குறிப்பு: இந்தக் கதைக்கு ரேவதி அவர்களின் முக பாவங்கள் மிகப் பொருத்தமாக இருப்பதால் அவர் படங்களைத் தேர்ந்தெடுத்தோம். மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமில்லை (ஆ-ர்)
“ஸைகோஜெனிக் ப்ருரைடஸ்” (Psychogenic pruritus) என்பது ஒரு மிக அபூர்வமாகத் தோன்றும் பிரச்சினை. லீனா என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி எப்படி இதை வென்றாள் என்று பார்ப்போம்.
பல வருடங்களாகத் தனக்கு இருந்த நமைச்சல், தாங்க முடியாத அளவிற்கு வந்துவிட்டதால், தோல் டாக்டரிடம் காட்டினாள். அவர், அவளுடைய டென்ஷன், ஸ்ட்ரெஸ் (stress) பற்றி விசாரித்ததிலிருந்து, இதற்கு மனநலக் காரணங்கள் இருக்கக்கூடும் என்று ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைப் (என்னை) பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
லீனா என்னிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தாள். ஒன்று, இந்த நமைச்சல் போகவேண்டும்; இரண்டாவது, தனக்கு வந்த பயத்துக்கு ஸைக்கையாட்ரிஸ்ட் கொடுத்திருந்த மாத்திரையை நிறுத்த வழி காட்டவேண்டும்.
லீனாவை என்னிடம் அனுப்பிய டாக்டர் டையக்னோஸிஸை எனக்கு, மிகத் தெளிவாக விவரித்திருந்ததால், லீனாவுக்கும், அவள் கணவர், பாலனுக்கும் அணுகுமுறையைத் தெளிவு படுத்தினேன்.
“நான் சொல்வதைக் கேட்டு இது தீரப் போவதில்லை. கலந்துரையாடல், ஆயத்தச் செயல்கள் செய்ய, நீங்களே, உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். உங்களின் சூழ்நிலைகள், நமைச்சல் எப்பொழுது வருகிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து, அவற்றைப் புரிந்து கொள்வதின் மூலம்தான் உங்களுக்குத் தெளிவு பிறக்கும். இதற்கு உங்கள் கணவனின் உதவியும் தேவைப்படும்” என்று விளக்கினேன்.
மனம்விட்டுப் பேச அவர்கள் தயங்குவதை புரிந்துகொண்டு, என் சிகித்சையில் உள்ள இரகசியத்தன்மை (confidentiality) பற்றிக் கூறினேன். அதாவது, எங்கள் துறையில், க்ளையன்டைப் பற்றி, மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும்பொழுது பெயர் முதற்கொண்டு எல்லாத் தகவலும் மாற்றி அமைந்தே இருக்கும் என்றேன். இது எங்கள் தொழில் தர்மம். க்ளயன்ட்டே, அடையாளம் கொள்ள முடியாதபடி செய்வதினால், எங்கள் மேல் நம்பிக்கை வந்து,மனம் விட்டுப் பேசமுடிகிறது. இப்படி விளக்கியதும், அவர்களின் சந்தேகம் மறைந்தது.
அவர்களை விசாரிக்க ஆரம்பித்தேன்.
லீனா தனக்கு மறதி இருப்பதாக விவரித்தாள், எங்கே, எதை வைத்தாள் என்று ஞாபகம் வருவதில்லை. வயதோ, 45! தூக்கம் அதிகமாக வருவதால் காலையில் சமையலைப் பாலன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியும் அசதியாக இருந்தது. அப்போது பாலன் ஒரு தகவலைச் சொன்னார். அவள் அக்காவிடமிருந்து தொலைபேசியில் பேசியதும் அவளுக்கு நமைச்சல் அதிகமாகிறது, தொலைபேசியையும் வீட்டையும் மிகச் சுத்தமாக வைத்திருந்தாலும் கூட!
சமீப காலமாக, பயத்தின் காரணமாக லீனா வெளியே செல்லுவதும் குறைந்து போனது. காரை ஓட்டினாலோ, தனியாக இருந்தாலோ பயம் அதிகரித்து, அழுகை வந்தது. அண்டை வீட்டார் இவர்களின் நண்பர்கள், ஒரு நாள் இவள் காரைப் பயன்படுத்திய பின் பெட்ரோல் தீர்ந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதைப்பற்றிக் கேட்கும்போது, பேச்சு வார்த்தை முற்றி, அவர்கள் “உன்னை உண்டு இல்லைன்னு செஞ்சுடறேன், வெய்ட் அண்ட் ஸி” என்று சொன்னார்களாம்.
அடுத்த இரண்டு நாட்கள், லீனா ஏனோ அடிக்கடித் தடுக்கி விழுந்தாள், காருக்கும் சின்ன விபத்து நேர்ந்தது. அதிலிருந்து, சத்தம் கேட்டாலே அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர்களைப் பார்த்தாலே நாக்கு வறண்டது. அவர்களின் சாபத்தால்தான் இப்படி நடக்கிறது என்று முடிவு செய்தாள்.
லீனாவின் தகவல்கள் பல்வேறு மனநலப் பிரச்சினையைத் தழுவியதால் திரும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசித்தேன். அவர் “ஸைகோஜெனிக் ப்ருரைடஸ்” சம்பந்தப்பட்ட மருத்துவ இதழ்களை என்னிடம் கொடுத்தார்.
லீனா, இல்லத்தரசி, வசதி படைத்தவள், பாலன், தனியார் நிறுவனத்தில் வேலை. மூத்த பையன், பட்டதாரி, வேலை தேடிக் கொண்டிருந்தான், இளையவள் ப்ளஸ் ஒன்று. சொந்த அடுக்கு மாடி வீடு, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. ஆனாலும் அவள் இரண்டு உடைகளையே மாறி மாறி அணிந்து வந்தாள். அவள் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்ததும் அவள் தன் கடந்த கால சம்பவங்களை விவரித்தாள்.
லீனாவுக்கு அவள் அக்காவின் மைத்துனனை நிச்சயம் செய்தார்கள். இவள், சந்தோஷத்தில் திளைத்தாள். இவள் எப்போதும் பளிச் நிறமுள்ள ஆடைகள், தலை நிறையப் பூ, கால்களில் கொலுசு, கை நிறையக் கண்ணாடி வளையல்கள் போன்றவற்றால் தன்னைச் சிங்காரிப்பதால், இவளை “மயில்” என எல்லோரும் அழைப்பார்களாம். ஏதோ கருத்து வேறுபாடுகளினால் நிச்சயதார்த்தம் கல்யாணம்வரை போகவில்லை. ஆனால், லீனாவைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று இருந்த “அவர்” திடீரென வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். “அவர்” இல்லை என்றவுடன் எதுவும் தேவையில்லை என்று லீனா சிங்காரிப்பதை எல்லாம் விட்டுவிட்டாள். அதன்பின் அவளுக்கு ஆறுதல் கூறி, பாலனுக்குக் கல்யாணம் செய்துவைத்தார்கள்..
அவள் அக்காவும், மைத்துனனும் இவள் ஆசைப்பட்டபடி கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். அங்கிருந்து ஃபோன் வந்தாலே லீனா அங்கு உள்ள நிலவரத்தைக் கேட்டு, இங்கு அப்படி “எதுவுமே இல்லை” என்று மிகவும் வருத்தப்படுவாளாம்.
அக்காவின் மைத்துனரோ லீனாவுக்கு பிடித்த மாதிரியான, நல்ல உயரம், வாட்ட சாட்டமான கட்டு மஸ்தான உடம்பு, பெரிய மீசை, கலகலவென சிரிப்பு, விவசாயி, நல்ல ஜாலி டைப். அவருக்கு நேர் மாறாக , பாலன், குட்டை, சிவப்பு, அமைதியானவர். பாலன் பாட்டே கேட்க மாட்டார். கல்யாணத்திற்கு முன் “அவருடன்” பாட்டுக் கேட்பதுண்டு ; கை கோர்த்துக்கொண்டு, பாடி மகிழ்ந்ததுண்டு! இப்பொழுது , அந்தப் பாடல்களைக் கேட்டால் ஏக்கம் அதிகரித்தது; ஏமாற்றம் அடைந்தாள். தான் இப்படி இருப்பது நல்லதல்ல என்று புரிந்தது. ஆனாலும், அந்தக் காலத்திலிருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்றாள்.
அவளின் ஞாபகப் பிரச்சினைக்குக் காரணம் தெரிந்தது. பாலன், பல விதத்தில் லீனாவுக்குப் பிடித்த மாதிரியாக இல்லாததால், அவர் சொல்வதை லீனா கவனமாகக் கேட்டுக் கொள்வதில்லை, ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றிலும் ‘அங்கும் – இங்கும்’ ஒப்பிடுவதால், ஏமாற்றம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ரசனைகள் வேறுபட்டதால் கோபம் சூழ்ந்து வெறுப்பு அதிகரித்தது.
ஆனால் அவளின் “அவர்” அதே சிரிப்பும், சந்தோஷமுமாகத் தன் மனைவியுடன் இருந்தார். வெளிநாட்டுக்கெல்லாம் குடும்பத்தோடு சென்றிருந்தார்.
25 வருடத்திற்கு முன், தான் அடைந்த ஏமாற்றத்தை அவள் மட்டும் சுமந்து இருப்பதை உணர்ந்தாள். லீனா, தன் வாழ் நாட்களை “அவர்” வாழ்க்கையுடன் ஒப்பிட்டே தனக்குக் கிடைத்த வாழ்வை நிராகரித்துக் கொண்டு, வாழாமல் இருந்ததை முதல் முறையாக உணர்ந்தாள்.
அதன் விளைவே மன உளைச்சல். ஃபோன் வந்தால் மனக்கலக்கம் மேலோங்கியது. எல்லாம் சேர்ந்து, நமைச்சல் அதிகரித்தது. இது எல்லாம் தோலை எப்படிப் பாதிக்கும்?
நம் உடல் உறுப்புகளில் மிகவும் பெரிய உறுப்பு, தோல். உளைச்சல்களை உணரும் உறுப்பு. இரசாயனத் தூதுவனான நுயூரோ ட்ரான்ஸ்மிடர் (neurotransmitter) நம் மூளையையும், நரம்புப் பகுதிகளையும் நம் தோலுடனும், அதிலுள்ள மயிர்க்கால்களுடனும் இணைக்கின்றது. அதனால்தான் நமக்குச் சங்கடம் வந்ததும் நம் தோலின் நரம்பு முனைகள் உஷாராகும். அதனால் நமைச்சலும் தோன்றலாம். ஆனால் எல்லா நமைச்சலும் மன உளைச்சலினால் வருவது அல்ல. அதுபோல மன உளைச்சல் எப்பொழுதும் அரிப்பு கொடுக்கும் என்பதும் இல்லை.
உறைந்த நினைவுகளே நிறைந்திருந்ததால், லீனாவுக்குக் கசப்பும், பொறாமையும் நிலவியது. அவள் தன் வீட்டில் யாரையும் எப்போதும் பாராட்டியதே இல்லை
தற்போது லீனா இதிலிருந்து வெளியேற ஆசைப் பட்டாள். அதற்காகத்தான் என்னிடம் வந்திருக்கிறாள்
இதைச் சரி செய்ய, ஒரு யுக்தியைத் தேர்வு செய்தோம். காலை எழுந்ததும், லீனா தன்னைப் பார்த்து ‘ ஒரு நல் சொல்’ சொல்ல வேண்டும்; மாற்றம் நம்மிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். இத்துடன் தினம் யாரவது உறவினர், நண்பர் செய்வதைப் பாராட்டி நன்றாகச் செய்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்ல வேண்டும்.
மேலும் ஒரு மாதத்திற்கு, தினம் இரவு தூங்குவதற்கு முன் “இன்றைக்கு, இதற்காக நன்றி சொல்வேன்” என்று மூன்று விஷயங்களைத் தேர்வு செய்து விடாமல் எழுதச் சொன்னேன். அவளும் தொடர்ந்து எழுதிவந்தாள். மாதக் கடைசியில் அவற்றைப் படிக்கும்படிக் கூறினேன். அவள் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். “என் வாழ்விலும் பல சந்தோஷங்கள் உள்ளன” என்பதைக் கண்டு கொண்டாள்.
இவற்றையெல்லாம் லீனா தொடர்ந்து செய்தாள். செய்யச்செய்ய, அவளின் கசப்பு உணர்வும் குறைந்துகொண்டு வருவதை அவளே உணர ஆரம்பித்தாள்.
நமைச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது.
தூக்கம் மட்டும் அவளுக்குச் சற்று அதிகமாகவே இருந்தது. இதற்கு நாங்கள் திட்டமிட்டபடி அவளும், பாலனும் தினம் காலையில் நடைப் பயிற்சி ஆரம்பித்தார்கள். கை வேலைகள் செய்ய ஆரம்பித்தாள். , பக்கத்துப் பள்ளியில் வாலன்டியர் (volunteer) ஆகவும், தோட்ட வேலை செய்யவும் ஆரம்பித்தாள்.. புத்துணர்ச்சியுடன் பலவித உணவுப் பண்டங்கள் செய்யவும், கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்டினாள். இரண்டே வாரத்தில், தூக்கம் சரியானது.
அவளுடைய ஸைக்காட்ரிஸ்ட், லீனாவின் முன்னேற்றத்தைப் பார்த்து, மாத்திரைகளை படிப்படியாகக் குறைத்து விட்டார். லீனாவும், பாலனும் சந்தோஷப் பட்டார்கள்.
தற்செயலாக, அவளுடன் வாக்குவாதம் செய்த பக்கத்து வீட்டாரைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் ஏற்கனவே இதை நன்றாக ஆராய்ந்ததால், லீனா பயமின்றி மன்னிப்புக்கேட்க, அவர்களும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள, நண்பர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்தார்கள்.
லீனா இன்னொன்றையும் புரிந்து கொண்டாள். சொல் நிஜமாகும் என்று நம்பியதால், நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளுடனே ஜோடித்திருந்தாள். இப்படிச் செய்வதை, நாங்கள் “ஒவர் ஜெனரலைஸேஷன் (over generalisation)” என்போம். தற்செயலாக நடந்ததை ‘அவர்கள் அப்படிச் சொன்னதால் தான் நடந்தது’ என்று நம்பினாள். மற்றவர் சொல்லுக்குப் பலத்தைக் கொடுத்ததில் அவளை எப்போதும் பயம் பீடித்தது. பயத்தினாலேயே அவள் முடங்கிப் போனாள்.
இதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டதால் அவளைப் பிடித்த அந்த பயம் அவளைவிட்டு அடியோடு விலகிவிட்டது.
நமைச்சல் பிரச்சினை முழுதாகத் தீர்ந்துவிட்டது என்று டாக்டர் லீனாவிடம் உறுதியாகச் சொன்னார். இதனால், அவளுக்குத் தைரியம் மேலும் கூடியது.
இதுவரை தன் மகனுக்குக் கொடுத்த சலுகைகளினாலே பல விஷயங்களைப் பாலனிடமிருந்து மறைத்திருந்தாள். இப்படிச் செய்வதில் அவரை வென்றதாக எண்ணம் கொண்டிருந்தாள். இப்போது இதை அவரிடம் சொல்ல விரும்பினாள். தங்கள் குலதெய்வம் ரத்தினகிரி முருகன் கோயில் சென்று, இதைப் பாலனிடம் பகிர்ந்து கொண்டாள். பாலன் எப்போதும் நல்ல தன்மையாக இருப்பவர் என்பதால் தன்னால் சுலபமாகச் சொல்ல முடிந்தது என்றாள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் கல்யாணம் முடிவானதும் பாலனின் அம்மா அவரிடம். “பெண் பிள்ளையை ஏசுபவன் நல்ல ஆண் பிள்ளை இல்லை. அவளை நன்றாகப் பார்த்துக்கொள்” என்று சொன்னாராம்.
பாலனுக்கும் அவர் அம்மாவுக்கும் லீனாவின் நிச்சயம் முறிந்த விஷயமும் தெரியும். (லீனாவுக்கு இது தெரியாது).
எட்டு மாதங்கள் கடந்தபின், லீனாவின் அக்காவின் மைத்துனன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இதைத் தானாக அமைந்த பரீட்சை எனலாம். இந்த முறை வந்தவருக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தாள். பலகாரமும் செய்தாள், உபசரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அவரை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. பாலனை அவருடன் ஒப்பிடவோ, கோபித்துக் கொள்ளவோ இல்லை. லீனா வென்றாள், நிகழ்காலத்திற்கு வந்தாள்.
கடந்த கால நினைவலைகளால்
நிகழ் காலமே மூடுபனி ஆனதே! ஒப்பீடு செய்ய, புளித்தது, எல்லாமே. இவ்வளவு காலமும், அறியவில்லையே
இதோ, என் கண்முன், என் கைப் பிடியில் (தான்) என் மகிழ்வு!
****************************************************