விக்ரமாதித்யன்
‘புலி வருது… புலி வருது’ என்று சொல்லிக் கடைசியில் புலியே வந்ததுபோல்!
‘விக்ரமாதித்ய சந்திரகுப்தர்’ வருகிறார்.
காலச்சக்கரம் சரித்திரத்தை மெல்லமெல்லச் செதுக்கி மனித இனத்தை மேம்படுத்தி வந்துள்ளது. ஆனால் ஒரு சில நூற்றாண்டில்மட்டும் அது மனித இனத்துக்கு ஒரேயடியாக அபரிமிதமான வளர்ச்சியை வாரிக்கொடுத்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.
அதுபோல் சந்திரகுப்தன் காலம் மக்களுக்கு ஒரு புத்துணர்வைக்கொடுத்தது.
இந்தப் பண்பாட்டு வளர்ச்சி இந்திய அறிவுசார் நடவடிக்கைகளின் உச்சகட்டம்!
நாடு முழுவதும் அமைதி நிலவியது.
அன்று…
செல்வம் கொழித்தது.
கலைகள் வளர்ந்தன.
இந்துசமயம் மறுமலர்ச்சி அடைந்தது.
இலக்கியம் தழைத்தது.
வீடுகளுக்கு வாசல் இருந்ததோ இல்லையோ ஆனால் பல ‘இலக்கிய வாசல்’கள் இருந்தன.
வெற்றிகொண்ட பல மன்னர்கள் ‘விக்ரமாதித்தன்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டாலும் அந்தப் பட்டப்பெயர் நமது சூப்பர் ஸ்டார் இரண்டாம் சந்திரகுப்தருக்கே மிகவும் பொருந்தும்.
நாம் ராமகுப்தன் கதையிலேயே பார்த்தோம்:
சந்திரகுப்தன் எப்படிப்பட்ட வீரன் – என்று.
எப்படிப்பட்ட கலாரசிகன் – என்று.
எப்படிப்பட்ட ‘மாடல்’அரசன் – என்று.
எப்படிப்பட்ட தலைவன் – என்று.
சரி.. கதைக்குச் செல்வோம்..
பாடலிபுத்திரம் தன் பொலிவை இன்னும் இழக்கவில்லை…
ஆனால் உஜ்ஜயினி தங்கப் பொலிவுபெற்று மெருகேறியது…
அது சந்திரகுப்தனின் தலைநகராகியது..
காதலி துருவதேவி சந்திரகுப்தனின் பட்டமகிஷியாகி ‘மகாதேவி’ என்ற பெயருடன் அரண்மனையை அலங்கரித்தாள்.
பின்னாள் குப்தசாம்ராஜ்யத்தை ஆண்ட குமாரகுப்தனை ஈன்றெடுத்தாள்!
‘நாகா’ குலத்து இளவரசி ‘குபேரநாகா’ – பேரழகி!
அழகு மட்டுமல்ல… நாகாநாட்டின் உரிமையும்கொண்டவள்.
தேனும் பழமும் சேர்ந்ததுபோல்!
சந்திரகுப்தன் குபேரநாகாவிடம்:
“தேவி! துருவாதேவி மட்டும்தான் அழகி என்றிருந்தேன்! அது பொய் என்பதை நீ நிரூபித்துவிட்டாய்! உன் கண்களில் இருப்பது காந்தமோ? அதனால்தானோ.. நீ என்னைப் பார்க்கும்பொழுது என் மனம் உன்னிடத்தில் சேர்கிறது!”
காதலில் வார்த்தைகளை அடுக்கினான்!
காதல் எவனையும் கவிஞனாக்கும்!
மூவுலகச் சக்கரவர்த்தி இவ்வாறு முறையிட்டதும் இளவரசியின் ஆனந்தம் எல்லை மீறியது! புன்னகைப் பூக்களை வீசி சம்மதம் என்றாள்.
‘ஒரே ஒரு வேண்டுகோள்! குமாரகுப்தன் அரியணை ஏறுவான். ஆனால் எனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அரசாளும் உரிமைவேண்டும்” – மன்றாடினாள்!
சந்திரகுப்தன்:
“நிச்சயமாக உனது வழித்தோன்றல் அரசாளும்!”- வாக்களித்தான்.
சந்திரகுப்தன் குபேரநாகாவை மணந்துகொண்டான்.
இருவரின் இன்பத்தில் மகள் பிரபாவதி பிறந்தாள்.
பிரபாவதி வளர்ந்தாள்!
தாயின் அழகும் – தந்தையின் வீரமும் ஒரு சேர வளர்ந்தாள்!
வகாடக நாடு மேற்கு மாளவத்தைச் சேர்ந்தது.
அந்த நாட்டு இளவரசன் ருத்ரசேனன்-II.
வீரத்துடன் வகாடநாட்டை ஆட்சிசெய்யும் அரசன்!
அரச குடும்பங்களில் ஆதாயமில்லாமல் திருமணம் நடப்பது அரிது.
சந்திரகுப்தன் பிரபாவதியை ருத்ரசேனனுக்கு மணமுடித்தான்.
இதனால் வகாடநாடும் நட்பு நாடாக இருக்குமல்லவா?
மூன்றே வருடம்…மூன்று மகன்கள் அவளுக்குப் பிறந்தனர்..
திவாகர சேனா, தாமோதர சேனா, பிரவார சேனா.
ஒரு நாள் சேதி வந்தது..
ருத்ரசேனன் அகால மரணமடைந்தான்.
சந்திரகுப்தன் விரைந்தான் வகாட நாட்டுக்கு.
பிரபாவதிக்கு என்னவென்று தேறுதல் சொல்ல?
“மகளே! உன் மைந்தர்கள் சிறிய குழந்தைகள்… உன் நாட்டை நீயே ஆட்சிசெய்! நானிருக்கிறேன் உனக்குப் பக்கபலமாக!” –என்றான்.
பிரபாவதி வகாடநாட்டை 20 ஆண்டுகள் ஆண்டாள்..
சந்திரகுப்தன் குபேரநாகாவுக்குக் கொடுத்த வாக்கு பலித்தது!
சந்திரகுப்தன் அரசவையில் மந்திரிகள், சேனாதிபதிகள் தவிர கலாவல்லுனர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலர் சேர்ந்து அலங்கரிக்க அது தேவலோகமோ என்று தோன்றியது..
நவரத்தினம் என்று சிறப்பிக்கப்பட்ட ஒன்பது கலைஞர்கள் …ஒளிர்ந்தனர்.
1.அமர்சிம்ஹா: சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தொகுத்தவர். இலக்கியவாதி.. கவிஞர்.
2.தன்வந்திரி: மருத்துவத் திலகம்!
3.ஹரிசேனா: அந்நாள் வைரமுத்து! புதுக்கவி புனையும் கவிப்பேரரசு! அலகாபாத் தூணில் காணப்படும் கல்வெட்டுகளில் இவரது ‘ஒரு வாக்கியத்தில் பெருங்கவி’ காணப்படுகிறது..
4.காளிதாசன்: என்னவென்று சொல்வது?
இலக்கியச் சூரியன்? அந்தக்காலத்துச் சாண்டில்யன்?
நாடகங்கள் மற்றும் கவிதைகளால் இலக்கியத்தில் பொற்காவியங்கள் படைத்தான்.
சாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினார்.
அகில உலகையும் பிரமிக்கவைத்த காவியக் கர்த்தா!
5.காகபநாகா: சோதிட சக்கரவர்த்தி!
6.சங்கு: கட்டிடக்கலை நிபுணர்!
7.வராஹமிகிரர்: ‘வானவியல் அறிஞர்’!
ஜோதிடம்பற்றிக் கூறும் பஞ்சசித்தாந்திக, பிரஹத்சம்கிதா வானசாஸ்திரம் போன்ற நூல்களை எழுதினார்.
8.வரருச்சி: சம்ஸ்கிருத இலக்கண வித்தகர்!
9.வேடல்பட்டா: ஒரு மாய வித்தைக்காரர்!
இப்படிப்பட்ட ஆட்சியாளர் கிடைத்தது அந்த நாட்டுக் குடிமக்கள் செய்த பாக்கியமே! எழுதும் போதே – பாரதியார் சொன்னதுபோல்- “கருவம் ஓங்கி வளருதே”.
படிக்கும் உங்களுக்கும் ‘கருவம் ஓங்கும்’ என்ற நம்பிக்கையில் மீண்டும் சந்திப்போம்.
(இன்னும் நிறையப் பேசும்)