ஈழத்திலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்கள்.
தொலை தொடர்புத் துறையில் (Telecommunication) சிரேஷ்ட பொறியியலாளராக இலங்கை, ஓமான், துபாய், அபுதாபி, சார்ஜா, லண்டன், அமெரிக்கா, ஒன்டாரியோ, கனடா ஆகிய நாடுகளில் தொழில்புரிந்தவர். ஒன்டாரியோ மிசிசாகா நகரில் உள்ள பீல் முதுதமிழர் சங்கத்தின் தலைவராக நான்கு வருடங்கள் இருந்து சமூகசேவை செய்தவர். இப்போதும் சங்கத்துக்கு உதவி வருகிறார். பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். இரு மொழி எழுத்தாளர். இவரது நூல்களை Amazon.com. இல் பார்க்கலாம்
சமீபத்தில் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இவரது ‘முடிவு’ என்ற கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. போட்டிக்கென்று வந்த 440 கதைகளில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இப்பெருமை கனடா வாழ் முதுதமிழர்களைப் போய்ச்சேரும்.
இக்கதை கல்வி தரப்படுத்தல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மாணவன் ஒருவனைப் பற்றியது.
இவரது இணையதளம்:
குவியம்கனடா.காம். ( KuviyamCanada.con)
இவரது “காலம் ” என்ற 20 அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு டிசம்பரில் ஓவியா பதிப்பகம் வெளியிடுகிறது
இது தவிர “முதியோர் முத்துக்கள் முப்பது” என்ற சிறு கதைகள் தொகுப்பு ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். பல நாடுகளில் இருந்து முதியஎழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் கொண்டது.
அதன் விவரம் :
தமிழ் இலக்கியம் எல்லா வயதினருக்கும் பொதுவானது. குழைந்தைகள் இலக்கியம், காதல் இலக்கியம், அறிவியல், வரலாறு, அரசியல், குடும்பம் போன்று பல பார்வைகளில் படைப்பாளிகள் எழுதுவார்கள். முதியோரின் பிரச்சனைகள் பல. தனிமை, அல்செய்மார் என்ற மறதி நோய் போன்று பலவித மனவியாதிகள், முதுமையில் கணவன் மனைவி உறவு, பழைய பழக்க வழக்கத்தில் இருந்து மாறாமை, பிடிவாதம், எதிர்பார்ப்பு.. மருந்து குளுசைகளை நம்பி வாழ்பவர்கள், தலைமுறை இடைவெளி. சிலர் இறுதிக் காலத்தில் கவனிக்க ஒருவரும் இல்லாத காரணத்தால் முதியோர் இல்லத்தைத் தஞ்சம் அடைகிறார்கள்.
பல முதியோர்கள் கடந்த காலத்தில் தாம் வகித்த பதவி, பிறருக்குச் செய்தஉதவி, தமக்குக் கிடைத்த பேரும், புகழும்பற்றிப் பேசுவதில் இன்பம் காண்பார்கள். ஒரு காலத்தில் விளயாட்டு வீரராக இருந்தவர் முதுமையின்போது கைக்கோலையும், நாற்சக்கர வண்டியையும் நம்பி வாழவேண்டிய நிலை போன்ற பலவிடயங்களை வைத்து சுவையான கதைகள்’ அடங்கியது இத் தொகுப்பு
பல முதியோருக்கு எழுதும் திறமை இருந்தும், இனி என்ன எழுதிக் கிழிக்கப்போகிறோம் என்று எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். உடலில் உள்ள வியாதியை மறக்க, வாசிப்பும் எழுதுவதும் பகிர்வதும் ஒருவகை தியானமாகும். இந்தக் கதைக்கொத்தில் பலநாடுகளில் இருந்து முதியவர்கள் உருவாக்கிய சுவையான சிறுகதைகளைச் சேர்த்து, நான் எழுதிய முத்துக்களோடு கோத்து முதியோர் உருவாக்கிய முத்த மாலையாக உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். சாதனை படைத்த நான்கு முதியவர்களின் கதைகள் இத்தொகுப்பில் உண்டு
இதில் வரும் நிதி ஒரு முதியோர் சங்கத்தின் நூலகத்தின் விருத்திக்குப் பாவிக்கப்படும். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
– ஒரு முதிய தமிழன் , ஒன்டாறியோ கனடா