனா இப்போ என்னவோ
ரொம்ப ஜில்லுன்னு இருக்கு…

நீல : ஓ…..

பூமா : மானம்… நம்ம கல்யாணத்தை நிச்சயித்து நிச்சயதார்த்தமும்
ஆனபிறகு நமக்குள்ளே எதுக்கு இந்த மானத்தைப்பற்றிய
பேச்செல்லாம்…

நீல : ஓ.. அப்படியா..?

பூமா : ஆமா நீங்க எப்படி ப்ளூ க்ளௌடைப்பத்தி கண்டு பிடிச்சீங்க?

நீல : நான் என் பெயரை சும்மா இங்கிலீஷிலே சொல்ல வந்தேன்.
அதுக்குள்ளே நீ அரண்டுட்டே…

பூமா : (நாணத்தோடு) வெகு சமர்த்தர்தான்.. நான் கூட முதல்லே
நீங்க உண்மையா அசடுதானோன்னு நெனச்சுட்டேன்..

நீல : (சிரித்தபடியே) என்ன செய்யறது..? அன்னிக்கு காலேலே நான்
இந்த ஊருக்கு வந்ததும் உங்க காலேஜ் பக்கம் வந்தேன்.
அங்கே ரவியும் அவன்  பிரெண்ட்ஸும்  உன்னை  எப்படியாவது
மடக்கிக் கேள்விகளைத் தெரிஞ்சுக்கணும்னு திட்டம் போட்டுட்டிருந்தாங்க. அவங்க முயற்சியை எப்படியாவது தடுக்கணும்னு முடிவு பண்ணினேன். பின்னே பூமாவை எப்படிக் கண்டு பிடிப்பது..? யோசிச்சேன்.. ம்… இந்த அழகு ராணியைக் கண்டு பிடிக்கறதா கஷ்டம்..?

பூமா : (நாணத்தோடு) போங்க….

நீல : கண்டுபிடிச்சு அசடாய் நடிச்சு உன்னைத் துரத்தினேன்.

பூமா : ஆமா.. நீங்க, ‘ஏதோ உளறினேன்.. எனக்கு உண்மையா
அவங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதுன்னு சொன்னீங்களாமே..!

நீல : (உரக்கச் சிரித்து) பாவம் ரவி, உங்கிட்டே அதைச் சொன்னானா..? உன்னை ரொம்ப லவ் பண்ணிட்டிருந்திருக்கான். எல்லோர் கண்களும் ஒரே மாதிரி இருக்காது பார். நான் உன் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, நீ என்னைப் பார்த்து மயங்கி, அதைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் பட.. ஐயோ, அப்ப.. என் ராணியின் அழகு என்ன ஆறது?

பூமா : (நாணத்தோடு) ஐயோ போதுமே…

நீல : அந்த எண்ணத்தாலேதான் அவன்கிட்டே அதுமாதிரி
சொன்னேன். நான் மகாபாரதத்தை பத்து முறை படிச்சிருக்கே-
னாக்கும்… ஆனா ரவியை நீ இதுமாதிரி ஏமாத்தி இருக்கக்
கூடாது.

பூமா : அவரை இல்லேன்னா ஒங்கள ஏமாத்தி இருக்கணும்.

நீல : என்னை எப்படி ஏமாத்தி இருக்க முடியும்..? நானொண்ணும்
உனக்காக ஏங்கலையே..?

பூமா : உக்கும்… க்விஸ் போட்டி நடந்துட்டிருக்கும்போது என்
பக்கமே நீங்க பார்த்துட்டிருந்தது எனக்குத் தெரியாதாக்கும்..?

நீல : அடி கள்ளி.. அப்ப நீ என்னையே….

(சிரிக்கிறான்.. அவளும் அவனுடன் சிரிப்பில் கலந்து
கொள்கிறாள்)

 

குறும்படம் என்ற குறும்படம்

குறும்படம் எடுக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் குறும்படம் இது.

கடைசியில் உங்கள் கண்களிலிருந்து  கண்ணீரை வரவழைக்கக் கூடிய குறும்படம்!

சீமை கருவேலம் – ஒரு சந்தேகம், பல கேள்விகள்

இந்தக் கருத்து நமது கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதால் தமிழ் ஹிந்துவில் வந்த கட்டுரையை மறு பிரசுரிக்கிறோம்! (தவறெனில் மன்னிக்க)

 

நன்றி: தமிழ் இந்து

Published: May 27, 2017 12:24 IST Updated: May 27, 2017 12:24 IST
சீமை கருவேலம் வில்லனா? – கையில் சிக்கிய திடீர் குற்றவாளி

கே.கே. லட்சுமணன்
சீமை கருவேலம் வறண்ட நிலங்களில் எந்த வித கவனிப்பும் இல்லாமல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மண் பக்குவம், பருவநிலை போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய தாவரம்.

தென் மாநிலங்களில் கடுமையான வறட்சி, பஞ்சம் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் பிரேசில் நாட்டிலிருந்து 1950-களில் விறகுக்காகவும் வேலியமைக்கவும் இது கொண்டு வரப்பட்டது. இவற்றின் விதைகளைச் சேகரித்து வந்தோர், அதன் பூர்விகத்தை அறிந்திருக்கவில்லை.

இன்னும் சில தாவரங்கள்

சீமை கருவேல மரத்தைப் போலவே வேறு பல தாவரங்களும் உயிரினங்களும் நம் மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அழகான மலர்களுக்காக லான்டானா (உன்னிச் செடி) வந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஆஸ்திரேலியாவில் இருந்து தைல மர நாற்றுகளை வனத் துறை அள்ளி வந்தது. தைல மரத்துக்கு விழா எடுத்துப் புகழ்பாடிய பின்னர்தான், அது அதிக நீரை உறிஞ்சுகிறது என்பதை உணர ஆரம்பித்தனர்.

அந்தக் காலத் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, அப்போதைய அரசர் ஸ்பெயினில் இருந்து மரவள்ளிக்கிழங்கைக் கப்பலில் கொண்டுவந்தார். கப்பலில் வந்ததால் மக்கள் அதை ‘கப்பக்கிழங்கு’ என்றழைத்தனர். மக்கள் பசியாற்றிக் கொண்டதோடு, அப்பயிர் பற்றியும் சிந்தித்தனர். அதன் பலனே இன்றைக்குப் பல்வேறு கிளைகளை எடுத்துள்ளது மரவள்ளிக் கிழங்குத் தொழில். அத்துடன் நம் மண்ணில் நிலையானதொரு வேளாண் பயிராகவும் மாறியிருக்கிறது.

திடீர் கண்டுபிடிப்பு

இந்தப் பின்னணியில் வறட்சியிலும் நன்கு வளரும் தாவரமான சீமை கருவேலம், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதிகம் வளர்கிறதென்றால் அது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தாவரம் 60 ஆண்டுகளாக நிலைத்திருந்தாலும் விஞ்ஞானிகள், அரசு, வனத் துறை போன்ற யாரும் இதன் ஆபத்து பற்றி பேசவில்லை. 60 ஆண்டுகளுக்குப் பின் அது மிகவும் மோசமானது என்று திடீரென்று எல்லாத் துறைகளும் எப்படிக் கண்டுபிடித்தன?
வன்னி மரம்

நீர்வளக் குற்றச்சாட்டு

இந்த மரம் வளர்வதால்தான் நீர் வளம் குன்றிவிட்டது, விவசாயம் அழிகிறது என்கின்றனர். மற்றொருவர் இந்தத் தாவரம் 1000 அடி ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சுகிறது என்கிறார். ஆற்று மணலை வாரி நிலத்தடி நீரை வீணடிப்பதற்கு எதிராக இத்தனை வலுவான எதிர்ப்பு ஒலிக்கவில்லையே. நீரற்ற சூழ்நிலையிலும் ஒரு தாவரம் வளர்கிறது என்றால், அதன் தனித்தன்மை பற்றித்தானே ஆராய வேண்டும்?

சீமைக் கருவேலம்தான் நீர்வளம் கெட்டதற்குக் காரணம் என்றால், கொங்கு பகுதியில் நொய்யல் ஆறு நொந்து போயிருப்பதற்கு உண்மைக் காரணம் என்ன? பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீரை வாரிவாரி கொடுக்கிறோமே, அது எந்தக் கணக்கில் சேரும்? விடுதலை பெற்று 68 ஆண்டுகளாகியும் அனைத்துக் கிராம மக்களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லையே, ஏன்?

மேலும் சில புகார்கள்

இம்மரத்தைப் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை என ஒருவர் எழுதுகிறார். தாவரத்தைப் பொறுத்தவரை இது நல்ல அம்சம்தான். இதற்கான காரணத்தை ஆராய்ந்து, மற்றத் தாவரங்களில் இதுபோன்ற பண்பை ஊக்குவிக்க என்ன செய்வது என்றுதானே ஆராய வேண்டும்?

இத்தாவரம் அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்று இன்னொருவர் குற்றஞ்சாட்டுகிறார். கருவேல மரக்கட்டைகளை எரித்தால் வரும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை உருவாக்கும் என்று இன்னொரு குற்றச்சாட்டு. இது எந்த நாட்டு ஆராய்ச்சியின் முடிவு?

திடீர் முடிவுகள்

இந்த மரத்தைப் பறவைகள், உயிரினங்கள் பயன்படுத்தவில்லை என்றொரு அபாண்டமான புகார். ஆனால், அது உண்மையில்லை.

கருவேல மரத்தின் இலை, காய்களை உண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்கிறது ஒரு வதந்தி. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த மரத்தின் இலைகள், காய்களை உண்ட எத்தனை கால்நடைகள் மலடாகியிருக்கின்றன? இது தொடர்பாக நாட்டில் எந்தத் துறை ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது?

நமது நாட்டில் கருவேல மரம், அது ஏற்படுத்திய தாக்கம் பற்றி எத்தனை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன? பல கருத்துகள் அறிவியல் ஆதாரமில்லாமல் வதந்திகளாக, புகார்களாக, குற்றச்சாட்டுகளாகப் பரவலாக வலம் வருகின்றன.

இத்தனை பிரச்சினைகள் அதன் பின்னணியில் இருக்கின்றன என்றால், ஏன் இவ்வளவு காலம் அரசுத் துறைகள் உறக்கத்தில் இருந்தன? இன்றைக்குத் திடீரென ஏன் விழித்துக்கொண்டுள்ளன? இன்றைக்குப் பட்டியலிடப்படும் ஆபத்துகள் ஏன் இத்தனை ஆண்டுகளில் கண்டறியப்படவில்லை?

மருத்துவக் குணம்

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இங்கிலாந்து பிளேக் நோயால் உலுக்கியெடுக்கப்பட்டபோது, இன்றைக்குப் போதை வஸ்துவாகக் கருதப்படும் கஞ்சா பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மயக்கமருந்துக்கு அடிகோலியதும் Cannabis என்ற தாவரமே. அதேபோலப் புகையிலை, மருந்தாக இருந்து, இன்றைக்குப் போதைப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

சீமை கருவேல மரத்தின் பேரினத்தைச் சேர்ந்த வன்னி மரம் (Prosopis spicigera) பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மூலிகை மருத்துவத்தில் சிற்றினங்களிடையே மருத்துவக் குணங்களில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சீமை கருவேல மருத்துவக் குணங்களை நமது மருத்துவ ஆய்வாளர்கள் துருவிப் பார்த்ததில்லை.

கருவேல மரக் காய்களில் கால்சியம், தயமின், ரிபோஃபிளேவின் போன்றவை நிறைந்துள்ளன. இதன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் ‘அல்கரோபினா காக்டெய்ல்’ என்ற பானம் பெரு போன்ற நாடுகளில் காலையில் வந்து மதியத்துக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுமாம். இது வயிற்றுக் கோளாறுக்கு நிவாரணம், உடல் உறுப்புகளுக்கு உற்சாகம் ஊட்டுதல், பாலுணர்வைத் தூண்டுதல் ஆகிய தன்மைகளைக் கொண்டது.

பலன்கள் ஏராளம்

ஒரு விஞ்ஞானி நடத்திய ஆராய்ச்சியின்படி ஒரு ஹெக்டேரில் ஐந்து ஆண்டு வளர்ந்த நிலையில் உள்ள கருவேலமரங்கள் 8,000 கிலோ காய்களைக் கொடுக்கும். அதை உரிய வகையில் பயன்படுத்தலாம். இவற்றின் மலர்களில் நெக்டார் திரவங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஹெக்டேர் தாவரத்தில் 400 கிலோவரை தேன் எடுக்கலாம்.

விவசாயிகளும் விஞ்ஞானிகளும் இவற்றின் இலைகளைச் சிறந்த தீவனம் என்கின்றனர். இயல் தாவரங்களும்கூட இலைகளை உதிர்த்து நிற்கும்போது, கால்நடைகளுக்குக் கருவேல இலைகள்தானே இத்தனை காலமும் உணவாகின, அவைதானே நிழல் தந்தன.

இதன் கட்டைகளை மரப்பலகைகளாக, வீட்டுச் சாரங்களாக மாற்றலாம். ஏற்கெனவே, நின்று எரியும் விறகாகவும் இதன் கட்டைகள் பெருமளவு பயன்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 1970-களில் மரத்தை வெட்டி, சுட்டுக் கரியாக்கிப் பல ஏழைகள் வியாபாரம் செய்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தேவை அறிவியல் பார்வை

கிராமங்களில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வேலையற்று இருப்போருக்கு, சீமை கருவேல மரத்தின் மேற்கண்ட பயன்களைப் பயன்படுத்தி வேலையை உருவாக்கலாம்.

வறண்ட, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் இந்தத் தாவரம் நம் நாட்டில் மட்டும் மிக மோசமான கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளில் நாட்டில் எந்த ஒரு துறையும் இதன் மேலாண்மை, ஆராய்ச்சி சார்ந்து எதுவும் செய்யவில்லை.

எதிர்காலத்திலாவது இதன் நன்மை, தீமை குறித்து அறிவியல்பூர்வ ஆராய்ச்சியும் அதன் அடிப்படையில் இது மேலாண்மையும் செய்யப்பட வேண்டும். மாறாக, வீண் வெறுப்பும் கண்மூடித்தனமான அழிப்பும் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

கட்டுரையாளர், கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kklaksh53@rediffmail.com

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்

Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்

இதுவரை…….இடைக்காலச்  சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்தபோது சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான்.

புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதனமான  இரத்தின மாலையையும்  ஈழத்தில் மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத்  தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்குத்  தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத்  தீவுக்கு வருகிறான்.

வந்தியத்தேவன் மணிமகுடமும்   இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத்  துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டெடுத்து வந்து அவர்களின் கலத்தில் ஏறியதும் , கடல் கொள்ளைக்காரர்கள் கைகளில் சிக்குகிறான். அவர்கள் கைகளிலிருந்து சாதுர்யமாக தப்பித்த வந்தியத்தேவனுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்,  மணிமகுடமும், இரத்தின மாலையும் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறித் தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களுடன்  திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.

இனி……………………..

அத்தியாயம் 12. நந்தினியின் சபதம்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு..

 

நந்தினி, அமர புஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன் மற்றும் அவர்களைச் சேர்ந்த வீரர்கள் கூடிய கூட்டம் ஒன்று, ராசிபுரம் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில், இரவு நடுசாமத்தில்  கூட்டப்பட்டிருந்தது. அவர்கள் யார் வருகைக்காகவோ காத்திருந்தினர்போல் தோன்றியது.

ஒரு சலசலப்பு! வெளியில் யாருடைய வருகைக்காகவோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் உள்ளே ஓடிவந்து “வந்துவிட்டார்கள்! வந்துவிட்டார்கள்!!” என்றான்.

உள்ளே ரவிதாசன் முன்வர கருத்திருமனும், சோமன்சாம்பவானும் ஓர் நீண்ட பெரிய பெட்டியைத் தூக்கி வந்து கீழ் வைத்து அவர்கள் முன் நின்றார்கள்.

“மகாராணி!உங்கள் முன்னோர் பாதுகாத்து வந்த விலை மதிக்கமுடியாத மணிமகுடமும் இரத்தின ஹாரமும் இதோ! பல எதிர்ப்புகளை சமாளித்து எடுத்து வந்துள்ளேன்” என்று பெருமிதம் பொங்கக் கூறினான் ரவிதாசன். அவன் இருகண்களிலும் மின்னல் பளிச்சிட்டது.

இதற்காகவே கொண்டு வரப்பட்டிருந்த பட்டுக் கம்பளம், நந்தினி முன் விரிக்கப்பட்டது.

கருத்திருமனும் சோமன்சாம்பவானும் மிகவும் ஜாக்கிரதையாக பெட்டியை அவள் முன் வைத்தனர். ரவிதாசன் அதில் பதிந்திருந்த மீன் சின்னத்தைத் தன் அங்கவஸ்திரத்தால் துடைத்தான்.

“மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்.அதற்கான பரிசு உரிய காலத்தில் கிடைக்கும்” என்றாள்.

பக்கத்திலிருந்த பட்டுப் பையிலிருந்து வீர பாண்டியன் அவளிடம் ஒப்படைத்திருந்த பெட்டியின் சாவியை எடுத்தாள். ஒரு கையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், சாவியை பொருத்திப் பூட்டைத் திறக்க முயன்றாள்.

முடியவில்லை!

சாவி பூட்டின் துவாரத்தைவிட பெரியதாய் இருப்பதை உணர்ந்தாள்.

“என்ன இது ரவிதாசன் அவர்களே? திறக்க இயலவில்லையே? விளக்கம் தேவை” என்றாள்.

ரவிதாசன் “என்னிடம் சாவியைக் கொடுங்கள்” என்று வாங்கித் திறக்க முயன்றான்!

பயனில்லை! அவனும் திகைத்தான்!

நந்தினி “நல்லது. ஏதோ தப்பு நடந்திருக்கிறதுபோல் தோன்றுகிறது. பூட்டை உடையுங்கள்” என்று கணீர் குரலில் கட்டளையிட்டாள்.

பூட்டு உடைக்கப்பட்டது.

பெட்டியை நந்தினி திறந்தாள்.

உள்ளே..

‘மணிமகுடமும் இரத்தின ஹாரமும்’ இல்லை!

அவைகளுக்குப் பதிலாக..

‘நிறைய கற்கள்’ இருந்தன!!!!

நந்தினி அதிர்ச்சியால் மயங்கிக் கீழே விழுந்தாள்.

ரவிதாசன் கண்கள் சிவந்தன. கருத்திருமன் விரல்களை நெறித்தான். சோமன்சாம்பவன் தலையிலடித்துக் கொண்டான்.

அமரபுஜங்கன் ஓடிச் சென்று நந்தினி முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்ற எல்லோரும் “அய்யோ, எப்படி?” என்று புலம்பினார்கள்.

நந்தினி கண் விழித்தாள். பற்களை நறநற என்று கடித்து “இது வந்தியத்தேவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும். நன்றாக நம்மை ஏமாற்றிவிட்டான்” என்றாள்.

ரவிதாசன் ‘மஹாராணி..” என்று ஆரம்பித்தான்.

அவனை ஆவேசமாகப் பார்த்த நந்தினி,

“நீங்கள் இங்கிருந்து போனதிலிருந்து என்னவெல்லாம் நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?என்று அடங்காத கோபத்துடன் ரவிதாசனை வினவினாள்.

ரவிதாசன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“ஆக, நீங்கள் சென்று அதனை எடுத்து வரவில்லை..வந்தியத்தேவன் எடுத்து வந்ததை அவனிடமிருந்து பறித்து வந்திருக்கிறீர்கள்.. அப்படித்தானே?”

ரவிதாசன் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தோன்றாமல், ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

நந்தினி அவனை மேலும் பேசவிடாமல் மறித்து “அப்படி பறித்து வந்ததும் வேறு.. சரி.. வந்தியத்தேவன் இறந்ததை உங்கள் கண்களால் பார்த்தீர்களா?” என்றாள்.

“இல்லை, ஆனால்..”என்று ரவிதாசன் முடிக்கவில்லை,

நந்தினி மீண்டும் அவனைத் தடுத்து, “கைதேர்ந்த சோழக் கடற்படை வீரர்கள் அவன் உயிரை மீட்டிருக்கலாம்! நம் குல உயிர்நாடியான பொக்கிஷங்களை நம்மிடமிருந்து அபகரித்து எதிரி சோழர்களிடம்  அவன் சேர்ப்பித்து விட்டிருக்கக்கூடும். அவன் நம் கையில்தான் உயிரை விடவேண்டும் என்பது விதி. வந்தியத்தேவா! மீண்டும் எங்களை முட்டாளாக்கி விட்டாய்! நீதான் எங்கள் முதல் எதிரி. சோழ வர்க்கத்தின் கதையை நாங்கள் முடிக்குமுன் உன் உயிர் எங்களால் எடுக்கப்படும். இது நாங்கள் எடுக்கும் புது சபதம்” என்று அனல் பறக்கக் கூறினாள்.

நந்தினி தன் கையை நீட்டினாள்! எல்லோர் கைகளும் அவள் கையோடு இணைந்தன!

(அடுத்த இதழில் முடியும்)