PolPele Legend as information science
பீலி தீ அரசி – போலி பனி அரசி
ஹவாய்த் தீவுகளில் நம் இந்தியப் புராணக் கதைகளைப்போல பல கதைகள் உலாவுகின்றன.
பனிக்கும் நெருப்பிற்கும் நடைபெற்ற யுத்தம் புராணக் கதையாகத் தோன்றும். ஆனால் அதுவே நிலவியல் தத்துவமாகவும் விரியும்.
‘போலி’ வானில் உலாவும் தேவதை. அழகெல்லாம் உருவெடுத்த தங்கப் பதுமை அவள். வெண்பனிக்கு அரசி. அவளின் கண் அசைந்தால் பனி மழை பொழியும்.
அவள் தோழிகள் மூன்று பேர். ஒருத்தி மூடுபனிக்கு அதிபதி. இன்னொருத்தி நீருற்றுக்கு அதிபதி. மற்றொருத்தி சுனை நீருக்கு அதிபதி.
அவர்கள் நான்கு பேரும் தங்கள் இருப்பிடமான மௌனகியா என்ற உலகத்திலேயே உயர்ந்த மலையில் ஆடிப்பாடித் திரிந்து கொண்டிருந்தனர்.
( மன்னிக்கவும் உலகில் உயர்ந்த மலை எவரெஸ்ட் என்பதும் சரி. மௌனகியா என்பதும் சரி. எப்படி என்கிறீர்களா? .கடல் மட்டத்துக்கு மேல் என்று பார்த்தால் எவரெஸ்ட் 28029 அடி. மௌன கியா 13796 அடி தான் இருக்கிறது. ஆனால் கடலுக்கு அடியில் 19700 அடியில்தான் மௌனகியாவின் அடிப்பாகம் இருக்கிறது. ஆக அதன் மொத்த உயரம் 39496 அடி. )
அப்போது மௌனகியா மலை உச்சியிலிருந்து கீழே கடலுக்குச் சறுக்கிக்கொண்டு வரலாம். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் சறுக்குத் தோணி இதற்கென்றே தயார் செய்யப்பட்டது. மலைப்பாதையில் சிறு கற்களுக்கு மேலே அந்தக் கட்டைத் தோணியில் சறுக்கி வந்து கீழே இருக்கும் கடலில் தொப்பென்று குதிப்பது மௌனகியா தேவதைகளுக்குப் பிடித்தமான வீர விளையாட்டு.
இந்தச் சறுக்கல் விளையாட்டில் எப்பொழுதும் வெற்றி பெறுபவள் பனியரசி போலிதான்.
ஒருமுறை அப்படி அந்த நான்கு அழகிகளும் சறுக்கி விளையாடும்போது செக்கச்செவேல் என்ற சிவப்புப் பெண் ஒருத்தி தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டாள்.
அவள் வேறு யாருமல்ல. மாறுவேடத்தில் வந்த பீலி என்ற எரிமலை அரசிதான். அவள் யார் என்று கேட்டதற்குப் பறக்கும் தீ என்று சொன்னாள். அவள் ஒரு இடத்துக்கு வந்துவிட்டாள் என்றால் அந்த இடத்தின் தன்மையே மாறிவிடும்.
இதனை அறியாத போலியும் அவளது மற்ற தோழிகளும் அவளையும் சறுக்கல் விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். பீலி வெகு லாவகமாக தோணியில் இறங்கிப் போவதைப் பார்த்த அனைவரும் அவளது வேகத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவள் சென்ற வேகத்தில் அவளது தோணியிலிருந்து புகை வந்தது.
இதைப் பார்த்தவுடன் போலி, தனக்குச் சமமாக ஒருத்தியைக் கண்டு பிடித்ததில் மகிழ்ச்சி கொண்டு அவளுடன் சறுக்கல் போட்டியில் கலந்து கொள்ளத் தீர்மானித்தாள்.
கடலில் விளையாடிக் கொண்டிருக்கும் இரு பெண்களை நீதிபதிகளாக நியமித்து அழகுத் தேவதைகள் ஐவரும் சறுக்கல் போட்டிக்குத் தயாரானார்கள்.
முதலில் போலி சென்றாள். பனியில் வழுக்கிச்செல்லும் பறவை போல அந்தப் பனி அரசி பறந்து சென்றாள். அடுத்துச் சென்றது பீலி. நெருப்புப் பறவைபோல அவளும் சீறிக் கொண்டு சென்றாள். மற்றவர்களும் சிறப்பான முறையில் சறுக்கிச் சென்றார்கள்.
நீதிபதிப் பெண்கள் நன்றாக ஆராய்ந்து வெற்றி பெற்றது போலி தான் என்று கூறினார்கள்.
அவ்வளவு தான். பீலிக்கு வந்ததே கோபம். தானே வெற்றி பெற்றதாக அறிவித்துத் தன் காலால் தரையை வேகமாக உதைத்தாள். அந்தப் பிரதேசமே நடுங்கியது. அது நில நடுக்கம் என்பதை போலி உணர்ந்தாள்.
அப்போதுதான் போலிக்குத் தெரிந்தது, வந்திருப்பது எரிமலை அரசி பீலி என்று. இதுநாள்வரை அவள் அங்கு வராததால் அந்தப் பகுதி செழுமையாக இருந்தது. தோல்வி பெற்றுவிட்டோம் என்ற ஆத்திரத்தில் பீலி ,போலியைப் பார்த்து ‘உன் மௌன கியா மலையை அழித்தே தீருவேன்’ என்று மலை உச்சியை நோக்கிப் பறந்தாள். போலியும் மற்ற தோழிகளும் மலையைக் காப்பாற்ற பீலிக்கு முன்னாள் பறந்தார்கள். பீலி தன் எரிமலைக் குழம்பைக் கக்கிக்கொண்டே அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.
முதலில் மலை உச்சியை அடைந்த போலி தன் ஆணைக்குட்பட்ட பனியைக் கொண்டு மலை முகட்டை மூடினாள். மேலும் பனியைத் தொடர்ந்து பெய்யச் செய்தாள். ஆனால் பீலி மற்ற தேவதைகளின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தீயின் நாக்குகளால் நிரப்பினாள்.
மௌன கியாவின் மற்ற சிகரங்களிலிருந்து எரிமலைக் குழம்பை ஓடவிட்டுக் கடல் வரை தீயைப் பரவ விட்டாள். அவர்கள் சறுக்காட்டம் ஆடிய அழகிய பகுதிகளில் எரிமலைக் குழம்பைக் கொட்டி அந்தப் பாதையையே அழித்துவிட்டாள்.
போலியும் அவளது தோழிகளும் பனியை மேலும் மேலும் கொட்டவைத்து ஒரு பனிப்போர்வையை உருவாக்கினர். அந்த சிகரம் முற்றிலும் பனிப்பாறையாக மாறியது.
அதனால் பீலியின் எரிமலைக் குழம்பு பனிப்பாறையில் கொட்டியதும் அந்த நெருப்புக் கோளம் கறுப்புப் பாறையாக மாறியது. அதனால் பனிப்பாறையை உருக்க முடியவில்லை. பீலி கடும் முயற்சி செய்து இன்னும் அதிகமாகக் தீக் குழம்பை வாரிக் கொட்டிப் பனியை உருக்க முயன்றாள்.
ஆனால் போலியின் பனிப்பாறை உருண்டு வந்து பீலியின் தீயின் வாய்களை மூடியது. பீலியால் எரிமலைக் குழம்பை உற்பத்தி செய்யவே முடியவில்லை. தான் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.
மௌனகியாவிலிருந்து பீலி ஓடிப் போனாள். மௌனகியா பகுதிகளில் எரிமலைக் குழம்பு அதற்குப் பின் எழவே இல்லை.
நிலவியல் படியும், எரிமலை லாவாவை பனிப்பாறைகள் அழித்த இடம்தான் மௌன கியா.
பீலி மௌன கியாயை விட்டுப் போனாலும் மற்ற எல்லா பகுதிகளிலும் அவளை எரிமலையின் அதிபதியாகப் போற்றி வணங்கித் துதிப்பவர் ஏராளம்.