வைதீஸ்வரன் கவிதைகள்
கவிஞர் வைதீஸ்வரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி, அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு – மனக்குருவி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தொகுத்தவர் லதா ராமகிருஷ்ணன்.
விருட்சமும், டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையமும் சேர்ந்து, “வைதீஸ்வரன் கவிதைகள் வாசிப்பு” என்ற நிகழ்ச்சியை ஒரு புதன் கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனக்குருவியிலிருந்து கவிதைகள் வாசிப்பது என்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர் – கிட்டத்தட்ட இருபது பேர் வந்திருந்தனர் – தனக்குப் பிடித்த கவிதைகளை, புத்தகத்திலிருந்து வாசித்து, சிறிது சிலாகித்தும் பேசினர்.
கவிஞர் வைதீஸ்வரன் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே முடிந்தது.
கவிதை என்பது “ஒருவர் தன் எண்ணத்தையோ, அனுபவத்தையோ கற்பனை நயத்துடன், உணர்ச்சி பூர்வமாக (உரை நடை அல்லாத) சொல்லமைப்பில், சுருக்கமாகவும், செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்” – என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
மரபுக் கவிதைகள் பள்ளிக்கூட நாட்களில், செய்யுள் வடிவில், மனப்பாடப் பகுதிகளாக, சிறிது யாப்பிலக்கணம் கற்றதோடு போய்விட்டன. புதுக்கவிதைகள், ஹைக்கூ போன்றவை இன்று விசேஷ கவனம் பெறுகின்றன. அந்த வகையில் வைதீஸ்வரன் கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் பெரிய கவன ஈர்ப்பைப் பெறுகின்றன.
அவரது ‘உதய நிழல்’, ‘நகரச் சுவர்கள்’, ‘விரல் மீட்டிய மழை’, மனக்குருவி’ போன்ற எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலும் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகள் மிக நுட்பமாக, ஒருவித லயத்துடன் உலா வந்துகொண்டிருக்கும்!
வைதீஸ்வரன் ஒரு நல்ல ஓவியரும் கூட – அவரது ஓவியங்களில் கவிதைகளையும், கவிதைகளில் ஓவியங்களையும் வெளிப்படுத்துவது அவருக்கு மிகவும் லகுவாகக் கைவந்த கலை!
’பிணைப்புகள்’ என்ற கவிதையில் கிடைக்கும் காட்சியைப் பார்ப்போம் –
வானத்தில்
என்றோ கட்டறுந்துபோன
என் காற்றாடியை மறந்து
எத்தனையோ நாளாச்சு.
இன்று வரை தெரியவில்லை,
அது
என் வீட்டுக் கூரையிலேயே
வாலாட்டிக் கிடக்குதென்று.
கிராமப் புறங்களில் காய்ந்த கூரைகளின் மேல் சிக்கி, காற்றில் சிறகடித்துக் கொண்டிருக்கும் சாயம் போன காற்றாடிகளைப் பார்த்திருப்போருக்கு இது நிழற்படமாய் மனதில் விரியும்!
எறும்பு
கடிக்காதபோது
ஏன் கொன்றாய்?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்புதான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?
இதில் அவர் மிகத் தெளிவாய் சொல்ல வந்த செய்தியை முகத்தில் அறைவதைப் போல் சொல்லிச் செல்கிறார்!
கட்டுரை ஒன்றில் சுஜாதா, நம் தமிழ்க் கவிதைகளில் மிகக் குறைவாகக் காணப்படும் பாலியல் சார்ந்த கவிதைகளைப் பற்றிப் பேசியிருப்பார்! வைதீஸ்வரன் கவிதைகளில் ஆண்-பெண் உறவு நிலைகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. மாதிரிக்கு ஒன்று:
‘நான் சந்தனம்// பூசிக்கொள்// மணம் பெறுவாய்
நான் மலர்// சூடிக்கொள்// தேன் பெறுவாய்
நான் நதி// எனக்குள் குதி// மீனாவாய்
நான் காற்று// உறிஞ்சிக்கொள்// உயிர் பெறுவாய்
நான் உயிர்// கூடிக்கொள்// உடம்பாவாய்’ (கூடல் 2).
’ரஸனை’ – என்ற கவிதை நயமாய்க் கூறும் முரணை ரஸிக்கலாம்!
அவள் சமையல் முடிப்பதற்குள்
இவன்
கவிதை படைத்திருந்தான்.
சாப்பிட்டு எழுந்தவன்
ஏப்பத்தால் ‘பேஷ்’ என்றான்.
இரவின் இணக்கத்தால்
இவன் கவிதை கேட்க மசிந்தவளுக்கு
கொட்டாவியைக் குறைக்க முடியவில்லை,
கூடத்து விளக்கை அணைத்தாள்.
இசைஞானம் பெற்றவர், நாடகக் கலைஞர், ஓவியர், எழுத்தாளர் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள்) எனப் பன்முகத் தன்மை கொண்ட நல்ல மனிதர் வைதீஸ்வரன்!
இவரது ’திசைகாட்டி’ நூல் ஒரு கதம்ப மாலை – கவிதைகள், கட்டுரைகள், வாழ்வின் சம்பவங்கள் சிறு கதைகளாய் – இன்னும் பல்சுவை இலக்கியக் கலவை!
“நினைப்பைப் பொறுத்தது
நீ தேர்ந்துகொள்ளும் உலகம்’
என்கிறார் வைதீஸ்வரன்.
உண்மைதான் – நல்லதோர் உலகைத் தேர்ந்துகொள்ள வைதீஸ்வரன் படைப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம்!
‘மனக்குருவி’ – வைதீஸ்வரன் கவிதைகளை எல்லோரும் படிக்கலாம் – எளிமையோடும், சுவையுடனும் இருக்கின்றன – எனக்கே புரிகிறதே!!