( போட்டோ: நன்றி, லலிதா தாரிணி )
தெய்வத்துள் தெய்வம்
கடலுக்கு எல்லை உண்டு, கருணைக்கு எல்லை உண்டா? இல்லவே இல்லை. அந்தக் கருணைக் கடலையே நம் கண்ணுக்குள் மீண்டும் நிறுத்தியிருக்கிறார்கள், இந்த மிகப் பெரிய படைப்பின் மூலம்.
இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து, நம்மைச் சற்றே விலக்கி,வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த இரண்டரை மணி நேரமும் ஒரே நிசப்தம். ஒரு செல்போன் மணி ஒலிகூட நமது காதில் விழவில்லை. இது புது மொழி.(குண்டூசி விழும் சப்தம் கேட்டது- இது பழைய மொழி). பெரியவாளை தரிசனம் செய்யப் போகிறோம் என்பதனால் எல்லோரும் செல்போனை மறந்தே போனார்கள், நல்லது!
சாதாரணமாக நாடகம் என்றால் ஒரு சிறிய நடிக, நடிகையர் கூட்டம், இரண்டு அல்லது மூன்று காட்சி அமைப்பு, அதில் நகரும் கதையமைப்பு என்றே பார்த்துப் பழக்கப்பட்ட நாம், இதில் சற்று வித்தியாசமாக ஒரு 108 நடிக நடிகைகளைப் பார்க்கிறோம். எல்லோருமே இதில் பங்குபெறுவதை ஒரு “பகவத் கைங்கர்யமாக”ப் பார்க்கிறார்கள் என்றே அறிகிறோம்.
தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் நம்மைப் பழைய காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள். அப்பப்பா என்ன ஒரு தத்ரூபம்.
ஸ்வாமிநாதனாக அவதரித்த மகா பெரியவா நம் எல்லோர் உள்ளத்திலும் மஹாஸ்வாமியாக வீற்றிருக்கிறார்கள்.
பள்ளி மாணவனாக அறிமுகமாகிறார் ஸ்வாமிகள். அவர் நண்பர்களிடத்தில் எவ்வளவு ப்ரீத்தி வைத்திருக்கிறார் என்பதிலாகட்டும், தன்னுடைய ஆச்சார்ய பக்தியிலாகட்டும், ஆசிரியரை மதிப்பதிலாகட்டும், தின்பண்டம் விற்கும் மாமியிடம் குறும்பு செய்வதிலாகட்டும் என்னே நேர்த்தி. அந்தக் கிராமத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆச்சார்ய பீடத்திற்கு வந்தவுடன் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்க, பூரண கும்ப மரியாதை கொடுக்க அந்தக் கிராமமே திரண்டுவருகிறது. நிஜமான நாதஸ்வரக் கலைஞர்களையே வரவழைத்திருக்கிறார்கள். யானை மற்றும் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள் (வேஷம் தான்).இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாமே அந்தக் காட்சிகளை நம்மை மறந்து காண்கிறோம். முறுக்கு மாமியும், ஸ்வாமிகளும் மனதாலேயே பேசிக்கொள்வது, ஸ்வாமிகள் எல்லோர் மனதிலும் நிறைந்து இருப்பார் என்பதைப் பறைசாற்றுகிறது. முறுக்கு மாமி (தாரிணி கோமல்) கண்களே பேசுகிறது. பால ஸ்வாமிகள் வேதம் உபநிடதம் மற்றும் சம்பிரதாய விஷயங்களைக் கற்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். .
நாம் சுதந்திரம் பெற்றதைக் காட்டுகிறார்கள். தேர்தலைப் பற்றியும், ஜனநாயகத்தைப்பற்றியும், அஹிம்சையைப்பற்றியும் அழகாக ஸ்வாமிகள் எடுத்துரைக்கிறார்கள். நாம் காசு வாங்கி ஓட்டுப் போடக்கூடாது என்று 1952ல் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார். அவர் மகான் அல்லவா? அதனால் தீர்க்கதரிசியாய் சொல்லி இருக்கிறார். நமக்குத்தான் கொஞ்சம் “ரோஷம்” வரவேண்டும்.
ஸ்வாமிகள் மேடையிலே நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் நாமும் அவருடனே பயணிக்கும் சிஷ்யனாக மாறிவிடுகிறோம். சபாஷ் டைரக்டர் ஸார், எங்களையே மறந்து போகிறோம். ஸ்வாமிகள் நம்மையும் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஸ்வாமி கருணையை மட்டுமா கொடுப்பார், அவர் நம் தாய் அல்லவா? குழந்தைகளுக்கு மருந்தும் கொடுப்பார். “நான் கல்யாணத்திற்கு வரதக்ஷிணை வாங்கக் கூடாது, பட்டுப்புடவை வேண்டாம்’னு சொல்றேன். யாரும் கேட்கமாட்டேங்கிறா. என் படத்தை வேற போட்டுக்கிறா” என்று அங்கலாய்க்கிறார். எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்பதாகச் சொல்லுவது நம் காதில் விழுகிறது. அந்த முதியவராக வரும் பெரியவா (வாசுதேவன்)- அவர் வாசுதேவன் அல்ல தேவாதிதேவன்- நம் எல்லோர் மனதிலும் குடிகொண்டுவிட்டார். அப்படி ஒரு தேஜஸ், உருவ ஒற்றுமை, நடை உடை பாவனை எல்லாம் சேர்த்து மீண்டும் அந்த மகானை நம்மிடையே அனுப்பி வைத்து இருக்கிறார்கள், ஒப்பனைக் கலைஞர் மற்றும் டைரக்டர்.
ஸ்வாமியின் கருணையால் பலரது வாழ்க்கை மாறியிருக்கிறது. அதில் சிலவற்றை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் கருணை, விவசாயி, ஏழைப்பெண் திருமணம், வளையல்காரர், அணு விஞ்ஞானி, குழந்தை எனப் பட்டியல் நீளுகிறது.
“கேளு, தெரிந்ததைச் சொல்கிறேன், இல்லாட்டி தெரிஞ்சுண்டு சொல்றேன்” என்று அவர் நீதிபதி இஸ்மாயிலிடம் சொல்வதைக் கேட்கும்பொழுது அவர் ஞானம் தெரிகிறது.
எல்லா மதத்தினரையும் மதிக்கவேண்டும் என்றும், உண்மையான பகுத்தறிவு எது என்பதைப்பற்றியும் சொல்லும்போது போலி மதவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படுகிறது.
ஸ்வாமிகளின் கனகாபிஷேகம் நிகழ்ச்சி நம்மை அப்படியே 90க்கு அழைத்துச்செல்கிறது. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாக நடிக்கும் அந்த நபர் பாடியே அச்சு அசல்..
ஒவ்வொரு நடிகரையும் தேடித்தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஓ, யாரது.. திருமதி அருணா சாயிராமா.. அட ஆமாம். நேரே மேடைக்கே வந்து ஸ்வாமியின் முன்னால் பாடுகிறார். மகுடத்திற்கு மேல் மேலும் ஒரு வைரம் வைத்ததுபோல் இருந்தது.
ஸ்வாமிகளின் பல பருவம் முதல் முக்திவரை காட்டுகிறார்கள். குறிப்பாக ஸ்வாமியின் ‘ஒரு நாள்’ என்னென்ன செய்கிறார் என்று காண்பிக்கிறார்கள். நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஸ்வாமிகள்.
அட அதற்குள்ளே இரண்டரை மணிநேரம் முடிந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. கண்டிப்பாக இந்த நாடகம் நம் மனதில் அமைதி மற்றும் பக்தி என்ற விதையை விதைத்திருக்கிறது. இது ஆலமரமாக வளர்ந்து நம்மைச் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறோம்
டைரக்டர் சார்… இரண்டாம் பாகம் ரெடியா? நாங்க ரெடி. .