முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பீஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காணவந்திருந்த , கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் ஓலைகளைச் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதன்படி ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் ஆலயத்திற்கு பணி செய்யும் மக்களை சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்விக்க வாங்மெங் ஒப்புக் கொள்கிறார். அவ்வாறு நிகழ்ச்சிகள் புரியும் போது வாங்மெங் ஒரு சதிச்செயலைப்பற்றித் தெரிந்து கொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள பத்தாயிரம் வேலி நெல் கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும் ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் சிலர் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டறிகிறார்.
இனி……
3.வாங்மெங்கின் ஓலை மேலும் தொடர்கிறது.
“அதிர்ச்சியால் உந்தப்பட்டேன். ‘ஆலயம் கட்டும் பணிக்கு இவ்வளவு எதிர்ப்பா? சக்ரவர்த்தியைக் கொல்ல ஏன் இந்த சதி?’என்னும் எண்ண அலைகள் என் மனதில் ஓடின. கிருஷ்ணன் ராமன் இதைப்பற்றி ஏற்கெனவே என்னிடம் எச்சரித்திருந்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. தோற்றுப்போன பாண்டியர்கள் மறைந்திருந்து எப்படி சோழர்களை வேரோடறுக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஈழப் போர் கைதிகள் என்னேரத்திலும் கலவரத்தில் ஈடுபட்டு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். ‘இதையெல்லாம் யோசித்துத் தெரிந்துகொள்ள இப்போது அவகாசமில்லை. எப்படியாவது இந்த முயற்சிகளைத் தவிடுபொடியாக்க வேண்டும். எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உடனே என்ன செய்ய வேண்டும்’என்பதை எண்ணி மண்டபத்துக்கு வெளியில் வந்தேன்.
‘ குதிரையோ இல்லை. தஞ்சாவூருக்கு எப்படிச் செல்வது? வழிப்போக்கர்கள் எப்போது வருவார்கள்?’ இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது மேகக் கூட்டங்கள் மறைந்து திங்களின் கிரணங்கள் இருட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. குதிரையின் கனைப்புச் சத்தம் கேட்டுத் தூண் பின்னால் மறையப் போனேன் , சேணம் போட்ட குதிரையொன்று வெறுமையாய் ஆளின்றி மெதுவாக நடந்துவந்து என்னருகில் நின்று சன்னமாய் கனைத்தது.
ஆகா! இது நம் குதிரையல்லவா? எஜமானர் விட்ட இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது! பக்கத்தில் சென்று தாடையைத் தடவி வருடிவிட்டேன். சேணத்தில் இரு பக்கங்களிலும் தோல் பைகள் இன்னும் அப்படியே காணப்பட்டன. அவற்றில் ஒரு பையைத் திறந்து அதில் குதிரைக்காக வைத்திருந்த வெல்லக் கட்டிகளை எடுத்து வாயருகே நீட்டினேன். மிகவும் பசியாக இருந்த புரவி ஆசையுடன் உண்டது. அப்போதுதான் என் பசி எனக்குத் தெரியவந்தது. மற்ற பையிலிருந்த பண்டங்களை எடுத்து உண்டு பசியைப் போக்கிக் கொண்டேன். தெம்பு பிறந்தது. என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டேன். உடனே கிளம்பி தஞ்சாவூர் செல்ல மனம் துடித்தது. அப்படிச் செய்தால் பகைவர்களால் ஆபத்து நேரிட வாய்ப்புகள் இருக்கின்றன என்றெண்ணி விடியற்காலையில் கிளம்ப முடிவுசெய்தேன். குதிரையில் தொங்கவிடப்பட்டிருந்த குடுக்கையிலிருந்து தண்ணீர் குடித்துத் தாகத்தைப் போக்கிக் கொண்டேன். குதிரையைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கண்ணயரப் படுத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை.
காலையில் கிழக்கு வெளுக்கும் தறுவாயில் எழுந்திருந்து தஞ்சாவூருக்குப் பயணித்தேன். குதிரை என் மனோநிலையைப் புரிந்துகொண்டது போலும்! அதிவேகமாய் பறந்து சென்றது! தஞ்சாவூரைப் பகல் நேரத்தில் வந்தடைந்தோம். நேராக திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்ணன் ராமன் இருக்கும் மாளிகைக்கு விரைந்தேன்.
அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டேன். திடுக்கிட்டு சிலையாய் சமைந்துவிட்டவர் சிறிது மௌனத்திற்குப் பிறகு “பயிர்களைத் தீக்கு இரையாக்காமல் தவிர்க்க வேண்டிய பெரிய பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். சக்கரவர்த்தி இப்போது ஊரில் இல்லை. நாளை பகல்பொழுது ஆலயக்களத்திற்கு நேராக வருவதாக இருக்கிறார். அதற்குள் சக்கரவர்த்திக்கு நேர இருக்கும் பேராபத்தை அவருக்கு எடுத்துச்சொல்லி அவரைக் காப்பாற்றும் பொறுப்பை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்”என்றுகூறித் தன் மடியில் தொங்கிக் கொண்டிருந்த பட்டுப் பையை எடுத்து “இதில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புலி பொறித்த தங்க பதக்கம் உள்ளது. சக்ரவர்த்தியிடம் இதைக் காட்டினால் மற்ற வேலைகளை நிறுத்தி உங்களுக்கு உடன் பேட்டியளிப்பார். அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றிச் செல்லலாம்”என்று பதக்கத்தின் மகத்துவத்தைப்பற்றிக் கூறிவிட்டு அதை என்னிடம் நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டேன். “ஜாக்கிரதை”என்று கூறிவிட்டுப் பறந்துசென்றார்.
நான் உடனடியாகச் சக்கரவர்த்தியின் மாளிகைக்கு விரைந்தேன். அவர் மாறுவேடத்தில் மாதமொருமுறை வெளி செல்வது வழக்கம் என்பதையும் அவர் செல்லும் இடத்தைப்பற்றிய விவரம் எவருக்கும் அறிவிக்கும் வழக்கம் இல்லை என்றும் தெரிய வந்தது. ‘ஆலயம் கட்டும் களத்தில் நாளை சக்ரவர்த்தி வருமுன், துப்பு துலக்கி, நம் முழு கவனத்தையும் செலுத்தி எப்பாடுபட்டாவது பகைவர்களின் எண்ணத்தைக் கண்டுபிடித்து, அவரைக் காப்பாற்றவேண்டும்’ என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துக்கொண்டேன்.
சம்பவப் பட்டியல் அதிகாரி வாங்மெங் எழுதிய எழுத்தோலையைப் படிப்பதை இங்கு நிறுத்தி “அரசே! வாங்மெங் எழுத்தோலை இதோடு முடிவடைந்துவிட்டது”என்று சொன்னார்.
சபையில் நிறைந்திருந்த அனைவரும் அதிசயத்துடன் வாங்க்மெங் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதுவரை சுவாரசியமாக ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஷேங்க்ஸான் சுதாரித்துக் கொண்டு இரண்டாவது ஓலையை எடுத்துப்பிரித்து அதிகாரியிடம் நீட்டினார். அதுவும் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதிகாரி தொண்டையைக் கனைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.
( தொடரும் )