“எனக்குத் தோல்வியா”? – மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

Image result for indian christian school girl falling down in school

அன்று காலை, சூசனுக்கு மிகவும் பிடித்தமானதாகவே அமைந்தது. அவள் கோடை விடுமுறை முடிந்து ஒன்பதாவது போகும் முதல் நாள். ஜுன் மாதம்தான், ஆனாலும் அவளுக்குப் பிடித்தாற்போல் மழை பெய்து, எங்கு பார்த்தாலும் எல்லாம் பளிச்சென்று இருந்தது. மேலும், காலைச் சூரியனின் மிதமான ஒளி அழகைக் கூட்டியது! அன்றைய மதிய உணவுக்கு மார்கரெட் பாட்டி அவளுக்குப் பிடித்த எலுமிச்சை சாதத்துடன் மொறு மொறு உருளைக் கிழங்குப் பொரியலும் அத்துடன் மணக்கும் வெள்ளரிப்  பச்சடியும் வைத்திருந்தார்.

தன் வகுப்புக்குச் சென்றவுடன் அவளுக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. சூசனின் அம்மா லிடியாவும் டீச்சர். அவர்கள் சொன்னது போலவே கடவுளுக்குப் பிரார்த்தனை செய்து, தன் இடத்தில் உட்கார்ந்தாள். ஜான் தாத்தா அவள் சிறு வயதில் சொல்லி தந்த “நன்றி” வாழ்த்தையும் முணுமுணுத்தாள்.

ஏதோ பாட்டு மனதிற்குள் சிணுங்க, மீண்டும் தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள் “நல்ல மார்க் எடுப்பதற்காக பிரெஞ்ச் எடுத்திருக்கிறேன். தமிழில் முழு மார்க் எடுப்பது ரொம்பக் கஷ்டம். பிரெஞ்ச் எடுத்தால் முழு மார்க் வாங்கலாம்”. இவள் இப்படி உருக, அவளின் அம்மா, பாட்டி, தாத்தா, அப்பா (அலெக்ஸ்), ஹிந்தி டீச்சர் எல்லோரும் இந்த வகுப்பில் பிரெஞ்ச் எடுப்பதை எச்சரித்தார்கள். தன் வயதிற்கு உரியதான “எல்லாம் எனக்குத் தெரியும்” பன்ச் டயலாக்குடன், “நான் புத்திசாலி, கஷ்டமே இல்லை” என்று பிறர் பேச்சுக்கு இடமில்லாமல் செய்து விட்டாள்.

மதிப்பெண் மட்டுமே சூசனின் குறிக்கோள். அதற்கு ஏற்றாற்போல் மார்க் அதிகம் பெறுகையில், அலெக்ஸ் விதவிதமாக உடைகள் வாங்கித் தந்தார், தாத்தா புது விதமான பேனாக்கள், பாட்டி சிற்றுண்டிகள் செய்து கொடுப்பாள். அம்மாவோ எல்லோரிடமும் சொல்வாள். இந்தப் புகழாரமும், சபாஷ்களும்தான் சூசனுக்கு ஊக்கம் கொடுத்தது. மெதுவாக, மதிப்பெண் இவள் முத்திரையானது.

வகுப்புகளில் சுறுசுறுப்பாகப் பாடங்கள் ஆரம்பித்தது. மாத முடிவில் முதல் வினாடி வினா வைத்தார்கள். மற்ற பாடங்களில் சூசன் ஏறத்தாழ முழு மார்க் எடுத்து விட்டாள். பிரெஞ்சில் ஒற்றை எண்ணாக வாங்கினாள். சூசன் விடவில்லை, நேரம் கூட்டிப் படித்தாள். பிரெஞ்ச் பாடம் படிக்க, தன்னை வற்புறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவளைப் பொறுத்தவரை எப்பவும் நிறைய மார்க் எடுக்கணும், அப்போதுதான் மதிப்பு. இல்லேன்னா “நானே என்னை மதிக்க மாட்டேன்” என்ற கருத்துடையவள்.

மார்கரெட் வாக்கு கொடுத்தாள், பாஸ் மார்க் எடுத்தால், அவள் சூசனுக்குப் பிடித்த சோமாசி செய்வதாக.

முதல் தேர்வு வைத்தார்கள். இவள் இந்தத் தடவையும் பிரெஞ்சில் மட்டும் ஒற்றை எண் மார்க். “இப்படி மார்க் எடுத்தா யார் மதிப்பார்கள்? தோற்றுவிட்டேன்” என்ற எண்ணம் சூசனுக்கு உறுதியானது.

Related image

தேர்வு முடிந்து, இரண்டு-மூன்று நாளிருக்கும், திடீரென உட்கார்ந்த இடத்தில் சரிந்து விழ, தோழிகள் இவளைக் கூப்பிட்டுப் பார்த்தார்கள், ஏதும் பதில் சொல்லவில்லை, கண்கள் திறந்துதான் இருந்தது. டீச்சர் வந்து, முதல் உதவி செய்தார்கள். அவர்கள் அறிந்ததே, சூசன் பயந்த சுபாவம் உடையவள் என்று.  எதற்கோ பயந்திருப்பாள் என்று எண்ணினார்கள்.

இரண்டு நாள் கழித்து, மறுபடியும் சரிந்தாள், இந்த முறை, கண்கள் மூடிக்கொண்டது. அம்மாவை அழைத்தார்கள். லிடியா, சூசன் கடிமையாகப் படிப்பதினாலேயே என்று எடுத்துச் சொன்னாள். அடுத்த நாளும் சரிந்ததும் அம்மாவை அவசரமாக அழைத்தார்கள்.  மார்கரெட்டும் வந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். “வீக்” என்று ட்ரிப்ஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அடுத்த ஐந்து நாளும் இதே போல் சரிய – அம்மா ஓடி வர – மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல; கேசுவால்டி டாக்டர் சூசன் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்பதை வலியுறுத்தினார். பெரிய டாக்டரை பார்க்கச் சொன்னார்.

அங்கு ஆயா ஒருத்தர்  “இந்த வயசுல பாப்பாவுக்கு என்ன டென்ஷன்?காதலா? மக்கா?” எனக் கேட்டாள். பெரிய டாக்டர், பரிசோதித்து என்னைப் பார்க்கச் சொல்லிக் கூடவே “அவர்கள் சொல்வதைக் கடைப்பிடித்தால், சரியாகி விடலாம்” என்பதைச் சொன்னார். நேரத்தைக் குறித்தும் கொடுத்து விட்டார்.

Related image

என்னைப் பார்க்க நால்வராக வந்தார்கள். சூசன், அவள் அம்மா, தாத்தா-பாட்டி. பாட்டி எல்லோரையும் அறிமுகப்படுத்தியபடி சொன்னார்கள் “என் தயவில் இருப்பதால், நான் விவரத்தைச் சொல்கிறேன்” என்றவுடன் ஜான் , “ஆமாம், லிடியாவுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அதான் இங்கேயே இருக்க வேண்டியதா போச்சு” என்றார். லிடியா கண்களில் கண்ணீர் தளும்பியவாறு என்னைப் பார்த்தாள். சூசனும் என்னை உற்றுப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான், சூசனைப்  பார்த்தபடி, மார்கரெட்டிடம் விவரித்தேன் “கண்டிப்பாக நீங்களும் சொல்லலாம். சூசன் ஏதோ சொல்ல விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது. அவளே முதலில் சொல்லட்டும்”   என்றவுடன் பாட்டி தன் ஏமாற்றத்தை மறைத்து, “சரி” என்றாள். மூவரையும் வெளியே உட்காரச் சொன்னேன்.

சூசன் முகத்தில் ரிலீஃப் தென்பட்டது. மற்றவர்களிடம் உறுதி அளிப்பதை இவளிடமும் பகிர்ந்தேன். அவளின் அந்தரங்கங்கள் இரகசியமாகவே இருக்கும் என்றேன். தன்னைப் பற்றியும், தனக்கு நேர்ந்ததைப்பற்றியும் சொல்லச் சொன்னேன்.

மிகச் சரளமாக பகிர்ந்து கொண்டாள். அவள் சொன்னதிலிருந்து சூசனுக்குத் தன் மதிப்பீடு, அவள் வாங்கும் மதிப்பெண்களில் அடங்கி இருந்தது என்பதை நன்றாக அறிந்து கொண்டேன். மார்க்கினால் வந்த முத்திரையை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தாள். இந்த வகுப்பில் முன் பின் தெரியாத மொழி எடுத்ததும் மார்க் எடுப்பதற்கே.

சூசன் மெல்லிய குரலில் கைகளைப் பிசைந்தபடி கடந்த முப்பத்தைந்து நாட்களைப்பற்றி மேலும் விவரித்தாள். மார்க் எடுக்கவே எடுத்த மொழி சற்றும் புரியவேயில்லை. இவ்வளவு நாள் இல்லாத ஒன்று ஆரம்பித்தது – பிரெஞ்ச் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது தூக்கம் வந்து விடுமாம். அம்மாவோ, பாட்டியோ, இவளை எழுப்பி விடுவார்கள். கண் விழித்ததுமே கவலை சூழ்ந்து  ‘தப்பு பண்ணி விட்டோம். இனிமேல் தோல்வி தான்’ என்றே மனம் அலறும். இதுவரையில் எல்லோரும் இவளைப் புத்திசாலி என்றே எண்ணியிருந்தார்கள். பிரெஞ்சினால் படிப்பில் முதல் முறை ஒற்றை எண் மார்க் எடுத்ததில் சபாஷ்கள் இல்வாமல் ஆனது சூசனை மிகவும் துன்புறுத்தியது.

இப்படி, நம்மால் நம்மை மாற்றிக் கொள்ள முடியாது, உதவி கேட்டால் தம் மதிப்பீட்டுக்கு பங்கம் என்று எண்ணுவோரைக் கல்வி மன நலத் துறையில் “பிக்ஸட்”(Fixed) மனப்பான்மை உடையவர் என்போம். தோல்விக்கு அஞ்சி, புகழைத்  தன் உயிர் மூச்சாகக் கருதுபவர்கள், முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிடுவார்கள். நான் புத்திசாலி, அதனால்  ‘தெரியவில்லை’ என்பதற்கு இடமே இல்லை என்றும் இருப்பார்கள். கஷ்டம் வந்து விட்டால்,  ‘என்னால் முடியாது’  என்று தளர்ந்து விடுவார்கள். தோல்வியைச் சந்தித்தால்,  ‘நான் முட்டாள் ‘ என்று முடிவும் செய்து கொள்வார்கள்.

வகுப்பில் தான் சரிந்து விழுந்ததையும் சூசன் விவரித்தாள். முதல் முறை, பிரெஞ்சு பரீட்சையை முக்கால்வாசிதான் எழுதினாள். அடுத்த முறை,  கடைசிக் கேள்வி படித்தவாறு சரிந்து விட்டாள். ஈடு செய்ய எழுதிய பரீட்சைகளிலும் ஐந்து நிமிடமாவது சரிந்து விழுந்து விடுவாள். சரிந்தாலும், நினைவு இருக்கும், கண்மூடிச் சரிந்த நேரங்களிலும் பக்கத்தில் பேசுவதும் அவளுக்கு நன்றாகக் கேட்கும்.

அவள் சரிந்து விழுந்த ஒவ்வொரு முறையையும் அவளை நினைவூட்டி வர்ணிக்கச் சொன்னேன். பிரெஞ்ச் வகுப்புக்கு முன்னேயோ, வகுப்பின்போதோதான் சரிந்து விழுந்தாள். மூன்று வாரமாக இதனாலேயே அந்தப் பாடங்களும் தவறியது. அம்மாவை அவசரமாக அழைத்த நாட்களில் அவளை யாரும் எதுவும் கேட்காமல் இருந்தார்கள். ஆயா சொன்ன “காதலா”? “மக்கா?” அவமானமாகக் கருதினாள்.

வெளிப்படையாகத் தன் நிலைமையைப்பற்றி சொன்னதும், நான், சூசனிடம்  “இது சரியாகும் என்று தோன்றுகிறதா?” என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து “நீங்க என்ன நினைக்கிறீர்கள்? பண்ண முடியும் இல்ல?” பிக்ஸட் மனப்பான்மை உடையவர் போலவே பதிலளித்தாள். “என்னுடன் ஒத்துழைத்தால், முடியும்” என்று உறுதியாகக் கூறினேன். பொதுவாக, இவ்வளவு முன்கூட்டி இப்படிப் பேசுவது என் பழக்கமில்லை. சூசனிடம் அவசரம் இருந்தது. அன்று புதன் கிழமை , வர வாரங்களில் இன்னொரு தேர்வு (படிப்புக்கும், இந்த நிலைமைக்கும்). அதற்குள் அடுத்த கட்டம் வரவேண்டும் எனக் கணக்கிட்டேன்.

நலமாகும் பணியைத்  தொடக்கினோம். சூசனை அவள் மனதில் தோன்றும் முதல் அச்சத்தைச் சொல்லச் சொன்னேன். தான் எடுத்த பிரெஞ்ச்தான் என்றாள். இதையே ஆராய்ந்தோம். அவள் பிரெஞ்ச் தேர்வு செய்த காரணத்தை விவரித்தாள். இதன் எழுத்து வடிவம் ஆங்கிலத்துடன் ஒத்துப் போகிறது  என்றும்  கூறினாள். இதைப் பற்றி மேலும் அலசியதில், இவள் எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் மொழியைத்  தேர்வு செய்துவிட்டாள் என்று   புரியவந்தது.

சந்தேகங்களைத் தெளிவு பெறாத நிலைமையும் இதில் சிக்கிக் கொண்டதால் இதையும் ஆராய்ந்தோம். சந்தேகங்களை மூடி மறைப்பதே அவள் இந்தக் கட்டத்திற்கு வருவதற்கு ஒரு காரணமானது. சூசன், டீச்சரிடம் சந்தேகங்களை எழுப்பினால் தன்னை முட்டாள் என்றே எண்ணி விடுவாரோ என அஞ்சினாள். சக மாணவரிடம் இதே திரையினால் தன்னை மறைத்துக் கொண்டாள். மொழியைத் தானே தேர்வு செய்ததால் வீட்டிலும் சொல்ல வாய் வரவில்லை. இதெல்லாம் ஒட்டு மொத்தமாக அவளுக்குச் சற்றும் பிடிக்காத ஒற்றை எண்களையும், தோல்வியையும் தந்தது.

உதவி கேட்பதும், தெளிவு பெறுவதும் அவசியம் என்று சூசனுக்குப் புரியவந்தது. உதவி கேட்பதால் தைரியம் கூடவே வளர வாய்ப்பும் உள்ளது. சந்தேகங்களைத் தெளிவு பெறுவதால் தேர்வு செய்த மொழியும் புரிய ஆரம்பிக்கும். அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில், அச்சம், பயம் நீங்கி மன உறுதி வளரும் என்பதும் புரிந்தது.

இதனால் சூசனுக்கு வேறு  ஒரு  ‘விடுதலை’யும் கண்ணுக்குத் தென்படுகிறது என்றாள். தன் அப்பா புகைபிடிப்பதை அம்மாவிடமிருந்து மறைத்தது அவளை நச்சரித்தது.  அப்பா ஏதேனும் வாங்கிக்  (மன்னிக்கவும், லஞ்சம்) கொடுத்து அவளைச் சொல்ல விடாமல் செய்தார். ஒற்றை எண் மார்க் எடுக்கையில் ஏனோ இந்த விஷயத்தை மறைத்தது தன் குற்ற உணர்வை அதிகரித்தது என்றாள். மேலும், எல்லோரும் அம்மாவை இவள் முன்னாலேயே “மக்கு” என்பதால் தானும் அம்மாவை உதாசீனப்படுத்தியதும்  இவள்  மனதை வாட்டியது. அம்மாவிடம் சொல்லி விடலாம் என்று மனம் தயாரானது. அத்துடன் அவர்களை மதிக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் தேட ஆரம்பித்தாள்.

அடுத்த நாள், ஸ்கூல் செல்ல வேண்டாம் என்ற முடிவை மாற்றி இவற்றைப் பயிலப் போகவேவேண்டும் என்று சூசன் உறுதியாக இருந்தாள். லிடியாவும், மார்கரெட்டும் அனுமதித்தார்கள். இவள் அடிக்கடி சரிவதினாலே ஸ்கூலில்   ‘உடம்பு நன்றாகிய பின் வா’ என்றார்கள். வீட்டிலும் இதை  ஏற்றுக்கொண்டார்கள். சூசன், தன்னைச் சுதாரிக்கப் பொறுப்பு எடுத்துக்கொண்டதால் அம்மாவும் பாட்டியும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

சரிந்து விழுவதற்கு  ‘கிர்ரக்’ எனப் பெயர் சூட்டினோம். ‘கிர்ரக்’ வந்தால், உடம்பில் ஒவ்வொரு அசைவையும் உடன் தோன்றும் உணர்வுகளையும் கவனித்து எழுதி வரச் சொன்னேன்.

அடுத்த நாள் சூசன் ஸ்கூலுக்குத் தைரியமாகச் சென்றாலும் உள்ளுக்குள் சரிந்திடுவோமோ என்ற நினைப்பு இருந்தது. விழவில்லை. மூன்று முறை  ‘கிர்ரக்’ வரும் போல இருக்கையில் அவள் தன்னைத் துல்லியமாகக் கவனித்து சமாளித்து விட்டாள். எழுதியும் வைத்தாள். ஆனால் வீடு திரும்பியவுடன் சரிந்து விழுந்தாள். வீட்டில் விழுந்தது இதுவே முதல் முறை.  லிடியா பதறி அவசரமாக என்னைக் கைபேசியில் அழைத்தாள். சூசனிடம் கைபேசியைக் கொடுக்கச் சொன்னேன். அன்று மாலை வரச் சொன்னேன். வந்து விவரித்ததும், அவளும் புரிந்து கொண்டாள், ‘கிர்ரக்கை’ வென்றதை ஒரு வெற்றி என்று. வகுப்பில் தன் நிலைமையைச் சுதாரிக்கத்  தெரிந்த சூசனுக்கு, வீட்டிலும் செய்யலாம் என்பதை நான் சொல்லாததால் செய்யவில்லை. ‘கிர்ரக் ‘ கிற்கு அடிமையானாள்.

இதையும் சுதாரிக்க, தன்னைப்பற்றியும் புரிந்து கொள்ள, அடுத்த கட்டமாக சூசனை படிப்பைத் தவிர எந்த எந்தச் செயல்களில் பாராட்டு வருகிறதோ அதைக் குறித்து எழுதச் சொன்னேன். எந்தச் செயல்கள் செய்தால் சந்தோஷம் வருகிறது என்பதைத் தனியாக பட்டியலிடச் சொன்னேன். இரண்டையும், நாள் தோறும் கவனித்து ஒரு வாரத்திற்குச் செய்ய முடிவெடுத்தோம்.

தோசை வட்டமாக வந்தது, சபாஷ் கிடைத்தது, சாப்பாட்டு நேரம் எல்லாம் எடுத்துவைத்து, சுத்தம் செய்தது தனக்குச் சந்தோஷமாக இருந்தது என்றாள். மேலும், பக்கத்து வீட்டு ராணி அக்காவுக்குக் கோலம் போட்டுக்கொடுப்பது (இவர்கள் பழக்கமில்லை, ஆர்வத்தினாலும், ஆசையாலும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டாள்) மன நிறைவைக் கொடுத்தது. அதே போல், மேல் வீட்டுப் பாட்டிக்குத் துணி மடித்துக் கொடுப்பது, தன் சர்ச்சில் சுத்தம் செய்வதும் மனதிற்கு இதமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ஆயா பூவும் விற்பாள். ஆயாவுக்குத் தெரியாமல் அவள் வேலை செய்யும் நேரம் பார்த்து சூசன் ஒரு  நாலைந்து  முழம் பூ தொடுத்து வைத்து விடுவாள். தினம் ஆயா “யார் செய்தது” என்று தேடுவாள். பூ தொடுத்ததைப் பார்த்து ஆயா சந்தோஷப்படுவது சூசனுக்குப்  பேரின்பம் தந்தது.

இதைத் தவிர, ராணி அக்கா சமைக்கும்போது  அவள்  குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்  கொடுக்கவோ, விளையாடவோ செய்தாள். இப்படிச் செய்யச் செய்ய சூசன் தன்னை அறியாமலேயே தன் முத்திரையை விஸ்தாரப்  படுத்திக் கொண்டாள்.

மதிப்பெண் மட்டும் அல்ல, மற்ற அடையாளங்களும் உண்டு என்பதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.

குடும்பத்தினரும் இதற்கு ஏற்றாற்போல் சூசன் எப்படிச் செய்கிறாள், அணுகுகிறாள் என்பதை மட்டுமே குறித்துப்  பேசுவதும் பழக்கமாகியது.

இத்துடன், தினம் பிரெஞ்ச் படிப்பு புரிய, பயிற்சி பெற, சந்தேகங்களை யாரிடம் தெளிவு செய்தாள் என்பதையும் ஒரு கால அட்டவணை சொல்லியது. இந்தப் பாடத்திற்கு தினம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சூசன் தன் வகுப்பு டீச்சரிடமோ, பக்கத்துத் தெரு வாத்தியாரிடமோ கற்றுக் கொண்டாள். மெதுவாக முன்னேறினாள். சரிந்து விழவில்லை. இன்று வரையில்.

சூசன் என்னிடம் கேட்டாள் “என்னைப்போல் பல பேர் இருப்பார்களா?” மார்க்கும், சபாஷில் மட்டும் ஊக்கப் படுபவர்கள் உண்டு என்றேன். சூசன் பரிந்துரைத்தாள் “நான் உங்களிடம் வந்தேன். இது போல் எவ்வளவு பேரால் முடியுமோ, தெரியவில்லை. நீங்கள் எடுத்துச் சொல்லலாமே”. எப்படி அணுக வேண்டும் என்பதற்குப் பல வழிகள் தென்படும் என்றே இதை எழுத ஆரம்பித்தேன்.

“இப்படி மட்டும்” என்றால் முற்றுப் புள்ளியே!
“இப்படியும்” என்பது முன் ஆரம்பம்!
கடிவாளங்களை அகற்றுவோம்,
சிறகுகளை விரிப்போம்!
***********************************************************************

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.