வாத்தியார் சாமி – என் செல்வராஜ்

Related image

அப்போது எங்கள் பள்ளியில் மதிய உணவு பெரும்பாலும் சம்பா கோதுமையில் சமைத்த சாதம் தான். நானும் எனது  வகுப்பு தோழர்களும் சேர்ந்து தினமும் சமைப்போம். ஒரே ஒரு பெரியவர் மட்டும் சமையல் செய்ய வருவார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாராயணசாமி ஆசிரியர் எனது  வகுப்பு ஆசிரியர்.அவரே தலைமை ஆசிரியரும் கூட. கோதுமையைச் சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு பெரிய பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல்போட்டுத் தாளித்துவிட்டு, கோதுமை அளவுக்குத் தகுந்தாற்போல தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த பின்பு கோதுமையை பாத்திரத்தில் போட்டு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். தண்ணீர் சுண்டி கோதுமை சாதம் பதத்துக்கு வந்ததும் இறக்கவேண்டும்.

இதில் பெரும் பகுதி வேலையை நானும் எனது  நண்பர்களும் செய்வோம். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து சமையலறையில் கூடவே நிற்பார். மாலையில் பால் பவுடரில் தயாரித்த பால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவார்கள். தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் ஊர் சிதம்பரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருந்தது. தினம் போய்வர சிரமம் என்பதால்  பள்ளியிலேயே தங்கிவிடுவார். வாரம் ஒரு முறை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குப்போவார். பால் பவுடர், பாமாலின் ஆயில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வருவதாகப் பேசிக்கொண்டார்கள்.

அந்த பள்ளியின் அருகிலேயே ஒரு பிரைவேட்  வாத்தியார் தங்கி இருந்தார். அவர் நீண்ட தாடி வளர்த்துக்கொண்டு சாமியார் போலவே இருந்தார். அதனால் நாங்கள் அவரை சாமியார் வாத்தியார்  என்றுதான் சொல்வோம்.அவர் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்களுக்கு  வகுப்பு எடுப்பார். என் அப்பா என்னை அவரிடம் பிரைவேட்டாகப்  படிக்க சேர்த்து இருந்தார். அவர் நன்றாக சொல்லித் தருவார். வாய்ப்பாட்டை தலைகீழாகச் சொல்லச்  சொல்வார்.அதற்காக பலமுறை வாய்ப்பாட்டைப்  படிக்கவேண்டும். கணக்குக்கு அடிப்படையானது வாய்ப்பாடு என்பதால் அவர் அதில் அதிகம் கவனம் செலுத்தினார் என்று நினைக்கிறேன்.சொல்லாவிட்டால் பிரம்படி தான்.

ஒழுங்காகப் படிக்காத பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை  அழைத்து வரவேண்டும். சாமியார், ” பையன் சரியாகப் படிக்கவில்லை.அடித்துத்தான் படிக்கவைக்கவேண்டும். அடிக்கக்கூடாது என்றால் டியூஷனை விட்டு நிறுத்தி விடுங்கள் ” என்பார். பெரும்பாலான பெற்றோர்கள் நன்றாக அடித்துப் படிக்க வையுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்.அப்புறம் அவர் இஷ்டம்தான். ஒரு முறை ஒரு மாணவனைக் கருங்கல் தூணில் கட்டி வைத்து எல்லா மாணவர்களையும் விட்டு அடிக்கச்சொன்னார். யாராவது அடிக்க மறுத்தால் அந்த மாணவனை அடித்து விடுவார்.அதற்குப் பயந்து நாங்கள் எல்லோரும் அந்த அண்ணனை அடித்தோம். பயம்தான். இருந்தாலும் என்ன செய்வது. அவர் அடிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் நிறுத்தமாட்டார். பிரம்பு ஒடியும்வரை கூட அடிப்பார்.

எனக்கும் அவரிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டு.  அப்போது நான் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் அவர் ஏதோ கேட்டார். நான் கவனிக்கவில்லை போல. உடனே என்னை அவர் அழைத்தார். ஏதோ வாய்ப்பாடுதான் கேட்கப்போகிறார் என்று நான் நினைத்து அவரின் அருகில் சென்றதுமே என்னை அடிக்க ஆரம்பித்தார். கையில் இருந்த வாய்ப்பாடு புத்தகத்தைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன்.அவர் அடித்த அடியெல்லாம் வாய்ப்பாட்டுப் புத்தகத்தில் விழ அது கிழிந்து சுக்கலானது. கடைசியாக அவர் அடிப்பதை நிறுத்தியபோது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏன் அடித்தார் என்று அவரிடம் கேட்க முடியாது.

Related image

மாலை ஆறு மணிக்கு பிரைவேட் முடிந்ததும் வீட்டுக்குச் சென்றேன். அப்பா என்னிடம்,  ‘ஏன் கண் கலங்கி இருக்கிறாய் ‘ என்றார். ‘ஒண்ணுமில்லேப்பா’ என்றேன். மீண்டும் மீண்டும் அவர் கேட்டார். கடைசியில் அழுது கொண்டே, “சாமியார் வாத்தியார் என்னை அடிச்சிட்டாரப்பா “என்றேன். ‘எங்கே அடிச்சார்? காட்டு!’ என்றார் அப்பா. கை விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்திருந்தது. சில விரல்கள் வீங்கி விட்டன. பள்ளிப் பையில் இருந்த வாய்ப்பாட்டை எடுத்துக் காட்டி , ‘இதத் தூக்கி அடியைத் தாங்கிக்கிட்டேம்பா’ என்றதும் அப்பா கோபம் அதிகமானது. சட்டையக் கழட்டி முதுகைக் காட்டினேன். முதுகும் பாதி அளவு வீங்கி இருந்தது. என் அம்மா என் காயங்களையும் வீக்கத்தையும் பார்த்ததும்  ‘முதல்ல போயி அந்த வாத்திய என்னன்னு கேளுங்க’ என்றார். ‘காலயில போயி கேக்கிறன்’ என்றார் அப்பா.

மறுநாள் காலையில் பிரைவேட் நடக்கும் இடத்துக்கு என்னுடன் வந்தார். சாமியாரைப் பார்த்து வணக்கம் வைத்தார். சாமியார் என்ன விஷயம் என்று கேட்டார். என் மகனை ஏன் மோசமாக அடித்திருக்கிறீர்கள் என்று கேட்ட அப்பாவிடம்” அவன் படிக்கும் போது நான் சொன்னதை கவனிக்கவில்லை. அதனால்தான் அடித்தேன் என்றார். வீக்கம் ஓரளவு வடிந்திருந்த கை மற்றும் முதுகை அப்பா காட்டச்சொன்னார். சாமியார் ஒன்றும் சொல்லவில்லை. கிழிந்துபோன வாய்ப்பாட்டை எடுத்துக்காட்டி இது எப்படிக் கிழிந்தது எனக் கேட்டார் அப்பா. பதிலில்லை சாமியாரிடம். அப்பா கோபத்துடன் இனிமே என் பையன் பிரைவேட்டுக்கு வரமாட்டான் என சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விடு விடுவென சென்றுவிட்டார். பிரைவேட்  படிப்பது அத்துடன் நின்று போனது.

எங்கள் பள்ளி ஒரு பெரிய ஓட்டு வீட்டில் இயங்கியது. ஒரு முறை எனது ஆசிரியர் மேலே ஏறி பரணில் இருந்த புத்தகங்களை சுத்தம் செய்யச் சொன்னார்.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கட்டு கட்டாய் கட்டப்பட்டுக் கிடந்தன. அந்த புத்தகங்கள் யாராவது அதை திறந்து பார்க்க மாட்டார்களா என்று  பரிதாபமாக பார்ப்பது போலத்  தெரிந்தன.

ஒவ்வொரு கட்டையும் அவிழ்த்து அதில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்து மீண்டும் கட்டினேன். சில புத்தகங்களின் தலைப்பு என்னைப் படிக்கத்   தூண்டியது. அவற்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டேன். வாத்தியாரிடம் கேட்டால் தருவாரோ மாட்டாரோ  என்ற சந்தேகம் எனக்கு.  

இன்னும் பல கட்டுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். நான் வாத்தியாரிடம் நாளை மீதியை சுத்தம் செய்கிறேன் சார் என்றேன். அவரும் சரி என்றார். அந்த சில புத்தகங்களை அவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். இரவோடு இரவாக அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட்டேன். மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது அந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் அவை இருந்த கட்டுகளுக்குள்ளேயே வைத்துவிட்டேன். அன்றும் சில கட்டுக்களைச் சுத்தம் செய்தேன். அதில் பிடித்த சில புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். சுத்தம் செய்த ஒவ்வொரு நாளும் சில புத்தகங்களை எடுத்து வந்து இரவிலேயே படித்துவிட்டு மறுநாள் அதே கட்டில் வைத்து விடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.

பல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவற்றை வீட்டுக்கு எடுத்துவர வழி தெரியவில்லை.வாத்தியாரிடம் கேட்க பயம். அவை எல்லாம் மாணவர்களுக்கான பள்ளி நூலகத்தின் புத்தகங்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆத்திச்சூடிக் கதைகள், குறள் நெறிக்கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் இன்னும் பல கதைகளைப் படித்தேன். அந்த கதைகள் எனக்குக் கதைகளின்மீது ஒரு ஆசையைத் தூண்டி விட்டது.

ஐந்தாம் வகுப்புப் படிப்பு  முடிந்து ஆறாம் வகுப்பு படிக்க கானூர் என்கிற பெரிய கிராமத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். கானூர் எங்கள் ஊரில் இருந்து  4 கிமீ தொலைவில் இருந்தது. தினமும் நடந்துதான் போகவேண்டும். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. தமிழில் சிறப்பாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் ஆங்கிலம் அவ்வளவாக வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது. தமிழில் பாடப்புத்தகங்களைத்தாண்டிக் கிடைக்கும் கதைப் புத்தகங்கள் எதுவானாலும் படிக்கும் வழக்கம் இருந்தது.

தினமும் காலையில் பள்ளிக்குப் போகும்போதே கானூர் டீக்கடையில் தினத்தந்தி படிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். தினமும் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை என்னைக் கவர்ந்தது. சிந்துபாத்தும் லைலாவும் தினசரி தினத்தந்தியில் கதைபடிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் என் ஊரில் இருந்த டீ கடையில் பேப்பர் படித்து வந்தேன். அப்போதெல்லாம் ஊரின் டீ கடையில் தினத்தந்தியும் முரசொலியும் தான் வரும். . அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். திமுக கிளை செயலாளர்  வீடு எனது வீட்டுக்கு அருகில் இருந்தது. அவரிடமிருந்து அண்ணாவின் சிறுகதைகள் வாங்கிப்  படித்தேன். அதில் உள்ள புலிநகம், திருமலை கண்ட திவ்ய ஜோதி, செவ்வாழை, பிடி சாம்பல் ஆகிய சிறுகதைகள் இன்றைக்கும் எனது நினைவில் இருக்கின்றன.

ஆங்கிலம் வரவில்லையே என்று வருந்தினேன். ஒரு நாள் என் பிரைவேட் வாத்தியார் சாமியார் எங்கள் பள்ளிக்கு வந்து எனது வகுப்பு ஆசிரியரைச் சந்தித்தார். எனது வகுப்பு ஆசிரியர் சிவம், ஆங்கில ஆசிரியரும் அவரே. சாமியார் எனது ஆசிரியரிடம் என்னைப்பற்றி ” சார், அவனுக்கு  ஆங்கிலம் தவிர அனைத்துப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்குவான்.ஆங்கிலம் மட்டும் அவனுக்கு நல்லா சொல்லி கொடுத்தீங்கன்னா அவன் நல்லா படிச்சு ஒங்க பள்ளிக்குப் பேர் வாங்கிக் கொடுப்பான் ” என்று சொன்னார். எனது ஆசிரியர் ” இவ்வளவு தூரம் ஒங்ககிட்டப் படிச்ச ஒரு பையனுக்காக வந்து சொல்றீங்களே அப்பவே இவனது திறமை எனக்குப் புரியுது. நிச்சயம் நான் அவன ஆங்கிலம் படிக்க வைக்கிறேன் ” என்றார்.

எனக்கோ ஆச்சரியம்.அவரிடம் நான் படித்ததோ  சில மாதங்கள் தான். என்னை அவர் கடுமையாக அடித்ததால் நான் பிரைவேட் போவதையே என் அப்பா நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர் எனக்காக வந்து என் ஆசியரிடம் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது. சாமியார் என் மனதில் இன்னும் உயர்ந்து நின்றார்.

மீண்டும் ஆங்கிலம் படிக்க ஒரு பிரைவேட்டில் சேர முடிவு செய்தேன். அப்பாவும் ஒத்துக்கொண்டார். கிருஷ்ணன் என்பவர் பிரைவேட் நடத்தி வந்தார்.

அவர் கூட்டுறவு சங்கத்தில்  வேலை செய்து வந்தார். மாலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் வரமுடியாதபோது அவரது மனைவி மாலதி அக்கா  வகுப்பெடுப்பார். அவர் ஒரு பட்டதாரி. தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்தை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டது அப்போதுதான். எனது வகுப்பாசிரியரின் உதவியுடன் ஆங்கிலம் ஒரு வழியாக எனக்குப் படிக்க வந்துவிட்டது. ஆனால் அதனோடு  கூடவே ஒரு பிரச்சினையும் சேர்ந்துகொண்டது.  பொருள் தெரியாமல் என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை.அதனால் அடிக்கடி ஆசிரியரிடம் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டு நோட்டில் எழுதிக்கொள்வேன்.அதன் பிறகுதான் என்னால் மனப்பாடம் செய்ய முடிந்தது. அப்பாவிடம் இதைச்சொன்னேன். அவர் அடுத்த வாரமே பழைய புத்தகக் கடையில் கிடைத்த லிப்கோ ஆங்கிலம் -தமிழ் அகராதி வாங்கி வந்து கொடுத்தார். அது எனக்கு ஆங்கிலத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள உதவியது.

மாலதி அக்காவிடம்  நிறைய பைண்டு செய்யப்பட்ட சரித்திர நாவல்கள் இருந்தன. பொன்னியின் செல்வன், பாண்டிமாதேவி, வேங்கையின் மைந்தன் போன்ற நாவல்களைப் படித்தேன். அதனால் எனக்கு வரலாற்றின் மீதும் வரலாற்று நாவல்கள் மீதும் ஆர்வம் அதிகமானது. வரலாறு நன்றாகப் புரிந்தது.இந்தக் கதைகள்  சேர, சோழ , பாண்டியர் வரலாறை எனக்கு எளிதாகப் புரியவைத்தன.

ஒரு நாள் தோப்பின் அருகில் இருந்த என் உறவினர் மூர்த்தியின் டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட கேட்  போடப்பட்ட கொட்டகை அது. கேட்டின் உயரம் பத்து அடி இருக்கும்.  இரண்டு  பகுதிகளையும் கொஞ்சம் விலக்கினால் என்னால் உள்ளே புகுந்து விடமுடியும் என்று தோன்றியது. அந்தக் கொட்டகையில் என்ன படிக்கக் கிடைக்கும் என்று பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேட்டை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கே குமுதம் புத்தகங்கள் ஏராளமாகக் கிடந்தன.அங்கேயே உட்கார்ந்து குமுதம் புத்தகத்தைப் புரட்டினேன். அதில் ராஜதிலகம் என்ற சாண்டில்யன் தொடர்கதை வந்திருந்தது. புத்தகங்களைத் தேதிவாரியாக அடுக்கினேன். முதல் இரண்டு குமுதம் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆசை வந்தது. எப்படியும் கடையில் பழைய பேப்பர்காரனிடம்தான் போடப்போகிறார்கள். அதற்கு முன் படித்துவிட்டுத் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடலாம் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை என்பதை வெளியே எட்டிப்பார்த்து உறுதி செய்துகொண்டபின் இரண்டு புத்தகங்களை என் சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் அதில் வந்திருந்த ராஜதிலகம் தொடரைப் படித்தேன். அந்த கொட்டகையில்  இருக்கும் குமுதம் புத்தகம் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்ற வெறியை சாண்டில்யன் என்னுள் உருவாக்கி விட்டார். படித்து விட்டு அந்த புத்தகங்களைப் பத்திரமாக வைத்தேன். அந்தப் பக்கம் போகும் போது இரண்டு புத்தகங்களை எடுத்து வருவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. உள்ளூர எனக்குப் பயம். எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொண்டு சென்று வைக்க மனமில்லை.முழுவதும் படித்து முடித்த பின் அனைத்துப் புத்தகங்களையும் கொட்டகையில் வைத்து விடலாம் என நினைத்தேன்.

சாண்டில்யனின் அந்தக் கதை அவ்வளவு  அற்புதமானது. பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவனின் வரலாற்றை அருமையான கதையாக மாற்றியிருந்தார். சில அத்தியாயங்களே எனக்குக் கிடைத்தன. போருக்காக ராஜசிம்மன் தயாராவதையும், அந்தப் போரில் இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் தோற்று ஓடியதையும் கூரம் செப்பேடு குறிப்பிட்டு இருப்பதையும்  அதில் எழுதி இருந்தார். இன்னும் எத்தனையோ வாரம் அதற்கு முன் வந்திருக்கும். அவை கிடைக்கவில்லை. அந்தக் கதையைப் படித்ததில் இருந்து முழுமையாக ராஜதிலகம் தொடர்கதையைப் படிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றிவிட்டது. வாங்கும் வசதி எனக்கு இல்லை.எனக்குத்  தெரிந்து குமுதம் புத்தகத்தை  மூர்த்தி  மட்டுமே என் ஊரில் வாங்கினார்.

Related image

எப்போதும் போல அந்த டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூர்த்தி அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நான் மெல்ல மெல்ல நடந்து சென்று அந்த குமுதம் புத்தகங்களின் பக்கம் அமர்ந்தேன். படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு புத்தகங்களை என் இடுப்பில் சட்டைக்குள் வைத்துக்கொண்டு எழுந்தேன். திரும்பிய அடுத்த நிமிடமே” நில்லுடா திருட்டு பயலே “என்று என்னைத் திட்டியவாறு மூர்த்தி எழுந்து வந்தார்.என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இத்தனை நாளாய் நான் பயந்து கொண்டிருந்தது நடந்தே விட்டது.

நான் எதிர்பாராத வகையில் அவர் என்னைத் தன் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். அவமானத்தால் என் மனம் குன்றிப்போனது. சில அடிகள் அடித்தபின் என்னை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு விட்டார். அந்த கொட்டகையின் அருகில் குடியிருந்த சாமியார் வாத்தியார் சத்தம் கேட்டு அங்கு வந்தார். மூர்த்தியிடம் ஏன் அவனைக் கட்டிப்போட்டு இருக்கிறாய் எனக்கேட்டார். “சாமியாரே அவன் என்னோட குமுதம் புத்தகத்தைத் திருடிவிட்டான்.அதனால் தான் அடித்தேன், கட்டிப்போட்டேன்” என்றார் மூர்த்தி.

என்னருகே வந்த சாமியார் “ஏண்டா திருடினே என்று கேட்டார்.

” சார் நான் படிக்க எடுத்திட்டுப்போனேன்.திருட நினைக்கல சார் “

“புத்தகத்தை எங்கே வச்சிருக்க? “

“எல்லாம் வீட்டிலதான் சார் இருக்கு”

“கேட்டு வாங்கிட்டுப் போயிருக்கலாமில்லையா ?

” யாரும் இல்லாததால கேட்க நினைக்கல, தப்புதான் சார். இனிமே அப்படிச் செய்யமாட்டேன்”.

எங்களின் உரையாடலைக் கேட்டவாறு இருந்த மூர்த்தி ” சாமியாரே இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க ? என்றார்.

” மூர்த்தி! அவன் படிக்கத்தானே எடுத்துட்டுப் போனான். இந்தப் பழைய குமுதம் புத்தகத்தையெல்லாம் நீ என்ன செய்யப்போற “

“சாமி அது உங்க வேல இல்ல, நீங்க ஒரு வாத்தியாரு. நான் புத்தகத்தைக் குப்பையில கூட போடுவேன். அது என் இஷ்டம். ஆனா இவன் திருடுனது தப்புதானே”

“ஒன் புத்தகம் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். அதை இந்த பையனுக்குக் கொடேன், அவன் படிக்கத்தானே எடுத்தான்

” முடியாது. நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்க வேணாம். என் எல்லா புத்தகமும் உடனே வந்தாகணும் சாமியாரே” என்றார் மூர்த்தி.

அடிபட்ட வலியுடனும் புண்பட்ட மனதுடனும் இருந்த நான் ” சார் நான் எல்லா புத்தகத்தையும் கொடுத்திடரேன், என்ன விடச்சொல்லுங்க சார் “என்றேன்.

சாமியார் மூர்த்தியைச் சற்று வெளியே அழைத்துப்போனார். மூர்த்தியிடம் ஏதோ பேசினார். சற்று நேரத்தில் திரும்பி வந்த மூர்த்தி முகத்தில் கோபம் குறைந்திருந்தது.என் கட்டை அவிழ்த்து விட்டார். வாத்தியார் என்னை என் வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் கொடுத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு மூர்த்தியிடம் கொடுக்கப்போன அந்த பிரைவேட் வாத்தியார் என் மனதில் மிகப்பிரமாண்ட மனிதராய் உயர்ந்து நின்றார்.  அவர் சாமியாரல்ல, சாமியாகவே எனக்குத் தெரிந்தார்.

 

Email:- enselvaraju@gmail.com

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.