முதல் பகுதி
பொன்னாலும் , வைரத்தாலும் ரத்தினங்களாலும் இழைக்கப்பட்டாலும் எப்போதும் அமைதியாக இருக்கும் விஷ்வகர்மாவின் அரண்மனை அன்று மிகுந்த ஆரவாரத்தில் இருந்தது. தேவர்களுக்காக சொர்க்கத்தையே நிர்மாணித்தவர் விஷ்வகர்மா. சொர்க்கத்தின் அழகைச் சொல்லி மாளாது. இந்திரன் இருக்கும் அமராவதிப் பட்டணத்தையும் அமைத்தவர் அவரே. விஷ்வகர்மா , தேவ சிற்பி என்றும் தேவ தச்சர் என்றும் அனைத்துலக மக்களாலும் போற்றப்படுபவர். இந்திரனுக்குத் தகுந்த ஆயுதம் வேண்டும் என்றதும் முனி ஸ்ரேஷ்டர் ஒருவரின் எலும்பிலிருந்து வஜ்ராயுதத்தை அமைத்துக் கொடுத்தவர். பிற்காலத்தில் இலங்கையையும் , துவாரகையையும், ஹஸ்தினாபுரத்தையும் மற்றும் இந்திரப்பிரஸ்தத்தையும் நிர்மாணிக்கத் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பவர்.
விஷ்வகர்மாவின் ஆயிரம் உதவியாளர்களும் அவருக்கு அமைந்த ஆயிரம் கைகளே. தங்கள் அனைவரையும் பிரம்மாண்டமான மந்திர ஆலோசனை அறைக்கு விஷ்வகர்மா அழைத்த போது அதன் காரணம் என்னவென்று புரியாமல் அனைவரும் திகைத்தனர். தனது புதல்வி ஸந்த்யாவிற்கும் சூரியதேவனுக்கும் அன்றையப் பொழுதில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது என்று அவர் அறிவித்ததும் அவர்கள் அனைவர்களும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அதைவிட இன்னும் சற்று நேரத்தில் சூரியதேவன் அங்கு வரப்போகிறான் என்றதும் அவர்களின் உவகை பல மடங்கு பெருகியது.
“ எனது ஆயிரம் கரங்களே! சூரிய தேவனுக்கு நாம் மிகவும் பொருத்தமான முறையில் வரவேற்புக் கொடுக்கவேண்டும். ஸந்த்யாவின் அழகைப் பார்த்துப் பிரம்மித்த அவன் நமது நகரைப் பார்த்து இன்னும் அதிகமாகப் பெருமைப்படவேண்டும்! செல்லுங்கள்! உங்களுக்கு என் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதன்படி செயலாற்றும் திறமை இருக்கிறது . உடனே செயல் படுத்துங்கள்! “ என்று உத்தரவிட்டான்.
அவர்களில் முதல்வன், “ தலைவரே! சூரியதேவன் தற்சமயம் எங்கிருக்கிறார்?” என்று வினவினான்.
“ நமது தங்கத் தடாகத்தில் இருக்கிறார். விமானம் அவரை ஏற்றிக் கொண்டு வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.” என்றார் விஷ்வகர்மா.
“விமானத்தில் ஏறிவிட்டார் என்றால் அவர் அரை நொடியில் வந்துவிடுவாரே?” என்று வினவினான் துணை முதல்வன்.
“ இல்லை , இன்னும் வருவதற்கு இரண்டரை நாழிகைகள் ஆகும். அதற்குத் தகுந்த வண்ணம் விமானத்திற்கு நகரைச் சுற்றி வரும்படிக் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார் விஷ்வகர்மா.
“மிக அருமை! தலைவரே! இதோ நாங்கள் செல்கிறோம். சூரியதேவன் மட்டுமல்ல. நம் இளவரசி ஸந்த்யா தேவியும் பிரம் மிக்கும் வண்ணம் நகரை மாற்றப் போகிறோம். விடை கொடுங்கள்” என்று கூறி அவர்கள் அனைவரும் மாயமாய் மறைந்தார்கள்.
மற்ற காவலாளிகளும் , புரோகிதர்களும், பெண்டிரும் கூட அந்த அரண்மனையில் அங்கும் இங்கும் பரபரவென்று பறந்து கொண்டிருந்தனர். அந்த அரண்மனையில் இருந்த அத்தனை மலர்களும், வாசனைத் திரவியங்களும், ஆடை அணிகலன்களும் அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப்புரத்தில் இருக்கும் அரச மகளிர் அனைவரும் தங்கள் குல விளக்கான ஸந்த்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
விஷ்வகர்மா அந்த அலங்கார மண்டபத்திற்கு வந்ததும் ஸந்த்யாவையும் அவள் அன்னையையும் தவிர அனைவரும் அறைக்கு வெளியே சென்று காத்துக்கொண்டிருந்தனர்.
விஷ்வகர்மா அழகுப் பதுமை போல் இருக்கும் தன் மகளைப் பெருமிதத்துடன் பார்த்தார். ஸந்த்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்து அந்த அறையையே சிவப்பாக்கிக்கொண்டிருந்தது.
“ ஸந்த்யா ! உன் அழகுக்கும் நமது பெருமைக்கும் உகந்தவன் சூரியதேவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் ஒரு குறைபாடு உள்ளது. “
ஸந்த்யா தந்தையை ஏறெடுத்துப் பார்த்தாள்.
“ஆம். ஸந்த்யா. எந்தப் பிரகாசத்தைப்பற்றி அவனுக்குப் பெருமை இருக்கிறதோ அந்தப் பிரகாசமும் வெப்பமும் அவனை சந்ததியில்லாதவனாக ஆக்கிவிடும்.”
ஸந்த்யா மட்டுமல்ல மகாராணியும் திடுக்கிட்டுப் போனாள்.
விஷ்வகர்மா புன்னகை புரிந்தார் . “ நீங்கள் இருவரும் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சொர்க்கத்தையே படைத்த எனக்கு இதற்கு ஒரு வழி தெரியாதா? நீ பிறந்த நாளிலிருந்தே உனக்கு மணாளன் சூரியன்தான் என்பதை முடிவு செய்ததும் அவனுடைய குண நலன்களை ஆராய ஆரம்பித்தேன். அப்போது அவனின் குறைபாடு என் கவனத்திற்கு வந்தது. அதைச் சரிசெய்ய வெகுகாலம் யோசிக்க வேண்டியதாயிற்று. அதனால்தான் உன்னையும் அவன் கண்களில்படாமல் அந்தப்புரத்திலேயே ஒளித்து வைத்தேன். சில நாட்கள் முன்னர்தான் கைலாயத்தில் இதற்கான விடை கிடைத்தது.
சிவபெருமான் பாற்கடலில் உதித்த ஆலகால விஷத்தைக் குடிக்கும் போது பார்வதி தேவி அவர் கழுத்திலேயே திருநீலகண்டமாய் இருக்கும்படிச் செய்தார்கள் அல்லவா? விஷம் நின்று விட்டாலும் அதன் உக்கிரம் அவரது உடலில் ஒரு வெப்பத்தையும் பிரகாசத்தையும் ஏற்படுத்தியது. பார்வதி தேவி தன் தந்தை இமவானிடம் இருந்த காந்தக் கல் படுக்கையில் சிவபெருமானைப் படுக்கவைத்து காந்தக் கல்லால் சிவபெருமானின் உடம்பைச் சாணை பிடித்தார். அப்போதுதான் அவரது உக்கிரம் தணிந்தது. அந்தச் சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பார்வதிதேவியிடம் வேண்டிப்பெற்று வந்தேன். அதைக் கொண்டு சூரியனின் பிரகாசத்தைக் குறைத்தால்தான் அவனுடன் நீ வாழமுடியும்.”
“ தந்தையே அவரது பெருமையே அவரது பிரகாசத்தில்தானே இருக்கிறது. அது இல்லாமல் இருக்க அவர் சம்மதிப்பாரா”
“ நிச்சயம் மாட்டான். ஆனால் அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது. மேலும் சூரியதேவன் தன் பிரகாசத்தை முற்றிலும் இழக்க வேண்டாம். காந்தக் கல்லால் சாணை பிடித்து அவன் பிரதிபலிப்பைக் கொஞ்சம் மட்டுப் படுத்திவிடுகிறேன். அது போதும்.”
“ அது சரியல்ல தந்தையே! வேண்டுமானால் எனக்கு அந்த உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை அளிக்க முயலுங்களேன். உங்களால் முடியாதா என்ன? “ என்று வேண்டினாள் ஸந்த்யா.
“ ஸந்த்யா ! அது இயலாத காரியம். ஏனென்றால் உன்னிடமும் ஒரு குறைபாடு உள்ளது. “
“ ஆம் மகளே! அது உன்னுடனே பிறந்தது” என்று சொல்ல ஆரம்பித்தாள் ஸந்த்யாவின் அன்னை.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
“இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசவந்திருக்கும் தலைவர் தர்மராஜன் அவர்களே ! சொர்க்கத்துக்கே அழகு கூட்ட வந்துள்ள சகோதரி எமி அவர்களே ! மற்றும் இன்றைய விழா நாயகரான ஜே கே அவர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் எமபுரிப்பட்டிணத்தின் இலக்கியப் பெருமக்களே!
இன்று நாம் ஜே கே அவர்களின் அக்னிப்பிரவேசத்தை மையமாக வைத்து அவரது கதைகளையும் அவரது எழுத்தாள்மையைப் பற்றியும் பேச உள்ளோம்.
அக்னிப்பிரவேசம் கதை ஜே கே அவர்களின் கதைகளில் நம்மை மிகவும் தாக்கிய குத்தீட்டி என்று நான் கருதுகிறேன். அது எழுதிய அவரையும் பாதித்திருக்கிறது என்று புரிகிறது. அதனால்தான் ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதை கடும் விமர்சனத்துக்குள்ளாகியதும், அதன் முடிவை மாற்றி யோசித்து, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையை ஜெயகாந்தன் உருவாக்கினார் என்பதும் நமக்குப் புரிகிறது.
அக்கினிப் பிரவேசத்துக்கு வருவோம்.
அறிந்தும் அறியாமலிருக்கும் கன்னிப் பருவத்தில் ஒரு ஏழைப்பெண் எப்படி ஒரு ஆணின் ஆசைக்குப் பலியாகிறாள் என்ற கதையைச் சொல்லும்போது அதிகம் படிக்காத அவளின் அம்மா அதைத் திறமையாகக் கையாளும் விதம் இருக்கிறதே ! அம்மம்மா !
அந்த அன்னையின் வரிகள் என்னால் மறக்கவே முடியாது:
“நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.
……
“ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கலே..”
கதைகளில் ஜெயகாந்தன் பேசிக்கொண்டே இருக்கிறார்; பாத்திரங்கள் மூலமாகப் பேசுகிறார். பாத்திரங்கள் பேசாதபோது இவரே நேரடியாகப் பேசுகிறார்.
ஜேகே அவர்களின் இந்தத் தத்துவம்தான் இவரை எழுத்துலக மேதையாக மாற்றியது.
ஜெயகாந்தன் அளவிற்குச் சொல்லாடல்களையும் விவாதங்களையும் கதைப்பின்னலின் பகுதிகளாக ஆக்கியவர்கள் இல்லை.
‘வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது என் வேலையல்ல, அவர்களுக்கு எது பிடிக்க வேண்டுமோ அதை எழுதுவதே எழுத்தாளர்களின் கடமை’என்று கூறி ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன், இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ?’ என்று முழங்கியவர் ஜெயகாந்தன்.
தீவிர இலக்கியத்துக்கும், வணிக வெற்றி இலக்கியத்துக்கும் ஒரு பாலம் அமைத்தவராக ஜெயகாந்தனை நாம் காணலாம். இவரது படைப்புகள் மூலம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இவர் ஒரு இலக்கியவாதி. இவரிடம் அரசியல், கலையுலகம், பத்திரிகை , ஆன்மீக அனுபவங்களைப் பார்க்கலாம். மற்ற கதாசிரியரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கலாம். காந்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நம்மை, இவரது வாழ்க்கை அழைக்கிறது. இவரது பல கருத்துக்கள் பிரும்ம உபதேசமே. சில நேரங்களில் சில மனிதர்கள் யாருக்காக அழுகிறார்கள் ? என்று கேட்டவர். ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்று இருக்கும் மனிதனைக் கோகிலா என்ன செய்து விட்டாள்? அல்லது அவனை விட்டு கங்கை எங்கே போய் விட்டாள். இந்த நேரத்தில் இவள் என்று சொல்ல இவள் என்ன சினிமாவுக்குப் போன சித்தாளா? அல்லது நாடகம் பார்க்கும் நடிகையா ? ஒருத்தி மட்டும் காத்திருக்க ஒருவேளை அவள் பாவப்பட்ட ஒரு பாப்பாத்தியாக இருக்குமோ ? அது, இந்த ஒரு குடும்பத்தில் மட்டுமா நடக்கிறது?
காற்று வெளியிலே கழுத்தில் விழுந்த மாலைக்காக அந்த அக்காவைத் தேடிக் கண்டுபிடித்து இன்னும் ஒரு பெண்ணின் கதையைக் கேட்கலாம். இவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் அல்ல. பாட்டிகளும் பேத்திகளும் சேர்ந்து படிப்பது சுந்தரகாண்டமும் அல்ல; இது அவர்களின் அப்பாக்கள் சொன்ன கதைகளும் அல்ல . இந்த இதய ராணிகளுக்குக் கிடைப்பது என்னவோ சீட்டுக்கட்டு ராஜாக்கள் தான்.
இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கெங்கு காணினும் ஊருக்கு நூறு பேர் ஒவ்வொரு கூரைக்கும் கீழே இருக்கிறார்கள். அவர்களின் கைவிலங்கை உடைத்து ஆயுத பூசை செய்யச் சொல்வது, நிச்சயம் கருணையினால் அல்ல.
கண்ணனும் பிரியாலயத்தில் இருக்கும் உன்னைப் போல ஒருவன் தான் என்று சொல்வார்கள். ஆனால் ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர என்று கூறும் மக்களின் ரிஷி மூலத்தை எந்தக் குரு பீடமும் ஆராய முடியாது. மூங்கில் காடுகளில் கரிக்கோடு போட்டுச் செல்லும் மனிதன் எருமை மாடுபோல, பொம்மைபோல கார்களிலும் வண்டிகளிலும் புகை நடுவினிலே நிற்காத சக்கரத்தில் பாரிஸ் , அமெரிக்கா என்று போகிறார்கள்.
இனிப்பும் கரிப்பும் சேர்ந்த ஒருபிடி சோறு கொடுக்க தேவன் வருவாரா என்று காலை மாலையில் மயக்கமாக இருப்பார்கள். இவர்கள் இறந்த காலங்களில் யுக சந்திக்களில் புதிய வார்ப்புகளைச் சுமை தாங்கிகளாகச் சுய தரிசனம் செய்வார்கள் .
இப்போது புரிகிறதல்லவா? ஜேகேயின் படைப்புக்களின் உண்மை சுடும் என்பது.
அதற்கு மூல காரணம் அவரின் அக்கினிப் பிரவேசம்.
அதைப்பற்றி இங்கு பேசுவது மிகவும் பொருத்தம். ஏனெனில் இங்கு நம்மில் பலர் தினமும் அக்கினிப் பிரவேசம் செய்து வருகிறார்கள். இது நரகாபுரியில் நடக்கும் ஒரு வாடிக்கையான ஆனால் வேதனையான சம்பவம். என்றோ , எங்கோ , எந்தச் சூழ்நிலையிலோ நாம் செய்த தவற்றிற்கு இங்கு கிடைக்கும் தண்டனை அக்கினிப்பிரவேசம்.
இந்தத் தண்டனையிலிருந்து நரகபுரி மக்களைக் காப்பாற்றும்படி இலக்கியசபையின் சார்பில் காவல் தெய்வமாக அமர்ந்திருக்கும் எம தர்மராஜனைக் கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை இந்த மேடையிலேயே தருமாறு வேண்டிக்கொண்டு தலைமை உரை ஆற்ற எம தர்மராஜன் அவர்களை அன்போடு அழைக்கிறேன்.
(தொடரும்)