சூரியதேவன் தனக்கு அளிக்கப்போகும் சிகித்சையைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஸந்த்யாவின் காதலுக்காக எதையும் தியாகம்செய்யத் தயாராயிருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் கலந்திருந்தது. ஸந்த்யா மூலம் தனக்குக் கிடைக்கப்போகும் புத்திரர்களை நினைத்து அவன் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். இவையெல்லாம் சிவபெருமானின் அருளே என்பதை நன்கு உணர்ந்த சூரியதேவன் கண்களை மூடிக்கொண்டு அவரை மனதால் பூஜிக்கத் தொடங்கினான்.
சிகித்சையின் முதல்கட்டமாக ஸந்த்யா தன் கண்களை தந்தையார் கொடுத்த மெல்லிய துணியால் கட்டிக்கொண்டிருந்தாள். அதன் வழியாக அவளால் சூரியனைப் பார்க்கமுடியும். ஆனால் சூரியனின் வெப்பம் அவளைத்தாக்காது .
அதன்பின் ஸந்த்யா சூரியனின் கண்களை அழுத்தமான கறுப்புத் துணியால் கட்டினாள். முகத்தின் அருகில்சென்று கண்களைக் கட்டியபோது இருவர் உதடுகளும் துடித்தன. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஸந்த்யா சூரியதேவனுடைய கையைப்பிடித்து அறையின் மையப்பகுதிக்கு அழைத்துச்சென்றாள். அங்குதான் காந்தப் படுக்கை தயார் நிலையில் இருந்தது.
சூரியதேவனின் கையைப்பற்றியதும் அவனுடன் தடாகத்தில் கொண்டஉறவும் அதன் சுகமும் அவளுக்கு நினைவு வந்தது. சூரியதேவனுக்கும் ஸந்த்யாவின் உடல் தன்னுடன் உராயும்போது கண்கள் கட்டப்பட்டாலும் புலன்கள் கட்டுப்படாமல் ஆசையில் ததும்பின. அதை ஸந்த்யா உணர்ந்ததுமட்டுமல்லாமல் அவளது கண்களில் உள்ள திரைமூலம் அவனது தவிப்பை நன்றாகப் பார்க்கவும்செய்தாள்.
இப்பொழுதே இப்படியென்றால் முழு சிகித்சை செய்யும்போது இருவருடைய உணர்ச்சிகளும் எப்படிக் கொந்தளிக்குமோ என்று கவலையும் ஆசையின்ஊடே தெரிந்தது. அதனால்தான் தந்தை உணர்ச்சிக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள் என்று படித்துப்படித்துக் கூறினார்போலும் என்று எண்ணிக்கொண்டாள்.
தந்தை குறிப்பிட்டுள்ள நேரத்தில் சிகித்சையைத் தொடங்கிவிடவேண்டும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு சூரியதேவனை காந்தப் படுக்கையில் படுக்கவைத்தாள். அவன் கைகளைப் பக்கவாட்டில் இருபுறமும் கரும் பட்டுக்கயிற்றினால் கட்டினாள். அதேபோல் கால்களையும் சிவப்புப் பட்டுக்கயிற்றினால் கட்டினாள்.
பிறகு அறைக்கு வெளியேசென்று அங்கே காத்துக்கொண்டிருக்கும் நவக்கிரகங்களில் சந்திரனைமட்டும் உள்ளே அழைத்து வரச்சென்றாள். சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போதுதான் அந்தச் சிகித்சை நடைபெறவேண்டும். சந்திரனின் கண்களையும் இறுக்கக்கட்டி அவனுக்குத் தந்தை அளித்த மயக்க மருந்துகொடுத்து அவனைச் சிறு கல்லாக மாற்றினாள். சந்திரக்கல்லைச் சூரியதேவனுக்கு நேர் எதிரில் இருக்கும் காந்த மண்டலத்தில் வைத்தாள்.
அதன்பின் தான் கட்டியிருந்த ஆடைகளை மெல்லமெல்லக் கழற்றினாள். தன் உடலைச் சுற்றியிருந்த கருநீலப் புடவையை அவிழ்த்தாள். வெட்கம் அவளை ஆட்கொண்டது. சூரியதேவனுக்குக் கண்கள் கட்டப்பட்டாலும் அவள் ஆடை களையும் ஓசைகேட்டது. உலகத்துக்கு வெப்பத்தைத் தரும் அவன் உடல் வெப்பத்தில் தவித்தது. அந்தப் புடவையால் அவள் அவன் தலையை இறுக்கக்கட்டினாள்.
அதன்பின் மெதுவாக சூரியதேவனுடைய ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத்தொடங்கினாள்.
சந்திரனை உள்ளே அழைத்துக்கொண்டு வரும்போது ஸந்த்யா மோகமயக்கத்தில் இருந்ததால் அவளுக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து காந்தப்படுக்கைக்குக் கீழே ஒளிந்துகொண்ட ராகுவை ஸந்த்யாவும் பார்க்கவில்லை ; சூரியதேவனும் பார்க்கவில்லை. அதை அறிந்துகொண்ட சந்திரனோ மயங்கிக் கல்லாகக் கிடக்கிறான்.
ஸ்வர்ணபானு என்ற அசுர ராகுவோ சூரியனை விழுங்கக் காத்திருக்கிறான்.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
பூலோகத்திலிருந்து வந்திருக்கும் அந்த நால்வரைப் பார்த்ததும் சித்திரகுப்தனுக்கு ஏனோ அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும் அவர்கள் படைத்த தேவாரமும் நினைவுவந்தது.
அப்பர்தானே ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று எமனைக் கண்டு பயப்படாமல் முழங்கிய பெரியவர். அவருக்கு முன்
மார்க்கண்டேயன் சிவன் அருளால் எமனை வென்றார். சாவித்திரி என்ற பெண்ணும் எமனுடன் வாதிட்டுத் தன் கணவன் உயிரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சென்றாள்.
ஆனால் இந்த பாரதியார் ரொம்பவும் மோசம். ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ” காலா என் அருகில் வாடா ! உன்னைச் சிறு புல்லென நினைக்கிறேன்! உன்னைக் காலால் உதைக்கிறேன் ” என்று சொன்னால் எமனுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அதனால்தான் எமன் அவரைச் சீக்கிரமே அழைத்து வருவதற்காக சித்திரகுப்தனின் கணக்கையே மாற்றச்சொன்னான்.
இன்னும் சில மானிடர்கள் எமலோகத்தில் புகுந்து ரகளை செய்திருக்கிறார்கள். நசிகேதன் என்ற சிறுவன் எமனைக் கேள்விகள் கேட்டு திணறடித்தான். அவனுக்குத்தான் எமன் எத்தனை வரங்களைக் கொடுத்தான்.
எது எப்படியிருப்பினும், தாமாகவே நான்கு மென்பொருள் மானிடர்களை எமலோகப் பணிக்காக அழைத்து வருவது இதுதான் முதல்தடவை. அவர்களுக்கு அனுமதி வழங்க முதலில் எமனே சம்மதிக்கவில்லை. சித்திரகுப்தன் தன் பணிக்கு உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தியதால் கடைசியில் அரைமனதுடன் சம்மதித்தான். அதற்கான தேவையை சிவபெருமானிடம் விளக்கிக்கூறி அவருடைய சம்மததைப் பெறுவது சித்திரகுப்தனின் வேலை என்று எமன் திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.
சிவபெருமானிடம் விஷயத்தைக்கூறி அவரிடம் அனுமதிச்சீட்டு பெறுவது சித்திரகுப்தனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. முன்பெல்லாம் யார் எது கேட்டாலும் உடனே வழங்கிவிடுவார் சிவபெருமான். அந்த மாதிரி ஒரு சமயத்தில் சிவன் பஸ்மாசுரன் என்ற ஒரு அசுரனுக்கு வரம் கொடுக்க, அவன் சிவன் தலையிலேயே கையைவைத்து எரிக்கவர, கடைசியில் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப்பின் ஒரு பெரிய ர
களையே உருவாயிற்று.
ஆமாம். சிவபெருமானுக்கு மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுமீது காதல் உண்டாயிற்று. பார்வதிக்கும் லட்சுமிதேவிக்கும் தெரியாமல் பிரும்மதேவர் தலையிட்டு ‘இது ஒரு வீதி மீறல்தான். இருந்தாலும் இது அனுமதிக்கப்படலாம். ஆனால் இதன் விளைவு பூமிக்கும் பரவலாம். அதையும் நாம் அனுமதிக்கவேண்டும் ” என்ற எச்சரிக்கையோடு அனுமதித்தார். அதன்படி அவர்கள் வானவில்லில் சிலகாலம் ஒளிந்துகொண்டிருந்தார்கள். அப்போது பிறந்தவர்தான் ஐயப்பன்.
அதற்குப்பிறகு சிவபெருமான் அதிக அளவில் வரங்களைத் தருவதில்லை. வருடத்திற்குப் பத்து அல்லது பதினைந்து என்று அவரே நிர்ணயித்துக்கொண்டார். இதில் எமனுக்கு என்ன பிரச்சினை என்றால், சிலகாலத்திற்கென்று வருபவர்கள் அந்தக் காலம் முடிந்ததும் திரும்பப் பூமிக்குச் செல்வதில்லை. எமபுரிப்பட்டணத்திலேயே தங்கி சொர்க்கபுரிக்குக் குடிபெயர்ந்துவிடுகிறார்கள். சிவபெருமானின் அனுமதி இருப்பதால் எமனாலும் ஒன்றும் செய்யமுடியாது. சமீபகாலத்தில் இம்மாதிரி அனுமதிகளைப் பெரும்பாலும் அசுரர்களே பெற்றுவிடுவார்கள். பூலோகத்து மானிடர்களுக்கு அனுமதி கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. அதனால் சித்திரகுப்தனுக்கு சிவபெருமானிடம் மென்பொருள் மானிடர்களுக்கு எமபுரிப்பட்டணத்திற்கு அனுமதி வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. கடைசியில் சித்திரகுப்தன் அவர்களுக்காக உத்தரவாதம் கொடுத்தபிறகுதான் சிவன் அனுமதி கொடுத்தார்.
அந்த மென்பொருள் ஆலோசகர்கள் அடித்த கூத்து சித்திரகுப்தனை மட்டுமல்ல எமபுரிப்பட்டணத்தையே ஆட்டுவித்தது.
(தொடரும்)