களஞ்சியத்துக்கு ,
அப்பா எழுதறது
இப்பவும் எனக்குக் கண் பார்வை மங்கலாகத் தெரிகிறது, காதும் சரியாகக் கேட்கமாட்டேங்கறது. உடம்பு ரொம்ப முடியலை. உங்க ஆத்தா இருந்தவரை ஏதோ ஆக்கிப் போட்டா. நாலு வார்த்தை பேசினா இரண்டு சண்டை போட்டாலும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆளிருந்தது. இப்ப வயல் வரப்பு கயணி பாத்துக்க ஆளில்லை, விவசாயமும் நின்னுபோச்சு. யார்யாரோ கூறு போட்டுகிட்டாங்க , எல்லாம் கைமீறிப் போச்சு.
ஐந்து கறவை மாடு, மூணு கண்ணு குட்டி பராமரிக்க முடியல, ஐந்திலே இரண்டு கறவை மாடு களவு போச்சு. மீதி மாடு கண்ணு எல்லாம் நம்ம பால்க்காரக் கோனாருக்கு வித்துட்டேன். ரூபா பத்து வந்தது. அந்த மாடு கட்டற குடிசைலதான் நான் இப்ப இருக்கேன். கயித்துக் கட்டிலும் பாதி ஒடஞ்சு போச்சு.
வருமானம் நின்னு போனதாலே நம்ம கல்லு வீட்டை ரூபாய் நாநுறுக்குப் பொட்டிக்கடை நாடாருக்கு வாடகைக்கு விட்டுவிட்டேன். அதுதான் மாச வருமானம்.. நாடார் வீட்டம்மா தினமும் கஞ்சியோ கூழோ கொடுப்பாங்க, மவராசி, அதுதான் சாப்பாடு.
நீ ஆத்தா காரியம் முடித்து போகும்போது வரதன் தெரு சேட்டுகிட்டே கடன் வாங்கிப் போனயாம். சேட்டு பீரோ கட்டில் எல்லாம் எடுத்து போயிட்டான். பீரோலே நம்ம நிலப்பத்திரம் எல்லாம் இருக்கு, பாத்துக்க.
நீயும் அப்பப்ப இங்க வந்து போ, எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். பணம் கிணம் ஒண்ணும் கொடுக்கவேண்டாம், வந்து பாத்துட்டு போ.
நாலு மாசம் முன்னே உன்தம்பி மட்டும் வந்து போனான், என் கையிலே ரூபா ஐயாயிரம் கொடுத்துப் போனது ரொம்ப உதவியா இருந்தது. ஏதோ உயிரைப் பிடிச்சுக்கின்னு ஏன் இன்னும் இருக்கேன் தெரியலை.
உன்தங்கை மவராசி மீரா, மாப்பிள்ளை, அவங்க பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. யாரும் ஒரு எட்டு வந்து போகல. அது உலகம் தெரியாத பொண்ணு, நீதான் பெரியவனா இருந்து பாத்துக்கணும். உனக்கு தம்பி கூட சண்டையாமே, எதுக்குப்பா…… சின்னவன் தானே விட்டுக்கொடுத்து போ தம்பி.
இதையும் நாடார் தம்பிட்டச் சொல்லித்தான் எழுதறேன். அவர்தான் எல்லா உதவியும் செய்யராறு, யாரு பெத்த பிள்ளையோ.
ஒரு எட்டு பாத்துப் போடா. உன் பிள்ளை குட்டி, மருமவளை பாக்கணும்போல இருக்கு, இந்த குருட்டுக் கிழவனுக்கு. எல்லாத்தையும் கேட்டேன் சொல்லுடா.
இப்படிக்கு
வடிவேலு (கிறுக்கிய கையெழுத்து)
முப்பது வருடம் முன்னே வந்த கடுதாசி.
அப்பா இறந்த செய்தி வந்தபோதுகூட அண்ணன் தம்பி தங்கை யாரும் போகலை. அப்போ நல்ல வசதியாத்தான் இருந்தார்கள். எல்லாமே தன் பங்கு செலவாகுமே என்று இவனும் ஒதுங்கி விட்டான். நாடார்தான் காரியங்களைக் காத்துக் காத்து இருந்து விட்டுச் செய்தாராம் இதுகூட இவன் தோழன் சொன்னதுதான். ஊர்ப் பக்கமே அப்பறம் போகலை.
களஞ்சியத்தின் மனைவி இறந்து மூணு வருஷமாச்சு, இரண்டு பசங்க, இரண்டு பேருமே பொண்டாட்டி புள்ளைகளோடு அமெரிக்காவிலே இருக்காங்க.
இவன் மனைவி இறந்தவுடன் சின்னவன், “ டாடி இங்க இரண்டு வீடு வெட்டியா இருக்கு, உன் ஒருத்தருக்கு எதுக்கு அது ? உன்னை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துடறேன், வீட்டை வித்துட்டு போயிடுரோம்” என்றான். தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு, மகன்கள் பேரில் மாத்தியது தப்பா போச்சு. விக்கிற வேலை கிடுகிடுவென நடந்தது. வித்த பணம் என்ன ஆச்சுன்னு தெரியாது. மரியாதைக்குக்கூட சொல்ல நாதியில்லை.
சின்னவன்தான் சொன்னான் “ பணம் எதனா வேணுனா கேளு அனுப்பறேன்”ன்னு. இப்ப களஞ்சியத்துக்கு பென்சன் வரதுனால எதோ தப்பிச்சான். மூணு வருஷத்தில ஒருதடவைகூட வந்து பாக்கல, தபாலும் போடலை.
இப்பப் பெட்டியை குடைந்தபோது முதன்முறையாக அப்பா எழுதிய கடிதத்தைப் படித்தான். கண்ணில் கண்ணீர் வரவில்லை ரத்தம் வந்தது.