ஞானக்கூத்தன் தமது பிறந்தநாள்பற்றி ‘நான் அறுபது’ உள்ளிட்ட சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று இந்தக் கவிதை.
பிறந்த நாள் இரவு
வானம் தெளிந்து மழை விட்டிருந்தது.
வட்டமாய்த் திங்கள் வெளிப்பட்டது.
மேல்வானத்தில் சில மின்னல்கள்
நேரம் தாழ்ந்து கண்கள் சிமிட்டின
குரல் வளமில்லாச் சிறு சிறு இடியுடன்.
கால்வாயில் நிறைந்த தண்ணீர்
கலகலத்து விரைந்து மிகுந்து
ஓடைவழியே அல்லிக் குளத்தில்
வடக்குவாய் வழியாக
இடைவிடாமல் நுழைகிறது.
யாருமில்லை நீர் நிலையில்
இரவும் நிலவும் குளிரும் தண்ணீரும்
சொட்டு சொட்டும் மரங்களின் ஈட்டமும்
நடுச் சாமத்தில் புரியாத கவிதைக்குக்
குழைத்தன சொல்லின் மாட்சியை
காலில் மிகுந்த சேறுடன் இரவில்
திரும்பும் எனது பார்வையில்
வவ்வால் ஒன்று வீடு மாறிற்று
மேலும் மேலும் வரும் பிறந்த நாள்களை
எண்ணிப் பார்த்துநான் மகிழ்ச்சி கொள்கிறேன்
ஒன்றை மற்றது நிகர்க்காவிடினும்.