2.வாங்மெங்கின் ஓலை தொடர்கிறது.
முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பீஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காணவந்திருந்த, கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சாரத் தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் தஞ்சாவூரில் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதை சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர். அரங்கேற்றப்பட்ட சீன கலாநிகழ்ச்சிகளைக் கண்டு பிரமித்த சக்கரவர்த்தி, தான் துவங்க இருக்கும் பிரம்மாண்ட பெருவுடையார் ஆலயத்திற்குப் பணி செய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த அங்கேயே தங்கி நடத்த இயலுமா என்ற வேண்டுகோளை வாங்மெங் முன் வைக்கிறார்.
இனி……………
அடுத்த நாள், சபை மறுபடியும் கூடியது. நானும் என் குழுவும் சக்ரவர்த்தியை வணங்கி நின்றோம். “என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?”என்று அரசர் வினவ, நான் பதிலளிக்கலானேன்.“அரசே! மனைவி, மக்கள், பெற்றோர் மற்றும் சுற்றத்தார் எவரும் எனக்கில்லை. எனவே நேற்றே நான் உங்களுக்கு உதவ முடிவெடுத்துவிட்டேன். உங்களின் இந்த உலகப் பெரும் சாதனையை நினைத்து வியந்து அதில் எனக்கும் என் குழுவிற்கும் ஒரு சிறு பங்கு கிடைக்கப்போவதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். ஆலயம் கட்டி முடிவடையும்வரை இங்கேயே இருப்பேன். இது உறுதி!”
“உங்கள் குழுவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று மறுபடி அரசர் கேட்டார். அதற்கு நான், “ஒரு பாதி மணமாகாத ஆணும் பெண்ணும் கலந்த இளைஞர்கள். மறுபாதி மணமானவர்கள். இளைஞர்களுக்கு சம்மதம். மற்றவர்கள் கப்பல் கிளம்பும்வரை இருப்பார்கள். எனினும் கவலை கொள்ள வேண்டாம். எங்கள் கப்பல்கள் வருடம் இருமுறை இங்கு வருகிறது. கிளம்பியவர்களுக்கு பதிலாக அமர்த்த புதிய கலைஞர்கள் கொண்டு வரப்படுவார்கள். உங்கள் விருப்பத்துடன் சோழ நாட்டிலேயே புதிய தமிழ் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெற தயார் செய்துவிடுகிறேன்” என்றேன்.
ராஜராஜசோழ தேவர் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து என்னை அப்படியே தழுவி, “என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி. நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறி திருமந்திர ஒலை நாயகம் கிருஷ்ணன் ராமனை அழைத்து எங்களுக்கு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
சம்பவப் பட்டியல் பதிவு அதிகாரி வாங்மெங் எழுதியிருப்பதை மேலேதொடர்ந்து படித்தார். “கிருஷ்ணன் ராமன் எங்களுக்கு, தங்க, ஒத்திகை பார்க்க போன்ற ஏனைய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்தார். வேலை செய்வோர் தொழில்களுக்கேற்றவாறு இடங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் நாடக மேடைகள் அதற்கேற்ப கட்டப்பட்டன. அவைகளில் கலை நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப்பெற்று நடந்தேறின. கடின உழைப்பினால் சோர்வடைந்திருந்த உழைப்பாளிகளுக்கு இது புத்துணர்வு அளித்தது. தெம்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். ஆகையால் அவர்களுடைய உழைப்புத் திறன் பல மடங்கு உயர்ந்தது.
ஆலயம் கட்டும் பணியால் உழைப்பாளிகளின் குடும்ப நிர்வாகம் பாதிப்படைந்தது. இதில் இல்லத்தரசிகளின் பங்கு மேலானது. குடும்ப நிர்வாகத்துடன் வீட்டு நிர்வாகத்தையும் தலைமேல் ஏற்றுத் திறம்பட செய்தனர். எனினும் எல்லாவற்றிற்கும் எல்லை என்று ஒன்று இருக்கிறதல்லவா? களைப்படைந்திருந்த மனைவிமார்களுக்கு கலை நிகழ்ச்சிகள் குடும்பங்களுக்கென்று தனியாக நடத்தப்பட்டன. எனவே குடும்பமும் இதனால் பயனைப்பெற்றது. நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.நாடகங்கள் தஞ்சாவூரில் மட்டுமல்லாது நார்த்தாமலை, நாகப்பட்டினம் போன்ற மற்ற ஊர்களிலும் நடத்தப்பட்டன.
நான் சோழநாட்டு தமிழ் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் நிறைவுக்கு வந்தன. கப்பலில் செல்வோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. தமிழ் நடிகர்கள் தயாரானார்கள். மணமான கலைஞர்கள் தாய் நாட்டுக்குச் செல்லக் கப்பலேறினார்கள். மூன்று ஆண்டுகள் உருண்டன . எனக்குத் தமிழ் பேச நன்றாகவே வந்தது. நிகழ்ச்சிகளைக் காலம், இடம் மற்றும் பார்வையாளர்களை மனதில் கொண்டு என் அநுபவத்தையும் கற்பனையையும் சேர்த்துத் தயாரித்து வந்தேன்.
இந்தக் காலகட்டத்தில் விமானத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு ராஜராஜ சோழ தேவரின் ஆலயத்தின் முதல் தளம் வரை உயர்ந்திருந்தது. ஆராய்ந்து திட்டமிட்ட சில வேலைகள் இரு தளங்களிலும் ஒரே சமயத்தில் நடைபெற்றன
அன்றொரு நாள்! நிகழ்ச்சி நடத்த நார்த்தாமலை சென்றிருந்தேன். என்னால் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யப்பட்ட நார்த்தாமலை தமிழ்க் குழுவின் நாடகம் அங்கு நடந்தேறியது. மறுநாள் காலையில் உணவருந்திய பின் புரவியில் தஞ்சாவூருக்குக் கிளம்பினேன். பாதி வழியில் அச்சம்பட்டி அருகில் வனப்பகுதியில் வரும் சமயம் பகல் பொழுதாகிவிட்டது. திடீரென மேகம் இருண்டது. இடி மின்னலுடன் காற்று பேரிரைச்சலுடன் பெரிய மழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்தது. உடைகள் நன்றாக நனைந்துவிட்டன. ஒவ்வொரு இடி மின்னல் போதும் குதிரை கனைத்துக் கால்களைத் தூக்கி மிரண்டு கொண்டிருந்தது.
கடைசியாக யாருமில்லாத பாழடைந்த மண்டபம் ஒன்று தென்பட்டது. மெதுவாகக் குதிரையை அதன் அருகே ஓட்டிக்கொண்டு சென்றேன். இறங்கிக் குதிரையை இரண்டு தட்டு தட்டினேன். பாவம் எங்கேயாவது ஓடிப் பிழைத்துக் கொள்ளட்டும், நாம் எப்படியாவது இவ்வழி போகும் வழிப்போக்கர்களின் உதவியை நாடிக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். குதிரை நொடிப்பொழுதில் பிய்த்துக்கொண்டு பறந்து சென்றுவிட்டது. எங்கு சென்றது என்று புரியவில்லை!
மண்டபத்தில் நிறையத் தூண்கள் காணப்பட்டன. கடைசியில் தென்பட்ட இரு தூண்களின் நடுவில் கீழே கிடந்த கட்டைகளின் உதவியால் சுத்தம் செய்துவிட்டு மேலாடையைக் கழட்டி உலரப் போட்டுவிட்டுக் கையைத் தலையணையாக்கிப் படுத்ததுதான் தெரியும், எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்பது தெரியாது. ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு உட்கார்ந்தேன்.
மழை நின்றுவிட்டிருந்தது. காற்று, இடி, மின்னல் அடங்கி அமைதி அடைந்திருந்தது. மேகம் இன்னும் இருண்டிருந்ததால் விளக்கு ஏதுமில்லாமல் மண்டபம் கும்மிருட்டில் மூழ்கியிருந்தது. மண்டபத்தின் முன் பகுதியிலிருந்து இருவர் கம்மியக் குரலில் ரகசியமாகப் பேசும் பேச்சுக்குரல் மிகவும் துல்லியமாகக் கேட்டது. அவர்களுக்கு நான் இங்கு படுத்திருப்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடனே அவர்களின் உதவியை நாடலாம் என்று எழ எத்தனித்தேன். அதற்குள் அவர்கள் பேச்சின் ஒரு பகுதி என் காதுகளுக்கு எட்டி என்னைத் திகிலடைய வைத்தது. அதில் கொலை, தீ, விஷம் போன்ற வார்த்தைகள் அடிபட்டதால் என் வயிற்றில் புளியைக் கரைத்துத் தலையைச் சுற்ற வைத்தது. திடுக்கிட்ட நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவர்கள் சம்பாஷணையை கூர்ந்து ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.
“நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டுக்கொள். இன்று புதன் கிழமை. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பகல் நேரத்திற்குள் நாம் திட்டமிட்டபடி சோழநாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இரண்டு காரியங்களை வெற்றிகரமாக முடித்தாக வேண்டும். தஞ்சாவூர் விண்ணகரத்திலிருந்து வடக்கேயுள்ள குறிப்பிட்ட பத்தாயிரம் வேலி நிலங்களில் நன்கு செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள் முற்றி, உயர்ந்து, தலை சாய்ந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுக்குமுன் அவைகளில் ஒரே சமயத்தில் தீ வைக்கப்பட்டு கதிர்கள் கருகி சாம்பலாக்கப்படும். தஞ்சாவூரில் குவிந்துள்ள ஆலயம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். சோழ நாடு குறுகிய காலத்தில் இதை ஈடுகட்ட தவிப்பார்கள். இந்தா, இந்த ஓலையை குணசேகரனிடம் நாளை காலைக்குள் ஒப்படைத்துவிடு. மற்றவைகளை அவன் பார்த்துக்கொள்வான்.
இரண்டாவது உனக்கிடப்பட்டிருக்கும் வெகு முக்கிய வேலை, ஒவ்வொரு வெள்ளியன்றும் ராஜராஜன் பகல்பொழுது ஆலயம் கட்டும் பணியைப் பார்வையிட நேரில் அங்கு வருவான். தஞ்சாவூரில் ஊடுருவியிருக்கும் நமது கூட்டாளிகளின் உதவியைக்கொண்டு அவனை அங்கேயே தீர்த்துக்கட்டவேண்டும். அதற்கு அங்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது சோழர்களுக்குப் பெரிய பேரிடியாக அமையும். நமது உயிரைப் பணயம் வைத்து இதில் இறங்கியுள்ளோம். நமது உயிர் போனாலும் இக்காரியத்தை வெற்றிகரமாய் முடித்தாகவேண்டும். இனி ஒன்றும் பேசவேண்டாம். சோழ நாட்டில் சுவர்களுக்கும் காதுகள் உண்டு. நீ உன் வழியே செல். நான் என் வழி போகிறேன்”.
இத்துடன் சம்பாஷணை முடிவுற்றது. குதிரைக் குளம்புகளின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் நிசப்தம் நிலவியது.
(தொடரும்)