நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
அல்லும் பகலும் வெறும் கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..
சீக்கிரமே வேலைக்குப் போய்விட்டேன். ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்கு இரண்டு வருடங்கள் இடைவெளி இருந்தது. அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று சொல்வதற்கில்லை.
அந்தக் காலத்தில் எஸ். எஸ். எல். ஸி. முடித்துவிட்டு கல்லூரிக்கோ பாலிடெக்னிக்கிற்கோ படிக்கப் போகாத பெரும்பாலானவர்கள் டிம்மி பேப்பரை உருட்டி எடுத்துக்கொண்டு டைப்பிங் கற்றுக்கொள்ள இன்ஸ்டிடியூட் போவார்கள். நானும் ஒருமணிநேரம் இன்ஸ்டிடியூட்டில் பொழுதுபோக்கினேன். கொஞ்சம் தீர்மானமாக இருப்பவர்களோ அல்லது யாரேனும் அறிவுறுத்தியபடியோ சிலர் சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்வதுண்டு.
பொழுதுபோகவில்லை என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். எனக்கென்னவோ பொழுது நம் கண்முன்னாலேயே யாதொரு பயனும்இன்றிப் போகிறது என்பதுதான் சரி.
மாலைவேளைகளில் ஒரு சிறு கோஷ்டியுடன் காலாற நடந்து ஊரைச் சுற்றிவருவோம். அங்கத்தினர் பதிவேடு இல்லாத அந்தக் குழுவில் பலதரப்பட்ட நபர்கள். அவர்களைப்பற்றி பின்னால் சொல்லவேண்டும். அந்தக் குழுவில் அதிகம் பேசாத நபர் நான் மட்டுமே.
மதியம் நூலகத்தில் நிறைய நேரம் போகும்.உரையாடல்களில் கலந்துகொள்ளாவிட்டாலும் , நாலு பேர் மத்தியில் பொழுதுபோக என்னென்ன விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன்.
சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட்.
அதற்குத் தினசரிகளையும் வாரப்பத்திரிகைகளையும் படிப்பது அவசியம். டெக்ஸாஸ் கோப்பையில் ரிச்சர்ட்ஸ் அடித்த 189, ஆலன் நாட் கொடுக்காத காட்சை காட்ச்சாக மாற்றி அவுட் ஆக்கிய ஏக்நாத் சோல்கர், திண்டுக்கல் இடைத்தேர்தல், சமீபத்தில் வந்த படங்களும் அவற்றில் வந்த பிரபல பாடல்களும் என்று பலர் அளந்து விடும்போது ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பது ரொம்பக் கஷ்டம்.
விவரங்கள் தெரிந்திருந்தும், சில அதிகப்படி செய்திகள் கைவசம் இருந்தும் வாயைத் திறக்காமல் இருப்பதுதான் வழக்கம். என் அப்பா சொன்ன ஒரு கருத்து இதற்குக் காரணமாக இருக்கலாம்.
‘நாலு பேர் ஒரு விஷயத்தில் சர்ச்சை செய்யும்போது நாம் பேசாம இருந்தா நமக்கு ஒண்ணும் தெரியாதுபோல என்று மத்தவங்க நினைச்சுக்குவாங்க. நாம் ஏதாவது சொல்லிட்டா அவங்க நினைச்சது சரிதான்னு ஊர்ஜிதம் ஆயிடும்.’
தவிர கோர்வையா ரசிக்கும்படியாக, ஏன் குறைந்தபட்சம் புரியும்படியாக நமக்குச் சொல்லவராது என்று ஒரு அசாத்தியத் ‘தன்னம்பிக்கை’(?) இருந்திருக்கவேண்டும்.
அல்லது தத்துவரீதியா ஒரு விளக்கம் சொல்லலாம்.
ஆட்டுக்கே வாலை அளந்து வைத்த கடவுள் மனிதனுக்கும் எல்லாவற்றையும் அளந்துதான் வைத்திருக்கிறான்.சுவாசிக்க, நுகர ஆகிய இரண்டு வேலைகளுக்கு இரண்டு மூக்குத் துவாரங்கள். கேட்பது மட்டும் செய்யும் ஒரு வேலைக்கு இரண்டு காதுகள். பார்ப்பதற்குமட்டும் இரண்டு கண்கள். ஆனால் பேசுவதும் சாப்பிடுவதும் ஆகிய இரண்டு வேலைகளுக்கு ஒரே வாய். கண்ணும் காதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவில் எட்டில் ஒரு பங்குதான் பேச வேண்டும் என்றுதான் இறைவன் படைத்திருப்பான் என்று சொல்லலாம்.
அந்த இரண்டு வருடங்களில் இன்ஸ்டிடியூட், மாலை கோஷ்டி, நூலகம் போக மற்ற நேரங்களை வீட்டில்தான் கழிக்க வேண்டும். பகலில் தூங்குவதில்லை என்று தீர்மானமாக நான் இருந்தேன். வீட்டில் மதியம் தூங்காததற்கு மேலே சொன்ன பட்டுக்கோட்டையாரின் பழைய பாடல்மட்டும் காரணமல்ல. எங்கள் தெருவிலேயே ‘காஞ்சான் ’ என்று அறியப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் யார், அவன் உண்மைப் பெயர் என்ன, இந்தப் பெயருக்குக் காரணம் என்ன, அவனுக்கு என்ன வயது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வரவோ மரம் வெட்டவோ, சுமைகள் தூக்கவோ எல்லோருக்கும் காஞ்சான்தான். யார் வீட்டில் வேண்டுமானாலும் அவனுக்கு உணவு கொடுத்துவிடுவார்கள். பழைய வேட்டியோ, சட்டையோ அவனுக்குப் பஞ்சமில்லை. அதனை வைத்துக்கொள்ள இடம் யார் வீடு வேண்டுமானாலும் போதும்.
யாரும் வேலை சொல்லாதபோது எங்கே வேண்டுமானாலும், பெரும்பாலும் யார் வீட்டுப் புழக்கடையிலோ, வெறும் தரையாக இருந்தாலும் தலைக்கும் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் படுத்துவிடுவான். படுத்த இருபது வினாடிகளில் தூங்கிவிடுவான். கொஞ்சம் பலமாகக் குரல்கொடுத்தாலும் விழித்துக்கொள்வான். பிள்ளையார் கோவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டே தூங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவனும் அதிகம் பேசுவதில்லை . ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு ஜந்துவாகத்தான் அவன் எல்லோராலும் பார்க்கப்பட்டான். அந்தக் காஞ்சானிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளத்தான் நான் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டேனோ என்னவோ?
வீட்டிற்குள்ளேயே இருந்த நேரங்களில் அக்கம்பக்கம் உள்ள பெண்களுடன் அம்மாவின் அரட்டைக் கச்சேரி காதில் விழுந்தே தீரும். ‘இரண்டும் கெட்டான்’ போன்ற சில வார்த்தைகள் தெரிந்துகொண்டதும் அப்போதுதான். யாரையோ இரண்டும் கெட்டான் என்று குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் நானும் அப்போது அந்த சொல்லிற்குப் பொருந்திவருவேனோ என்று தோன்றியது. வளர்ந்து விட்ட சிறுவனோ, வளர்ந்து வரும் இளைஞனோ இல்லையே? அதனால் எளிதாக ‘இரண்டுங்கெட்டான்’ என்று சொல்லிவிடலாம் . ஆனால் அந்த வார்த்தையை இளக்காரமாகத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
மிதித்தால் கொத்திவிடும் பாம்பு என்று தாண்டிவிடவும் முடியாது, தாண்டினால் வறுமை வந்துவிடும் என்று சொல்லப்படும் பழந்துணி என்று மிதிக்கவும் முடியாது என்றெல்லாம் பழமொழி விளக்கம் பேச்சில் அடிபட்டுக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் எது தர்மசங்கடம் என்று எங்கேயோ படித்த விளக்கத்தை ஒரு பெண்மணி சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. ராமனுக்கு வாலிவதம் ஒரு தர்மசங்கடம் என்றுதான் சொல்லவேண்டும். மறைந்திருந்து கொன்றால் வீரத்திற்கு இழுக்கு. நேரில் நின்று போரிட்டுத் தோற்றுவிட்டால் ராஜ தர்மத்திற்கும் சினேக தர்மத்திற்கும் இழுக்கு. எந்தத் தவறைச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்யத்தானே வேண்டும்?..
ஒரு முனிவர் கண்களில் ஒரு காட்சி தெரிகிறது. பூச்சி தன்னைக் கவ்வவரும் பல்லியைக் கவனிக்காமல் இருந்தது. அந்தப் பூச்சியை கையைத் தட்டி விரட்டினால் பல்லியின் உணவைக் கெடுத்த பாவமும் அப்படிச் செய்யாவிட்டால் உயிர்வதைக்கு உடந்தையாக இருந்த பாவமும் சேருமாம். என்ன செய்வார் அந்த முனிவர்?
(என்னவோ சொல்ல ஆரம்பித்து எதையோ சொல்கிறேனோ?)
என்னைப்போன்று பள்ளிப் படிப்புமுடித்து வேலைக்குப் போக வயதாகாத ஒரு சிலர் டைப்பிங், சுருக்கெழுத்துதவிர தங்கள் குடும்ப வியாபாரம் அல்லது சிறுதொழில்களில் தந்தைக்கு உதவி செய்து வந்தார்கள். பக்கத்து கிராமங்களில் நிலமிருந்த குடும்பத்தைச் சேர்ந்த பையன்கள் விவசாயத்தில் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார்கள்
ராமாஜி என்கிற பள்ளித் தோழன் அப்பாவின் தச்சு வேலைகளில் உதவியாக இருந்து ஒரே வருஷத்தில் நேர்த்தியான தச்சர் ஆகிவிட்டான். தச்சுவேலையை ஒரு கலையாகத்தான் அவன் பார்த்தான். ஐந்தே வருடங்களில் எங்கள் ஊரிலேயே மிகச் சிறந்த ஃபர்னீச்சர் மார்ட் முதலாளியும் தொழிலாளியும் ஆக விளங்கினான். சொந்தமாக வீடு வாங்கும் அளவிற்குக் குடும்பம் முன்னுக்கு வந்தது. எங்கள் குடும்பத்திலேயே வியாபார நோக்கு கொண்டவர்களோ, கைவினைஞர்களோ கிடையாது. நிலபுலன்களும் கிடையாது.
யாரோ சொன்னார்கள் என்று கொஞ்சம் கதை, கவிதை ஆகியவற்றை நூலகத்தில் படிக்க முயற்சி செய்தேன். சரிப்படவில்லை. நன்கு படித்துப் பிறகு எழுதவும் ஆரம்பித்து இருந்தால் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் தமிழனாக நான் இருந்திருப்பேனோ என்னவோ?
இந்த நிலையிலிருந்து ஒரு விடுதலையைப் போல (என் வீட்டார் கருதியதைப்போல கடவுள் புண்ணியத்தில்) எனக்கு வேலை கிடைத்தது.
(ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டேனோ? முன்னே சொன்னபடி உடன் ஊர்சுற்றிய நண்பர்களைப்பற்றி இனி சொல்ல வேண்டியது தான். பிறகு இருக்கவே இருக்கிறது நான் வேலை பார்த்த லட்சணம்!)
( அப்புறம் என்ன? அப்புறம் பாக்கலாம்)