அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா…!
கருவறையில் பத்துமாதம் சுமந்துநின்ற அம்மா
சீராட்டி சோறூட்டி வளர்த்துவிட்ட அம்மா
நம்மனம் நொந்தாலே பொங்கியெழும் அம்மா
நம்சுகமே தன்சுகமாய் வாழ்ந்துவரும் அம்மா !
அணுஅணுவாய் ரசித்துநமை வளர்த்துவரும் அம்மா
கண்ணியமும் ஒழுக்கமதும் போதிக்கும் அம்மா
குணக்குன்றாய் நன்மகனாய் வளர்த்துவரும் அம்மா
இணக்கமுற வாழ்ந்திடவே வழிகாட்டும் அம்மா !
பிஞ்சுநடைப் பருவத்தில் பொத்திபொத்தி வளர்ப்பவள்
பள்ளிசெலும் பருவத்தில் ஆசானாய் இருப்பவள்
பருவத்தில் தோள்கொடுத்து நன்னெறியைக் காட்டுவாள்
திருமண பந்தத்தின் சுளுவுகளைச் சுட்டுவாள் !
எப்போதும் நம்பக்கம் வாதிடுவாள் அம்மா
தப்பேதும் செய்யாமல் காத்திடுவாள் அம்மா
அப்போதும் இப்போதும் எப்போதும் அம்மா
தப்பாமல் ஆசிபல கூறிடுவாள் அம்மா !
அன்பின் இருப்பிடம் பாசத்தின் பிறப்பிடம்
இன்சொல்லால் வேய்ந்தநல் பல்கலைக் கழகம்
தனைச்சார்ந்த சுற்றார்க்கும் நல்லதையே நினைக்கும்
இன்னிசைபோல் சுகமாக வருடுகின்ற அம்மா !
அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா..!