கொடியின் துயரம் – கவிஞர் வைதீஸ்வரன்

Related image

எங்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதுவும் தெருவெல்லாம் வீடெல்லாம் பெரியவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வரப் போவது பற்றியும் வெள்ளைக்காரர்கள் ஆகஸ்ட் 15ந்தேதி நாட்டை விட்டுப் போவதைப் பற்றியும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஜூலை 1947.

சிறுவர்களான எங்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கொஞ்சம் புரியாமலும் புரிந்த மாதிரியும் இருந்தது. அன்னிய நாட்டு வெள்ளைக்காரர்களை விரட்டிவிட்டு நம்மை நாமே சுதந்திரமாக ஆட்சி செய்து கொள்ளப் போகிறோம் என்றார் அப்பா. எனக்கு ஓரளவுதான் புரிந்தமாதிரி இருந்தது.. ..

எப்படியும் நமக்குச் சொந்தமான இந்தியா நமக்கே கிடைக்கிறது.. என்று நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது .. வீட்டுப் பண்டிகைகள்போல இது ஒரு நாட்டுப்பண்டிகையோ.!
முனிஸிபாலிடி பார்க்குகளில் நட்ட நடுக் கம்பத்தில் பொருத்திய வானொலிப் பெருக்கிகள் வரப் போகும் சுதந்திர நாள் பற்றி சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன. தேசியத் தலைவர்களுக்கும் ஆங்கில அரசாங்கத்துக்கும் இடையே நிகழும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளைப்பற்றிய செய்திகளை மாலை வேளைகளில் எல்லோரும் கூட்டங் கூட்டமாகச் சுற்றி நின்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு எல்லாம் ஏதோ கலவரமாக பரபரப்பாகத் தோன்றியது.

அதுவும் இந்தியா இரண்டாகப் பிரியப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றிய அச்சமும் குழப்பமும் எல்லோர் மனதிலும் ஊடாடிக் கொண்டிருந்தது.

இது நாள்வரை குடும்ப நண்பர்களாகப் பழகி வந்த பல முஸ்லீம் குடும்பங்களை இனிமேல் திடீரென்று வேற்று நாட்டுக்காரர்கள் போலப் பார்க்கப் போகிறோமா என்றுகூடப் பலருக்குக் கலவரமாக இருந்தது!!
என் அப்பாவுடன் நெருங்கிப் பழகி வியாபாரத்தில் பங்கெடுத்த பல முஸ்லீம்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். ஸலீம் மாமாவுக்கு என்னிடம் மிகவும் பிரியம். நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது என்னை அடிக்கடி வெளியில் தூக்கிக்கொண்டு போய் எதையாவது வாங்கித் தருவார். குடும்ப விசேஷங்களுக்குப் பரஸ்பரம் போய்வருவோம்

கிராமபோன் பெட்டிகளில் “ஆடுவோமே…பள்ளு…. பாடுவோமே..” பாட்டும் “வெற்றியெட்டு திக்குமெட்டக் கொட்டு முரசே “ பாட்டும் மூலைக்கு மூலை கேட்டுக் கொண்டிருந்தது. காற்றெல்லாம் சுதந்திர கோஷம்!

நாற்பதுகளில் பாரதியார் பாடல்களைக் கூட்டமாக வெளியே பாடுவதற்கு சராசரி மக்களுக்குத் தயக்கமாக இருக்கும்……. வெள்ளைக்காரன் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவானோ என்று பயம்.

பாரதி பாடல்களின் மீது அபார பக்தி கொண்ட என் அப்பாவும் அவர் நண்பர்களும்கூட முன்னிரவில் எங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் ராந்தல் விளக்கை சுற்றி அமர்ந்து கொண்டு பாரதி பாடல்களை உரக்கப் பாடாமல் உள்ளத்தோடு சன்னக் குரலில் பாடுவதை நான் கவனித்திருக்கிறேன்

எல்லோருக்கும் சுதந்திரத்தின் மேல் ஆசை இருந்தது. பெருமையாகவும் இருந்தது.. ஆனால் அடிபட்டு ஜெயிலுக்குப்போய் அல்லல்படுவதற்கு ஒரு சிலர்தான் துணிச்சலுடன் தயாராய் முன்வந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் மானசீகமான ஏக்கம் மட்டும் உண்டு
இப்போது அந்தப் பயம் போய் விட்டது. எத்தனையோ ஆண்டுகளாக கட்டிப் போட்டிருந்த கழுத்துக் கயிறு அறுந்து, படல் திறந்து விட்ட ஆட்டுமந்தைகள்போல் ஆரவாரமான சந்தோஷத்தில் அத்தனை பேரும் திக்குத்திசை தெரியாமல் ஆனந்தப்பட்டார்கள்.
கடைகளில் விதவிதமான பாரதமாதாக்கள் கையில் மூவர்ணக் கொடியேந்திக் கொண்டு பத்திரிகைகளில் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.

பள்ளிக்கூடங்களில் ஆகஸ்ட் 15-ல் பையன்கள் சட்டையில் குத்திக் கொள்வதற்காக பின்னூசியுடன் சின்னச்சின்ன கொடிகள் மூட்டையாக வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அதோடு மிட்டாய்ப் பொட்டலங்களும் கூட.

எங்கள் தெருவில் என் தெருப் பையன்களெல்லாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தோம்
ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரிப்பதென்று முடிவாகியது. வெள்ளைப் பேப்பர் வாங்கி’ ஜிலுஜிலுப்பான ஜரிகை அட்டை ஒன்றைக் கத்தரித்து . அழகான நோட்டுப் புத்தகமாக தைத்துக் கொடுத்தான் முருகேசன்.. . எங்கள் நண்பர்களில் அவன்தான் கைவேலைகளில் திறமைசாலி. கந்தசாமி அச்சு அசலாகப் படங்களை கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து வர்ணம் பூசுவான்.

முகப்பில் விரிந்த கூந்தலுடன் கொடியேந்திய பாரதமாதா படமும் இரண்டாவது பக்கத்தில் மகாத்மா காந்தியும் அடுத்து பாரதியார் படமும் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களுக்கு பாரதியாரின் தேசீய கீதங்களும் வடிவாகியது.

அடுத்த பக்கத்தில் நாட்டுப்பற்றுபற்றி நான் ஒரு பாட்டு எழுதினேன். மனதுக்குள் கவிதை எழுதுவதாக ஒரு நினைவுடன். எனக்குள் தோன்றும் ஏதாவது ஒரு தாள மெட்டுக்கு ஏற்ற மாதிரி எப்படியோ வார்த்தைகள் வந்து விடும். பெரியவர்கள் அதைப்படிக்கும் போது ஒவ்வொருவரும் ஒரு ராகத்தில் கைகளை ஆட்டிக் கொண்டு பலமாகப் பாடி உற்சாகமாகச் சிரிப்பார்கள். 

அவர்கள் பாராட்டுகிறார்களா பகடி செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள முடியாமல்……. . எனக்கு ஆத்திரமாக வரும்…. ஆனால் எல்லோரும் என்னை “என்ன…கவிராயரே! “என்று முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.

சேகர் அவன் பாட்டி சொன்னாளென்று ‘ஒரு பாப்பாவும் கீரிப்பிள்ளையும்’ என்று ஒரு கதை எழுதினான்.. ராமு அவன் வெகு நாட்களுக்கு முன் எழுதி வைத்திருந்த ஒரே ஒரு துப்பறியும் கதையை அனுப்பியிருந்தான். .
சில நண்பர்களின் அப்பாக்களும் எங்கள் பத்திரிகைத் தயாரிப்பில் ஆர்வமடைந்து அவரவர்களுக்குத் தெரிந்த உபதேச மொழிகளை அனுப்பியிருந்தார்கள்.

ஒரு வழியாக பத்திரிகை நிரம்பிப் புடைத்து விட்டது. அட்டைகளை ஒட்டும்போது சரியான பசைகளை உபயோகிக்காததும் இந்தப் புடைப்புக்குக் காரணமாக இருக்கலாம்..

பத்திரிகையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்தோம். படித்து விட்டுத் தருவதற்கு ஒரு நாள் அவகாசம்.

“பேஷ்..பேஷ்….சுதந்திரத்தைக் கொண்டாட சிறுவர் பத்திரிகையா? “என்று தட்டிக் கொடுத்தார்கள். வாசித்து விட்டு ஊக்கத் தொகையாக ஓரணா அரையணா கொடுத்தார்கள்.

நான் சுதந்திரப் பத்திரிகையை ஜேம்ஸ் மாமாவுக்குக் காட்ட மிக ஆவலாக இருந்தேன். ஜேம்ஸ் மாமா சிறைச் சாலையில் அதிகாரியாக இருந்தார். வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவார். வெளியில் டமிலும் பேசுவார்.

அவர் வீட்டில் நாய் பொம்மை போட்ட கிராமபோன் பெட்டி இருந்தது. தினந்தோறும் காலையில் நான் அங்கே போகும்போது, சில சமயம் ஆங்கிலப் பாடல்களைப் போட்டு நடனம் ஆடி ரஸித்துக் கொடிருப்பார். அவருடைய மனைவியும் நீள கவுன் போட்டுக் கொண்டு கூந்தலை அரையாக வெட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக ஆடுவார்.. வேடிக்கையாக இருக்கும்

அவரிடம் பெரிய வானொலிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அந்தப் பெட்டியில் காதை வைத்துக்கொண்டு மும்முரமாக வெளிநாட்டுச் செய்திகளையும் போர்ச்செய்திகளையும் கேட்டுக் கொண்டிருப்பார்.
நான் போனபோது கதவைத் தட்டிச் சற்று நேரங் கழித்துத்தான் திறந்தார். உள்ளே இரண்டு பெட்டிகள் திறந்தவாறு இருந்தன. அதில் மாமா துணிமணிகள் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.. ஏதோ பயணம் போவதற்கு ஆயத்தப்படுவதுபோல் இருந்தது

“ மாமா…..சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிகை மாமா “ என்றேன்.
அவர் சந்தோஷப் படவில்லை. “ அப்படியா? எனக்கு டமில் படிக்க வராது பையா….என்னா எலுதிருக்கே?””

“சுதந்திரத்தைப்பத்தி…”

“ அடேடே……சொடந்திரமா?….ஹா… ஒங்களை அவுத்து விட்டுட்டாங்களா?.. தம்பி இதை நல்லா ஒட்டக் கூடாதா? இப்பவே… சொடந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியற மாதிரி வருதே!…ஹ்ஹ்ஹா..” என்று பத்திரிகையைக் கொடுத்தார். .

அவர் வழக்கமான ஜேம்ஸ் மாமாவாக இல்லையோ? நாங்கள் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.

அடுத்த இரண்டு மாதங்களில் அவர் சீமைக்குப் போய் விட்டார்.
ஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. கடைகளில் கொடி வியாபாரம் பரபரப்பாக நடந்தது. சிறுவர்கள் கொடி வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். தங்கள் வீட்டிலேயே கொடி ஏற்ற வேண்டுமென்று சிலருக்கு ஆசை…எனக்கும்தான்….. நான் அப்பாவுடன் சென்று சுமாரான அகல நீளத்துக்கு ஒரு கதர்க் கொடி வாங்கினேன்.
எங்க வீட்டு மொட்டை மாடியில் சுவரோரத்தில் இரும்பு வளையத்தில் ஒரு நீளக் கொம்பைக் கட்டி நிறுத்திக் கொடியை உச்சியில் சுருட்டிக் கட்டி வைத்தோம். உள்ளே பூக்களை வைத்துக் கட்டினோம்.
ஆகஸ்ட் 15ந் தேதி விடியும் போது எல்லோரும் சேர்ந்து கூடி கொடி ஏற்றிப் பறக்க விடவேண்டுமென்று தீர்மானம்.

நாங்கள் நாலைந்து நண்பர்களும் அவர்கள் அண்ணா அக்கா அப்பா அம்மாக்களை 15ந் தேதி காலை ஆறு மணிக்கு மொட்டை மாடிக்கு வரச் சொன்னோம். கொடி ஏற்றத்துக்கு!!

எல்லோரும் சரியாக ஆறு மணிக்கு மொட்டை மாடியில் கூடி விட்டார்கள். பெரியவர்களுக்குள் வயதான மாமா ஒருவரைக் கொடியின் முடிச்சைத் தளர்த்திப் பறக்கவிடச்சொன்னார் அப்பா.

காற்று சுமாராகத்தான் வீசியதால் கொடி தொங்கித் தொங்கித்தான் பறந்தது. இருந்தாலும் எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சியும் பெருமிதமுமாக இருந்தது.. எல்லோரும் கை தட்டினோம்.
என் சிநேகிதர்களில் அனந்து மிக அழகாகப் பாடுவான்.
பாரதியாரின் “தாயின் மணிக் கொடி பாரீர் “ பாட்டைக் கணீரென்று பாடினான். “பட்டொளி வீசி பறந்திடப் பாரீர் “ என்ற வார்த்தையைக் கேட்க எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. வார்த்தை அளவுக்குக் கொடி எதிரே பட்டொளி வீசிப் பறக்கவில்லையென்று தோன்றியது. எனக்குக் குறைதான்….. பறக்காமல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.
கொடி பறப்பதைப் பின்னணி கோஷத்தோடு சினிமாத்திரையில் பார்க்கும்போதுதான் உணர்ச்சிகரமாக இருக்கிறது. வெளியே பறப்பதற்குக் கொடி காற்றை நம்பி இருக்கிறது.

சில பெரியவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். என் அப்பாவின் கண்கள் ரொம்பவே கலங்கி இருந்தது. என் அக்காவும் நானும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினோம்

பெரியவர்கள் “ சபாஷ்…கவிராயரே!” என்று என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கினார்கள்.
அப்போதுதான் ஸலீம் மாமா வந்தார். அவசரம் அவசரமாக வந்தார்..

“ என்ன மாமா…இவ்வளவு லேட்டு! சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து?” என்று சிரித்தேன்.

அவர் சிரிக்கவில்லை. “ எல்லாம் போயிடுத்துப்பா” என்று அப்பாவைப் பார்த்தார். அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.

அப்பா சலீம் மாமாவைப் பார்த்தவுடன் மேலும் கலங்கிப் போய் அவர் தோளைப் பற்றிக் கொண்டு தனியாக நகர்ந்தார்.

“ என்ன ஆச்சு? தகவல் தெரிந்ததா? “

ஸலீம் மாமா பொங்கி வந்த துக்கத்தைப் வாய்க்குள் பொத்திக் கொண்டு அப்பாவிடம் கேவிக் கொண்டே ஏதோ சொன்னார். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுதார்..

அப்பா “ அய்ய்ய்யோ… உன் தம்பி குடும்பமா….டெல்லீ…லே…யா…. ” என்று கத்தி விட்டார். “ அப்பாவுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டார்

ஸலீம் மாமா தள்ளாடிக் கொண்டே மெதுவாகக் கீழே இறங்கினார்.
“மாமா..மாமா….ஸ்வீட் எடுத்துக்கோங்கோ…” என்று கத்தினேன். அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் படி இறங்கிக் கொண்டிருந்தார்.

“அப்பா…அப்பா,,,என்னப்பா…என்னப்பா.. ஆச்சு?…..””

அப்பா ஒரு மூலையில் கொடியின் கீழே இடிந்து உட்கார்ந்து விட்டார்.
“ அப்பா…அப்பா….” நான் அவரைத் தொட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.

“ டேய் பேசாம நீ கீழே போடா…. ஸலீம் மாமாவுக்குக் குடும்பத்துலே இப்போ பெரிய துக்கம்…….நம்ம மாதிரி குடும்பங்களுக்கும் இப்போது ஆபத்தான சமயம்தான்.. ஊரெல்லாம் சாவு…..ரத்தம்….ரணம்…… ……பேசாம போடா……..” என்றார்.

நான் போகாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்பா… என்னைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினார். “ இப்போ நமக்கு சுதந்திரம் வந்துட்டுதுன்னு மார் தட்டிக்கிறதா…………… மாரடிச்சுக்கிறதான்னு தெரியலேடா…..?…. எல்லாம் போறும்…..கீழே வாடா…நீ…….” கோபத்துடன் எழுந்திருந்தார்

பறப்பதற்கு சக்தியில்லாமல் கொடி வருத்தமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முதல் சுதந்திர நாளில்!!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.