பவனி வரார் எங்க கவிஞர்
பவனி வருகிறார்- ஜதி
பல்லக்கிலே பாரதியார்
பவனி வருகிறார்
புவனமெலாம் புலமையினால்
புரட்டிப் போட்டவன்
புதிய கவிதைத் தீயையேற்றிப்
புலரவைத்தவன் (பவனி)
கவலையின்றிக் கண்ணம்மாவைக்
காதலித்தவன்-மஹா
காளியிடம் பக்தியினால்
பேதலித்தவன்
தவமிருந்த தமிழ்த்தாயின்
வயிற்றுதித்தவன்
தனக்குவமை யாருமின்றித்
தனித்திருப்பவன் (பவனி)
முண்டாசும் கோட்டும் போட்டு
பவனிவருகிறான்
முறுக்குமீசை மிடுக்குமாகப்
பவனிவருகிறான்
செண்டுகளும் மாலையுமாய்ப்
பவனிவருகிறான்
ஜெயகோஷம் முழங்கிடவே
பவனிவருகிறான் (பவனி)
பாவலரும் காவலரும்
சூழவருகிறான்
பாடல், வாத்யம், நாட்டியங்கள்
பரிசு வரிசைகள்
ஆவலோடு ஏந்தி அன்பர்
ஆரவாரமாய்
பாரதிரும் ஜயபேரிகை
கொட்டி முழங்க (பவனி)
பல்லக்கிலே பகலவனைப்
பார்த்ததும் உண்டோ
பக்தர் தோளில் சூரியனைச்
சுமப்பதும் உண்டோ
எல்லோரும் பார்த்திடவே
அல்லிக்கேணியில்
எங்கள் தோளில் எழுந்தருளி
பவனி வருகிறான் (பவனி)