இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல…    – ஈஸ்வர் (திடீர் த்ரில்லர்)

Related image

இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல…

ஈஸ்வர்.

திருநெல்வேலி சிவசங்கரன் சுப்பிரமணியன் என்ற மணி சாப்-, மாதுங்காவின்அந்தப் பழைய பல மாடிக் குடியிருப்பின் முன்,தன்னுடைய 89-ம் வருட பத்மினி-பிரீமியரை நிறுத்தி, கார் கதவைத் திறந்தபொழுது மணி எட்டு –பத்து.  கண்களில்பட்ட பெயர் , மங்கிய வெளிர் நீல மகாலட்சுமி  அபார்ட்மென்ட்ஸ்.

அங்கங்கே கவலையான முகங்கள்,  இரண்டாவது மாடி பால்கனியைப் பார்த்தவாறு குசுகுசுத்துக் கொண்டிருந்தன.  மூன்று போலீஸ் கட்டடத்தைப் பாதுகாத்துக்கொண்டிருந்தது.  உள்ளே வர முயன்று  கொண்டிருந்தவர்களை மராத்தியிலும், ஹிந்தியிலும் மிரட்டுவதிலும், விரட்டுவதிலும் மும்முரமாக இருந்தது.

பயிற்சி பெற்ற போலீஸ் உடம்பின் மிடுக்கு இருந்தாலும், மணியின் முகத்தில்  அதை மீறி சற்றே நளினமான நாகரிகம் இருந்தது.  இவனிடம் ஏதோ இருக்கிறது என்கிற மாதிரி கூர்மைமிகு கண்கள்.  வாயிலில் நிற்கும்  போலீஸ் சல்யூட் வைத்தது.

“ஊப்பர்  சார்… .. ஃப்ளாட் நம்பர் சாத்”.

மணி அவசரப்படவில்லை. நிதானமாக அந்த வீதியின் நீள, அகலங்களில் அவன் பார்வை வியாபித்தது. எதிர் திசை அபார்ட்மென்டையும் ஒரு அலசல்.

மும்பையில் இது இந்த மாதத்தின் மூன்றாவது கொலை. கடந்த இரண்டு மாதங்களில் நடந்த, ஐந்தாவது அமைதியான கொலை.

இந்த முறை ஏதோ ஒரு பாலக்காட்டுப் பாட்டி.  பிள்ளை , துபாயில். பல வருடங்களுக்கு முன்னர் பம்பாயில் குடியேற்றம். இப்பொழுது, மும்பையிலேயே கடைசி மூச்சை, கஷ்டப்பட்டு விட்டிருக்கிறாள். தனிமை வாசம்.     கொலையின் நோக்கம்…?

உடமைகள் ஏதேனும் காணாமல் போயிருக்கின்றனவா? சொல்வதற்குக்கூட ஆட்கள் யாரும் கிடையாது.  துபாய் பையன் வந்தபிறகே தெரியும்.

வயர்லெஸ்ஸில்  மணிக்கு முன்கூட்டியே தகவல் வந்துவிட்டது. கடந்த முறைகள்போல், அவன் இந்த முறை கடைசியாகக் கூப்பிடப்படவில்லை. முன்கூட்டியே தகவல் வந்தது.  முதலில் அவன் அங்கு வந்துவிடவேண்டும். மேலிடத்து விருப்பம்.

Related image

டி எஸ் பியும்,  மாதுங்கா இன்ஸ்பெக்டரும் ஏற்கெனவே அங்கு இருந்தார்கள்.  டி எஸ் பி,  பூனாக்காரன்.  இளம் வயதை இலேசாகக் கடந்துகொண்டு இருக்கின்றவன். விவரமானவன்.  சிவசேனாவின் செல்லப் பிள்ளை என்று , சில முன்னாள் போலீஸ் வட்டாரங்கள் , காங்கிரஸ் காதில் கிசுகிசுக்கும் அளவுக்கு, பத்திரிகை பிரபலம் ஆனவன்.  ஆனால் கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் , அது இது என்று எதிலும் மாட்டிக்கொள்ளாதவன்.   டி எஸ் பி . மல்ஹோத்ரா ராம்குமார்  ஆங்கிலத்தை அழகாகப் பேசுவான். அவனுடைய உயரம், மிடுக்கு, நிறம் ஆங்கில உச்சரிப்பு இவற்றிற்காகவே அவனுக்கு ஏராளமான விசிறிகள் உண்டு.

மணி -சாப்புடன் சேர்ந்து அவனும் செயல்படவேண்டும்  என்ற  மகாராஷ்டிரா அரசின் ஆணைதான் இந்த முறை , அவனுக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது.  மணியின் மீது அவனுக்குப் பொறாமையோ , கசப்போ கிடையாது. இது மணிக்கும் தெரியும்.

ஏழாம் எண் ஃபிளாட். வாசலிலேயே மல்ஹோத்ரா நின்று கொண்டிருந்தான் .

. “ வழக்கம்போல்தான். உயிரு போயி இருபது மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கலாம்.  டாக்டர் உள்ளே இருக்காரு.”

“ மரணத்துக்குக் காரணம்?”

“அதுவும் வழக்கம்போலத்தான்.விழா ஊசிதான். சயனைட்  டெத்.. பேட் ஆ க்ருயல் மர்டர்.”

“பையனுக்கு சொல்லியாச்சா?”

“ம். . துபாயில சார்டட் அக்கௌண்டண்டா இருக்கான். பெரிய   எண்ணைக் கிணறு கம்பெனி. .சொந்தக்கார ஷேக்குக்குக் கிட்டத்தட்டக் கூடப் பொறந்ததவன்மாதிரி ஆயிட்டானாம். நாளைக்கே அவனை ஏதாவது ஒரு ஏர்லைன்ல போட்டு,இந்தியாவுக்கு அனுப்பறது இனிமே அந்த ஷேக்கோட கடமையாம்.

மல்ஹோத்ரா இலேசாகப் புன்னகைத்தவாறே சொல்கிறான். அழகாகவும்,  புன்னகைத்தால் மந்தஹாசமாகவும் இருக்கிறான்.

மும்பைக்கு என்ன ஆயிற்று? ஒரேயடியாக.  தாத்தாக்களும், பாட்டிகளுமாக, பரலோகம்  போய்க்கொண்டு இருக்கிறார்கள். தப்பு, தப்பு. அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!  அதுவும் , அதிக வலியே இல்லாமல்.

முதலில், ஒரு பஞ்சாப் சிங்க்.  இடம், முலண்ட்.

இரண்டாவது, ஒரு மராட்டியப் பாட்டி. தாராவி பக்கம்.

இவை, போன மாதம்.

மூன்றாவது, ஒரு பார்சிப் பெண்மணி. இதே மாதுங்காவில்.

நான்காவது, ஒரு கன்னடக் கிழவர். மீண்டும், முலண்ட்.

ஐந்தாவது, இதோ, ஒரு பாலக்காட்டுப் பாட்டி.

இடம்.  இதே மாதுங்காவில்தான்.

ஏதோ, எங்கோ, ஒரு லிங்க் இருக்கவேண்டும். எங்கே, என்ன என்பதுதான் புரியவில்லை.

(தொடரும்)

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.