ராஜ நட்பு – ஜெய் சீதாராமன்

சரித்திரக் குறுந்தொடர்

 

ராஜ நட்பு

Related image

வருடம் கிபி 1011. கைடான் பேரரசு என்றழைக்கப்படும் வடகிழக்கு சீனப் பகுதியை  லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷெங்க்ஸான் ஆண்டு கொண்டிருந்த அந்தக் காலம் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்று பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  பல காலங்களில் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முடிவில் பேஜிங் என்று நிலைத்து நின்ற புகழ் பெற்ற நகரம் லியாவ் வம்சத்தின் தென் தலைநகரம். அதில் நியூஜீ இஸ்லாமியர் தொழும் பள்ளிவாசல் சின்னம் இன்றும் நிலைத்து நின்று மசூதியாய் விளங்கிவருகிறது.

அங்கு ஸான்மியாவ் என்னும் புகழ் பெற்ற ராஜபாட்டையில் (இப்போதுகூட அந்த சாலையைக் காணலாம்) பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பேரரச லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸானின் ராஜ மாளிகை பேஜிங்கிலேயே மிகப் பெரியதாய், கம்பீர தோற்றத்துடன் கண்களுக்கு விருந்தாய் காட்சி அளித்துக்கொண்டு காணப்பட்டது. வானத்தில் படபடவென்று சிறகடித்துக்கொண்டு பறந்து சென்றுகொண்டிருந்த பறவைக் கூட்டங்கள் மாளிகையின் அழகை மேலும்மேலும் கூட்டிக் காட்டியது.

Related image

அது மன்னரின் 29வது வருட ஆட்சிக்காலம். அந்த மாளிகையின் அந்தரங்க ராஜசபைக் கூடம் ராணுவ அதிகாரிகளைக்கொண்டு கூட்டப்பட்டு ஷெங்க்ஸான் வருகைக்காகக் காத்திருந்தது. மன்னர் வருகை தந்ததும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஷேங்க்ஸான் எல்லோரையும் வணங்கிவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

முக்கிய மந்திரி எழுந்து வணங்கிவிட்டு நிகழ்ச்சி நிரலை விளக்கினார்.  “இன்றையக் கூட்டம் முக்கியமாக கோரியேவ் படையெடுப்பு சம்பந்த அடுத்த ராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்துத் தகுந்த முடிவெடுக்கக் கூட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகக் கடல் கடந்து வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவர் தென் இந்திய சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ராஜராஜ சோழரிடமிருந்து ஒரு முக்கிய ஓலையுடன் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றார். 

ஷேங்க்ஸான் ராணுவ தளபதியை நோக்கி,  “நமக்கும் கோரியேவ் (தற்போதைய வட கொரியா) நாட்டிற்கும் உள்ள பகை இன்று நேற்றையது அல்ல. அவர்கள் ஸாங்க் தேசத்துடன் நட்பு கொண்டு நம்மை எதிர்த்தபோது நமது 8 லட்ச படைவீரர்கள் அவர்களை ஸோங்க்ஸோன் ஆற்றுக் கரையில் நடந்த போரில் வென்று அப்போது எடுத்த உடன்படிக்கையின்படி கோரியேவ் நமது அடிமை நாட்டாக்கப்பட்டது. அதனால் கோரியேவ்/லியாவ் அமைதி 20 வருடம் வரை நீடித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரியேவ் தளபதி காங்க் ஜோ, மன்னர் மோக்ஜாங்கை கொலை செய்து, பதிலாக ஹியான்ஜாங்கை சிம்மாசனத்தில் பொம்மை போல் அமர்த்தி அவனே அரசாள நினைத்திருக்கிறான். அவனைத் தண்டிக்க நாம் அனுப்பிய நான்கு லட்சம் படை வீரர்கள் முதலில் வெற்றி அடைந்ததாகத் தோன்றி, பிறகு  யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் முடிந்திருக்கிறது. எனவே பகை நீடிக்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது! இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் இதற்கான விடை புலப்படுகிறதா? “என்று கேட்டார்.

தளபதி,  “காங்க் ஜோவின் படைபலம் தற்சமயம் உச்சக் கட்டத்தில் உள்ளது. அவனை உடன் வெல்ல நாம் நமது படை பலத்தை அதிகரிப்பதைத்தவிர எனக்கு வேறு வழி ஏதும் புலப்படவில்லை” என்று கூறினார்.

Related image

ஷேங்க்ஸான் பதிலுக்கு,  “உடன் நாம் அவர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய சேனையை உருவாக்குவோம்! அதற்கான முயற்சிகளை உடன் தொடங்க ஏற்பாடு செய்ய ஆரம்பியுங்கள்! இடை இடையே அவர்கள் நமக்குக் கொடுக்கும் தொல்லைகளையும் நாம் சமாளித்தே ஆகவேண்டும்! சேனை உருவாக்கும் முயற்சி முழுமையடைய ஒரு வருடமோ அல்லது இரு வருடமோ தேவைப்படலாம். ஆனால் நமது முயற்சியின் குறி காங்க் ஜோவை முழுமையாக, தப்பாமல் சிதறடிக்க வேண்டும்! வெற்றி நமக்கே என்று வெறியுடன் முயற்சிகளைத் தொடங்குங்கள்! ” என்று சொல்லி முடித்தார்.

அடுத்த ஆலோசனை, எப்படி இந்தப் பெரிய முயற்சி தொடங்கி முடிக்கப்படவேண்டும் என்பதில் எல்லோரும் முனைந்து, கலந்தாலோசித்து முடிவெடுத்தார்கள்.

சம்பவப் பட்டியல் அதிகாரி நடப்பவை அனைத்தையும் குறித்துக் கொண்டார்.

பிறகு ஷேங்க்ஸான் கையைத் தட்டி “யார் அங்கே? என்னைக் காண விழையும் கடல் கடந்து சென்று வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவரை வரச்சொல்லுங்கள்” என்று உத்திரவிட்டார்.

பொது அறிவிப்பாளர்,  “க்வின் ம்யூ”என்று கூறி அறிவிக்கப்பட்டபின் வந்த வணிக தலைவர் ஷேங்க்ஸானை வணங்கி நின்றார்.

“என்ன காரணமாய் என்னைக் காண வந்துள்ளீர்?”என்றார் சக்கரவர்த்தி .

“அரசே! தென் கிழக்கு ஆசியாவின் வேறு நாட்டுத் துறைமுக நகரங்களுக்குச்சென்று பொருள்களைப் பரிமாற்றம் செய்யும் வணிகத்  தலைவராக பல வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் தென் பகுதி சோழ நாட்டுடன் நமக்கு வணிக ஒப்பந்தங்கள் ஏற்கனவே இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அங்கு பல மாதங்களுக்கு முன் சென்றிருந்தபோது சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழ தேவர் என்னைப் பார்க்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் அவரைக் காணச்சென்றிருந்தேன்.

சக்கரவர்த்தி பக்கத்தில் இருந்த பெட்டகத்தைச் சுட்டிக்காட்டி ‘இதை உங்கள் சக்ரவர்த்தி ஷேங்க்ஸானிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். இதில் அவருக்கு என் அன்புக் காணிக்கையாக வைரம், வைடூரியம், பவழம், முத்து முதலியவற்றை வைத்திருக்கிறேன். எங்களுக்குள் இதுவரை காணிக்கை பரிமாற்றங்கள் எதுவும் நடை பெறவில்லை. இப்போது மட்டும் இவை எதற்காக என்ற வினா அவர் மனதில் எழலாம்! அதற்கான விடை பெட்டகத்தில் உள்ள மூன்று எழுத்தோலைகளில் இருக்கிறது. அதைப் படித்தபின் அவர் சந்தேகங்கள் நிவர்த்திக்கப்படும்  என்று கூறிப் பெட்டகத்தை என்னிடம் எடுத்துப்போகக் கேட்டுக் கொண்டார்’” என்று க்வின் ம்யூ கூறிப் பெட்டகத்தை எடுத்து வந்த இரு பணியாட்களிடம் அரசர் முன் வைத்துத் திறந்து காட்டச்சொன்னார்.

சக்கரவர்த்தி பெட்டியில் மூன்று எழுத்தோலைகளையும் அதனுடன் இருக்கும் கையில் வரைந்த படங்கள் நான்கையும் பார்வையிட்டார். அதன் கீழ் தகதகவென ஜ்வலிக்கும் ஆபரணக் கற்களைக் கண்டு வியந்து அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முதல் எழுத்தோலையைக் கையில் எடுத்துப் பிரித்தார். அதில் சீன மொழியில் எழுதியிருந்ததைக் கண்டு திருப்தி அடைந்தவராய் பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பவப் பட்டியல் அதிகாரியிடம் கொடுத்து உரக்கப் படிக்கச் சொன்னார். அதிகாரி படிக்க ஆரம்பித்தார்.

‘நான் வாங்மெங் என்று அழைக்கப்படும் உங்களால் நியமிக்கப்பட்ட கலாச்சார தூதுவன். கிழக்கு ஆசிய நாடுகளில் நமது கலாச்சாரங்களை பரப்புவதுதான் எனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய வேலை. ஒரு பயணத்தின்போது வர்த்தகர்களையும் என் குழுவையும் மற்ற யாத்ரீகர்களையும் தாங்கி வந்த வணிகக் கப்பல் தென் இந்தியாவின் சோழநாட்டுத் துறைமுகமான நாகப்பட்டினத்தில் 1001ம் வருடம் நுழைந்தது.

பல போர் மரக்கலங்கள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு அதிலிருந்து வருவோரும் செல்வோருமாக இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நான் கண்ட காட்சிகள் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தி கேள்விக் குறியையும் எழுப்பின. சோழ படை வீரர்கள் ஆயிரமாயிரம் போர்க்  கைதிகளை கையில் விலங்கிட்டுக் குதிரை வண்டிகளில் ஏற்றிய வண்ணமிருந்தனர். குதிரை வண்டிகள் சோழக் குதிரைப்படைப் பாதுகாப்புடன் ஒவ்வொன்றாக விரைந்து சென்று கொண்டிருந்தன. அதற்கான விவரத்தை அறிய என் மனம் துடிதுடித்தது.

நமது பாரம்பரிய பாடல்களும், நடனங்களும் கொண்ட நாடகங்கள் முதலில் நாகப்பட்டினத்தில் அரங்கேற்றப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றன. பிறகு தலைநகரமான தஞ்சாவூரை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். வழிநெடுக எங்கள் நாடக நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு கடைசியாகத் தஞ்சாவூரை வந்தடைந்தோம்.

ராஜராஜ சோழ சக்கரவர்த்தி பல வேலைகளுக்கு நடுவில் கடைசியாக எங்களுக்குப் பேட்டி அளித்தார். மொழி பெயர்ப்பவர்கள் உதவியோடு அவருடன் பேசத் தொடங்கினேன். ‘என் பெயர் வாங்மெங். மன்சூரியாவிலிருந்து லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸான் பரிபாலிக்கும் பேஜிங் நகரத்திலிருந்து கப்பலில் வணிகர்களோடு எங்கள் கலாச்சார நாடக குழுவுடன் வந்திருக்கிறேன். அதை உங்கள் முன் அரங்கேற்ற விரும்புகிறேன். அனுமதி வழங்க வேண்டும்..’என்றதும் அதற்கு உடன் அங்கீகாரம் அளித்தார்.

அவரின் முன் எங்கள் நாடகக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினார். முக்கியமாக வாள் கேடயம் அணிந்த வுஷு தற்காப்புக் கலை நடனங்கள் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தியன.

பிறகு அவர், “எவ்வளவு நாட்கள் இங்கு தங்கப் போகிறீர்கள்”என்று வினவ “மூன்று மாதங்களில் வணிகர்களுடன் புறப்பட வேண்டியிருக்கும்”என்று பதில் அளித்தேன்.

சக்ரவர்த்தி சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பிறகு என்னைப் பார்த்து “நான் கேட்கும் கேள்விக்கு நன்கு யோசித்துப் பதிலளியுங்கள். என் குருதேவர் அருள்மிகு கருவூரார் சம்மதத்துடனும் ஆசியுடனும் ஒரு பிரம்மாண்டமான 143 முழங்கள் உயரம் கொண்ட ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கவிருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளேன். நீங்கள் நாகப்பட்டினத் துறைமுகத்தில் இறங்கியதும் பல கைதிகளை எங்கள் போர் வீரர்கள் நடத்தும் விதத்தைப் பற்றியும், எப்படிக் கையாளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கலாம்! எங்கள் வட இலங்கை படையெடுப்பின்போது கைதிகளான அந்த ஒரு லட்சம் போர் வீரர்களை இந்தப் பணியில் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். இரண்டு வருடங்களில் ஆலயத்திற்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும். இது முற்றிலும் உயர்ந்த உறுதியான கருங்கற்களை உபயோகித்தே கட்டப்படும். அதற்குத் தேவையான கற்கள் கொண்ட மலைகள் தஞ்சாவூர் சுற்றுப்பகுதியில் எங்கும் கிடையாது.

இங்கிருந்து 50 கல் தொலைவிலுள்ள நார்த்தாமலையிலிருந்து கல் பிளந்து அளவுபடுத்தப்பட்டு எங்கள் மிகப்பெரிய யானைப்படையின் யானைகளை உபயோகித்து எடுத்து வரப்படும். இக்கைதிகளை முதலில் நார்த்தாமலையிருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையை உறுதி செய்து செப்பனிட உபயோகித்துக் கொள்ளப் போகிறேன். 15 தளங்கள் கொண்ட கோபுரத்தின் விமானத்தில் மொத்த 290,000 பாரம் எடையுடைய கருங்கற்கள் சிற்பங்களை ஏற்றி ஒன்றோடொன்று வலுவாகக் கற்களாலேயே பின்னிப் பிணைந்து இணைக்கப்பட்டுக் கட்டப்படும். விமானம் கூர்நுனி வெற்று விமானமாகக் கொண்டதாக இருக்கும். விமானத்தின் உச்சியில் 179 பாரம் எடை கொண்ட ஒரே கோளக் கல் கும்பம் ஒன்று பொருத்தப்படும். அதற்காக 20 யானைகள் மற்றும் குதிரைகளோடு 143 முழ உச்சிக்கு இழுத்துச் செல்லக்கூடிய சாய் தளப் பாதை ஒன்று அமைக்கப்படும்.

ஆயிரமாயிரம் சிற்பிகள், கொல்லர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், கணித அறிவுடன் துல்லியமாய் தீர்மானித்து முடிவு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், தச்சர்கள், கணக்காயர்கள், வைத்தியர்கள், சமையல்காரர்கள், காவலர்கள் முதலியோர் வேலை செய்ய, தங்க, உண்ண, சிகிச்சை பெற வைத்தியசாலை முதலியவை பிரத்தியேகமான இடங்களில் அமைக்கப்படும். அவர்கள் உண்ணுவதற்கு வேண்டிய பொருட்கள், சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படும். கைதிகளைப் பாதுகாப்புடன் வைத்துக் கட்டிக்காக்க தேவைக்கும் மேற்பட்ட வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இதைக் கட்டி முடிக்க 7 வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது”என்று கூறி சக்ரவர்த்தி சிறிது மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.

“இதில் சம்பந்தப்பட்ட அத்துணை பேரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கத் தஞ்சாவூரிலேயே தங்கி உங்கள் நாடகக் குழு நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்து உதவ உங்களுக்குச் சம்மதமா?இதற்கான பதிலை நீங்களும் உங்கள் குழுவும் நன்கு கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவைத் தெரிவியுங்கள். நாளை மறுபடி சந்திக்கலாம்”என்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். நான் வியப்பில் ஆழ்ந்து திக்குமுக்காடிப் போனேன். அத்துடன் அன்றைய சபை கலைந்தது.

(அடுத்த இதழில் தொடரும் )

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.