நம்பவே முடியவில்லை.
எழுத்தாளர் ராம்நாராயணன் ‘முத்தமிழ்’ இலக்கிய இதழில் வெளிவந்திருந்த சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து ஒரு வரி விடாமல் படித்து மூக்கின்மேல் விரலை வைத்தார்.
இருக்காதா பின்னே?
சென்னைத் தமிழ்ச்சங்கம் என்ற முன்னணி இலக்கிய அமைப்பு ஒன்று ‘அமரர் விஷ்ணம்பேட்டை வி.சீ.சுந்தரம் நினைவுச் சிறுகதைப்போட்டி’யை அறிவித்திருந்தது.
பொதுவாக இதுபோன்ற போட்டிகளின் அறிவிப்புகளை மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் பக்கத்தைத் திருப்பிவிடுவதுதான் ராம்நாராயணனின் வழக்கம். ஏனென்றால், இந்த சிறுகதைப் போட்டிகளில் சுதந்திரமாக ஒரு கதையை எழுதி அனுப்பிவிட முடியாது. முதலில் நான்கு பக்கங்களுக்குள் இருக்கவேண்டும் என்பார்கள். சமுதாயத்திற்கு உபயோகமான நல்ல கருத்து ஒன்றை, கதைக்குள் கருவாய் வைத்துச் சொல்லவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே கதைகளை வெளியிடாத அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பார்கள். இன்னும் இதுபோன்ற ஆயிரம் நிபந்தனைகள். இது போதாதென்று, நடுவர்கள் யார் என்று பார்த்து அதையும் மனதில் வைத்துக் கதையை எழுதித் தொலைக்க வேண்டும். கடைசியில் பார்த்தால், முதல் பரிசே ஐந்நூறு, ஆயிரத்தைத் தாண்டாது.
ஆனால், இந்த அறிவிப்பு…?
எந்த விதமான அபத்த நிபந்தனையும் இன்றி வந்தது.
இது எல்லாவற்றையும்விட, ’ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு’ என்றால் எந்த எழுத்தாளருக்கும் ஆசை வரத்தானே செய்யும்?
ராம்நாராயணனும் இதற்கு விதி விலக்கல்லவே!
நான் இதுவரை என் நண்பன் ராம்நாராயணின் இயற்பெயரை குறிப்பிட்டிருப்பதால், உங்களுக்கு அவர் யார் என்று தெரிந்திருக்க நியாயமில்லைதான். ‘வெற்றிவரதன்’ என்ற அவருடைய புனைப் பெயரைக் குறிப்பிட்டால் நீங்கள் சிறுகதைகளை விடாமல் படிக்கின்றவர் என்ற காரணத்தால் உங்களுக்கு இப்போது உடனே பிடிபட்டுவிடும்.
ஆம். சிறுவயதிலிருந்தே தன்னுடைய புனைவெழுத்துப் பயணத்தைத் தொடங்கி, தொன்னூறுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை மன்னராகச் சரேலென்று விஸ்வரூபமெடுத்த அதே வெற்றிவரதன்தான். ஆனந்த விகடன், கல்கி என்று எல்லா முன்னணிப் பத்திரிக்கைகளிலும் அவர் பெயரைத் தாங்கிய ‘முத்திரைக் கதைகள்’ சரசரவென்று வந்து விழுந்தபோது, அவரது சொல்லாட்சியிலும் கற்பனையிலும் மனதைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள்தானே? அழகிய பெண்களை மட்டுமே அட்டைப்படமாய்ப் போட்டிருந்த காலம் மாறி, இலக்கியவாதிகளை அட்டையில் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்கும் என்று வெற்றிவரதன்தானே மாற்றிக் காட்டினார்?
இதையெல்லாம் நினைத்து அசைபோட்டபோது, வெற்றிவரதனாகவே முழுமையாக பெயர் மாற்றம் ஆகிவிட்ட ராம்நாராயணனுக்குப் பெருமையாகவே இருந்தது. தன்னையறியாமல் அவர் வலதுகை, அவருடைய நரைத்த மீசையை முறுக்கிவிட்டு முதிர்ந்த முகத்தில் ஒரு முறுவலையும் வரவழைத்தது.
எவ்வளவுதான் வெற்றிமேல் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பைக் கண்டதும் அவருக்குள் புது ரத்தம் பாய்ந்தது. எப்படியும் ஒரு சிறந்த கதையை எழுதி முதல்பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்று உடனே மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அத்தகைய கதையின் கருவைத் தேடி அவர் மனம் அமைதியின்றி அலைபாயத் தொடங்கியது.
எப்போதையும்விட அன்றைக்கு அவருக்கு குளியல் அதிக நேரம் பிடித்தது. ஏனென்றால், தீவிரமாகக் கதையைப்பற்றி யோசிக்கும்போது அவருக்குத் தலையில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கவேண்டும். ஒரு நல்லகரு பிடிபட்டவுடன்தான் சுயநினைவு திரும்பி ஒருவழியாகக் குளியலை முடித்துக்கொள்வார்.
லட்ச ரூபாய் பரிசு என்றால் நிறைய எழுத்தாளர்கள் போட்டி போடுவார்களே? எல்லாவற்றையும் மிஞ்சுவது போலல்லவா கதை இருக்கவேண்டும்…?
தலையைத் துவட்டிக் கொண்டு வந்தபோது அவர் முகத்தில் திருப்தியும் சந்தோஷமும் கொப்பளித்தது. விநாயகர் அகவலை எப்போதும்போலப் படித்து முடித்துவிட்டு, சிற்றுண்டி முடித்து, தன்னுடைய அறையில் ஒரு திடமான முடிவோடு உட்கார்ந்து கொண்டு எழுதத் தொடங்கினார்.
பிள்ளையார் சுழி போட்டதுதான் தாமதம், அவருடைய கைப்பேசி அலறியது.
பெயர் எதுவும் இல்லை. நம்பர் மட்டும்தான் இருந்தது. ஆனாலும் எடுத்தார்.
“ஹலோ சார்… எழுத்தாளர் வெற்றிவரதன் சார்தானே…?”
“ஆமாம் …. வெற்றிவரதன்தான்… சொல்லுங்க…”
“வணக்கம் சார்… என் பேரு ஆனந்த் சீனிவாசன்… நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் சார்… எம்ஃபில் பண்றேன். உங்களைப் பற்றியும் உங்களோட சிறுகதைகளைப்பற்றியும்தான் என்னோட ஆய்வு. உங்களோட சிறுகதைத் தொகுப்பு அத்தனையும் முழுசாப் படிச்சு குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்!”
“சரி அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“வேற ஒண்ணும் இல்ல சார்! ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும். சில கேள்விகள் இருக்கு… அதை நேர்ல வந்து பாத்து பேசிட்டுப் போலாம்னு தோனிச்சு. சார் ஒரு பத்து நிமிஷம் எனக்கு இன்னிக்கு நேரம் ஒதுக்குங்களேன்… ப்ளீஸ்!”
“பத்து நிமிஷங்கறே… சரி, சரி… வந்து பாரு… எனக்கு சென்னை தமிழ்ச் சங்கத்தோட சிறுகதைப் போட்டிக்கு வேற கதை எழுதி அனுப்ப வேண்டியிருக்கு… ஆனாலும், நீ ஸ்டூடன்ட்ங்கறே… காலையில பத்து மணிக்கே வந்து பாத்துட்டுப் போயிடு… அப்புறம் என் வேலையைத் தொடர்வேன்…!”
“ரொம்ப நன்றி சார்!”
கைப்பேசியைக் கட் பண்ணிவிட்டு மீண்டும் கதையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார் வெற்றிவரதன்.
பத்துமணிக்கு டாண் என்று அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்ததும் புன் சிரிப்புடன் முதுகில் நீலநிறப்பை ஒன்றை மாட்டிக் கொண்டு அந்த இளைஞன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். அவன் அணிந்திருந்த கண்ணாடி அவன் ஒரு தீவிர படிப்பாளி என்று பறை சாற்றியது.
“வாப்பா… உட்காரு. வழி கண்டுபிடிக்கக் கஷ்டமா இருந்துதா…?”
“நீங்க வேற… அதெல்லாம் இல்லே சார். எழுத்தாளர் வெற்றிவரதன் வீடுன்னு தெருமுனையில கேட்டாலே எல்லாரும் சொல்றாங்க. நீங்க நெறய அவார்ட்ஸ் எல்லாம் வாங்கியிருக்கீங்க. ஒங்க முகம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ளகூட அடிக்கடி பேட்டி, அது இதுன்னு வரீங்க. யூ ஆர் எ செலிப்பிரிட்டி சார்!”
புகழ் போதை மனிதனுக்கு எங்கே போகிறது? வெற்றிவரதன் மீண்டும் குளிக்காத குறைதான்.
“சரி… கேளுப்பா ஒன்னோட கேள்விகளை!” என்று அவரே தொடங்கி வைத்தார்.
அவர் நினைத்ததைவிட ஆனந்த் சீனிவாசன் தீவிர வாசிப்பாளனாக இருந்தான். அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கரைத்துக் குடித்திருந்தான். அவரே மறந்துவிட்டிருந்த அவருடைய அந்த நாளையப் பழைய சிறுகதைகளை ஞாபகப்படுத்தி, அவற்றில் இடம் பெற்ற சம்பவங்களைப்பற்றி நுணுக்கமான ஆயிரம் கேள்விகளை அடுக்கினான். கதைமாந்தர்களின் மனப்போக்கைப் பற்றி அறிவதில் ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ஏன் இப்படி எழுதவில்லை, ஏன் இப்படி ஒரு முடிவை எழுதினீர்கள் என்று அவனுடைய தீராத ஆர்வம் பல திசைகளில் பாய்ந்தது.
வெற்றிவரதனுடைய சிறுகதைகளைத்தவிர, பொதுவாக சிறுகதைகள் எழுதும் கலையைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். சிறந்த கதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த எழுத்தாளர்களைப் படித்தால் சிறுகதைச் சூத்திரம் பிடிபடும் என்று துருவித்துருவித் தெரிந்துகொண்டான்.
ஆனந்த் சீனிவாசனுடன் பேசுவதும் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலுரைப்பதும் வெற்றிவரதனுக்கு மிகவும் சவாலான, சந்தோஷமான அனுபவமாக இருந்தது. இந்த சிறிய வயதில் இப்படி ஒரு தீவிர வாசகரை அவர் இதுவரை சந்தித்ததே இல்லை.
“சார்! சென்னை தமிழ்சங்கம் நடத்தற மெகாபரிசு சிறுகதைப் போட்டியில் நீங்களும் கலந்துக்கறீங்களா சார்…? அப்படிக் கலந்து கொண்டா, உங்களுக்குத்தான் சார் முதல் பரிசு ஒரு லட்சம்! அது நிச்சயம் சார்…!”
“ஆமாம்ப்பா… நான் கலந்துக்கப்போறேன். ஒரு கல்லூரி மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா எப்படித் தீவிரவாதியா மாறினான்ங்கறதை வெச்சுத்தான் என்னோட கதை…”
“அப்படியா சூப்பர் சார்! அதை எப்பிடி சார் ஆரம்பிப்பீங்க? எப்பிடி டெவலப் பண்ணுவீங்க? கடைசியில் திருப்பம் ஏதாவது இருக்குமா…?”
மீண்டும் மீண்டும் ஆனந்த் சீனிவாசனின் இடைவிடாத கேள்விகள்.
அவனுடைய ஆர்வத்துக்குத் தீனிபோடும் விதமாய் வெற்றிவரதன் தன் மனதிலுள்ள சிறுகதையை அப்படியே உணர்ச்சிகரமாய் விளக்கினார். இந்த முயற்சியில் கதையும் முழுமையாய் அவருடைய மனதிலும் விரிந்தது.
“சூப்பர் சார்! நன்றி சார்! வாழ்த்துக்கள் சார்!” – உற்சாகம் கொப்பளிக்க விடை பெற்று விரைந்தான் அவருடைய இளம் விசிறி.
விடைகொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பி கதையை ஒருவாறாக எழுதி முடித்தார் வெற்றிவரதன். ஆனாலும் கால அவகாசம் நிறைய இருந்ததால், இரண்டு வாரங்கள் கழித்தே அதைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
***
ஒரு மாதம் கழித்து சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியானபோது இலக்கிய உலகமும் வாசகர் வட்டங்களும் வியப்பில் விரிந்தன.
‘ஒரு மாணவன் மாறுகிறான்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை மிகச் சிறந்த சிறுகதையாக நடுவர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லா முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகளிலும் இந்த விபரம் கொட்டி முழங்கியது.
கதையை விறுவிறுவென்று படு சுவாரசியமான நடையில் எழுதி ஒரு லட்சம் ரூபாய் மெகா பரிசைத் தட்டிச் சென்றது ஒரு கல்லூரி மாணவனாம்.
அறிமுக எழுத்தாளர் ஆனந்த் சீனிவாசன் கண்ணாடியின் வழியே எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் சிரித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிவரதன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.