ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து

 

 

 

 

 

 

 

 

புத்தியுள்ள மனிதரெல்லாம்                                                                                     வெற்றி காண்பதில்லை                                                                        வெற்றிபெற்ற மனிதரெல்லாம்                                                                புத்திசாலி இல்லை – புத்திசாலி இல்லை”

காலையில் எழுந்தவுடனேயே காப்பி சாப்பிடுவதற்கு முன்பே ஏதாவது ஒரு பாடல் வரிகள் (பெரும்பாலும் சினிமா பாட்டுதான்) என் மண்டைக்குள் சுற்ற ஆரம்பித்துவிடும். மேலே சொன்னது இன்றைய பாட்டு. இப்படி தத்துவப்பாடல் என்று இல்லை. சமயத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ கூட வரும். (‘இந்தாடிப் பொண்ணு வடை முறுக்கு’ம் வரலாம்)

என் அலுவலகத்தில் ஒருவர் விசிலிலேயே பாட்டிசைப்பார். ‘தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம்’ விசிலடித்தால் காலையில்தான் எழுதுபொருள் வியாபாரி சபாபதி வந்து போயிருப்பார்.  ‘அப்பனைப் பாடும் வாயால்’ பாட்டா, அப்படியானால் பெரும்பாலும் எம் கே ட்ரான்ஸ்போர்ட் கணக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்.

அதுமாதிரி, என்னைச் சுற்றும் பாடல்களுக்கு  நேற்றைய நிகழ்வுகளிலோ அல்லது கனவிலோ   தொடர்பைத் தேடித்தேடி எனக்கு அலுத்துவிட்டது.

Related image

போகட்டும். இந்த சந்திரபாபு பாட்டிலே இரண்டு விதமான மனிதர்களைக் குறிப்பிட்டாலும் நான் அவர் குறிப்பிடாத மற்ற இரண்டுவித மனிதர்களில் ஒருவன். (புத்திசாலியும் அல்ல, வெற்றி கண்டவனும் அல்ல). ‘ஆயிரம் பேர் நடுவில் நீ நடந்தால்’ பாட்டில் வருகிற மாலைகள் விழாத 999 பேரில் ஒருத்தன்.  எட்டாம் வகுப்பு படிக்கும்போது  கலிங்கப் போர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தாலும்  இறந்து கிடக்கும் வீரர்களில் ஒருவனாகத்தான் (அதுவும் கடைசி வரிசையில்) படுத்துக்கிடக்க நேர்ந்தது.     

இப்படி அடையாளமில்லாத யாரோ ஒருவனாகவே எட்டாம் வகுப்பின்போது இருந்திருக்கிறேன் என்றால், அதற்கு முன் ஏதாவது நினைவிற்கு வருகிறதா என யோசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அத்தை, மாமா, சின்னம்மா, பெரியம்மா, பெரியப்பா, பெரியம்மா என்று பலரும் உண்டு. அவர்களது பிள்ளைகள் என் சம வயதிலும், பெரியவர்களாகவும், சின்ன வயசுக்காரர்களாகவும் நிறையப்பேர். ஒவ்வொரு பையன் அல்லது பெண்ணைப்பற்றியும் ஏதாவது சிறு வயதுக் குறும்போ, புத்திசாலித்தனமோ, வேடிக்கையோ கொண்ட குட்டிக்கதைகள் பல பேசிப் பேசியே நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

என்னைப்பற்றிய கதைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். மரத்திற்குப் போட கரையான் எண்ணெய் வாங்கிவரச் சொல்ல, நான் குழந்தைகளுக்குப் போடும் கரப்பான் எண்ணெய் வாங்கிவந்து அடி வாங்கியது நினைவில் இருக்கிறது. 

 

Image result for கீரைக்காரி

ஒரு குட்டிச் செய்தி மட்டும் உண்டு.  வாசலோடு போன கீரைக்காரியைக் கூப்பிடுமாறு வீட்டிற்குள்ளிருந்து  பாட்டி குரல் கொடுத்திருக்கிறாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த நான் சும்மா இருந்துவிட்டேனாம். பாட்டி ‘கடன்காரா.. கட்டையில போக’ என்று வழக்கமான ஆசீர்வாதத்துடன் சத்தம் போட்டாளாம்.  முட்டுச் சந்தில் போய்க்கொண்டிருந்த  கீரைக்காரி, திரும்பி இப்படித்தானே வரணும் என நான் அமைதியாகப் பதிலளித்தேனாம். என்னுடைய மூன்று நான்கு வயதில் நான் ஒன்றும் மோசமில்லை என்று சொல்வதற்காக இந்தக் கதையைச் சொல்வார்கள்.

ஆனால் எப்படி நாளடைவில்  என் பெயர் ரிப்பேர் ஆகியது என்று தெரியவில்லை. சரஸ்வதி சபதத்தில்  பேசமுடியாத சிவாஜி புலவனாகவும் கோழை   ஜெமினி  வீரனாகவும்  ஆவதாக வரும். என் கேஸ் தலைகீழோ என்னவோ? இல்லையென்றால் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே’ என்பதுபோல் புத்திசாலிக் குழந்தைதான் என்றும் வருமோ என்னவோ? போகப்போகத்தான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் போலிருக்கிறது.

இஸ்கூல்ல போடுகிற அன்றைக்குப் பல பிள்ளைகளுடன் ‘ப்ளஷரில்’ (அந்தக் காலத்தில் ‘கார்’ பிளஷர் என்றுதான் சொல்லப்படும். கார் என்று சொன்னால் அது பஸ்.) போனாலும் மறுநாள் முதல் வயல்காடு, கால்வாய்கரை என்று கால்நடைதான். ஆடிப்பாடிக்கொண்டு தூக்குச்சட்டியில் சாப்பாட்டோடு பள்ளிக்குப் போனதும், ஒரு காரணமுமின்றி சில நாள் வாய்க்காலில் குதித்து விளையாடிவிட்டு ஈரத்தோடேயே ஸ்கூல் போனதும் லேசாக நினைவிருக்கிறது. என்றாவது கூட வந்த பையன்கள் மீன் பிடிக்க முயன்றால் நான் பள்ளிக்கு ஓடிவிடுவேன். சுத்த சைவம் அல்லவா?

Related image

அரைக்கண் மூடிய நிலையிலேயே தாமோதரன் சார் பாடம் நடத்தியதும், ஸ்கூலுக்கு வராத பயல்களை வந்திருக்கும் பையன்களில் சிலரை ஏவிக் கூட்டிவரச் செய்ததும் நிழலாக நினைவில் இருக்கிறது. நான் நன்றாகப் படித்தேனா இல்லை மக்கு என்று பேரெடுத்தேனா என்பது நினைவில்லை.   

இதெல்லாம் மூன்றாம் வகுப்பு வரை. அண்ணனுக்கு ஆறாம் வகுப்பிற்கு அந்த ஊரில் பள்ளி கிடையாது.  அப்போது என் தாத்தா தான் குடும்பத் தலைவர். அவருக்கு என்ன தொழில் என்று நினைவு இல்லை. அப்பாவிற்கு  டவுனில் ஒரு  ஆபீஸ் வேலை கிடைத்தது, தாத்தாவும் ஒரு வக்கீலிடம் வேலைக்குச் சேர்ந்தது, இவற்றோடு அண்ணன் ஸ்கூலையும் முன்னிட்டு  குடும்பத்தோடு அந்த நகரப் பிரவேசம்.

‘நாலாங் க்ளாஸ்’ படிக்கும்போதுதான் யூனிபார்ம் என்னும் சீருடை ஆரம்பித்தது. எல்லாப் பள்ளிகளுக்கும் காக்கி நிக்கரும் வெள்ளைச் சட்டையும்தான். இப்போதுபோல பல வண்ணங்களில் கட்டம்போட்ட கோடுபோட்ட சட்டையெல்லாம் கிடையாது. ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பில்தான் தொடங்கும்.  வகுப்பு லீடர், ரெட் ஹவுஸ், எல்லோ ஹவுஸ், ப்ளூ ஹவுஸ், விளையாட்டுப் பீரியட், மாஸ் டிரில், இன்ஸ்பெக்ஷன் என்று அதிகாரிகள் வருவது போன்றவைகள் அறிமுகமான காலம் அது. ‘பெரியவனே’ என்று ஆசிரியர்களால் விளிக்கப்பட்டு, அந்தப் பெயர்  நிலைக்கத் தொடங்கியதும் அப்போதுதான்

முதல் முறையாக பெஞ்சில் ஏறி நின்றது பாட சம்பந்தமாக இல்லை. மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது கடைசி பீரியட். கந்தசாமி சார் பூகோளம் நடத்திக்கொண்டு இருந்தார். பக்கத்திலிருந்த ரவி, என்னை நிமிண்டி கிசு கிசு என்று ஒரு விஷயம் சொன்னான். “வகுப்பில் இரண்டு பையன்கள் பேசிக்கொண்டு இருந்தால், கந்தசாமி சார், ‘வொய் ஆர் யூ டாக்கிங்?’ என்று எழுந்திருக்கச் சொல்வார். தமிழில் பாடம் நடத்தும்போது ஏன் இங்க்லீஷில் கேட்கிறார், அதுவும் பேசுகிறவனை விட்டுவிட்டுச் சரியாகக் கேட்டுக்கொண்டு இருப்பவனைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று புரிவதில்லை”     என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கந்தசாமி சார் என்னைப் பார்த்து, “யூ ஸ்டாண்ட் அப். வொய் ஆர் யு டாக்கிங்?” என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சார் கடுப்பாகி வகுப்பு முடியும் வரை என்னை பெஞ்சில் ஏறி நிற்க வைத்துவிட்டார். அவமானம் ஆத்திரம் தாங்காமல் குளத்தங்கரையில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு வீடு போய்ச்சேர்ந்ததாக ஞாபகம்.

அப்போதெல்லாம் வகுப்பு லீடர், ஹவுஸ் லீடர் என்றெல்லாம் இருந்ததில்லை. என்னைப்பற்றி நல்லவிதமாகவோ பொல்லாத  விதமாகவோ பேச்சும் கிடையாது. முதல் முதலாகக் கெட்ட பெயர் வாங்கிய சம்பவம் இதுதான்.

அந்த வாரம் கடைசி இரண்டு நாளும் நான் ஸ்கூல் போகவில்லை. குலதெய்வத்திற்குச் செய்வதற்காக ஊருக்குப் போய்விட்டோம். சனிக்கிழமை அடுத்த தெரு கோபாலைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டேன். திங்கள் காலையில் சரித்திரம் டெஸ்ட் என்று பாடங்களின் பெயர்களையும் சொன்னான். நான் தயாராகத்தான் ஸ்கூல் போனேன்.

ஆனால் உண்மையில் அன்று சயின்ஸ் டெஸ்டாம். கோபால் வேண்டுமென்று பொய் சொல்லியிருக்கிறான். எனக்கு சோகமும் ஆத்திரமும் தாங்கமுடியவில்லை. தெரிந்ததை எழுதியிருக்கலாம். என்ன கிறுக்குத்தனமோ, வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டேன். சயின்ஸ் வாத்தியாரும் சரி, வீட்டிலும் சரி, என்ன காரணம் என்று கேட்காமலேயே ரொம்பத் திமிர் என்று தண்டனை கொடுத்தார்கள். என்னுடைய பக்க நியாயத்தை அல்லது காரணத்தை நானாகவாவது சொல்லியிருக்கலாம் இல்லையா? ஏன் சொல்லவில்லை?   

இப்போது நினைக்கையில் தோன்றுகிறது —- வாயைத் திறக்க வேண்டிய சமயத்தில் திறக்காமல் கஷ்டப்படுவது என்னுடைய  ‘கேரக்ட’ராகத் தொடங்கியது அப்போதுதானோ?

வகுப்பில் ஓரிரு முரட்டுப் பையன்கள் உண்டு. (ஒருவன் சோமசுந்தரம், இன்னொருத்தன் ஆண்டனி, மூணாவதா ஒருவனும் உண்டு. பெயர் நினைவில்லை). அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அலட்சியமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆசிரியர்களைப்பற்றிப் பேசும்போது ஒருமையில் பேசுவார்கள். அவர்களுக்கு மற்ற மாணவர்களிடையே ஒரு ‘ஹீரோ இமேஜ்’ கூட சமயத்தில் ஏற்படும். என்ன காரணமோ, நான் அந்த குரூப்பில் இல்லை.

 

(சொல்ல ஆரம்பித்ததும்தான் எப்படிச் சொல்லலாம் என ஒரு பிடிப்பு வருகிறது. முடிந்தவரையில் காலக்கிரமத்தில் சொல்வது சௌகரியமாக இருக்கிறது.)

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s