நடிகர் அஜித்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – சாரு நிவேதிதா

Related image    

சாரு நிவேதிதா,  விவேகம் படத்திற்கு அவரது வழக்கமான பாணியில்  விமர்சனம் சொல்லப் போக , அதற்காக அவருக்குக் கொலை மிரட்டல் வர,  அதற்காக அவர் அஜித்துக்கே ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது இப்போது தமிழ் நாட்டில்  பரவலான சமாசாரம். 

முதலில்  அவரது விமர்சனத்தைக் கேட்கலாமா? 

 

அவரது கடிதத்தைப் பார்க்கலாமா? 

 

மை டியர் அஜித்,

மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்கமுடியவில்லை.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன.  மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள்.  ”உன் மகள் —————(ஜனன உறுப்புக்கான தமிழ்க் கொச்சை) காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருக வேண்டும்” என்று உங்கள் ரசிகர் ஒருவர்  எழுதியிருக்கிறார்.  இதெல்லாம் சமூக மனநோய்.  இதையெல்லாம் இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏன் எதுவுமே சொல்லவில்லை?  என்னை விட ப்ளூ ஷர்ட் மாறனுக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.  எல்லோரும் தங்கள் தொலைபேசி எண், பெயர் எல்லாம் போட்டுத்தான் மிரட்டுகிறார்கள் என்பதால் அவர்கள் வெறுமனே பயமுறுத்தவில்லை; சொன்னதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.  உங்கள் ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து எல்லோரையும் என்னை மிரட்டச் சொல்லியிருக்கிறார்.  உண்மையிலேயே என் உயிர் பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கும் நண்பராக இருந்தார்.  அப்போது அவர் உங்களைப் பற்றிக் கூறிய விஷயங்கள், உங்களைப் போன்ற ஒரு பண்பாளரைப் பார்ப்பது அரிது என்பதாகவே இருந்தது.  உங்களைப் பற்றி உங்களோடு பழகும் அத்தனை பேருமே அப்படித்தான் சொல்கிறார்கள்.  முந்தாநாள் தி இந்துவில் வந்துள்ள இந்தக் குறிப்பைப் பாருங்கள்:

உங்களுக்கு நெருக்கமான ஒரு டாக்டர் – அவர் தன் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை – கூறுகிறார்: “ஒருமுறை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அஜித்தைப் பற்றிக் கேட்டதும் எதார்த்தமாக அவரைப் பற்றி எப்படி உணர்ந்தேனோ அதே போன்று ஹி இஸ் அ ஸ்வீட் பர்ஸென் என்று சொன்னேன்.  பேட்டி ஒளிபரப்பானதும் அஜித் என்னை அழைத்தார்.  “நான் நடிகன், பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறேன்.  நீங்கள் உங்கள் தொழிலைச் செய்வதற்காகக் கட்டணம் பெற்றுக் கொள்கிறீர்கள்.  இதில் நடிகனுக்கு மட்டும் எங்கிருந்து கிரீடம் வந்தது?  எதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் புகழ வேண்டும்?” என்று என்னை வாங்கு வாங்கென்று வாங்கினார்.

அது மட்டும் அல்ல; அந்த டாக்டரைப் பார்ப்பதற்காக முறையாக அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வரிசையில்தான் செல்வீர்களாம்.  கேட்டால் “உங்களுக்கு நண்பன் என்பதற்காக உங்கள் தொழில் எதிக்ஸைக் கெடுப்பது சரியாக இருக்காது” என்று சொல்வீர்கள் என்று எழுதுகிறார் உங்கள் நண்பர்.

அஜித், என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  நான் இதுவரை 80 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் 20 புத்தகங்கள் மலையாளத்தில் உள்ளன.  உலக சினிமா பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  ஆங்கிலத்தில் என் எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  உங்கள் விவேகம் பற்றி நியாயமான முறையில் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் விமர்சனம் செய்தேன்.  நான் பொதுவாக தமிழ் சினிமா பார்ப்பதில்லை.  ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்களை – நண்பர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே பார்ப்பது வழக்கம். ஆனால் மெட்ராஸ் செண்ட்ரலில் தமிழ்ப் படங்களை விமர்சனம் செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதால் விவேகத்தை முதல் நாள் பார்த்தேன்.  நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி விமர்சித்தேன்.  சினிமாவையும் மீறி உங்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையுமே அதற்குக் காரணம்.  இல்லாவிட்டால் விவேகத்தில் இடைவேளை வரை இயக்குனர் சிவா கொடுத்த டார்ச்சருக்குக் கன்னாபின்னா என்றுதான் திட்டியிருக்க வேண்டும்.  அதற்காக இடைவேளைக்குப் பிறகு டார்ச்சர் இல்லை என்று அர்த்தமில்லை.

ரகசிய போலீஸ் 115 என்று நினைக்கிறேன்.  எம்ஜியார் பாகிஸ்தான் ராணுவத்தை ஒற்றை ஆளாக போட்டுத் தள்ளி விட்டுத் தப்பி ஒரு வேலியைத் தாண்டிக் குதிப்பார்.  அதில் தமிழில் இந்தியா என்று எழுதியிருக்கும்.  அதையெல்லாம் என் சிறுவயதில் ரசித்தேன்.  இப்போதும் எல்லோரும் அதே மனநிலையில் இருப்பார்களா?  சிவா இன்னும் ரகசிய போலீஸ் 115 காலத்திலேயே இருக்கிறார்.  விவேக் ஓபராய் போன்ற வில்லனை எம்ஜியார் படங்களில் கூடப் பார்த்ததில்லையே அஜித்?

சரி, போகட்டும்.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு என் தொலைபேசியில் கொலை மிரட்டல் விட்டுக் கொண்டும் ஆபாச வசைகளை எழுதிக் கொண்டும் இருப்பவர்களை நீங்கள் எப்போது கண்டிக்கப் போகிறீர்கள்?  அல்லது, ஒன்று செய்யுங்கள்.  என் வீடு சாந்தோம் – மயிலாப்பூர் எல்லையில் எம்.எஸ். விஸ்வநாதனின் வீட்டுக்கு எதிரே உள்ளது.  சீக்கிரம் ஒருநாள் என் வீட்டுக்கு வாருங்கள்.  உங்களுக்குப் பிடித்த பிரியாணி செய்து தருகிறேன்.  உங்களுக்கு நான் பிரியாணி பரிமாறுவதை செல்ஃபீ  எடுத்து ட்விட்டரில் போட்டால்தான் கொலைகார ரசிகர்கள் என்னை உயிரோடு விடுவார்கள்.  சீக்கிரம் வாருங்கள்.

பின்குறிப்பு: நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை நல்லவராக இருந்தாலும் தவிர்க்கவே முடியாமல் ஒரு சிறுதெய்வம் ஆகி விட்டீர்கள்.  நடிகர்கள் அத்தனை பேருமே சிறுதெய்வங்கள்தான்.  உங்கள் ரசிகர்கள் எல்லோரும் பக்தர்கள்.  அதனால்தான் படத்தை விமர்சித்தால் தங்கள் கடவுளை விமர்சித்து விட்டதாக எண்ணிக் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.  தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.  அதை நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.  அரசியலில் கூட இந்த நிலை இல்லை.  நான் ஜெயலலிதாவை விமர்சித்திருக்கிறேன்; கருணாநிதியை விமர்சித்திருக்கிறேன்.  மோடியை விமர்சிக்கிறேன்.  இதுவரை ஒரு மிரட்டல் வந்ததில்லை.  உங்களுடைய ஒரே ஒரு படத்தை நாகரீகமான முறையில் விமர்சித்ததற்குக் கொலை மிரட்டல்; ஆபாச வசை.

இந்த நிலையை மாற்ற முயலும் என் போன்ற சிறியவர்களுக்கு உங்களைப் போன்ற கடவுள்களின் ஆதரவு தேவை.  அட்லீஸ்ட் நான் கடவுள் இல்லை என்று உணர்ந்து கொண்ட உங்களைப் போன்ற நடிகர்கள் இதற்குத் தங்களால் ஆன ஆதரவை நல்க வேண்டும்.

தங்கள் நண்பன்

சாரு நிவேதிதா 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.