அட ராஜாராமா….! நித்யா சங்கர்

காட்சி – 1.

Image result for ok kadhal kanmani

(ராஜாராமன் வீடு. ராஜாராமன் குளித்து ஆபீஸ் செல்ல டிரஸ்
செய்து கொண்டு ஹாலுக்கு வருகிறான்)

ராஜா : (கொஞ்சலாக) மனோ… மனோ…

(மனோரமா சமயலறையிலிருந்து வருகிறாள்)

மனோ: (எரிச்சலோடு) அடாடாடா… ஏன் என்ன வேணும்..?

ராஜா : (அவள் கையைப் பார்த்துவிட்டு கிண்டலாக) ஆ..கையிலே
கரண்டி கிரண்டி ஒண்ணும் இல்லையே…!

மனோ: ஆமாமா.. அதுக்குத்தான் குறைச்சல்..

ராஜா : பின்னே.. நீ வற தோரணையைப் பார்த்தா ஒரே போடா
போட்டுடுவே போலிருக்கே…! நான் கூப்பிட்ட தோரணை
என்ன… நீ வர வேகமென்ன… ச்ச்ச்.. பரிபாடற்குரியது…
பரிபாடற்குரியது…

மனோ: பேச்சுக்கு மட்டும் குறைச்சலே இல்லே…

ராஜா : ம்… ஆதௌ கீர்த்தனாரம்பத்துலே என்று தொடங்குவாங்க… நீ என்னடான்னா… அடாடான்னு ஆரம்பிச்சு  வெச்சிருக்கே… பார்ப்போம்.. நடத்து..

மனோ: உங்களுக்கென்ன..?

ராஜா : மனோ.. நீ இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல்?
வேளா வேளைக்கு சமைச்சுப் போட்டுடறே.. உப்பு,
காரமெல்லாம் சரியா இருக்கா என்பதெல்லாம் வீண்
கேள்வி. சாப்பிடறது நான்தானே… அதுக்குத்தானே
உன்னைக் கல்யாணம் பண்ணிட்டிருக்கேன்.

மனோ: என்ன..? என்ன சொன்னீங்க..?

ராஜா : ஆமா… டிரஸ்ஸைத்தான் எடுத்துக்கோயேன்.. டிரஸ்ஸ¤ம்
தெச்சுக் கொடுத்துடறே.. ·பிட் சரியா இருக்கான்னால்லாம்
கேட்டுக்கக் கூடாது…

மனோ: ஆமாமா… உங்களுக்கெல்லாம் தெச்சுத் தரேன் பாருங்க..
என்னைச் சொல்லணும்…

ராஜா : நான் நல்லா இருக்குன்னுதானே சொல்றேன். அதனாலே
தானே அதை ஹோம் கன்ஸம்ஷனுக்கு வெச்சுட்டு
வெளி விவகாரத்துக்கு வேறே டெய்லரை எங்கேஜ்
பண்ணிட்டிருக்கேன்.

மனோ: (கண்ணைக் கசக்கிக் கொண்டு) இங்கே பாருங்க இனிமேல்
ஒண்ணும் பேசாதீங்க.. என்னை அவமானப்படுத்தறதுலே
உங்களுக்கு என்னதான் இன்பம் கிடைக்குதோ..?

ராஜா : ஐயோ.. உன்னையா… நானா..? அவமானப்படுத்துறதா..?
அப்புறம் நான் இந்த வீட்டிலே எப்படி இருக்கிறது..?
எனக்கு வேறே போக்கிடம் ஏது?

மனோ: ஏன் இப்படி எரியற நெருப்பிலே எண்ணையை வார்க்கறீங்க..?

ராஜா : ம்… அப்பத்தானே குப்புன்னு புடிச்சு கபகபன்னு எரியும்..
எரியற நெருப்பிலே பின்னே தண்ணியா வார்ப்பாங்க..?
மனோ.. ஒரே ஒரு கேள்வி… இதுக்கு விடை சொல்லு
பார்க்கலாம்… நெருப்போ, புகையோ இல்லாமல்
கொழுந்து விட்டு எரியறது எது..? சொல் பார்க்கலாம்..?

மனோ: (எரிச்சலோடு) உங்க கேள்வியைக் கொண்டு குப்பையில்
போடுங்க..

ராஜா : (சிரித்துக் கொண்டே) ஏன்.. நான் சொல்லட்டுமா.. ஹியூமன்
மைன்ட்… இப்போ உன் மைன்ட் எரிஞ்சிட்டிருக்கு பார்…

மனோ: ஆமாமா… அதையெல்லாம் பார்த்து விசாரிக்க                           உங்களுக்கெங்கே டைம்..?

ராஜா : அதுக்கு டைம் இல்லாமலா உன்கிட்டே பேசிண்டிருக்-
கேன்..? நானும் உன்னை சிரிக்க வைக்கணும்னு என்ன
வெல்லாமோ சொல்லிப் பார்க்கிறேன்… முடியலையே…
ஆமா.. இன்னிக்கு என்ன தேவியின் முகம் பார்க்கச்
சகிக்கலே…

மனோ: என் கவலை எனக்கு.. நீங்க எதுக்கு அதைத் தெரிஞ்சுக்-
கிட்டு வேதனைப் படணும்..?

ராஜா : ஓ.. தேவிக்கு அத்தனை கோபமா..? இங்கே பார் மனோ..
உன் வேதனையைப் பார்த்துட்டு நான் ஆனந்தமா இருக்க
முடியுமா..? கணவன் மனைவவின்னு உறவை ஏன்
ஏற்படுத்தி இருக்காங்க தெரியுமா..? அவங்களுக்குள்ள
இன்பங்களையும், துன்பங்களையும் பங்கிட்டுக் கொண்டு
ஒருவருக்கொருவர் ஆதரவா இருக்கணும்னுதானே..!
உன்கிட்டே என்ன நான் கூடத் தெரிஞ்சு கொள்ளக்
கூடாத ரகசியம் இருக்கா என்ன..?

மனோ: ஆமாமா.. போதனை பெரிசாத்தான் இருக்கு.. போதிப்பவங்களும் அதைப் ப்ராக்டீஸில் கொண்டு வந்தா
தேவலை….

ராஜா : ஓ… அதுதானா? உனக்குத் தெரியாத இரகசியம்
என்கிட்டே என்ன இருக்கு? நான்தான் ஆபீஸிலிருந்து
வீட்டுக்கு வந்ததும் டேப் ரிகார்டர் மாதிரி கடகடன்னு
அன்னன்னிக்கு நடந்ததை எல்லாம் ஒப்பிச்சிடறேனே..!

மனோ: அப்போ எனக்குத் தெரியாத இரகசியம் உங்ககிட்டே
ஒண்ணுமே இல்லையா..?

ராஜா : ஊஹூம்… பார் மனோ… நான், பலராமன், கோவிந்தன்,
கிருஷ்ணன், நாலு பேருமா ஸண்டே.. ஸண்டே எக்ஸ்கர்ஷன் போயிட்டு வரோமே… சாதாரணமா ·ப்ரண்ட்ஸெல்லாம் எக்ஸ்கர்ஷன் போய்ட்டு வந்தா அப்போ நடந்ததையெல்லாம் வைஃப் கிட்டே சொல்லிட்டா இருப்பாங்கா..? அதைக் கூட நான் உன்னிடம் ஒப்பிச்சிடறேனே.. அப்படியும் நான் ஏதோ மறைச்சிருக்கிற
மாதிரியல்லவா பேசறே..?

மனோ: ம்… அதைத்தானே கேட்டேன்… என் கிட்டே எக்ஸ்கர்ஷன்
போய்ட்டு வரேன்னு சொல்லி ஸண்டே ஸண்டே எங்கே
போறீங்க..?

ராஜா : (திடுக்கிட்டு குழப்பத்தோடு) என்ன மனோ..? இப்படிக்
கேட்கறே..? எக்ஸ்கர்ஷன்தானே போய்ட்டு வரோம்..

மனோ: (கோபத்தோடு) என்னை இனியும் நீங்க ஏமாத்த முடியாது.
நேத்து தற்செயலா உங்க  ஃப்ரண்டு கிருஷ்ணன் மனைவி
கமலாவைப் பார்த்தேன். பேசிட்டிருக்கும்போது உங்க
எக்ஸ்கர்ஷனைப்பத்திப் பேச்செடுத்தேன்.. அவளுக்கு
ஒரே ஆச்சரியமாப் போச்சு.. ஸண்டே அவ ஹஸ்பென்ட்
வெளியிலே போறதேயில்லையாம்.. போறதா இருந்தா
அவளையும் கூட்டிக்கிட்டுத்தான் போறாராம்…

ராஜா : (திடுக்கிட்டு) என்ன..? அவளைப் பார்த்தாயா..? எல்லாம்
தெரிஞ்சிடுத்தா..?

மனோ: (பாதி அழுகையும், பாதி கோபமுமாக) நான் உங்களுக்கு
என்ன கெடுதல் செய்தேன்..? என்கிட்டே உண்மையை
ஏன் மறைக்கறீங்க…?

ராஜா : ஸாரி மனோ.. அந்த ஒரு விஷயத்தைப்பற்றி மட்டும்
என்னைத் துளைத்துத் துளைத்துக் கேட்காதே… நம்ம
குடும்பம் சந்தோஷமா இருக்கணும். அதை முன்னிட்டாவது என்னை அதைப்பத்திக் கேட்காதே..!

மனோ: எனக்கு துரோகம் செய்யறீங்கன்னு எனக்குத் தெரிஞ்ச
பிறகு இன்னுமா நம்ம குடும்பத்திலே மகிழ்ச்சி துள்ளி
விளையாடும்.

ராஜா : (தடுமாறி) ஐயோ மனோ.. நான் சொல்றதைக் கேள்..
என்னை உனக்குத் தெரியாதா..? நான் உனக்குத் துரோகமா
ஏதாவது நினைப்பேனா..?

மனோ: பின்னே என்ன..? என்கிட்டே சொன்னா என்ன..?
சொல்லுங்களேன்…

ராஜா : மனோ.. பிளீஸ்.. தயவு பண்ணேன்.. என்னை அதைப்பத்திக் கேட்காதே. என்னை நம்பு…

மனோ: நான் உங்களை இத்தனை நாள் மனமார நம்பிட்டுத்தான்
இருந்தேன். இந்தக் காலத்துலே யாரைத்தான் நம்ப
முடிகிறது…?

ராஜா : நான் சொல்றதுலே ஏன் உனக்கு நம்பிக்கை ஏற்பட
மாட்டேன் என்கிறது..? உண்மையை உடைச்சுச்
சொல்லிடலாம். ஆனா அது வீண் மனஸ்தாபங்களுக்குக்
கொண்டு போயிடும்.. நான் ஒண்ணுமே தப்பா செய்ய
மாட்டேன் நம்பு…

மனோ: தப்பொண்ணுமில்லையானா ஏன் என்கிட்டேயிருந்து
மறைக்கறீங்க..?

ராஜா : ஐயோ… ஆளை விடு. நான் ஆபீஸ் போய்ட்டு வரேன்..

(போகிறான்.. மனோரமா கண்ணீரோடு நிற்கிறாள்)

 

காட்சி – 2

Related image

(மனோரமா இடிந்து போய் வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள்.
கமலா வருகிறாள்)

கமலா : (வந்து கொண்டே) மனோரமா.. மனோரமா..

மனோ: (திடுக்கிட்டுச் சமாளித்துக்கொண்டு) ஓ.. கமலாவா…வா..

கமலா : வீட்டிலே நிம்மதியா இருக்கவே முடியலே.. உன்னைப்பற்றிய நினைப்புத்தான்.. நீ அவர்கிட்டே கேட்டியா…

மனோ: (பெருமூச்சோடு) கேட்டேன்…

கமலா: என்ன சொன்னார்..?

மனோ: (விரக்தியாக) ச்.. என்ன சொல்றது..? கேட்டதும் திடுக்கிட்டார்..

கமலா: ஓகோ.. மாட்டாரா,,? நாம இவ்வளவு ரகசியமா
போறோமே.. அவளுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு
திடுக்கிட்டுப் போயிருப்பார்..

மனோ: திடுக்கிட மட்டுமா செஞ்சார்.. கோபம் வேறே வந்துடுத்து.

கமலா: பின்னே கோபம் வராதா..? ‘என் மனைவி இவ எனக்கு
அடிமைப்பட்டவதானே.. இவளென்ன நம்மைத் தட்டிக்
கேட்கறதுன்னு கோபம் வந்துருக்கும்..

மனோ: அப்புறம் கேள்.. சிள்ளுன்னு எரிஞ்சு விழுந்தார்..

கமலா: இந்த ஆம்பிளைகளுக்குத்தான் எத்தனை அகம்பாவம்..
தான் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நெனப்பு
போலிருக்கு… சம்சாரம் தட்டிக் கேட்டா சள்ளு புள்ளுன்னு
எரிஞ்சு விழுந்துட்டா ஆயிடுச்சா..? மனோரமா! அவரை
அப்படியே விட்டுட்டா உனக்குத்தான் ஆபத்து..

மனோ: அவர் பேசின பேச்சுக்களைக் கேட்டதும் எனக்கும்
எக்கச்சக்கமா கோபம் வந்துடுத்து. நானும் எனக்கு
துரோகம் பண்ணப்போறீங்களான்னு கேட்டுட்டேன்..

கமலா: வெரி குட்… இந்தக் காலத்து ஆம்பிளைகள்கிட்டே வெட்டு
ஒண்ணு துண்டு ரெண்டாத்தான் பேசணும்.. அப்போ
என்ன சொன்னார்…?

மனோ: நான் உனக்கு துரோகம் செய்வேனா..? என்மேலே
உனக்கு நம்பிக்கை இல்லையான்னு கெஞ்ச ஆரம்பிச்-
சுட்டார்…

கமலா: அப்படி வந்தாரா வழிக்கு…!

மனோ: வராம விடுவேனா..? எனக்குத்தான் உன் அட்வைஸ்
இருக்கே…

கமலா: ஆமாம்.. மனோ.. உனக்கு ஏதாவது யோசனை வேணும்னா
தாராளமா கேள்…

மனோ: கமலா… கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கறபோது
எனக்கு எத்தனை இன்பமா இருக்கு தெரியுமா..? நாங்க
ரெண்டு பேரும் மன வேற்றுமை இல்லாம வாழ்ந்த
வாழ்க்கை…

கமலா: மனோ.. தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது.. நீ எங்கே
தைரியத்தை  இழந்திடுவையோன்னுதான் நான் வந்துருக்கேன்.

மனோ: (திடீரென்று கோபத்தோடு) அடச்சீ… நீ எனக்கு
தைரியம் சொல்லவா வந்துருக்கே..

கமலா: (திடுக்கிட்டு) மனோ… என்ன சொல்றே?

மனோ: வம்பு… வம்புலே உனக்குள்ள அக்கறை.. ஊர் வம்பு
ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தே… நான் அகப்பட்டேன்..

கமலா: (சிறிது காரமாக) மனோ.. வண்டி வழிமாறிப் போகுது..

மனோ: அதெல்லாம் நேராத்தான் போகுது.. குறுக்கு புத்தி
உள்ளவங்களுக்கு அப்படித்தான் தெரியும். எங்க
குடும்பம் மகிழ்ச்சியா இருக்கறதைப் பார்த்து ஏன்
உனக்கு இவ்வளவு பொறாமை..? அதைக் கெடுக்க
ஏன் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டே..?

கமலா: அந்த மகிழ்ச்சி நீடிக்கணும்ங்கற நல்ல எண்ணத்துலேதான்
சொன்னேன்.. ஜாக்கிரதையா இரு.. பின்னாலே கஷ்டப்படாதேன்னு சொல்லத்தான் இந்த வெய்யில்லே வந்தேன். எனக்கென்ன வீட்டிலேயிருந்து இந்த வெய்யில்லே இங்கே வரணும்னு தலையெழுத்தா என்ன..?

மனோ: தலையெழுத்தல்ல… ஊர் வம்புலே உள்ள ஆசை.. யார்
யார் சண்டை பிடிச்சுக்கறாங்கன்னு பார்த்து கிளப்லேயும்,
பீச்லேயும் உட்கார்ந்து பேசறதுலேயுள்ள ஆசை…

கமலா: (கோபமாக) மனோரமா…

மனோ: கமலா.. ஸோ ஸாரி… இனியும் இங்கே நிற்காதே.. போயிடு
என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு…

கமலா: மனோரமா… ஆத்திரத்துலே என்னவெல்லாமோ பேசறே..

மனோ: ஷட் அப்… இங்கேயிருந்து போயிடு.. கெட் அவுட்..

கமலா: வந்த வேளை சரியில்லை.. என்னமோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நயமா அவர்கிட்டே கேட்டு உன் உரிமைகளைக் காத்துக்க.. அவ்வளவுதான் நான் சொல்வேன்… வரேன்….

(போகிறாள்)

மனோ: உதவாக்கரைகள்.. பிறர் விஷயத்துலே தலையிடறதுலே
ஏக அக்கறை…

மனசாட்சி: (சிரித்துக் கொண்டே) முட்டாள்.. உனக்கு உன் மேல்
உள்ள எரிச்சல்லே அவளைத் திட்டி அனுப்பிட்டே..
அதனாலே உன் சந்தேகம் தீர்ந்தா போயிடும்..? உன்
மனசு நிம்மதி அடைஞ்சுடுமா..? ஆதரவு சொல்லவாவது
அவளை வெச்சுட்டிருக்கலாமே… ம்… பெண்புத்தி
பின்புத்திதானே..?

மனோ: நான்தான் என்ன செய்வேன்… இந்த சந்தேகம் எனக்கு
வராமலே இருந்திருக்கக் கூடாதா..? ஆண்டவனே,
ஏன் இப்படி ஒரு புயலைக் கிளப்பிவிட்டே… ஆமா..
அவர்கிட்டே நயமாத்தான் கேட்டுப் பார்ப்போமே..!

(கண்ணீரோடு திகைத்து நிற்கிறாள்)
(உண்மையில் ராஜாராமன் நல்லவனா கெட்டவனா..
தெரிந்து கொள்ள அடுத்த இதழ் வரும் வரை
காத்திருக்க வேண்டும்)

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.