அசோகமித்திரனும்ஹார்மோனியமும்!
அசோகமித்திரனின் ‘நண்பனின் தந்தை’ தொகுப்பில் (நற்றிணை பதிப்பு) ஹார்மோனியம் சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன் – ஷீர்டி சாய்பாபா வண்டியில் ஒலிபெருக்கியில் பஜன் ஒலிக்கிறது – மஞ்சள் வேட்டி கட்டிய ஒருவன் கையில் ஹார்மோனியத்துடன் வண்டியைத் தள்ளி வருகிறான் – தெருமுனையில் பாடுவானாம்– இவனுக்கு ஹார்மோனியம் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தந்தையாக இருக்கலாம். அவன் பாடல் ஒலிபெருக்கியின் பாடலைவிட நன்றாக இருக்கிறது! நான்கைந்து கட்டைகளை மட்டும் அழுத்தி, பாட்டின் முழு வடிவமும் வருவதாக எழுதுகிறார். போகிற போக்கில் நேருவுக்கு ஹார்மோனியம் தெரிந்திருக்காது, பாரதியாருக்கும் ,ரவீந்திரருக்கும் ஹார்மோனியம் பிடிக்காது, ஆந்திராவில் ரயிலில் ஹார்மோனியப் பிச்சைக்காரர்கள் உண்டு என்று சொல்லி, ஹார்மோனியத்தில் கடவுள் உண்டு என்று முடிக்கிறார்!
மண்டைக்குள் கொஞ்சம் ஹார்மோனியம் நினைவுகள் பெல்லோஸ் (BELLOWS) போட்டன!
அந்தக் காலத்தில் விடியவிடிய நடக்கும் இசை நாடகங்கள், கூத்துக்கள் இவற்றின் மெயின் பின்னணி வாத்தியம் ஹார்மோனியம்தான்! ஸ்ருதி சேர்த்து, உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்கள் – மைக் இல்லாத காலங்கள்! – வசனங்களை விடவும் மிகவும் பிரசித்தி பெற்றவை! பாடகரின் ஸ்ருதியுடன் ஒன்றாகி, உடன் ஒலிக்கும் முக்கியமான இசைக்கருவி ஹார்மோனியம். எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள் போன்ற அந்தக்காலக் குரல்கள் நாடகமேடையை ஹார்மோனியத்தின் துணையுடனேயே ஸ்ருதி கூட்டின!
முன்னமே வேறு வடிவங்களில் இருந்தாலும், 1840 ல் அலெக்சாண்டர் டீபைன் என்னும் ப்ரெஞ்சுக்காரர்தான் முதன் முதலில் பெயரிட்டு, ஹார்மோனியத்தை வடிவமைத்துக் காப்புரிமையும் பெற்றார்!
காற்று மூலம் ஒலியெழுப்பும் காற்று வாத்தியம் – (வாயினால் காற்று ஊதி வாசிக்கும் புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்று) துருத்திகள் மூலம் (BELLOWS) காற்றை ஊதி ஒலியெழுப்பப்படும் ‘பைப்ஆர்கன்’, மேலைநாட்டு அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளின் மறுவடிவமே ஹார்மோனியம்! நம் பாரம்பரிய வழக்கப்படி, அமர்ந்து வாசிக்க வடிவமைக்கப்பட்டது! தோளின் குறுக்கே பட்டையில் கட்டி, நின்றபடியேவும் வாசிப்பவர்கள் உண்டு!
செவ்வகப் பித்தளைத் தகடுகள்மேல் துருத்திக்கொண்டிருக்கும் மெல்லிய தகடுகள், ஊதும் காற்றினால் அதிர்வடைந்து, இணைக்கப்பட்டிருக்கும் ஸ்வரக் கட்டைகளுக்கேற்ப ஒலியெழுப்பும்! ஆரம்பகாலத்தில் காற்றுத் துருத்தியைக் காலால் பெடல் செய்து ஒலியெழுப்பினர் – “கால்ஹார்மோனியம்” ! பின்னர் இடது கையினால் துருத்தியை அசைத்து, காற்று ஊதப்பட,வலது கை விரல்கள் (சுண்டுவிரல் தவிர!) ஸ்வரக்கட்டைகள் மீது வழுக்கி, நாட்டியமாட, ஸ்வரங்கள், ராகங்களாக வாசிக்கப்படுகின்ற அதிசயம் அரங்கேறியது!
வடக்கிந்திய இசையில் ஹார்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு – ஹிந்துஸ்தானி, கஜல், அபங்க் என எல்லாவகைப் பாடல்களுக்கும் முக்கிய பக்கவாத்தியம் ஹார்மோனியம்தான்! (சிலருக்கு சாரங்கிதான் பிடிக்கும்!). பீம்சென் ஜோஷி போன்றோருக்கு ஹார்மோனியமே பிரதானம் – ஹரிஹரன், பங்கஜ்உதாஸ், ஜெகஜித்சிங் கஜலுக்கும் அதுவே பக்கவாத்தியம்!
தென்னிந்தியாவில், பஜனைகள், நாம சங்கீர்த்தனங்களில் அதிக அளவில் ஹார்மோனியம் வாசிக்கப்படுகிறது. கர்னாடக சங்கீத நுட்பங்கள் ஒரு சில வாசிப்பது சிரமம் என்பதால், ஆல் இண்டியா ரேடியோவில் 1940 முதல் 1971 வரை ஹார்மோனியம் வாசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது – இன்று எப்படியோ தெரியாது. இப்போதெல்லாம் கீபோர்டுதான் எனக் கேள்விப்படுகிறேன்.
முதன் முதலில் நண்பர் ஒருவர் ’பேசிக்’ மாடல் (சிங்கிள் ரீட்) ஹார்மோனியம் ஒன்று கொடுத்தார். நானும் ஒரு கீபோர்ட்ஆர்டிஸ்டை (அவர் ஒரு சிறந்த இசைவல்லுனர் – கர்னாடக சங்கீதத்தில் பாடல்கள் இயற்றி, கீபோர்டில் இசையமைப்பார் – இசையை ரசிப்பதே ஒரு கலை – அதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்!) குருவாகக் கொண்டு கொஞ்சநாள் இசைப்பயிற்சி செய்தேன்! தொடர்ந்து பயிற்சி செய்யாமல் விட்டு விட்டேன் – குருவின் பெயர் தப்பித்தது!!
மைலாப்பூரில் செம்பை சிஷ்யர் ஒரு பாட்டு வாத்தியார் – மறைந்த நண்பர் தாமஸ் மூலம் அவர் அறிமுகம் – சில நாள் அவரிடம் ’பாட்டு கிளாஸ் ’க்குப் போனேன் (தோளில் ஜோல்னாப் பையில் சாம்பமூர்த்தி இசைப் புத்தகம்!) – சில ராகங்கள், சில சின்னப் பாடல்களுடன் நிறுத்திக்கொண்டேன் – அதற்குமேல் அவர் பொறுமையை சோதிக்க எனக்கு மனமில்லை! அவரிடம் ஒரு அருமையான டபுள் ரீட் ஹார்மோனியம் இருக்கும் – சா…பா…சா – நம் குரலுடன் இழையும்போதே, பிசிரில்லாததாய்த் தெரியும் உலகம்!!
ஹார்மோனியத்துடன் பாடல் என்றால் முதலில் என் நினைவுக்கு வருபவர் பித்துக்குளி முருகதாஸ் – அவரது பக்திப் பாடல்களின் ஜீவனே ஹார்மோனியத்தில்தான் என்று கூட நான் நினைப்பதுண்டு!
திரைப்பட இசையமைப்பாளர்கள் – ஒரு சிலரைத் தவிர – ஹார்மோனியம் துணையுடன்தான் மெட்டுக்கள் போடுவார்கள். எம் எஸ் வி, மஹாதேவன் இசையமைப்பில் ஹார்மோனியம் பல பாடல்களில் கூடவேவரும். எம் ஜி ஆரின் ’நாடோடி’ யில் எல்லாப் பாடல்களுக்கும் ஹார்மோனியம்தான் பேஸ் – ஹீரோ ஒரு தெருப்பாடகன்! (நாடு, அதை நாடு, அன்றொருநாள் இதே நிலவில் பாடல்கள் காலத்தினால் அழியாதவை!). இளையராஜாவின் அம்மன் கோயில் கிழக்காலே, காசி படப் பாடல்களில் ஹார்மோனியம் அழகாகச் சேர்க்கப்படிருக்கும்!
“ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” – பாலச்சந்திரராஜு அவர்களின் நல்ல புத்தகம். (மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு). வாசித்திருக்கிறேன் – நான் புத்தகத்தைச் சொன்னேன்!