அங்கிள் – அழகியசிங்கர்

Image result for azhagiyasingar navina virutcham

 

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் இடம் பிடித்து அமர்ந்தவுடன், வண்டி கிளம்புவதற்குச் சரியாக இருந்தது.

என் மனநிலை. அது சரியாக இல்லை.

என் பக்கத்திலமர்ந்த அவளிடம் வேறுவிதமாக நடந்து கொண்டேன். நான் யாரோ அவள் யாரோ என்பதுபோல். எனக்கு அவள் மீது கோபம். ஆனால் இரைந்து கூச்சலிட்டுக் கோபத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனக்கு அது பொருந்தாத விஷயம். கோபத்தின் அலையில், சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுடன் பேச விரும்பவில்லை.

இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட உறவும், அதனால் ஏற்பட்ட பந்தமும், அந்தப் பந்தத்தின் விளைவால் ஏற்பட்ட பாசப் பிணைப்பும் இப்போது அவளைப் பார்த்துப் பேச வேண்டாமென்று தடுக்கிறது. முடியுமோ? அவள் சைகை செய்கிறாள். ” ஏன்? ஏன்?”  என்று முணுமுணுக்கிறாள். அப்போது மூர்க்கமாகிப் போய் முறுக்கிக் கொள்கிறேன். கோபத்தை கண்களால் வெளிப்படுத்துகிறேன்.

காப்பி வேண்டும் என்கிறாள். பாராமுகமாக இருக்கிறேன். அவளுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதுபோல் பார்க்கிறாள். இல்லை, இல்லை அவளுக்கும் புரிகிறது. இதெல்லாம் சரியாகிவிடுமென்று தோன்றுகிறது.

“நிம்மதியாக இருப்போம்… நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். அவர்கள் குழந்தையை சரியாகப் பார்த்துக் கொள்வார்கள்.”

“இருக்கட்டும். உனக்கு இரக்கமில்லை. அக்கறை இல்லை…”

“வேறு வழி.”

“ஏன் நீ லீவு போடக்கூடாது”

“லீவே இல்லை… அவர்கள் என்னைவிட நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.”

“உனக்கு எப்படி மனசு வந்தது… நீ பெத்தவள்தானே?”

அவள் பதில் பேசவில்லை. பேசப் பேச என் கோபம் எல்லை மீறி, வார்த்தைகள் கேட்கச் சகிக்காமல் போய்விடும். மௌனமானேன்.

எப்படிக் குழந்தையை விட்டுவிட்டு இருக்க முடிகிறது?

அவளுக்குத்தானே என்னை விட அன்பு அதிகமாக இருக்கவேண்டும். அவள் ஏன் யந்திரமாக இதை ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். புரியவில்லை. பெற்ற குழந்தையிடம் அதிக அன்பு செலுத்துவது பெற்ற தாயா? அல்லது தகப்பனா? என்று பட்டிமன்றம் வைத்தால் தகப்பன்தான்  என்று வாதாடுபவள்போல் தோன்றுகிறது. பட்டிமன்றமும், அதைக் கேட்கிற கும்பலும், மனதில் நிழலாடி சகிக்க முடியாமலிருந்தது. இதெல்லாம் விரக்தி நிலையின் விபத்து. எதுவும் சகிக்க முடியாமல் தோன்றும்.

வண்டியின் வேகத்துடன், எண்ணத்தின் வேகமும் சேர்ந்து கொண்டது. எப்படி அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தொடங்கினேன் அந்த நிமிஷத்தில், என்பதும் ஆச்சரியமாக இருந்தது. என் பக்கத்திலிருந்தாலும், நான் அறியாத ஒருத்தியாகத் தென்பட்டாள். ஒரு அறியாத பெண் பக்கத்தில் அமரும்போது ஏற்படும் கூச்சம் தொற்றிக்கொண்டது. அவள் என்னைப் பார்க்கும்போது யாரோவாக உணர்ந்தேன். கோபத்தின் எல்லையில் அவளுடன் பேச விரும்பவில்லை. அவளும் புரிந்துகொண்டு மௌனமானாள்.

சில மணி நேரத்திற்கு முன், ஷ்யாம் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, உள் அறையிலிருந்து, ரோடைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்ணில்படாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குழந்தையை அங்கே விட்டுவிட்டுச் செல்வது என்பது உறுதியான பிறகு, அந்தக் கணத்தில் பிரிந்து, இன்னும் சில மாதங்கள் கழித்தே பார்க்க வேண்டுமென்ற உணர்வு, தேவையற்ற சங்கடத்தை உண்டாக்கியது. இதை எதிர்த்துச் சொல்லவேண்டுமென்ற எண்ணம் அப்போது எழவில்லை.

அவள் அம்மாவும், அக்காவும் பிடிவாதமாக இருந்தார்கள். ஒரு சில மாதங்களாவது குழந்தையுடன் இருக்கப் போகிறோமென்ற உணர்வு அவள் அக்காவிற்கு சந்தோஷத்தைத் தரலாம். இல்லாதவர்களுக்குத்தான் குழந்தையின் அருமை புரியுமென்பதால், எந்த நிமிஷமும் அவள் அக்காவின் மனத்தை புண்படுத்தக்கூடாது என்றுபட்டது.

அவள் எனக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், மறுப்பைத் தெரிவித்திருப்பேன். அவள் இது மாதிரியான விஷயங்களில் முன்னதாக முடிவெடுத்து விடுவாள். ஒரு வேளை இதைப் பெரிய விஷயமாக நினைத்திருக்கமாட்டாள். நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா? உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயமாக ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். சந்தேகம் இல்லை. பின் ஏன் இந்த விஷயம் குறித்து மனதைப் போட்டுக் குடைய வேண்டும்.

அங்கிருந்து கிளம்பி வரும்போது, ஜன்னல் வழியாக ஷ்யாம் எங்களைப் பாத்து விடக்கூடாது என்பதற்காக, தெரியாமல் வந்தோம். பார்த்தால் ஒரு வேளை ஆர்ப்பாட்டம் செய்யலாம்.

பெங்களூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிறகுதான், ஷியாம் நினைவும், அவள் நடந்து கொண்ட விதமும் என்னுடைய வெளிப்படுத்த முடியாத இயலாமையையும் சேர்ந்து சித்திரவதை செய்தன. அதைப்பற்றி யோசிக்கயோசிக்கப் புரிபடாத ஆத்திரம் என்னுள் மண்டிக் கிடந்தது.

சென்னையை வந்தடைந்த பிறகும், நானும் அவளும் அறிமுகமில்லாதவர்கள்போல் இறங்கினோம். நிழல்போல் அவள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். பேசுவதைத் தவிர்த்தோம். வழக்கம்போல், சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம். பஸ் வருவதும் போவதுமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டிற்குப் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் நெடியும், அங்கு நெளிந்த நோயின் சூழலும் வெறுப்பாய் இருந்தது. வெள்ளை உடையில் தெரிந்த நர்ஸ்களின் முகங்களில் எந்திரத்தனம்.

நாங்கள் எதிர்பார்த்த பஸ் வந்தது. அவள் மீது கோபம் இருந்தாலும், பஸ்ஸில் ஏறிவிட்டாளா என்று பார்க்கத் தோன்றியது. என் கோபத்திற்கு எதிர்க் கோபமாய் “உன்னுடன் வரமாட்டேன்”  என்று போய்விடுவாளோ என்றும் பட்டது. பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். உற்சாகமில்லாமலிருந்த மனநிலை. பஸ்ஸைவிட்டு இறங்கியபிறகு ஒன்றைக் கவனித்தேன். பஸ்ஸில் என் பர்ஸ் பறி போயிருந்ததை. கோபத்திற்கான பலன் கிடைத்துவிட்டதாக நினைத்தேன். கவனக்குறைவால், கோபத்தில் உச்ச நிலையில், உணர்ச்சி வேகத்தில் கொதி நிலையில் என்னுள் நடப்பது தெரியாமல் போய்விட்டது.

சில தினங்களுக்குப் பிறகு, என்னிடமிருந்த கோபம் நழுவிவிட்டது. நானும் அவளும் சகஜமாகப் பழக ஆரம்பித்தோம். தேவையில்லாமல் எனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கோபத்தை நினைத்து, வெட்கமாக இருந்தது. கோபம் போனபிறகு, அவள் என்னிடம் திரும்பி வந்து விட்டாளென்று தோன்றியது. வெட்கமில்லாமல் அவளுடன் பழகிய தருணங்கள் ஞாபகத்திற்கு வந்தது. கூடுதலான சந்தோஷத்தை தரத் தவறவில்லை. குழந்தை எல்லாம் மறந்து  அவளுடன் ஒன்றிவிட்டதாகப்பட்டது. நாட்கள் எப்படி ஓடிற்று என்பது தெரியவில்லை.

சில மாதங்கள் கழித்து நானும், அவளும், குழந்தையையும், அவள் அம்மாவையும் அழைத்து வருவதற்காகத் திரும்பவும் பெங்களூர் சென்றோம். இப்போது செல்லும்போது, கரைகடந்த உற்சாகத்துடன் இருந்தேன். வண்டியில் என் பக்கத்தில் அவள் வீற்றிருப்பது பெருமிதமாக இருந்தது. அவள் ஏதோ ஒரு வஸ்து போலவும், அந்த வஸ்து என்னிடம்  ஒட்டிக்கொண்டதுபோலவும்பட்டது. அவள் தூங்கும்போது உரிமையுடன் என் தோளில்  சாய்ந்து படுத்தாள். அவளுக்கு அப்படித் தூங்குவது பிடிக்கும். எனக்கும்தான்.

அவள் அக்கா வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஷ்யாமைத் தூக்கிக்கொண்டு கொண்டாடினாள். பையனை வினோதமாகப் பார்த்தேன். அவன் நிறத்தில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இளைத்துவிட்டதுபோல் கண்களில் தென்பட்டான். இதைத் தெரிவித்தவுடன் சில தினங்களுக்கு முன் சுரம் வந்து அவன் அவதிப்பட்டதாகச் சொன்னார்கள். குழந்தையை கொஞ்சுவதற்குக் கைகளை நீட்டினேன், வருவதற்குத் தயக்கம் காட்டினான்.

அம்மாவைத் தெரிந்த அளவிற்கு என்னைத் தெரியவில்லை. விளையாட்டுக் காட்டினேன். அதை ரசித்தாலும் என்னிடம் வரவில்லை. அல்லது வலுக்கட்டாயமாக அவனை அழைத்துக் கொஞ்சினாலும், வர விரும்பவில்லை என்பதோடல்லாமல் சிணுங்கவும் தொடங்கினான். பக்கத்தில் நின்ற அவளை கோபத்துடன் பார்த்தேன். அவள் என்னை சமாதானப்படுத்தினாள்.

” பார்த்து ரொம்பநாள் ஆயிற்றே. அடையாளம் தெரியலை”  என்றாள் அவள் அம்மா. குழந்தையின் இந்தச் செய்கை அவர்களிடம் சிரிப்பை உண்டாக்கியிருக்கும். எனக்கோ அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. அவ்வாறு செய்யவில்லை. செய்திருந்தால், அவர்களை அவமானப்படுத்தியிருப்பதைப்போல் தோன்றியிருக்கும். மேலும், சில மாதங்களாக அவர்கள் என் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் வேறு வழியில்லாமல், குழந்தையை அங்கு விட்டிருக்கிறேன். இத்தருணத்தில், கோபத்தை வெளிப்படையாகக் காட்டினால், அது மரியாதைக்குரிய ஒன்றாகத் தோன்றாது.

ஷ்யாம் என் பக்கத்தில் வருவதற்கே வெட்கப்பட்டவன் போலிருந்தான். அவர்களோ அவனிடம் என்னைக் காட்டிப் பக்கத்தில் போகும்படி சொன்னார்கள். இப்படிச் சொல்வது கூட ஏதோ விளையாடுவதுபோல் தோன்றியது. மறைமுகமாகக்  கிண்டல் செய்வது போலிருந்தது. அதனால் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவது போலிருந்தது. அவர்களின் வற்புறுத்தல் தாங்காமல், அவன் என்னிடம் வந்தான். தயங்கிக் தயங்கி நின்றான்.

பிறகு, மெதுவாக என்னைப் பார்த்து ‘ ” “அங்கிள்”  என்று கூப்பிட்டான்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.