முத்தமிழில் ஒன்றான நாடகக் கலை சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாடகக் கலையைப் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
சங்க காலத்தில் கோலோச்சிய நாடகம் களப்பிரர் காலத்தில் புத்த ஜைன மதங்களால் புறக்கணிக்கப்பட்டது. பின்னர் பல்லவர் சோழர் காலத்தில் புத்துயிர் பெற்றது.
நகரங்களில் நாடகமாகவும் கிராமங்களில் தெருக்கூத்தாகவும் அது பரிணமித்தது.
சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் இராசமாணிக்கம், பம்மல் சம்மந்தமுதலியார், பாய்ஸ் கம்பெனி, டி கே எஸ் சகோதரர்கள்,அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர், சிவாஜி, சுந்தராஜன், சிவகுமார், மனோகர், சோ, பூர்ணம், ஒய் ஜி பி , கே பாலச்சந்தர், காத்தாடி ராமமுர்த்தி, மகேந்திரன், எஸ் வி சேகர், கிரேஸி மோகன் , போன்றவர்கள் தமிழ் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தவர்கள்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் நாடகமேடையை அடித்து நொறுக்கி அதகளப்படுத்திவிட்டன.
ஆனால் நாடகம் ஒரு ஜீவித கலை. என்றைக்கும் அழிந்துவிடாது.
முத்துசாமியின் கூத்துப்பட்டறை, ஞானியின் பரிக்ஷா, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் புத்துயிர் கொடுக்கிறார்கள்.
ஏராளமான இளைஞர்கள் நாடகங்களில் பங்கேற்க முன் வருகிறார்கள். நான்கு மணிநேரம் நடக்கும் பொன்னியின் செல்வன் முதல், பத்து நிமிடம் நடக்கும் ஷார்ட் & ஸ்வீட் நாடகங்களும் வரத் தொடங்கிவிட்டன.
அரசு நாடகத்தை ஊக்குவிக்கவேண்டும். ஊடகங்கள் இதைப் போற்றவேண்டும். புரவலர்கள் ஆதரிக்கவேண்டும். பள்ளிகளில் நாடகங்கள் நடத்தப்பெறவேண்டும். இசை விழாக்களைப்போல் நாடக விழாக்கள் நடைபெற வேண்டும். நாடகக் கலைஞர்கள் பெருமை பெறவேண்டும். மக்கள் அனைவரும் நாடகங்களைப் பார்க்கத் திரண்டு வரவேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கும் நீட்டுக்கும் நடத்தியதைப்போல் இதற்கும் ஒரு போராட்டம் நடத்தப்படவேண்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?
குவிகம் இதற்கான பணியில் இறங்கத் தயாராயிருக்கிறது.
நீங்கள்?
எஸ். வி.ஸஹஸ்ரநாமம் என்கிற உன்னத நாடகக் கலைஞரை மறந்து விட்டீர்களே!! தமிழ் நாடகத்தை நவீ8னப் படுத்தியவர். பாரதியின் பாஞ்சாலி சபதம் குயில்பாட்டு இவைகளை மேடையேற்றியவர். நாடகக் கலைப் பள்ளி நடத்தியவர். தன் பொன் பொருள் புகழ் அத்தனையும் நாடகக் கலைக்காக அர்ப்பணித்தவர்.. பல கலைஞர்களை உருவாக்கியவர். அவர் சினிமாவில் சம்பாதித்த அத்தனையும் நாடககலைக்கு செலவழித்து வறிய நிலையில் வாழ்ந்து முடிந்தவர் எப்படி மறக்க முடிகிறது!
LikeLike
சகஸ்ரநாமம் அவர்களின் பெயரை மறந்தது தவறு தான். சுட்டிக் காட்டியதற்கு மனமார்ந்த நன்றி .
LikeLike