கோதை ஆண்டாள் கொலுவிருக்கும் கோயில் வில்லிபுத்தூர்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் கோயிலுக்குச் சென்றபோது மலர்கள்,திருத்துழாய்,வாசனைப் பொருள்கள் ஆகியவற்றின் நறுமணத்துடன் தமிழ் மணமும் கமழவே முற்றிலும் என்னைப் பறிகொடுத்தேன்.
மகிழ்ச்சியால் உள்ளம் ஊசல் ஆடியது.
விளைவு — “ஆண்டாள் ஊசல்” பாடல்கள் :
ஓதுதமிழ் எழிலொழுகப் பாவைப் பாடல்
உலகுய்ய மூன்றுபத்து பாடித் தந்த
கோதில்லாக் குலமணியே வில்லி புத்தூர்க்
கோபுரத்து விளக்கொளியே ஆடீர் ஊசல்.
தாதவிழும் துழாய்மருங்கில் உதித்த பூவே
தன்மாலை தான்சூடித் தண்மால் சூடக்
காதலினால் சுடர்க்கொடியே கொடுத்த அந்தக்
கதைமுழுதும் யாம்பாட ஆடீர் ஊசல் !
நெற்றியிலே அணிசுட்டி ஆடக் கண்கள்
நீர்புரளும் சேலெனவே முகத்தில் ஓடக்
கற்றிகழும் குழையிரண்டும் கன்னம் சாடக்
கழுத்திலங்கும் பூமாலை வண்டு பாட
மற்றிடையில் மேகலைகள் புலம்பி வாட
மணிசிலம்பும் சிணுங்கிடவே ஆடீர் ஊசல்.
கொற்றவனாம் கண்ணனையே உள்ளம் நாடக்
கோதையிளம் ஆண்டாள்நீர் ஆடீர் ஊசல் !
ஆன்பசுக்கள் பெருமாட்டி யசோதை அன்னை
அன்புடனே நெஞ்சினிக்க வடம்தொட்டு ஆட்ட
கான்புகுந்த வள்ளலவன் கோச லைத்தாய்
கனகமணிக் கையாலே வடம்தொட்டு ஆட்ட
தேன்பிழிந்த தமிழ்தந்த ஔவைப் பாட்டி
திருக்கரத்தால் வடம்தொட்டு் வாழ்த்தி ஆட்ட
நோன்பிருந்த பாவையர்கள் வடம்தொட்டு ஆட்ட
நுண்ணிடைப்பெண் ஆண்டாள்நீர் ஆடீர் ஊசல் !
சூடிக்கொடுத்தச் சுடர்கொடிக்கு பாடிக்கொடுத்து ஊசலாடச் செய்தனையோ நீவீர் வாழ்வீர் பல்லாண்டு.
LikeLike