அடுத்தநாள் காலை சக்ரவர்த்திதர்பாரில் அனைத்து ஆலயப்பணி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. சக்ரவர்த்தி அழைத்ததின்பேரில் நாடகக்குழு உபதலைவர் பிங்வென், சீன மொழிபெயர்ப்பாளர், மற்றும் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் சக்ரவர்த்தி பிங்வென்னைப் பார்த்து ‘நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா’ என்று கேட்டார். பிங்வென் ‘ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு வாங்மெங் நன்றாகவே பயிற்சி கொடுத்துத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். கலைகள் தொடர்ந்து நடக்கும். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். நானும் இங்கேயே இருப்பேன். அரசே, வாங்மெங் அன்றாட சம்பவ நிகழ்ச்சிகளைக் குறித்து வைப்பது வழக்கம். அவரது இருக்கையிலிருந்து அதை இங்கே எடுத்துவந்துள்ளேன். இதோ’ என்றுகூறி இடுப்பிலிருந்து எடுத்த எழுத்தோலையை அரசரிடம் நீட்டினார்.
சக்ரவர்த்தி அதன் விவரங்களை மொழிபெயர்ப்பாளர் மூலமாய் கேட்டுத் தெரிந்துகொண்டு கண்களில் பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே ‘கிருஷ்ணா, நீயும் இதைப்போலவே இதுவரை நடந்ததை எனக்கு எழுதிக்கொடு’ என்று ஓலையை என்னிடம் நீட்டினார்.
சக்ரவர்த்தி, கட்டிடக்கலைஞர் அதிகாரி குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனைப் பார்த்து “விமானத்தின் வடக்குப்பகுதியில் கிழக்கு மேற்கில் இரு பெரிய கடவுள் சிலைகள் வைக்கப்படஇருக்கின்றன. அச்சிலைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா?”என்று கேட்க, அவை திட்டமிட்டபடித் தயாராக இருப்பதாக அவர் பதிலளித்தார். “அதில் ஒரு மாற்றம். வடகிழக்குச் சிலைக்குப்பதிலாக என் புதிய கடவுள், வாங்மெங்கின் சிலை உருவாக்கப்படவேண்டும். அவரின் பின்புறத்தில் கேடயங்களுடன் வாட்போர்புரியும் அவர் குழுவின் இரு வுஷு நடனக் குழுவினரின் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டபின் தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்குள் இது முடிக்கப்படவேண்டும். இது சாத்தியமா?”என்று வினவினார்.
பெருந்தச்சன் மற்ற குழுவுடன் சிறிதுநேரம் கலந்தாலோசித்துவிட்டு, “கருங்கற்கள் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன. குறித்த காலவரையறைக்குள் செய்துமுடிக்க எனக்கு முழுசம்மதம். தேவையான அனைத்தையும் இதில் ஈடுபடுத்த நான் தயார்”என்று பதிலளித்தார். “வாங்மெங்கின் உருவப்படம் அவர் குழுவில் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் அவர்களின் உதவியோடு இந்த முக்கியக் காரியத்தை ஆரம்பித்து முடித்துத் தாருங்கள்”என்று சக்ரவர்த்தி கூறினார். தர்பார் அத்துடன் கலைந்தது.
சம்பவப்பட்டியல் அதிகாரி இங்கு நிறுத்தினார். “அரசே கிருஷ்ணன் ராமனின் ஓலை இதோடு முடிவுக்கு வருகிறது”என்றவுடன் உணர்ச்சிகளைக் கிள்ளும் விறுவிறுப்பான கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சபையும் ஷேங்க்ஸானும் சுதாரித்துக்கொண்டனர். மன்னர் மூன்றாவது ஓலையைப் பிரித்துப் படிக்கக்கொடுத்தார். அதுவும் சீனமொழியிலேயே இருப்பதைக்கண்டு அதிகாரி தொண்டையை மறுபடி கனைத்துக்கொண்டு படிக்கஆரம்பித்தார்.
4. ராஜராஜ சோழன் ஓலை.
“ஷேங்க்ஸான் சமூகத்திற்கு வணக்கத்துடன் சோழநாட்டு மன்னன் ராஜராஜ சோழன் இன்றைய காலகட்டத்தில் எழுதும் ஓலை. ஏதோ காரணத்திற்காக ஐந்து வருடங்கள் வராமலிருந்த உங்கள் வணிகக் கப்பல் இவ்வருடம் 1010ல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறது. வணிகத் தலைவரிடம் இப்போதே நான் எழுதித்தரும் ஓலை இது.
வாங்மெங்கின் சிலை வுஷு நடனக் கலைஞர்களுடன் நன்றாக வடிவமைக்கப்பட்டு இரண்டாம் தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டது. உப தலைவர் பிங்வென் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி எல்லோரையும் உற்சாகப்படுத்தி வந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
மற்ற வேலைகளும் நன்றாக நடந்துமுடிந்து எங்கள் மிகப்பெரிய சாதனையான கும்பத்தையும் மேலே கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றி விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டு எவ்வளவோ பிரச்சனைகள், சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள், எதிர்ப்புகள், கலவரங்கள் முதலியவைகளை சந்தித்துத் தீர்வுகண்டு முக்கியமாக கைதிகளைக் கண்காணித்துக் கட்டுக்கோப்புடன்வைத்து வேலைவாங்கி ராஜராஜேஸ்வரம் என்னும் பெருவுடையார் கோவில் கட்டும்பணி நன்கு முடிந்து கும்பாபிஷேகமும் இனிதே நடந்தேறியது.
இதில் வாங்மெங்கின் பங்கிற்கு ஈடு எதுவும் இல்லை! அப்பேற்பட்ட மகனை ஈன்றெடுத்த உங்கள் நாட்டிற்கு என் மனமார்ந்த வந்தனம். இத்துடன் நான் உங்கள் பார்வைக்கு அவரது சிலைவடிவம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடம், கோவிலில் அவரது சிறிய கோவில் மற்றும் ஆலயத்தின் முழுப் படம் ஆகிய நான்கு வரைந்த படங்களை வைத்திருக்கிறேன். நான் இத்துடன் அனுப்பியிருக்கும் அன்புக் காணிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். உங்களை எங்கள் நாட்டிற்கு என் விருந்தினராக அழைக்கின்றேன். வருக வருக. வணக்கம்” – ராஜராஜ சோழன்
ராஜராஜன் அனுப்பிய சித்திரங்கள்
விரிவாக்கப்பட்ட வாங்மெங் சிலை
வாங்கமெங்கின் சிலைக் கோவில் பெரிய கோவிலில்
கோவிலின் வட கிழக்கு பகுதியில் வாங்மெங் சிலை பொருத்தப்பட்ட இடம்