(சென்ற இதழ் தொடர்ச்சி..)
காட்சி — 3
(மாதவன் வீடு. மாலை நேரம். மாதவன் ஹாலில் அமர்ந்து
கொண்டிருக்கிறான். ராஜாராமன் வருகிறான்)
ராஜா : (வந்து கொண்டே) குட்டிச் சுவர்.. எதை எடுத்தாலும் குட்டிச் சுவர். எப்படிப் பார்த்தாலும் குட்டிச் சுவர்.
மாத : (சிரித்துக் கொண்டே) பின்னே… ஏதாவது கழுதைகிட்டே யோஜனை கேட்டுப் போய்நின்னுருப்பே… குட்டிச்சுவராத்தானே
இருக்கும் பக்கத்துலே…
ராஜா : (எரிச்சலோடு) எக்ஸாக்ட்லி கரெக்ட்.. இவ்வளவு நாள் இது
தெரியாம இருந்துட்டேன் பாருடா.. என் மூளையை அடுப்புலே
தான் போடணும்.
மாத : சரி… கொண்டாடா.. என்னடா கரெக்ட்…?
ராஜா : ஆமா… உன் யோசனையைக் கேட்டுட்டுப் போய்த்தான்
செஞ்சேன்… குட்டிச் சுவர் இல்லாம வேறென்ன இருக்கும்…
மாத : (திடுக்கிட்டு) டேய்.. டேய்… ஹோல்டான்… ஹோல்டான்…
என்னடா சொல்றே?
ராஜா : பச்சையா சொல்லச் சொல்றியா… நீ சொன்னபடி நீ கழுதை
தாண்டா…
மாத : ஏண்டா.. டேய்.. திட்டறதுன்னு புறப்பட்டுட்டே… இப்படி
மூஞ்சிக்கு நேரே திட்டணுமாடா…? நேரே பார்த்தபோது நாலு
புகழ்ச்சி வார்த்தை சொல்லிப்புட்டு நான் இல்லாதபோது என்னைக்
கண்டபடி ஆசை தீர வையக்கூடாதாடா…?
ராஜா : இது வேற நியூ அட்வைஸா..? டேய் எங்கப்பா.. உன் கிட்டே
அட்வைஸ் கேட்டதும் போதும். நான் இப்போது அவதிப்-
படறதும் போதும்..
மாத : டேய் அப்படி என்னடா முழுகிப் போயிடுத்து..?
ராஜா : குடி முழுகிப் போயிடுத்துடா… குடி முழுகிப் போயிடுத்து….
மாத : முழுதுமே முழுகிடுத்தா…?
ராஜா : (ஏளனமாக எரிச்சலோடு) இல்லே வால் மட்டும் பாக்கி இருக்கு.. போடா.. குடியே முழுகிப் போயிடுத்துங்கறேன்…
மாத : ஓ… அப்போ சரி… கவலையை விடு… சாண் போனா என்ன..
முழம் போனாலென்ன….? விடு கவலையை…
ராஜா : டேய்.. என் உள்ளம் வேதனைப்பட்டுட்டிருக்கு… உனக்கு
விளையாட்டா இருக்கா..?
மாத : வாழ்வே ஒரு விளையாட்டுத்தானே பிரதர்.. நீ வெளங்கற
மாதிரி சொன்னாத்தானே எனக்குப் புரியும்.. முதல்லே உட்கார்..
(ராஜாராமன் உட்கார்கிறான்)
ராஜா : டேய்.. என் வைப் மனோ கண்டு பிடிச்சுட்டாடா….
மாத : (திடுக்கிட்டு) என்ன கண்டுபிடிச்சுட்டாளா..?
ராஜா : இன்னும் முழுதும் கண்டுபிடிக்கலே… நான் வாராவாரம்
எங்கேயோ போறேன்னு அவளுக்கு சந்தேகம் வந்துடுத்து…
மாத : டாமிட்… அவளுக்கு எப்படீடா தெரிஞ்சது..?
ராஜா : ஏதோ தற்செயலா நம்ம கிருஷ்ணன் வைப் கமலாவைப்
பார்த்திருக்கா… அவ உண்மையை உடைச்சுட்டா…
கிருஷ்ணன் ஸண்டே வெளியிலேயே போறதில்லைன்னு
உளறி வெச்சுட்டா…
மாத : க்வைட் அன்·பார்ச்சுனேட்… மூடி மூடி வெச்சா இப்படித்-
தாண்டா… நாம நம்ம ப்ரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லி வெச்சிருந்தா
சமாளிச்சிருக்கலாம்…
ராஜா : நீ இந்த யோஜனையைச் சொன்னபோது நான் அதைத்தான்
சொன்னேன்… நீதான் வேண்டாம்னுட்டே…
மாத : டேய்.. அனாவசியமாய் இதுக்கெல்லாம் எதற்கு பப்ளிசிடி கொடுக்கணும்னு பார்த்தேன்… இது போய் இப்படி முடியும்னு எனக்கு
என்ன ஜோசியமா தெரியும்..? நாம தப்பா ஒண்ணும் செய்யலேன்னு உன் வைஃப்க்கு நம்பிக்கை ஏற்படறமாதிரி நீ ஒண்ணும் சொல்லலியா..?
ராஜா : சொன்னேன்டா… சொன்னேன்.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்றமாதிரி சந்தேகம் ஏற்பட்ட மனதுக்கு எல்லாத்தையுமே சந்தேகத்தோட பார்க்கத்தான் தோணும்.
மாத : இப்போ என்னடா பண்ணறது? பேசாம உன் வைஃப்கிட்டே
உண்மையைச் சொல்லிட்டா…
ராஜா : இடியட்… நீயே இப்படிச் சொல்றியே.. உண்மையைச் சொன்னா ஷுவரா மனஸ்தாபம் வரும். குடும்பத்துலே மகிழ்ச்சியே கெட்டுப்போயிடும்.
மாத : அப்போ ஒண்ணு பண்ணு… வாராவாரம் அங்கே போகாதே..
அவளை மறந்துடு..
ராஜா : டேய்… அவளை நான் எப்படீடா மறக்க முடியும்?
மாத : வேறே என்னடா செய்ய முடியும்?
ராஜா : டேய் மாதவா.. மனோரமாவிற்கு ஏண்டா என் மேலே நம்பிக்கை ஏற்பட மாட்டேன்ங்குது? அவ மகிழ்ச்சிக்காக நான் எதையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்..? என் உயிருக்கு உயிராக
இருந்த அம்மாவை விட்டுட்டுத் தனிக் குடித்தனம் போட்டேன்.
அவள் கேட்டதுக்கும், சொன்னதுக்கும் மதிப்புக் கொடுத்து
அதன்படியே நடந்துட்டிருக்கேன். அவளுக்குத் தெரியாத
இரகசியங்கள் என்கிட்டே ஒண்ணுமே இல்லே இது ஒண்ணத்
தவிர..
மாத : அந்த இரகசியம்தான் என்னன்னு உன் வைஃப் கேட்கறாளே..?
ராஜா : அதெப்படி நான் அதைச் சொல்றது? வீண் மனஸ்தாபங்கள்
உண்டாகி குடும்ப மகிழ்ச்சியே கெட்டுப் போயிடுமே.. ம்…
மாத : எக்ஸாக்ட்லி.. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு… நீ ஒண்ணுமே
நடக்காதமாதிரி சாதாரணமா இரு.. மேலும்மேலும் சந்தேகம்
வளரறமாதிரி நடந்துக்காதே… இனி ஸண்டேஸண்டே
போகாதே…
(ராஜாராமன் காதில் ஏதோ கூறுகிறான்)
ராஜா : ம்… அப்படித்தான் செய்யணும். மாதவா, நான் போய்ட்டு
வறேன்.. நாளைக்குப் பார்ப்போம்..
(போகிறான்.. மாதவன் அவனையே பார்த்துக்
கொண்டு நிற்கிறான்.. அவன் கண்களில் நீர் )
மாத : அட, ராஜாராமா… உன் நல்ல மனதுக்கா இந்த சோதனைகளெல்லாம் வரணும்..
காட்சி – 4
(ராஜாரமன் வீடு.. அந்தி வேளை.. மனோரமா ஏதோ
படித்துக் கொண்டிருக்கிறாள்.. ராஜாராமன் வருகிறான்)
ராஜா : (வந்து கொண்டே) மனோ… மனோ…
மனோ: (புத்தகத்தை மூடி வைத்தவாறு) ம்.. வந்துட்டீங்களா.. டிரஸ்
மாத்திட்டு வாங்க… காபி கொண்டுவறேன்…
ராஜா : ம்.. இன்னிக்கு என்ன ஏக தடபுடலா உபசாரங்கள் நடக்குது..?
(காபியைக் குடிக்கிறான்)
மனோ: தடபுடலான்னா..? காபி நல்லா இருக்கா..?
ராஜா : ஓ.. எஸ்.. ஆனா ஒண்ணுதான் குறை…
மனோ: (திடுக்கிட்டு) குறையா..?
ராஜா : ஆமா.. சர்க்கரைன்னு நெனச்சிட்டு உப்பை அள்ளிஅள்ளிப்
போட்டிருக்கே… சர்க்கரைக்கு ரேஷன் பார்…
மனோ: ஐயையோ… உப்பையா போட்டுட்டேன்… இப்போ என்ன
செய்யறது..?
ராஜா : ம்.. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.. நெறைய மிளகாய்த்
தூளைப் போட்டுட்டா காரத்துக்கும் உப்புக்கும் சரியாய்ப்
போயிடும்…
மனோ: (சிரித்துக் கொண்டே) அதைவிட வேறே ஒரு நல்ல வழி
இருக்கு..
ராஜா : என்னது..?
மனோ: கொண்டுபோய்க் கொட்டிட்டு வேறே காபி கொடுக்கறது..
(காபியைக் கொண்டு கொட்டிவிட்டு வேறு
காபியுடன் வருகிறாள்)
ராஜா : இதுலே சுண்ணாம்புப் பொடியைக் கலக்கலியே…?
(மனோரமா சிரிக்கிறாள்.. ராஜாராமன் காபியைக்
குடிக்கிறான்.)
மனோ: இன்னிக்கு ஒரு அருமையான புத்தகம் படிச்சேன்…
ராஜா : ஓ.. தெரியுமே…
மனோ: (திடுக்கிட்டு) என்ன தெரியுமா…?
ராஜா : ஓ.. எஸ்…
மனோ: எப்படி…?
ராஜா : ஊஹூம்.. சொல்ல மாட்டேன்..
மனோ: சரி.. வேண்டாம்…
ராஜா : அடிப்பாவி.. நீ கெஞ்சுவேன்னல்ல நெனச்சேன்.. சொல்றேன்
கேளு.. நீ இன்னிக்கு என்ன வரவேற்ற தோரணையும்,
ஓடிப் போய் காபி கொண்டுவந்த தோரணையும் பார்த்த-
போது ஏதோ இன்னக்குப் புதுசா அறிவைத் தரக்கூடிய
புத்தகம் படிச்சிருப்பேன்னு முடிவுக்கு வந்தேன்.
மனோ: ஆமா… என்னை எப்பவும் கலாட்டா பண்ணிட்டிருக்கணும்..
அதுதான் உங்க பொழுதுபோக்கு… அது போகட்டும்..
இன்னக்கு நான் படிச்ச தீம் எத்தனை பிரமாதமா இருந்தது
தெரியுமா..? கேட்கறீங்களா…?
ராஜா : ம்… கேட்காம விடவா போறே.? சொல்லு…
மனோ: ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த ஒரு குடும்பம்
சந்தேகத்துனாலே பிளவுபட்டுடுத்து… கணவன் மேலே
மனைவிக்கு சந்தேகம் வந்துடுத்து… அவளாலே சந்தேகப்-
படவும் முடியலே… சந்தேகப்படாமலும் இருக்க முடியலே..
அவ மனசு சந்தேகப்பட்டு வருத்தப்பட சந்தோஷமே
அழிஞ்சு போச்சு…
ராஜா : ஓஹோ.. மனோ… நீ எதுக்கு இந்தக் கதையைச் சொல்றேன்னு
எனக்குப் புரிஞ்சிடுத்து..
மனோ: நம்ம குடும்பம் எத்தனை சந்தோஷமா நடந்துட்டு
வந்தது… அந்த சந்தோஷத்தைக் கெடுக்க இப்படியா வந்து
சேரணும்…?
ராஜா : மனோ… அந்த சந்தோஷம் கெடக் கூடாதுன்னுதான் நானும்
முயற்சி பண்ணறேன்…
மனோ: இப்படியொரு சந்தேகம் இருக்கறபோது எப்படி நான்
சமாதானத்தோடு இருக்க முடியும்..?
ராஜா : மனோ.. என்னை உனக்குத் தெரியாதா..? நான் உனக்குத்
துரோகம் நினைப்பேனா..? என்மேலே உனக்கு நம்பிக்கை
இல்லையா..?
மனோ: மனப்பூர்வமா நம்பிக்கை இருக்கு..
ராஜா : பின்னே என்ன..? ஏன் அனாவசியமா அலட்டிக்கறே…
நான் தப்பான வழியிலே ஒண்ணும் போக மாட்டேன்.
மனோ: நீங்க செய்யறது தப்பு ஒண்ணும் இல்லேன்னா ஏன்
என்கிட்டேயிருந்து அதை மறைக்கறீங்க… சொல்லிடுங்களேன்..
ராஜா : ஸாரி மனோ… இனிமே தயவுசெய்து இந்தப் பேச்சையே
எடுக்காதே…
மனோ: (பெருமூச்சுடன்) சரி.. என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு
உங்கமேலே பூரணமா நம்பிக்கை இருக்கு… இனிமேல் இதைப்
பற்றிப் பேசவே மாட்டேன்….
(உள்ளே போகிறாள்.)
(என்னதான் நடக்கிறது..? மனோ ராஜாராமனை
உண்மையில் நம்பி விட்டாளா.. இல்லை ஏதாவது
திட்டம் வைத்திருக்கிறாளா…?
(அடுத்த இதழில்,,,)
தொடரும்)