எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

Related image

சூரியதேவன் இதைக் கேட்டதும் ‘ ஆஹா , இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருக்கும்போது கவலை எதற்கு ?’ என்று மனதில் நினைத்ததுமட்டுமல்லாமல் வாய்விட்டும் கூறினான். ஸந்த்யாவின் மீது இருந்த காதல் வெறியில் அவளுக்காத் தன் உடல் பொருள் பிரகாசம் அனைத்தையும் இழக்கும் மன நிலையில் இருந்தான் சூரியதேவன்.

“விஸ்வகர்மா அவர்களே! கவலையை விடுங்கள். நானே என்னைப் படைத்த பிரும்ம தேவரிடம் சென்று, என் பிரகாசத்தின் அளவை ஸந்த்யா தாங்கும் அளவிற்கு நிரந்தரமாகக் குறைத்துக் கொள்கிறேன்.அதனால் உலகத்தில் எந்த மூலைக்கும் பாதிப்பு இல்லாமலும் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

 “வேண்டாம்! வேண்டாம்! ஸந்த்யாவின் பிறப்பு ரகசியத்தில் நான் குறுக்கிட்டதற்கே அவர் என்னிடம் கோபமாக இருக்கிறார். இதை அவர்  நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் இந்தக் காந்தச் சாணை பிடிக்கப்படவேண்டும். இந்தச் சிகித்சைக்குப் பிறகு தங்கள் திருமேனியின் செவ்வண்ணம் சற்றுக் குறைந்து கருமை படரக்கூடும். இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர் அதிகமாகும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பழைய பிரகாசம் வளரும். ஸந்த்யாவால் தங்களைத்  தாங்க முடியாதபோது மீண்டும் தாங்கள் இந்தச் சாணையைப் பிடித்துக் கொண்டால்  போதும்” என்றார் விஸ்வகர்மா.

“தங்கள் ஆசைப்படியே நடந்து கொள்கிறேன். தங்கள் ஆசியும் ஸந்த்யாவின் அன்பும் எனக்குக் கிடைத்தால்போதும்” என்று கூறி சூரியதேவன் அவரை வணங்கினான்.

ஸந்த்யாவின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. பெருமையில் அவள் உள்ளமும் பூரித்தது.

“ ஸந்த்யா! இப்பொழுதே அந்த சந்திரகாந்தச் சாணைச்   சிகிச்சையை நான் சொல்லிக் கொடுத்ததுபோலச் செய்துவிடு. இதை, ஒரு மனைவிதான் தன் கணவனுக்குச் செய்யமுடியும். பத்துப் பதினைந்து நாழிகைகளில் இதைச் செய்துவிடலாம். ஆனால், அது முடியும்வரை நீ சூரியதேவருடன் இணைந்துவிடக்கூடாது. அது மிக மிக முக்கியம். உங்கள் ஆசை எல்லை மீறினால் உன் மேனியை  அவரது கிரணங்கள் உருக்கிப் பொற்குழம்பாக  மாற்றிவிடும். அதன்பின் உன்னை பழைய உருவிற்குக் கொண்டுவருவது பிரும்மராலும் முடியாது. ஆகவே மகளே! இந்தக் கறுப்புத் திரையை உன் கண்களில் கட்டிக்கொள். இதன் வழியாக நீ அவரை நன்கு பார்க்கமுடியும். ஆனால் அவரின் வெப்பம் உன் கண் மூலமாக வந்து உன்னை ஊடுருவாது. உங்கள் இருவரையும் எமது ஆராய்ச்சிச் சாலைக்கு அழைத்துப்போக புஷ்பக விமானங்கள் வரும். மகளே உன் சமத்து! ” என்று கூறிவிட்டுக் கனத்த இதயத்துடன் விஸ்வகர்மா சென்றார்.

இரு விமானங்களில் தனித்தனியே சென்று மேரு மலையின்  அடிவாரத்தில் இருக்கும் ஆராய்ச்சிச் சாலைக்குக்குள் நுழைந்தார்கள்.

யாருமில்லாத அந்தத் தனியிடத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிந்தது. இருவர் இதயங்களும் வரப்போகிற ஆபத்தைப் புறக்கணித்துவிட்டு இணைந்து கொள்ள விரும்பின.அவ்வளவு ஆழமாக காமன் கணைகள் இருவர்மீதும் பாய்ந்திருந்தது.  ஆசை பயத்தை வெல்லுமா , இல்லை பயம் ஆசையை வெல்லுமா  என்பது  புரியாத  நிலையில் இருவரும் இருந்தார்கள்.

 உலகைப் படைக்குமுன்னே  ஒரு விதியையும் படைத்துவிட்டான் பிரும்ம தேவன்.

விதி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  விதியுடன்  நவ கிரகங்களும்  வேடிக்கை பார்க்கவந்திருந்தன.  

(தொடரும்)

இரண்டாம் பகுதி

எமியின் பேச்சைக்கேட்டு எமனும் திகைத்துவிட்டான்.

ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப்போல் பேசிய அவளை எப்படிப் பாராட்டுவதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அதிலும் தன் வாழ்வில் நடந்த அந்தத் துயரச் சம்பவங்களைப்பற்றி அவள் பேசியது அவனைப் பழைய நினைவுகளில் மூழ்கச் செய்தது.

அவன் எவ்வளவு முயன்றாலும் மறக்க முடியாத அந்த நாட்கள் !

எமியை அழைத்துக் கொண்டு அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக் களைக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“  சகோதரி! உன்னுடைய இன்றைய பேச்சு என் மனதில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டது. அதைப்பற்றி நாம் மேலும் பேச ஆரம்பித்தால் அது பெரிய கொந்தளிப்பில் கொண்டுபோய்விடும். அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது.  நாளை நாம் நரகபுரிக்குச் செல்வோம். அங்கு நீ பார்க்கவேண்டியது, செய்யவேண்டியது ஏராளமாக இருக்கின்றன. தற்போது நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்!. சித்திரகுப்தனிடம் எனக்குச் சற்று வேலை இருக்கிறது.அதை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன்” என்று கூறி எமன் புறப்பட்டான்.

அங்கே எமனுடைய அலுவலக அறையில் சித்திரகுப்தன் மூன்று பேரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான். வந்திருப்பவர்கள் பூலோகத்து ஆட்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் நால்வரும் எமனுடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

சித்திரகுப்தன் ஏற்கனவே இதைப்பற்றி எமனிடம் பலமுறை  விவாதித்திருக்கிறான். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் சிறிது அபிப்ராயபேதம் இருந்துவந்தது. சித்திரகுப்தன் காலங்காலமாகத் தன் தொழிலை மிகச் சிறப்புடன் செய்துவந்து கொண்டிருக்கிறான். அவன் செயல்பாட்டில் இதுவரை யாரும் குறை கூறியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எமன், சித்ரகுப்தனைத் தன் உதவியாளன் என்றோ அவன் ஒரு தனி உருவம் என்றோ எண்ணியதே கிடையாது. சித்திரகுப்தனைத்  தன் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்றே எண்ணினான். பல சமயம் அவனிடம், சித்ரகுப்தா! நீ தான் என் மூளை, நீ என் அருகில் இல்லையென்றால் நான் மூளையற்றவனாகி விடுவேன்’ என்று விளையாட்டாகச்சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒருவனைத்தான்  எமனும் தேடிக்கொண்டிருந்தான்.

தன் தந்தையின் வேண்டுகோள்படி தனக்குத் தர்மராஜன் பட்டம் கிட்டியதும் மனிதர்களின் மரணத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டது.  எமன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவன் அதற்குத் தகுதியானவன் என்பதை நிரூபித்துக் காட்டியபின்  சிவபெருமான் அளித்த  பதவிதான் அது. இந்த மாபெரும் பொறுப்பை நிர்வகிக்கத் தனக்குத் தக்க துணைவன் வேண்டும் என்று எமன் சிவபெருமானிடம் யாசித்தான். அப்போது சேர்ந்தவன்தான் சித்திரகுப்தன்.

சித்திரகுப்தன் எமனிடம் சேர்ந்ததே ஒரு சிறு கதை.      

கயிலாயத்தில் ஒரு தடவை பார்வதிதேவி விளையாட்டாக ஓவியம் ஒன்றை வரைந்தாள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதற்கு உயிர்கொடுங்கள் என்று பார்வதி சிவனை வேண்டினாள். சிவனும்  ‘சித்திரபுத்திரனே வா’ என அழைக்க சித்திரத்தில் இருந்து சித்திரகுப்தன் வெளிவந்தான். சித்திரகுப்த என்ற வார்த்தைக்கு ‘மறைந்துள்ள படம்’ என்று பொருள் என்று சிவன் பார்வதியிடம் விளக்கினார்.  

அதே சமயம் இந்திரன், தன் மனைவி இந்திராணி விளையாட ஒரு  குழந்தை வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிவந்தான். அகலிகை சாபத்தால் அவனுக்குக் குழந்தை பிறக்காது என்று உணர்ந்த சிவபெருமான்,  சித்திரத்தில் பிறந்த சித்திரகுப்தனை  இந்திரனுக்குப் புத்திரனாக இருக்கும்படி அருள்புரிந்தார். சிவபெருமான் ஆணைப்படி  சித்திரபுத்திரன்  காமதேனுவின் வயிற்றில் உதித்து, ஏடும் எழுத்தாணியும் கையில் பிடித்து அவதரித்தான்.  

சித்திரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்கவேண்டும் என பார்வதி விரும்பினாள். அந்த நேரத்தில் ‘மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்லத்  தனக்கு உதவியாளர் வேண்டும்’ என்று எமதர்மராஜன், இறைவனை வேண்டிநின்றார். சித்திரகுப்தனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து, எமதர்மனின் உதவியாளராக நியமித்தார் சிவபெருமான்.

சித்திரகுப்தன் தன் ஏடுகளில் உயிர்களின் பாப புண்ணியக் கணக்கைத் துல்லியமாக ஆராய்ந்து  எழுதிவந்தான். மரணத்திற்குப் பிறகு தர்மராஜனிடம் அந்த உயிர் நிற்கும்போது, சித்திரகுப்தன் கையில் உள்ள ஏடுகள் அசையும். அந்த உயிர் செய்த பாபங்கள் புண்ணியங்கள் துலாக்கோலில் நிறுக்கப்படும். அதன் அடிப்படையில் எமன் தீர்ப்பை வழங்குவான். அந்த உயிர் செல்ல வேண்டிய இடம் சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா என்று. அதுமட்டுமல்லாமல் நரகபுரியில் அந்த உயிருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதும்  சித்திரகுப்தனின் ஏடுகளில் கண்டுள்ள கணக்கின் அடிப்படையில்தான் நடைபெறும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பலகோடி மக்களின் தகவல்களை ஏட்டில் எழுதிவந்த சித்ரகுப்தனுக்கு  ஏன் அவற்றை ஒரு கருவியில் பதிவு செய்து பின்னர் தேவைப்படும்போது மென்பொருள் மூலம் அவற்றை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. எமனுக்கு இது அவ்வளவு சரியாகப்படவில்லை. இதுவரை செய்த பணி சிறப்பாக இருக்கும்போது புதிய செயல்பாடு எதற்கு என்று வினவினான்.

“ நான் என் வேலையை மிகமிகச் சிறப்பாகச் செய்கிறேன் என்றால் அதைவிடச் சிறப்பாக புதிய முறையில் அந்த வேலையைச் செய்யத் திட்டமிடவேண்டும். இல்லையென்றால் இயந்திரத்தைப்போல மூளையும் பழுதாகிவிடும். செயல்பாட்டிலும் குறை வந்துசேர்ந்து விடும் ”  என்றான்.

சித்திரகுப்தன் கூறிய பதில் எமனை யோசிக்க வைத்தது. முடிவில் சம்மதிக்கவும்  வைத்தது. 

அதன் விளைவாகப்  பூலோகத்திலிருந்து மென்பொருள் வல்லுனர்கள் எமபுரிப்பட்டணத்திற்கு  வந்துள்ளனர்.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.