எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் )

Related image

சூரிய தேவனுக்கு ஸந்த்யாவைத் தனியே சந்தித்ததில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. மற்றவர்கள் யாரும் வருவதற்குமுன் அவளது தளிர் மேனியை இறுக்க  அணைத்து அவளது சிவந்த கன்னத்தில் தன் இதழைப் பதிக்க விரும்பினான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

அதைச் செயலாற்றப் பாய்ந்து சென்ற அவன் கரங்களை ஒரு  கண்ணாடித் திரை தடுத்தது. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரையை அமைத்தது யார்? அவள் தந்தை விஸ்வகர்மாவா? ஒருவேளை திரைக்கு அப்புறம் இருப்பது  ஸந்த்யாவா அல்லது அவளது பிம்பமா?

சூரியதேவனின் தடுமாற்றத்தையும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட கோபத்தையும் பார்த்த  ஸந்த்யாவால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை.

“ பிரபு! நம்மைப் பிரிப்பது திரை மட்டுமல்ல. எனது படைப்பின் ரகசியமும்கூட. நான் உங்களுக்கென்றே பிறந்தவள்தான். ஆனால் தங்களின் வெப்பப் பார்வையைக்கூடத் தாங்க முடியாத அளவிற்கு என்னை மென்மையாகப் படைத்துவிட்டார் பிரம்மதேவர். என் தந்தையாலும் அதை மாற்ற முடியவில்லை.”

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. சூரியதேவன் துடித்துப் போனான்.

“பிரபு ! நீங்களும் நானும் சங்கமித்த அந்தச் சில கணங்களில் நான் நெருப்பில் இட்ட  பொன்போல உருக ஆரம்பித்துவிட்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தங்கள் திருப்பார்வைபட்டு உடனே மறையும் பனித்துளியாக நான் இருந்தால் எனக்கு அதுவே போதும்.”

“இல்லை, ஸந்த்யா இல்லை! உன்னுடன் என்றென்றும் வாழத்தான் விரும்புகிறேனே அன்றி உன்னை உருக்கி அழிக்க விரும்பவில்லை. ஆனால் உன்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே நான் என்னையே மறந்தவனாகி விட்டேன். நீ இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறி விடுவேன். இதற்கு ஒரு வழி இல்லாமல் போகாது. ”

“ இருக்கிறது சூரியதேவா!”  என்று கூறிக் கொண்டே விஸ்வகர்மா வந்தார்.

WhatsApp Image 2016-12-26 at 4.59.39 PM

“ என்ன வழி, சொல்லுங்கள் “ என்றான் சூரியதேவன் ஆவலுடன்.

“ஸந்த்யா தங்களை மணாளனாக அடைய உண்மையிலேயே பாக்கியம் செய்தவள். ஆனால் நீங்கள் அவளை அடைய வேண்டுமானால் உங்கள் உடலின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.”

“அது எப்படி முடியும் விஸ்வகர்மா அவர்களே?”

“ நான் கைலாசத்தில் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற காந்தப் படுக்கை இருக்கிறது. அதில் தங்களுக்குச் சந்திரனைக் கொண்டு சந்திர காந்தச்  சாணை பிடிக்கவேண்டும். அதைச் சூரிய கிரகணம் என்றும் சொல்லலாம்.  அது சில நாழிகைகள்தான் பீடிக்கும். அப்படிச் செய்யும்போது உங்களின் பிரதிபலிப்பு, உக்கிரம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சில நொடிகள் நீங்கள் முற்றிலும் இருளடைந்து  மறைந்ததுபோன்ற உணர்வு உண்டாகும். அந்த சிகிச்சை முடியும்போது உங்களிடமிருந்து ஒரு வைர மோதிரம் தோன்றும். அதை ஸந்த்யா அணிந்துகொண்டாள் என்றால் அதன் பின் உங்கள் உக்கிரம் அவளைப் பாதிக்காது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. வருடா வருடம் தாங்கள் இந்த சாணை பிடித்துக் கொண்டால்தான் அவளுடன்  நீங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியும். இது தங்களால் முடியக்கூடிய காரியமா?” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டார் விஸ்வகர்மா.

Related image

சூரியதேவன் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.    

ஸந்த்யாவின் கண்ணீர் ததும்பும் விழிகள் அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற துடிப்பில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.  

(தொடரும்)

இரண்டாம் பகுதி

எமியின் பாந்தமான அழகைப்போலவே அவளுடைய குரலும் அந்த இலக்கியக் கூட்டத்தில் உள்ள மக்களை வசீகரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எவ்வளவு புண்ணியம் செய்தவள் எமி என்கிற யமுனை என்பது யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் சமயத்தில் அவரைக் குழந்தையாகத் தன் மடியில் தாலாட்டப்போகும் பெருமை பெறப்போகிறவள்.

Related image

கிருஷ்ணன் அவதரித்த உடனே அவரைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவரது தந்தை யமுனை ஆற்றைக் கடக்க வருவார். அப்போது அவருக்கு வழிவிட்டு  அந்தக் குழந்தைக் கிருஷ்ணனின் பாதங்கள் கூடைக்கு வெளியே இலேசாகத் தெரியும்போது தன் நீரால் வருடி பாதபூஜை செய்யும் பேற்றைப் பெறப்போகிறவள். அதனால் கங்கையிலும் அதிக புனிதத்தைப் பெறப்போகிற புண்ணிய நதியல்லவா அவள்?

 “ உங்கள் அனைவரையும் இங்கு இந்த நல்ல நாளில் சந்தித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல பொழுதை எனக்கு அளித்த என் அன்பு அண்ணனுக்கு நன்றி சொல்வதா, அல்லது சிறப்பாகப் பேசி அனைவரையும் அன்பினில் தோயச்சொன்ன  ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி சொல்வதா, அல்லது  நரகத்தில் வாடும் ஜீவன்களுக்காக வாதாடி என்னை அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த அன்பருக்கு நன்றி சொல்வதா என்று தெரியாமல் அனைவருக்கும் ஒருசேர நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சொர்க்கபுரிக்கு அழைத்து வந்த என் சகோதரன் நாளை நரகபுரிக்கு அழைத்துச்செல்ல உத்தேசித்திருக்கிறார். என் அண்ணனுடன் செல்லும்போது எனக்கு நரகமும் சொர்க்கமாகவே தெரியும்.

இருந்தாலும் உண்மையான நரகம் என்பது  நாம் அன்பு கொண்ட உள்ளத்திலிருந்து பிரிந்து வாழ்வதுதான்.  உங்கள் புரட்சிக்  கவிஞன் கேட்கவில்லையா?  “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ?  என்று.

அந்த வகையில் நான் சிறு வயதிலேயே நரகத்தை அனுபவித்திருக்கிறேன்.

IMG_1072

 என்னுடன் இணைந்தே பிறந்த என் அண்ணன்மீது எனக்கு இருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. நாங்கள் அன்னை என்று நினைத்த எங்கள் சிற்றன்னை எங்களைக் கொடுமை செய்தபோது எனக்கு ஆறுதல் என் அண்ணன்தான். நான் பட்ட சித்திரவதைகளைக் கண்டு கோபத்தில் ஆழ்ந்த என் அண்ணன் சிற்றன்னையைக் காலால் உதைக்கும் அளவிற்குப்போனான். அதனால் அவன் கால்களைக் கொதிக்கும் நெருப்பில் போட்டது மட்டுமல்லாமல் அவனை எங்கோ காட்டிலும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் எங்கள் சிற்றன்னை. அவனைப் பிரிந்து நான் அழுத அழுகை இன்றைக்கு நினைத்தாலும்  என்னை வாட்டுகிறது.  

( இதைப் பற்றிய விவரமான கதைக்களம் எமபுரிப்பட்டணத்தின் முதல் பாகத்தில் அதற்கான காலம் வரும் போது விவரிக்கப்படும்)

அதுதான் நரக வேதனை என்பதனை உணர்ந்தேன். அதனால் நரகத்தில் துன்பப்படும் ஜீவன்களின்  வேதனைகளுக்கு ஒரு வடிகால் தேட நான் முயல்வேன் என்று இப்போது உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுதான் என்  தந்தையின் கட்டளையும் கூட. 

உங்கள் அன்பிற்கு நன்றி. வணக்கம்.”

(தொடரும்)

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.