ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து

அத்தியாயம் – 3

Related image

 

ஓரிடம்தனிலே நிலையில்லா துலகினிலே                                         உருண்டோடிடும் பணம் காசெனும்                                                           வினோதமான பொருளே

ஏதோ ஊரும் மாறி பள்ளியும் மாறி கொஞ்சம் கொஞ்சமா ‘செட்டில்’ ஆகிக்கொண்டு வந்த காலம் அது.

அந்தக் காலத்து வீடுகளைப்போல ஒட்டுத் திண்ணை, பெரிய திண்ணை, முற்றம், தாழ்வாரம், சில அறைகள், நெல் சேமித்துவைக்கும் பத்தாயம், சமையல்கட்டு, பின்கட்டு, கிணறு  இரண்டாம் கொல்லை என்றெல்லாம் இருந்தது. இப்போது வழக்கில் இல்லாத ரேழி, ஆளோடி, கூடுவாமூலை என்ற சொற்களால் சில இடங்களைக் குறிப்பிடுவார்கள்.

Related image

வீடு நிறைய மனிதர்கள். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மற்றும் குழந்தைகளாகிய நாங்கள் ஆறு பேர்.  வீட்டோடு ஒரு மூதாட்டியும் இருந்தாள். தாத்தாவிற்குத்  தமக்கையோ, அண்ணியோ ஏதோ உறவு முறை.  அப்பா, அம்மா உட்பட நாங்கள் எல்லோரும் அவர்களை ‘அயித்தா’ என்று அழைப்போம்.  சித்தப்பா, பெரியப்பா, அத்தை என்று என் தந்தையின் உடன்பிறந்தோர் யாரும் கிடையாது. பாட்டிக்குப் பிறந்த குழந்தைகளில் என் அப்பா மட்டும்தான் தங்கினாராம்.

Image result for malgudi sketches

எங்களைச் சுற்றி இருந்த உறவினர்கள் பெரும்பாலும் தாத்தா வழிதான் என்று நினைவு. எப்போதாவது பாட்டியின் உடன்பிறப்பு என்று  ஒரு சின்னப் பாட்டி வருவதுண்டு. பொம்பிளைத் தாத்தா என்று அழைக்கப்படும் ஒரு மாமா தாத்தா  வருவதும் உண்டு.  (அவர் ஊர் பொன்மலை என்றும் பொன்மலைத் தாத்தா மருவி பொம்பளைத் தாத்தா ஆயிற்று என்று பின்னாளில் தெரியவந்தது.) என் அம்மா வழியில் உறவினர்கள் யாரும் வந்து போனதாக எனக்குத் தெரியவில்லை.  

வருஷத்திற்கு இருமுறை எங்கள் தாத்தா தனது பெற்றோருக்குக்   கொடுக்கும் திதிகளில் பக்கத்து ஊர்களிலிருந்து கூட உறவுக்காரர்கள்  வருவார்கள். சாப்பாடு இரண்டு பந்தி நடக்கும். என் வயதை ஒத்த சிறுவர்களும் வருவார்கள் என்பதால் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக அந்த ஓரிரு தினங்கள் கழியும்.

எதிலும் விசேஷ கவனமின்றி, பள்ளிக்கூடம், விளையாட்டு, சாப்பாடு என்று போய்க்கொண்டிருந்தது. தீபாவளி போன்ற பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுவோம்.  இப்போது யோசித்துப் பார்த்தால், எல்லா உறவினர்களுக்கும் தாத்தாவிடம் ஒரு மரியாதையும் பயமும் இருந்ததுபோலத் தெரிகிறது.  தாத்தாவிற்குக் கணிசமான சம்பாத்தியம் என்று தோன்றுகிறது. அப்பாவும் ஏதோ சம்பாதித்ததால் பணத்தட்டுப்பாடு இருந்ததில்லை  என்று நினைக்கிறேன் . உறவினர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கலும் இருந்திருக்கும். அதில் தாத்தா எப்போதும் ‘கொடுக்கல்’ தான்.  பணத்தைத் திருப்பிக்கேட்டு அதில் கொஞ்சம் கசமுசாவும் உண்டு.

Related image

தெருவிலேயும்  திண்ணையிலேயும் விளையாடிக்கொண்டும் வீட்டுப்பாடம் செய்துகொண்டும் பெரும்பகுதி நேரம் கழிந்தாலும், சமயத்தில் வீட்டிற்கு உள்ளேயும் போவோமல்லவா? அந்தச் சமயத்தில் சில சமயம் பெரியவர்கள் சத்தம் போட்டுக்கொண்டோ, குசுகுசு என்று பேசிக்கொண்டோ இருந்தால், ஏதோ பிரச்சினை என்று புரியும். திட்டு வாங்குவதற்குள் ஓடி வந்துவிடவேண்டும்.   

வீட்டிலே பாட்டிதான் எல்லாம். ஆயித்தாவும் தன் பங்கிற்கு பாட்டிக்கு ஏதாவது ஆலோசனை சொல்லுவாள். குடும்ப விவகாரங்கள் எல்லாம் அயித்தா, பாட்டி தாத்தா மூவரும்தான் முடிவு செய்வார்கள். ஆனால், பணம் காசு விவகாரமெல்லாம்  தாத்தாதான்.  என் அப்பாவோ, அம்மாவோ தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்வதுகூட கிடையாது. அந்தக் காலத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த விஷயங்களை ஓரளவு விவரம் தெரிந்தபிறகு அசைபோட்டபோது தோன்றியதுதான் இவை.

ஏதோ ஒரு சமயத்தில் அண்ணன் அப்பாவிடம் “நீங்கள் ஏன் தாத்தாவை ஏதும் கேட்பதில்லை?” என்று விசாரித்தான். அண்ணனிடம் அப்பா கூறியது இதுதான்.

“தவறோ, சரியோ பெரியவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவது பழகிப் போய்விட்டது. ஆனால், நீ என்னை இப்போது கேள்வி கேட்பதுபோல் எனக்கு என் அப்பாவைக் கேட்கத் தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதனால் ஒன்றும் பாழாய்ப் போகவில்லை.”  

அண்ணன் நல்ல மார்க் வாங்குவான். சில நண்பர்கள் இவனிடம் பாடத்தில் சந்தேகம்கூடக் கேட்பார்கள். அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்று எல்லோரும் நம்பினார்கள். தம்பியும் தங்கையும் நல்ல பெயர் எடுத்துவந்தார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டுவது அயித்தா, தாத்தா மற்றும் பாட்டிக்கு விருப்பமான காரியம். அப்பாவும் அம்மாவும் மௌனிகள்.

எனக்கு மட்டும்  அதிகாரம் இருந்திருந்தால், “நீயும் இருக்கியே…?”, “உடன் உடத்தவர்கள்”, “சமத்து தொட்ட கை”,  போன்ற சொற்றொடர்களைத்     தடைசெய்திருப்பேன்.

Swami & Friends Malgudi Days

எங்கள் வீட்டிற்கு எதிரில் ‘முனிசிபாலிட்டி’ வேணு என்று ஒருவர் இருந்தார். அவர் மகன் குமரேசன் மூத்தவன். மூன்று இளைய சகோதரிகள் அவனுக்கு. குமரேசன் ஃபெயிலாகிப்  ஃபெயிலாகி   என் அண்ணன், நான், என் தம்பி மூவரின் வகுப்புகளிலும் அவன் இருந்திருக்கிறான். விளையாட்டுகளில் கெட்டிக்காரன்.  கில்லி-தாண்டு என்னும் விளையாட்டில் ஒரு புது ஆட்டத்தையே வடிவமைத்தவன். தெருவிலே சேர்ந்தாற்போல் இருந்த இரண்டு பெரிய  காலி மனைகளில் அந்த ஆட்டம் நடக்கும். ஆட்டமிழக்காமல் ஒரு முழு ரவுண்டு வருவது ‘மலையேறுதல்’ என்ற வெற்றிக்கொடி.

முதல்முறையாக குமரேசன் கிட்டத்தட்ட ‘மலையேற’ இருந்தான். அந்தச் சமயத்தில் அவன் சித்தப்பாவும், மாமாவும் அங்கு வந்து அவனை இழுத்துப்போனார்கள்.    ‘முனிசிபாலிட்டி’ வேணு  திடீரென்று இறந்துவிட்டாராம்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவன் ஒரு தானிய மண்டியில் வேலை செய்வதைப் பார்த்தேன். கவலையில்லாமல் திரிந்து வந்த அவனுக்குக் குடும்பப் பொறுப்பு. அம்மாவையும் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டுமே?  அந்த வயதில் புரிந்த அளவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

சில வருடங்களில் எங்கள் வீட்டிலும் காற்று திசை திரும்பியது.

 ‘அயித்தா’வின் காலம் முடிந்திருந்தது. தாத்தா சம்பாதிக்கப் போவதும் நின்று போயிருந்தது. அப்பாவின் சம்பாத்தியத்தில் வீடு ஓடியது. தாத்தாவின் ‘கொடுக்கல்கள்’ பல ‘வாங்கல்’ இல்லாமல் போயிற்று.    கொஞ்சம் கொஞ்சமாகப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களையிழந்தன. திதி நாட்களில் வருவோர் குறைய ஆரம்பித்தார்கள்.

சிறுவர்களாகிய எங்கள்மீது அதிகம் விழவில்லை என்றாலும் வீட்டு நிலைமை ஓரளவிற்குப் புரிந்தது. அப்போது நான் பள்ளிப்படிப்பு முடித்திருந்த சமயம். ஒரே மாதத்தில் பாட்டியும் தாத்தாவும் மறைந்தார்கள்.  தம்பி தங்கைகள் பள்ளியில் இருந்தனர்.  அண்ணன்  ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பு முடித்தான். அவனை அருகிலிருந்த நகரக் கல்லூரியில் சேர்த்தார்கள். என் அப்பாவின் நண்பர் ஒருவர் அவனைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து அவன் படிப்புச் செலவைத்  தானே ஏற்றுக்கொண்டாராம். பாட்டி, தாத்தா இருந்தவரையில் என் அப்பாவிற்கு நண்பர்கள், அதிலும் உதவக்கூடிய நண்பர்கள் இருப்பார்கள் என்று யாரும் நினைத்துக்கூட இருக்கமாட்டார்கள்.

எப்படிச் சாதித்தார் என் அப்பா என்று தெரியவில்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத என்னை எங்கள் மாவட்டத்திலேயே இன்னொரு நகரத்தில்  கவர்மெண்டும் இல்லாத, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு  ஸ்தாபனத்திலே வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

என்னை ஒத்த பையன்களில், குமரேசன் தவிர, சம்பாதிக்கத் தொடங்கியது முதலில் நான்தான். ஏன், அண்ணன் பட்டப்படிப்பு முடித்து வேலைக்குப் போவதற்கு முன்பே நான் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். என் அம்மா அதை ‘கடவுள் செயல்’ என்பாள். வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது ஊரில் சிலருக்குப் பொறாமை.

எப்படியோ தினமும் பஸ்ஸில் அலுவலகத்திற்குப் போய்வரும் ஊழியன் ஆக மாறினேன். வீட்டிற்குத் திரும்ப பஸ்ஸிற்காகக் காத்திருந்தபோது, ‘சார் சார்’  என்ற குரல். யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அந்த நபர் என் தோளைத்தட்டிப் பேசியபோதுதான் என்னையும் ‘சார்’ என்று கூப்பிடுவார்கள் என்று உணர்ந்தேன்.

(என் ஊரிலேயே எனக்கு வேலை கிடைக்காதென்று அசாத்திய நம்பிக்கை.  உள்ளூரில் விலைபோகாத மாட்டைக் கொம்பு சீவி, பெயிண்ட் அடிச்சு வெளியூர் சந்தையிலே விற்று விடுவார்களாம். அப்படித்தான் எனக்கும் வெளியூரில் வேலை கிடைத்ததோ?.என்னையும் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் காலமும் இருந்தது என்பது ஒரு பேராச்சர்யம்)

   ……………….   இன்னும் வரும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.