(படங்கள்: தாரே ஜமீன் பர் என்ற படத்திலிருந்து)
நரம்பியல் டிபார்ட்மெண்ட்டில் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்தது. மனதிற்குப் பிடித்தாற்போல், நிறையக் கற்றுக் கொடுக்கும் நிறைவான இடம்! காலை எட்டு மணியிலிருந்து சுறுசுறுப்பாகத் துவங்கி, மதியம் 12 மணி வரையில் அதே வேகத்துடன் ஓடும்!
சேர்ந்த அடுத்த மாதமே, எங்கள் சீஃப், டிபார்ட்மெண்ட் நடத்தி வரும் பள்ளிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்.
“ஸ்பெஷல் சில்ரன்” என்ற அழகான பெயர் மூளை வளர்ச்சிக் குறைவினால் பாதிக்கப் பட்டவர்களைக் குறிக்கும். மருத்துவத் துறையில், “இன்டெலக்சுவல் டெவெலப்மெண்ட் டிஸார்டர்” (Intellectual Development Disorder) என்பார்கள். முன்பு, “மென்டலி ரிடார்டட்”(Mentally Retarded) என்று குறிப்பிட்டார்கள். இது, குறையை மட்டும் காண்பிப்பதால் அதனை மாற்றி எதனால் குறைபாடு என்பதைக் குறிக்கும் பெயராக மாற்றி அமைத்தார்கள்.
இவர்களுக்கான பள்ளியின் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். ஆர்வம் இருந்தது. வயது 22, “சமாளிப்போமா?” என்ற சிந்தனையும் எழுந்தது! காலையில் பேஷன்ட் தகவல்களை எடுத்து, என் கணிப்பை டாக்டரிடம் விவரித்தபின் ஸ்கூலுக்குப் போவேன்.
குழந்தைகள் 9.30க்கு வரத் தொடங்குவார்கள். அதற்குள், 5 டீச்சர்களும் வந்துவிடுவார்கள். ஸ்கூலைச் சுத்தம் செய்யும் ஆயா, வயதானவள், எங்களின் பக்க பலம். எல்லாம் சுத்தமாக வைத்து விடுவாள். 9:15க்கு ஸ்கூல் வாசலில் இருப்பது என்று முடிவாக இருந்தேன்.
முதல் நாள் பரபரப்பு குழந்தைகள் வர ஆரம்பமானது.
எங்கள் ஸ்கூலுக்கு வருபவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஸெரிப்ரல் பால்ஸி, ஸ்பைனா ஃபைஃபிடா (Spina Bifida), என்று பல்வேறு விதமானவர்கள் – 4 முதல் 20 வயது வரையில்.
14 குழந்தைளும், புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னார்கள். அவர்கள் என்னைப் பார்த்து, “புது மிஸ், குட் மார்னிங்” சொன்னதில், எனக்கு அவர்களின் தைரியம் தெரிந்தது.
இன்னும் ஒரு குழந்தை வரவில்லையே என்று நினைத்தபோது, உருமலுடன், கைகளை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, தலையை இரு திசையிலும் அசைத்தபடி, ‘உம்,உம்’ என்ற சத்தத்துடன் ஒரு பையன் வந்தான். உடனே, என்னைச் சுற்றி இருந்தவர்கள் சலசலப்புடன் விலகிச்சென்றார்கள்.
யாரையும் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பது , எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவன் வருவது, அவன் பின்னாலேயே அவன் பாட்டி ஓடிவந்தது, மற்றவர்கள் எல்லோரும் விலகிச்சென்றது, இவை அனைத்தும் பார்த்ததும், என் மனக்கண்ணில் சின்ன விநாயகர் குறும்புத் தோற்றத்தில் வருவதுபோல் தோன்றியது. பாட்டி ஓடிவந்து, பத்து ஸாரி சொன்னாள். கதவிலிருந்து, பத்து அடி தான் நடந்திருப்பான். அப்படியே, அங்கேயே உட்கார்ந்துவிட்டான். உடனே ஒருத்தர் “போச்சுடா” என்றதும் பாட்டி, “மேடம், என்ன பண்ண? அவன் நகரமாட்டான்” என்றாள். “சரியான கேஸ்” என்று சீனியர் டீச்சர் சொன்னாள். “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.” படத்தின் மிஸ்டர். ஆனந்த்தைப்போல அவனை எல்லாரும் “கேஸ்” என்றே அழைத்தார்கள்.
குழுந்தையுடன் வந்த பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எல்லோரும் அங்கிருந்து விலகியதும் திரும்ப அதே கையை ஆட்டிக்கொண்டு “உம்,உம்”. என்று வந்தான். ஆனால் அவன் கண்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.
அவன் பெயர் கிருஷ்ண குமார். வயது ஏழு, அதிகமான எடை, அவன் அருகில் போனால், சிலந்திமீன்போல் அவன் கை ஆடும். நாம் அதைப் பிடிக்கப்போனால் அவன் சத்தமும் அதிகமாகும். பாட்டிதான் சாப்பாடு ஊட்டவேண்டும். எதையும் செய்யமறுப்பானாம். தானாக டிங்டாங் ராக்கிங் பொம்மைபோல சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ஆடிக்கொண்டிருந்தான். என்னமோ, எல்லோருக்கும் இவன்மேல் பயமும், வெறுப்பும் இருந்தமாதிரியே தோன்றியது.
பாட்டிக்கு 60 வயதிருக்கும். அவர்களுக்கு, கிருஷ்ண குமார் பையன் வழி, மூன்றாவது பேரன். பிறக்கும்பொழுது அவன் தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இருந்ததால், மூச்சுத் திணறியது, பிறந்தவுடன் தொடர்ந்து வலிப்பு வந்ததையும் கூறினாள் (மூன்றுமே மூளை வளர்ச்சிக்கு ரிஸ்க் ஃபாக்டர்). இவன், மூன்றாவதாகப் பிறந்ததால், பெற்றோர் இப்படிப்பட்ட குழந்தை தேவை இல்லை என்றார்கள். பாட்டி பராமரிப்பை ஏற்றுக்கொண்டாள் (தாத்தாவின் பென்ஷன், பக்கத்துணை).
பாட்டி விவரங்களைச் சொன்னாளே தவிர, கிருஷ்ண குமாரின் பெற்றோர்களின் நிராகரிப்பைப் பெரிதுபடுத்தவில்லை. அவளின் மன உறுதி, தைரியம், தெளிவு ஆகியவற்றைப் பார்த்தால் ராணி மங்கம்மாபோல் தோன்றியது.
பேரனுடைய மூளை வளர்ச்சி தாமதிப்பதைப் பார்த்து, பாட்டி இந்த ஸ்கூலைக் கண்டுபிடித்து அவனைச் சேர்த்தாள். வந்ததிலிருந்து 5-10 அடிகூட அவன் நடந்ததில்லை என்றாள்.
ஸ்கூல் வேலைகளைச் செய்யும்போது நான் கிருஷ்ண குமாரைத் தாண்டிப் போகவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், அவனிடம் சொல்லிக்கொண்டே போவேன்: “கிருஷ்ண குமார், நான் …செய்வதற்காகப் போகிறேன்” சில சமயங்களில் குறிப்பாக “மார்ட்டினோட சற்று படித்துவிட்டு வருகிறேன்” என்றும் தெரிவிப்பேன்.
அவன், யாரும் தன்னைத் தொடக்கூடாது என்பதுபோல் இருந்தான். இதை மாற்ற, இப்படி, அப்படிப் போய்-வரும் பொழுது, என் தலைப்பு, அவன்மேல் பட்டுவிடும்படி செய்தேன், அவனுடன் ஒரு இணைப்பை உருவாக்கவே! அவன் அருகில் வரும்பொழுது, அவனை அழைப்பதுபோல் குரல் கொடுப்பேன். அவன் சத்தம் முதலில் பலமாக இருந்தது. மெல்ல, ஒரு மாற்றம் தோன்றியது.
இத்துடன், அவன் கைக்கு எட்டும் தூரத்தில் உட்கார்ந்து, அவனுக்கு வர்ணங்களைக் காட்ட ஆரம்பித்தேன். “பார், இந்த ப்ளாக் கலர், இதை இப்படி நிற்க வைக்கலாம்”. பதிலுக்கு அவன் “உர் உர்” என்றான். மெதுவாக, ஒரு இஞ்ச் நகர்ந்து, அவன்கிட்டே வருவேன். பொருட்களை வைத்தாலும், எடுப்பான், வைத்துவிடுவான். ஒன்றும் பெரிதாக மாறவில்லை.
சில நாட்கள் போக, அவன் உட்காரும் இடத்தில் பந்தை வைத்தேன். உட்கார மறுத்தான். பந்தை எடுத்தவுடன், தொபக்கட்டீல் என்று உட்கார்ந்தான். பந்தை உருட்டி அவனுக்கு அனுப்பினேன். கூடவே இன்னொரு குழந்தையையும் சேர்த்துக் கொண்டபின்பு, ஆர்வம் காட்டினான். பந்தினால், மற்றவருடன் இன்னொரு சின்ன இணைப்பு ஏற்பட்டது.
எப்பவும்போல, நான் போக-வர அவனிடம் நான் செய்யப் போவதைச் சொல்வது தொடர்ந்தது. நீங்கள் நினைக்கலாம், அவனுக்கு இது புரியவா போகிறது? என்று. என்னைப் பொறுத்தவரை, இவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகள் உண்டு. அதை மதித்தேன். பேசுவதைக் கேட்டால் பரிச்சயம் உண்டாகும். மெதுவாக, நான் போவது-வருவதைக் கவனிப்பது அவனுடைய தலை அசைவில் தெரிந்தது. உர் சத்தமும் குறைந்தது.
அவன் பாட்டியையும் சேர்த்துக்கொண்டேன். இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பெயர் சொல்வது என்று ஆரம்பித்தோம்.
பாட்டியுடன் வேதா என்ற இன்னொரு குழுந்தையைச் சேர்த்தேன். முதலில் முரண்டு பிடித்தான். பிறகு இருவருக்கும் பாட்டி சமமாகக் கவனம் செலுத்த, அமைதி நிலவியது.
பல நாட்கள் ஓடின. நான் வேதாவிடம் “உன் பழைய இடத்திற்கு இவனையும் கூட்டிச்செல், அவனுக்கு அங்கே என்னவெல்லாம் இருக்கு என்று காட்டலாம்” என்றேன். கிருஷ்ண குமார் சென்றான், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத் தன்னுடைய இடத்திற்கு வந்து விட்டான்.
யாராக இருந்தாலும், புதியதாக ஒன்றைத் தொடங்கத் தயக்கம் இருக்கத்தான்செய்யும். கிருஷ்ண குமாருக்கு அது அதிகமாக இருந்தது. ஏனோ, இவனை மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவனாக மட்டும் பார்க்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
இப்போது, இன்னொரு யுக்தி கையாண்டேன். நான் ஸ்கூலுக்குள் எங்கு சென்றாலும் (எங்கள் ஸ்கூல், சின்னது) கிருஷ்ண குமாரையும் கையைப் பிடித்து என்னுடன் அழைத்துச்சென்றேன். இதனால், அவனுக்கு இன்னொருவரின் ஸ்பரிசத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. பாட்டியை விட்டுவிட்டு, நானோ, ஆயாவோ சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தோம். அவனுடைய ‘உர்உர்’ முற்றிலுமாக நின்றது.
அதற்குப்பிறகு மற்ற குழந்தைகளையும், அவர்களின் டீச்சரையும் அவன் உட்காரும் இடத்திற்கு வரச்சொல்லிப் பாட்டுப் பாடுவதைத் தொடங்கினோம். அந்த டீச்சரும், அவனைப் புரிந்து கொண்டாள். அவர்தான் அவனை “கேஸ்” என்று முன்பு பெயர் சூட்டியவர். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவனும் பாட ஆரம்பித்தான். அதனால், அவர்கள் எல்லோரும் இருக்கும் இடத்திற்கே அவனையும் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தேன். நான் ஆயாவைக் கிருஷ்ண குமாருக்கு உதவி செய்யச்சொன்னேன். அவன் தயங்கித் தயங்கிப் போனான். அரை மணி நேரம் உட்கார்ந்தான். திரும்ப எழுந்தான், கீழேயே உட்கார்ந்தான், அவர்கள் பக்கத்திலேயே!
அங்குள்ள குழுந்தைகளைக் கூட்டிவந்து பள்ளி விடும்வரை காத்திருக்கும் அம்மா, தாத்தா, பாட்டிகளுக்கு உதவ ஓர் உதவிக் குழு ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் அவர்கள் கேள்வி கேட்டு, எங்களின் டாக்டர்களோ, நானோ விளக்கம் அளிப்பதாக முடிவுசெய்தோம்.
அந்த அரைமணி நேரம் மிகவும் உபயோகமாக இருந்தது. இங்குள்ள குழந்தைகள்பற்றிய விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை மாலை, டீச்சர்கள் குழுவாக அதில் கலந்து கொள்ளவைத்தேன். ஏன், எப்படி என்ற விவரம் அறியத் தொடங்கியதும் அனைவரது ஒத்துழைப்பும் அதிகரித்தது.
இந்தக் குழந்தைகளைச் சமுதாயம், பாவமாகவும், பாரமாகவும் பார்க்கும். அதைப்போன்ற விஷயங்களைப் பகிர்வதற்கு இது ஒரு நல்ல இடமாக அமைந்தது. பகிர்ந்து கொள்ளும் சூழலில் “எனக்கு, இது ஏன் நேர்ந்தது” என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
ஒரு அம்மா இதை அழகாக விளக்கினாள்.
“வேறு யார் இவர்களை கவனிப்பார்கள்? நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (We are the Chosen one)! நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். “அவனும்” நம்மை நம்பி அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகள் போல ரொம்ப ஸ்பெஷல்!”
சில நாட்கள் கழித்து எங்கள் ஸ்கூல் குழந்தைகளின் கூடப் பிறந்தவர்கள் வாலன்டியராக வர ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாளில், அவர்களின் நண்பர்களும் கைகொடுக்க ஆரம்பித்தார்கள்.
இதெல்லாம் நிறைவாக இருந்தது. ஆனால் கிருஷ்ண குமாரின் பெற்றோர் அவனை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குறையாக இருந்தது.
அந்த சமயத்தில் எனக்குள், நான் மேலும் படித்தால் இன்னும் நன்றாகப் பணிபுரியலாம் என்று தோன்றியது. எங்களுடைய சீஃப் ஆமோதித்தார், ஸ்கூலிலும் பல முறை எடுத்துச் சொன்னபின் விடை கொடுத்தார்கள். ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் படிக்க, நிம்ஹான்ஸில் (NIMHANS) சேர்ந்தேன்.
ஆறு மாதத்திற்குப் பிறகுதான் பழைய இடத்துக்கு வர முடிந்தது. இன்னொருவர் ஸ்கூல் பொறுப்பு ஏற்றிருந்தார், பல நல்ல மாற்றங்களைச் செய்தார்.
ஒரு நாள், ஏதோ அன்பளிப்பிற்காகப் புடவை தேர்ந்தெடுக்கையில், யாரோ என் பின்னலை இழுக்க, திரும்பிப் பார்த்தால் அவன் நின்று கொண்டு இருந்தான். “ஏய் கிருஷ்ண குமார்! எப்படி இருக்கே?” என்று வியப்புடன் கேட்டேன். என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் தன் கையை ‘சட சட’ என்று ஆட்டினான். நான் பழக்க தோஷத்தில், “பாட்டி எங்கே?” சைகையுடன் கேட்டேன். அவன் அருகில் இருந்த, பெண் என்னைப் பார்த்து ” பாட்டியால் வர முடியவில்லை, நான்… இவன் அம்மா…” என்றாள்.
எனக்கு மகிழ்ச்சியில் நெஞ்சு அடைத்தது, அவர்களைக் கட்டி அணைத்தேன்.