
மீண்டும் டாக்டர் வைகுண்டம்
———————————————
“ நீங்க புது பேஷண்டா?”
“இல்லெங்க. நான் ஏற்கனவே ஒரு சர்ஜரிக்காக இங்க வந்துருக்கேன்!”
”அப்போ உங்க ஃபைல் நம்பர் சொல்லுங்க”
“நான் இப்போ பேஷண்ட்டா வரலை”
”பின்னே?”
“டாகடர் ராதா நகுலனைப் பார்க்கவந்திருக்கேன்”
“சீஃபையா? இப்போவா? முடியவே முடியாதும்மா. பாத்தீங்க இல்ல, எவ்வளவுபேர் காத்துக்கினு இருக்காங்க”
“எம்பேர் சொல்லி நான் வந்திருக்கேன்னு சொல்லுங்க. அவங்க விருப்பப்பட்டா பாக்கறேன், இல்லென்னா போய்டறேன்!”
“என்னம்மா நீங்க! கைல குழந்தையோட வேற இருக்கீங்க! சரி, அப்படி உக்காருங்க, இப்ப உள்ள போயிருக்கற பேஷண்ட் வந்துடட்டும். நான் போய் சொல்றேன்”
தாங்க் யூ!
தடாலென்று அந்தக்கதவு திறந்தது. புயல் மாதிரி வெளியே வந்த டாக்டர் ராதா நகுலன், “ஸ்வேதா! எப்பிடி இருக்கே? க்ரீச்சிட்டுக் கத்தியவாறே ஒடிவந்து இவளை அணைத்துக்கொண்டாள்.
“எப்போ வந்தே? ஏன் காத்துண்டு இருக்கே? நாந்தான் படிச்சுப்படிச்சு சொல்லியிருக்கேனே, நீ நேரே உள்ள வரலாம்னு. உன்னை யாரானும் இங்க காத்திருக்கச்சொன்னாங்களா?
படபடவென்று பொரிந்தார்.
பயந்தவாறே அந்த ரிசப்ஷனிஸ்ட் ஸ்வேதாவைப்பார்த்து, “போட்டுக்கொடுத்திடாதே” என்று கண்களாலேயே கெஞ்சினாள்.
ஓ! யுவர் ஸ்வீட் சைல்ட்! அமெரிக்காவுக்குப்போய்ட்டே. இல்லேன்னா நாந்தான் இவள டெலிவரி பண்ணியிருப்பேன்! வாட்ஸ் ஹர் நேம்?
“டாக்டர்! நீங்க எனக்குக் கொடுத்த வரம் இவள். வேறென்ன இருக்க முடியும் பேர் ராதாதான்!
“ஸ்வேதா! ஸ்வேதா! டாக்டர் ராதா நகுலன், அந்த மிகப்பெரிய நர்சிங் ஹோமின் தலைவி, தன்னுடைய வெயிட்டிங்க் ஹாலில் காத்துக்கொண்டிருந்த அவளுடைய பேஷண்ட்டுகளான, நேற்றைய, இன்றைய, நாளைய தாய்மார்களின் மத்தியில் கூச்சமின்றி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே ஸ்வேதாவை கட்டிக்கொண்டார்.
”இங்க யாரும்மா ஸ்வேதா? கூட வந்திருக்கிறது யாரு?”
”இதோ நாங்கதான்.’
”வாங்க, டாக்டர் கூப்டறாரு”
டாகடர் மல்லிகார்ஜுன ராவ் கண்ணாடியை ஒரு முறை துடைத்துப் போட்டுக்கொண்டார். மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை ஒரு முறை உருட்டி வைத்தார். நாற்காலியின் கைப்பிடியில் இருந்த டவலால் கையைத் துடைத்தார். முகத்தில் கவலை ரேகைகள்.
“வாங்கம்மா! வா ஸ்வேதா! உக்காருங்க, நீங்களும்தான்”
“பரவாயில்லை டாக்டர்”
“ஸ்வேதா அப்பா வரலியா?”
அவர் ஆஃபீஸ் விஷயமா காக்கிநாடா டூர் போயிருக்கார் டாக்டர்”
சரி, டெஸ்ட் எல்லாம் பார்த்தேன்மா. ஸ்வேதாவுக்கு வந்திருக்கிறது அப்பெண்டிஸைடிஸ் இல்ல. அவளுடைய ஓவரியில ஸிஸ்ட். அதும் பெரிசா இருக்கும்மா. மலிக்நண்ட் இல்லாம இருக்கணும். அந்த ராகவேந்திரர்தான் காப்பாத்தணும்.
அம்மா விசும்ப ஆரம்பித்தாள்.
”பயப்பட வேண்டாம்மா! சர்ஜரி பண்ணி எடுத்திடலாம். இப்பல்லாம் மெடிசன் ரொம்ப தூரம் வளர்ந்துடுத்து”
உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லியே?’
”ஒரு ஆபத்தும் இல்லேம்மா! ரொம்ப ஈஸியா எடுத்துடலாம்”
”நல்ல வேளை டாக்டர். பயந்துட்டேன்”
“அம்மா! சர்ஜரியில ஒவரியையே எடுக்கணும்”
“டாக்டர்!
ஆமாம்மா! உயிர்தான் முக்கியம் இல்லியா? ஸிஸ்டர்! ஸ்வேதாவை அழைச்சிண்டுபோய் வெய்ட், எல்லாம் எடுத்துடுங்களேன்”
ஸ்வேதா நகர்ந்ததும், “என்ன அம்மா! நீங்களே இப்படி பதட்டப்படலாமா? குழந்தைக்கு என்ன தெரியும்?”
டாக்டர்! அவளுக்கு கல்யாணம், குழந்தைன்னு…”
“இந்தக்காலத்துல பையன்கள் எல்லாம் ரொம்பப் பரந்த மனஸும்மா. குழந்தை பொறக்காட்டி என்ன, அடாப்ட் பண்ணிக்கலாமே”
”டாக்டர்! அவளுக்கு 17 வயசுதான் ஆகறது. இந்த வயசுல ஓவரி ரிமூவல்ன்னா……எனக்கே தாங்க முடியல்லியே”
“என்னமா பண்ணறது! வராத வ்யாதி வந்துடுத்து. நமக்கு இப்போ ஸ்வேதாவோட உசிரு முக்கியமா இல்லியா?
அய்யோ! ஆமாம் டாக்டர்!
“ஒண்ணும் கவலைப்பாடாதீங்கம்மா! நானே ஜெனெரல் சர்ஜந்தானே! நானே அவளுக்கு ஜாக்கிரதையா ஆபரேஷன் பண்ணிடறேன். நீங்க நாளைக்கே அட்மிட் ஆகிடுங்க. இங்க பண்ணினா செலவும் கம்மிதான். ஒண்ணரை லட்சம்தான் ஆகும், இதுவே நீங்க ……அங்க போனீங்கனா சுளையா அஞ்சு லட்சம் எடுத்து வையிம்பான்”
“நாளைக்கு வேண்டாம் டாக்டர்! அவ அப்பா நாளன்னிக்கி வந்துடுவார்”
”லேட் பண்ணினா ஸிஸ்ட் பர்ஸ்ட் ஆயிடும். அப்புறம் என்ன குறை சொல்லக்கூடாது”
”ஒரு நாள்தானே டாக்டர்!”
”சரிம்மா, கண்டிப்பா நாளன்னிக்கு வந்து அட்மிட் ஆகிடுங்கோ”
“என்னது ஓவரி ரிமூவலா? வெளயாடறியா? பேஷண்ட் 17 வயசுப்பொண்ணுன்னு சொன்னியே?”
”ஆமாம் ப்ரொஃபசர்!”
”யாரவன் அந்த டாக்டர்? நீயா நரசிம்மா?”
”அய்யோ! நானில்லை. டாக்டர் மல்லிகார்ஜுனன்!”
“டாக்டரா? அவன் ப்ளம்பர்யா ! யூஸ்லெஸ் ஃபெல்லோ! சரி, நீ ஒண்ணு பண்ணு! அந்த ரிப்போர்ட் எல்லாம் எனக்கு அனுப்பி வை. ஆமாம், இன்னிக்கே”
நரசிம்மா?”
“சொல்லுங்க ப்ரொஃபசர்”
”ரிபோர்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். அந்த சின்னப்பெண்ணையும் அவளோட அம்மாவையும் என்னை வந்து பார்க்கச்சொல்லு!”
”எஸ்! இன்னிக்கே நாலு மணிக்கு!”
“வாங்க! யூ மஸ்ட் பி ஸ்வேதா!”
அழாதீங்கம்மா! நீங்களே அழுதா குழந்தை என்ன பண்ணுவா?
”டாக்டர்! என் குழந்தைக்கு ஏன் இப்படி ஆகணும்?”
”அதுக்கெல்லாம் என் கிட்ட பதில் இல்லம்மா. நாங்கள்ளாம் வெறும் டாக்டர்கள். முடிஞ்ச வரைக்கும் எங்களுக்குத் தெரிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணறோம், அப்புறம் அந்த ரங்கனாதன்தான் அம்மா!
”டாக்டர்! நீங்களே வைகுண்டம் ஆச்சே! எங்களுக்கு நீங்கதான் கதி”
”நான் வெறும் வைகுண்டம்னு பேரு வெச்சவன்மா. இதெல்லாம் ஆண்டவன் செயல்.”
”நீங்கதான் எங்களுக்கு இப்போ ஆண்டவன் டாக்டர்.”
“பாக்கலாம்மா! என்னால முடிஞ்சவரைக்கும் பாத்துடலாம். இது கைனெக் சமாச்சாரம். அதனால நானே அட்டெண்ட் பண்ண முடியாது. சரியான ஒரு எக்ஸ்பர்ட் தேவை. நா கூட இருந்து உதவியும் பண்ணறேன். 17 வயசு. இப்ப போய் ஓவரிய எடுன்னு சொல்றது கொடுமை. கைனக்கிட்ட அனுப்பறேன். போய்ப்பாருங்க. அவ கைனக் மற்றும் சர்ஜன்கூட. அவகிட்டெ போங்க. நான் பேசறேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க பொண்ணுக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் ஆகி உங்க கையில் பேரனோ பேத்தியோ குடுக்கத்தான் போறா?
யாருகிட்ட அனுப்பப்போறீங்க டாக்டர்?’
டாக்டர் ராதா நகுலன்.