பாக்கியம் ராமசாமி என்கிற ஜ ரா சுந்தரேசன்
டாக்டர் பாஸ்கர் இருக்கிறார்……………
கோடானு கோடி வாசகர்களைத் தன் நகைச்சுவை எழுத்துக்களால் மகிழ்வித்துவந்த பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன், தனது எண்பத்தி ஏழாவது வயதில் மறைந்தார்.
சேலம் ஜலகண்டாபுரத்தில் பாக்கியம் – ராமசாமி தம்பதிகளுக்கு செப் 1930ல் பிறந்தவர், தனது இறுதி மூச்சுவரை தன் நகைச்சுவை எழுத்துக்களால் மகிழ்வித்தவர்..
ஜ.ரா.சுந்தரேசன் என்ற இயற்பெயரில் சீரியஸ் விஷயங்களையும், பாக்கியம் ராமசாமி (தன் தாய் தந்தை பெயர்கள்!)என்ற புனைப்பெயரில் ஹாஸ்யம் நிறைந்த கதை, கட்டுரைகளையும் எழுதுவார். இறுதி மூச்சுவரை நகைச்சுவையே வாழ்க்கை முறையாகக்கொண்டு வாழ்ந்தார் என்றால் அது சிறிதும் மிகையே அல்ல. எப்போதும் சிரிப்பு, ஹாஸ்யம், மகிழ்ச்சிதான் – அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும்!
குமுதம் பத்திரிகையில் 37 ஆண்டுகள் துணை ஆசிரியர் பணி.(அதற்கு முன்பு தமிழ்வாணன் அவர்களின் கல்கண்டு பத்திரிகையில் வேலை என்பது உபரிச்செய்தி!). இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், சுமார் 30 நாவல்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்துள்ளார்!
இன்றளவும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவிவரும் அப்புசாமி – சீதாப்பாட்டி 1963 ஆம் வருடம் குமுதத்தில் முதன்முதலில் தோன்றினர். அவர்கள் உருவானதே ஒரு சுவாரஸ்யமான கதை!
அந்த வாரக் கதை எழுதாததற்கு வீட்டில் நடந்த ஒரு சண்டையைக் காரணமாகச் சொன்னார் ஜராசு. குமுதம் ஆசிரியர் உடனே அதையே ஒரு கதையாக எழுதச்சொல்கிறார்! வயதான தாத்தாவும் பாட்டியும் சண்டை போடுவதாகக் கதை எழுதச்சொல்கிறார் – தாத்தா அசடு கேரக்டராகவும், (பொடி போடுவது, மெட்ராஸ் தமிழ் பேசுவது, நண்பர்களுடன் பட்டம் விடுவது எல்லாம் பின்னால் வந்து ஒட்டிக்கொண்ட ரகளைகள்!) பாட்டி ஆங்கிலம் பேசும், ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கும் மாடர்ன் கேரக்டராகவும் அமைக்க முடிவு செய்கின்றார் ஜராசு! பாட்டிகள் முன்னேற்றக் கழகம், போட்டிகள், விரோதங்கள் என விரிவடைந்து, எப்போதும் பாட்டியே தாத்தாவை வெற்றிகொள்வதாக அமைந்த அத்தனை கதைகளும், நாவல்களும் மறக்கமுடியாத நகைச்சுவை விருந்துகள்!. முதல் கதை 1963 ஆம் ஆண்டு குமுதத்தில் வெளியானது – இன்றும், 54 வருடங்களுக்குப் பிறகு, அந்த தாத்தா, பாட்டி எலியும் பூனையுமாக ரகளையடித்து வருவது பாக்கியம் சார் தமிழ் நகைச்சுவை இலக்கியத்துக்குக் கொடுத்துள்ள பெரும் கொடையாகும்.
பாக்கியம் சார் எழுதுகிறார்: “அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் (இன்று 54 வருடம்!) ஆகிறது. அதாவது 42 வருடங்களாக அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள்”
பக்கத்து வீட்டில் அகாலத்தில் கதவுதட்டும் அப்பு சாஸ்திரியின்மீது மகா எரிச்சல் – அவரது பெயரையே தாத்தாவுக்கு வைத்ததாகச் சொல்கிறார் பா.ரா. பாட்டிக்கு சீதாலட்சுமி என்றும் பெயர் வைக்கிறார். பின்னர் ஆசிரியர் சொன்னதன் பேரில், அப்புசாமி, சீதாப்பாட்டி நாமகரணம் நடக்கிறது – தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நகைச்சுவைத் தம்பதிகள் இவர்களாகத்தான் இருக்க முடியும்!!
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், 1001 அப்புசாமி இரவுகள், மாணவர் தலைவர் அப்புசாமி (தொடர்களாக வந்தவை ), பீரோவுக்குப் பின்னால், நானா போனதும், தானா வந்ததும், தேடினால் தெரியும் (கட்டுரைகள்) மற்றும் பல சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை!
இரண்டு ரிக்ஷாக்காரர்கள் மெட்ராஸ் பாஷையில் பேசிக்கொல்வதுபோல் எழுதிய பகவத் கீதை, “பாமரகீதை” – மிக எளிமையாக, எல்லோருக்கும் புரியும்படி சிறப்பாய் எழுதியிருப்பார்.
ஒரு வீணை மேஸ்ட்ரோவின் கதையை, ஃப்ளூட் ரமணி சொல்ல, அதைக் கதையாக எழுதினாராம் ஜராசு, திரு சாருகேசி சொல்கிறார்.
’சுதாங்கன்’ என்ற புனைப்பெயரைச் சூட்டியதே ஜராசு சார்தான் என்கிறார் ரங்கராஜன் என்கிற சுதாங்கன்!
இவரது ’ஞானத் தேடல்’ சுவாரஸ்யமானது – சீரியசானது. தேவன் அவர்கள் இறந்தபோது, ‘இனி என்ன இருக்கிறது?’ என்ற விரக்தியில், குருவாயூர்சென்று, சன்னியாசியாக அலைந்து திரிந்ததை, நகைச்சுவை கலந்துசொல்வார் – “தேடினால் தெரியும்” புத்தகம் படித்துத் தெரிந்துகொள்ளலாம், பசியும், வியாதியஸ்தர் கூட்டத்தில் இரவும், பசி மயக்கத்தில் உறங்கி, விழித்தபோது சுற்றிலும் சில்லறைக் காசுகள் இவரைப் பிச்சைக்காரனாக்கியதும் – இவரது நகைச்சுவைக்குப்பின் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ’ஞானத் தேடலை நமக்குத் தெரிவிக்கும்!
ஒர் அருமையான மனிதரை, நகைச்சுவைச் சக்கரவர்த்தியை இழந்து நிற்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். அவர் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.