ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (6) – புலியூர் அனந்து

“எண்திசை வென்றேனே …                                                                                        இன்று போய் நாளை வாராய்                                                                                     என எனை ஒரு மானுடனும் புகலுவதோ”

 பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்குமுன் இடைப்பட்ட சுமார் இரண்டு வருடம் ஒரு நிலையில்லாத காலகட்டம்.  தட்டச்சு இன்ஸ்டிட்யூட், கொஞ்சம் லைப்ரரி தவிர ஒரு அரட்டை கோஷ்டி ஒன்று சேர்ந்துகொண்டது. யார் வம்புக்கும் போகாத, நாலுபேர் நடுவில் வாயைத்திறக்காத நான், தற்செயலாகத்தான் அதில் பதிவுபெறாத  உறுப்பினன் ஆனேன்.

என் வகுப்பில் விளையாட்டோ, பேச்சுப் போட்டியோ, எக்ஸ்கர்ஷன்  போகும்போது ஏதாவது வாங்கிவரவேண்டுமோ எல்லாவற்றிற்கும் முதலில் நிற்பவன் சீனா என்றும் சீனன்  என்றும் அறியப்படும் ஸ்ரீநிவாசன்தான். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேராமல், அடுத்த வருடம்தான் சேரப்போகிறேன் என்றான். மதிப்பெண் எல்லாம் ஒரு நல்ல  கல்லூரியில் பி. யூ. ஸி யில்  இடம் கிடைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. முயன்றிருந்தால் அவன் மற்றவர்களைப்போல சென்னை, திருச்சி அல்லது மதுரையில் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் அந்த ஊர்களிலெல்லாம் இருந்தார்கள்.

அவனது சகோதரி திருமணமாகிப் பிள்ளைப்பேறுக்காக பிறந்தவீடு வந்திருந்தாள். அப்பா ஒரு சிறு வியாபாரி. சற்று உடல்நலம் குன்றியவர். இவன் வீட்டிலிருந்தது எல்லோருக்கும் உதவியாய் இருந்தது என்றுதான் ஒரு வருடம் படிப்பையே விட்டானோ என்று தோன்றும்.

ஒருநாள் மாலை நூலகத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த என்னை சீனா கூப்பிட்டான். கொஞ்சம் தன்னுடன் வரமுடியுமா என்று கேட்டான். எனக்கு வேறு வெட்டிமுறிக்கிற வேலை இல்லை. ஏன் என்றுகூடக் கேட்காமல் அவனுடன் போனேன்.

Image result for village boys in thanjavur villages in 1970s

எங்கள் ஊர் கோடியில் ஒரு பூட்டிய கட்டிடம் இருந்தது. அதைக் கிட்டங்கி என்று சொல்வார்கள். ஒரு வெளியூர் வியாபாரி அக்கம்பக்கம் கிராமங்களில் கொள்முதல் செய்த பொருட்களைச் சேர்த்து வைக்க அந்தக் கட்டிடத்தை வாங்கியிருந்தார். சற்று அதிக விலைக்கு வாங்கியதாகச் சொல்வார்கள்.

அவர் வந்தால் அந்தக் கட்டிடத்திலேயே ஒரு அறையில் தங்கிக் கொள்வார். கொள்முதல் சீசன் முடிந்ததும் காலிசெய்து பூட்டிவிட்டுப் போவார். திரும்பவும் சீசனுக்குத்தான் வருவார். சில வருடங்களாக அவர் வரவும் இல்லை, அந்தக் கட்டிடம் திறக்கப்பட்டதும் இல்லை. ஐந்து வருட வீட்டுவரி மணியார்டரில் வந்துவிட்டதாம். எங்களுடையது நகரசபை அல்ல. டவுன் பஞ்சாயத்து என்று சொல்லப்படும் பேரூராட்சி. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில், சுற்றிலும் காலியிடமும் மரங்களும்  கொண்டது அந்தக் கட்டிடம்.  இது போன்ற இடங்களில் சமூக விரோதச் செயல்கள் தலைதூக்கும் என்கிற பயத்தில் அந்தப்பகுதி மக்கள் அதனை நன்றாகக் காபந்து செய்துவந்தார்கள்.

அங்கேதான் என்னைக் கூட்டிப்போனான் சீனா. போகும்வழியில் மகேந்திரன் என்னும் நபரும்  சேர்ந்துகொண்டார். அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். வெளியூர்க்காரர். சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில் கால்நடை உதவியாளராக இருந்தாராம். அவரை அந்த ஊரில் மாடு டாக்டர் என்றுதான் அழைப்பார்களாம்.

கிட்டங்கி அருகில் போய்ச்சேர்ந்ததும் அங்கே மூன்று பேர்  ஏற்கனவே இருந்தார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம்.

சம்பந்தமில்லாமல் சீனா ஒரு புருடாவிட்டான். வரும் வழியில் நான் வந்து அவனைச் சந்தித்ததாகவும் வீட்டில் யாரோ விருந்தினர் வந்திருப்பதால் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள் என்றும், இங்கே வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் தான் வந்ததாகவும் சொன்னான். மறுநாள் வருவதாகச் சொல்லி என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அங்கிருந்தவர்களில் வரதராஜன் என்பவர் எல்லோரிலும் வயதானவர். அவர் மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி இருந்தது. மனைவி வெளியூரில் இருந்த மகன் மற்றும் மகள் வீட்டிற்கு மாறிமாறிப் போய்விடுவாளாம்.   வணிகவரி வருமானவரி கணக்குகள் பார்த்துக் கொடுக்கும் வேலை அவருக்கு. கன்சல்டன்ட் என்று சொல்லிக்கொள்வார்.

அவர் சீனாவைப் பார்த்து, “சூயன்லாய், இன்று உனக்குப்பதிலாக இவரைப் பிணையாய் வைத்துவிட்டுப் போயேன்.” என்று என்னைக் காண்பித்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது. முதலில் சீனா எப்படி சூயன்லாய் ஆனான் என்று புரியவில்லை. பிணையாய் வைப்பதா!

அப்போதுதான் மகேந்திரன் குறுக்கிட்டார். “சார், நீங்க ரொம்ப பயமுறுத்தாதீங்க. தம்பி, அவர் விளையாடறார். பேச்சுத் துணைக்குத்தான் இருக்கச்சொல்கிறார். நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். நேரமிருந்தால் கூட இரு. போகணும்னா சூயன்லாய் கூடப் போயிடு” என்றார்.

நான் சீனாவைப் பார்த்தேன்.

“நீ இருந்துவிட்டு வா. நான் போகிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.  சொல்லாமல் கொள்ளாமல் சபைக்கு மட்டம் போட்டால் அபராதம் உண்டாம். அதை தவிர்க்கத்தான்  நாடகமாடியிருக்கிறான் சூயன்லாய்.

அந்தக் காலத்தில் சீனநாட்டில் இரு முக்கியத் தலைவர்கள். ஒருவர் மா சே துங். இன்னொருவர் சூயன்லாய். தமிழக மந்திரியாய் இருந்த கக்கன் என்னும் எளிய மனிதர் போய்வந்த ஒரே வெளிநாடு சீனா. அப்போது அவர் சந்தித்த தலைவர் சூயன்லாய். அது செய்தித்தாள்களில் வந்த சமயத்திலிருந்து சீனாவாக இருந்த ஸ்ரீனிவாசன் சூயன்லாய் ஆகிவிட்டான்.

Image result for tanjore villages in 60s

பொதுவான அரட்டைக் கச்சேரிதான் நடந்தது. மற்ற இருவரில் ஒருவர் ஏகாம்பரம். இளைஞர். ஒரு காண்ட்ராக்டருக்கு உதவியாளராக இருந்தார். ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்துகொண்டதில் ஏகாம்பரம் நிறைய பொய் சொல்லுவார் என்று தோன்றியது. வெறும் சுவாரஸ்யத்திற்காகச் சொல்கின்ற பொய்கள் என்றும் புரிந்தது. கொச்சையாகச் சொன்னால் ‘பீலா’ விடுவாராம்.

மற்றவர் சந்துரு என்னும் வேலைதேடும் இளைஞர். ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த அவருக்கு எந்த வேலை கிடைத்தாலும் அவர் தகுதிக்குக் குறைவு என்றுதான் தோன்றுமாம். “எனக்கு  ஜாக்பாட் மாதிரி ஒரு வேலை கிடைக்கத்தான் போகிறது. நீங்களெல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்.” என்று அடிக்கடி சொல்வாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை புரிந்தது. பொழுதைக் கழிப்பதற்காக (கொல்வதற்காக?)  அனைவரும் அங்கே கூடுகிறார்கள்.

சந்துரு நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மிக ஆர்வத்துடன்   ‘கனவின் மாயா லோகத்திலே கலந்தே உல்லாசம் காண்போமே’ என்றோ ‘சாலையில புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்’ என்றெல்லாம் உணர்ச்சிததும்பப் பாடுவார்.

தினமும் சபை கலையும்போது மேலேசொன்ன சம்பூர்ண ராமாயணம் பாட்டு ‘இன்றுபோய் நாளை வாராய்’  கோஷ்டி கானமாய் பாடிவிட்டுக் கலைவார்கள்.

ஆரம்பத்தில்  வாரத்தில் ஓரிரு நாட்கள் அந்தச் சபைக்குச் சென்றுவந்த நான், நாளடைவில் நிரந்திர உறுப்பினன் ஆகிவிட்டேன். ஒவ்வொருவர் குணாதிசயமும் புரிபடச் சில நாட்கள் ஆயிற்று. ரசிக்கும்படியாகவும் இருந்தது.

முதலில் வயதில் மூத்தவரான வரதராஜன்…   

(இன்னும் வரும்)

 

   

 

 

 

பரன் + பரை —> பரம்பரை

  • நமது பரம்பரை என்றால் என்ன தெரியுமா?  தந்தை  வழியில் ஏழாவது  தலைமுறையில் வரும் பரனும் தாய் வழியில் ஏழாவது தலைமுறையில் வரும் பரையும்     சேர்ந்ததுதான் பரம்பரை.  
  •  இப்படிப் பரம்பரை பரம்பரையாக வருவதுதான்பாரம்பரியம்.

நன்றி : இணையதளம்

No automatic alt text available.

 

ராஜ நட்பு (5) – ஜெய் சீதாராமன்

Image result for chinese emperor chengsan

அடுத்தநாள் காலை சக்ரவர்த்திதர்பாரில் அனைத்து ஆலயப்பணி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. சக்ரவர்த்தி அழைத்ததின்பேரில் நாடகக்குழு உபதலைவர் பிங்வென்,  சீன மொழிபெயர்ப்பாளர், மற்றும் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  முதலில் சக்ரவர்த்தி பிங்வென்னைப் பார்த்து ‘நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா’ என்று கேட்டார். பிங்வென் ‘ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு வாங்மெங் நன்றாகவே பயிற்சி கொடுத்துத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். கலைகள் தொடர்ந்து நடக்கும். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். நானும் இங்கேயே இருப்பேன். அரசே, வாங்மெங் அன்றாட சம்பவ நிகழ்ச்சிகளைக் குறித்து வைப்பது வழக்கம். அவரது இருக்கையிலிருந்து அதை இங்கே எடுத்துவந்துள்ளேன். இதோ’ என்றுகூறி இடுப்பிலிருந்து எடுத்த எழுத்தோலையை அரசரிடம் நீட்டினார்.

சக்ரவர்த்தி அதன் விவரங்களை மொழிபெயர்ப்பாளர் மூலமாய் கேட்டுத் தெரிந்துகொண்டு கண்களில் பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே ‘கிருஷ்ணா, நீயும் இதைப்போலவே இதுவரை நடந்ததை எனக்கு எழுதிக்கொடு’ என்று ஓலையை என்னிடம் நீட்டினார்.

சக்ரவர்த்தி, கட்டிடக்கலைஞர் அதிகாரி குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனைப் பார்த்து “விமானத்தின் வடக்குப்பகுதியில் கிழக்கு மேற்கில் இரு பெரிய கடவுள் சிலைகள் வைக்கப்படஇருக்கின்றன. அச்சிலைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா?”என்று கேட்க, அவை திட்டமிட்டபடித் தயாராக இருப்பதாக அவர் பதிலளித்தார். “அதில் ஒரு மாற்றம். வடகிழக்குச் சிலைக்குப்பதிலாக என் புதிய கடவுள், வாங்மெங்கின் சிலை உருவாக்கப்படவேண்டும். அவரின் பின்புறத்தில் கேடயங்களுடன் வாட்போர்புரியும் அவர் குழுவின் இரு வுஷு நடனக் குழுவினரின் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டபின் தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்குள் இது முடிக்கப்படவேண்டும். இது சாத்தியமா?”என்று வினவினார்.

பெருந்தச்சன் மற்ற குழுவுடன் சிறிதுநேரம் கலந்தாலோசித்துவிட்டு, “கருங்கற்கள் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன. குறித்த காலவரையறைக்குள் செய்துமுடிக்க எனக்கு முழுசம்மதம். தேவையான அனைத்தையும் இதில் ஈடுபடுத்த நான் தயார்”என்று பதிலளித்தார். “வாங்மெங்கின் உருவப்படம் அவர் குழுவில் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் அவர்களின் உதவியோடு இந்த முக்கியக் காரியத்தை ஆரம்பித்து முடித்துத் தாருங்கள்”என்று சக்ரவர்த்தி கூறினார். தர்பார் அத்துடன் கலைந்தது.

சம்பவப்பட்டியல் அதிகாரி இங்கு நிறுத்தினார். “அரசே கிருஷ்ணன் ராமனின் ஓலை இதோடு முடிவுக்கு வருகிறது”என்றவுடன் உணர்ச்சிகளைக் கிள்ளும் விறுவிறுப்பான கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சபையும் ஷேங்க்ஸானும் சுதாரித்துக்கொண்டனர். மன்னர் மூன்றாவது ஓலையைப் பிரித்துப் படிக்கக்கொடுத்தார். அதுவும் சீனமொழியிலேயே இருப்பதைக்கண்டு அதிகாரி தொண்டையை மறுபடி கனைத்துக்கொண்டு படிக்கஆரம்பித்தார்.

4. ராஜராஜ சோழன் ஓலை.

“ஷேங்க்ஸான் சமூகத்திற்கு வணக்கத்துடன் சோழநாட்டு மன்னன் ராஜராஜ சோழன் இன்றைய காலகட்டத்தில் எழுதும் ஓலை. ஏதோ காரணத்திற்காக ஐந்து வருடங்கள் வராமலிருந்த உங்கள் வணிகக் கப்பல் இவ்வருடம் 1010ல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறது. வணிகத் தலைவரிடம் இப்போதே நான் எழுதித்தரும் ஓலை இது.

வாங்மெங்கின் சிலை வுஷு நடனக் கலைஞர்களுடன் நன்றாக வடிவமைக்கப்பட்டு இரண்டாம் தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டது. உப தலைவர் பிங்வென் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி எல்லோரையும் உற்சாகப்படுத்தி வந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

மற்ற வேலைகளும் நன்றாக நடந்துமுடிந்து எங்கள் மிகப்பெரிய சாதனையான கும்பத்தையும் மேலே கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றி விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டு எவ்வளவோ பிரச்சனைகள், சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள், எதிர்ப்புகள், கலவரங்கள் முதலியவைகளை சந்தித்துத் தீர்வுகண்டு முக்கியமாக கைதிகளைக் கண்காணித்துக் கட்டுக்கோப்புடன்வைத்து வேலைவாங்கி ராஜராஜேஸ்வரம் என்னும் பெருவுடையார்  கோவில் கட்டும்பணி நன்கு முடிந்து கும்பாபிஷேகமும் இனிதே நடந்தேறியது.

இதில் வாங்மெங்கின் பங்கிற்கு ஈடு எதுவும் இல்லை! அப்பேற்பட்ட மகனை ஈன்றெடுத்த உங்கள் நாட்டிற்கு என் மனமார்ந்த வந்தனம். இத்துடன் நான் உங்கள் பார்வைக்கு அவரது சிலைவடிவம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடம், கோவிலில் அவரது சிறிய கோவில் மற்றும் ஆலயத்தின் முழுப் படம் ஆகிய நான்கு வரைந்த படங்களை வைத்திருக்கிறேன். நான் இத்துடன் அனுப்பியிருக்கும் அன்புக் காணிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். உங்களை எங்கள் நாட்டிற்கு என் விருந்தினராக அழைக்கின்றேன். வருக வருக. வணக்கம்” –  ராஜராஜ சோழன்  

ராஜராஜன் அனுப்பிய சித்திரங்கள்

விரிவாக்கப்பட்ட வாங்மெங் சிலை

வாங்கமெங்கின் சிலைக்  கோவில் பெரிய கோவிலில்

கோவிலின் வட கிழக்கு பகுதியில் வாங்மெங் சிலை  பொருத்தப்பட்ட இடம்

 

ராஜராஜேஸ்வர பெருவுடையார் ஆலயம்

அம்மா என்றால் சும்மாவா… ! — கோவை சங்கர்

Image result for 90 year old woman in tamilnadu

அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா…!

கருவறையில் பத்துமாதம் சுமந்துநின்ற அம்மா
சீராட்டி சோறூட்டி வளர்த்துவிட்ட அம்மா
நம்மனம் நொந்தாலே பொங்கியெழும் அம்மா
நம்சுகமே தன்சுகமாய் வாழ்ந்துவரும் அம்மா !

அணுஅணுவாய் ரசித்துநமை வளர்த்துவரும் அம்மா
கண்ணியமும் ஒழுக்கமதும் போதிக்கும் அம்மா
குணக்குன்றாய் நன்மகனாய் வளர்த்துவரும் அம்மா
இணக்கமுற வாழ்ந்திடவே வழிகாட்டும் அம்மா !

பிஞ்சுநடைப் பருவத்தில் பொத்திபொத்தி வளர்ப்பவள்
பள்ளிசெலும் பருவத்தில் ஆசானாய் இருப்பவள்
பருவத்தில் தோள்கொடுத்து நன்னெறியைக் காட்டுவாள்
திருமண பந்தத்தின் சுளுவுகளைச் சுட்டுவாள் !

எப்போதும் நம்பக்கம் வாதிடுவாள் அம்மா
தப்பேதும் செய்யாமல் காத்திடுவாள் அம்மா
அப்போதும் இப்போதும் எப்போதும் அம்மா
தப்பாமல் ஆசிபல கூறிடுவாள் அம்மா !

அன்பின் இருப்பிடம் பாசத்தின் பிறப்பிடம்
இன்சொல்லால் வேய்ந்தநல் பல்கலைக் கழகம்
தனைச்சார்ந்த சுற்றார்க்கும் நல்லதையே நினைக்கும்
இன்னிசைபோல் சுகமாக வருடுகின்ற அம்மா !

அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா..!

 

புதுமை ! கண்டுபிடிப்பு !!

புதுமை.. கண்டுபிடிப்பு! சிலவற்றைப் பார்ப்போமா? 

Image result for innovation

டிரைவர் இல்லாத கார் ஏற்கனவே வந்துவிட்டது! அதில் நிறைய முன்னேற்றங்கள் வரஇருக்கின்றன. 

Related image

டிரோன்களும் நிறைய வேலைகளைச் செய்யவந்துவிட்டன ! (நம் ஊரிலேயே கல்யாண வீடியோக்களை  டிரோன்  எடுக்கிறது ).     மேலும் – காட்டுத்தீயை அணைக்க, மருந்துகளை உடனேவழங்க, கொசுக்களைஅழிக்க, விமானங்களைச் சோதனையிட, கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க போன்ற மற்ற வேலைகளையும் செய்ய அது காத்துக்கொண்டிருக்கிறது!  

Image result for drone ambulance

 

2333 கி மீ வேகத்தில் பறக்கும் ஜெட்

24 மணிநேரத்தில் 3D பிரிண்ட் செய்யப்பட்ட வீடு !

சந்திரனுக்குச்செல்ல ‘சந்திரன் எக்ஸ்பிரஸ்’ ரெடி? 

வணிக ரீதியான ராக்கெட் விரைவில்! 

ரோபோட்ஸ் மனிதன் எல்லா வேலைகளையும் செய்யும்! போர்வீரன், விவசாயி, பார்மசிஸ்ட், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர், பத்திரிகை நிருபர், வீட்டுவேலை சமையல் உட்பட,வக்கீல், டாக்டர், வங்கி அதிகாரி இன்னும் எத்தனையோ!

Emotix Miko - India's First Companion Robot

 

 

ஓலைச்சுவடிகள்

(நன்றி: https://tamilvaralaru.wordpress.com/)

Related image

பாறைகளில் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத்தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம்வரை பனையோலையில் எழுதுகின்றமுறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும்போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு ) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக்கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன.  இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும், வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்கவேண்டும் என்று கீழ்க்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே எழுதிய ஓலையைப்பற்றிச்  சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.

மாதவி கோவலனுக்குக் கோசிகமாணி வாயிலாக அனுப்பிய  ஓலை அனைவரும் அறிந்ததே. அவை  பெரும்பாலும் பனையோலையே என்று ஊகிக்கப்படுகிறது.

கிராமசபைகளில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதிக் குடத்திலிட்டுப்பின் அவற்றை எடுத்து முடிவுசெய்யும் நிகழ்ச்சியாகிய குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுத்தல் என்ற செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது

எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.

*நீட்டோலை

திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.

*மூல ஓலை

ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக்கொள்ளும் முறை அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.

*சுருள் ஓலை

ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்துவந்த சுருள்வடிவமான காதோலைபோல் சுருட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. 

*குற்றமற்ற ஓலை

மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.

*செய்தி ஓலைகளின் வகைகள்

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக்கொண்டும் அவை தனிப்பெயர்களில் அழைக்கப்பட்டன.

*நாளோலை

தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.

*திருமந்திர ஓலை

அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப்பொருள்படும் 

*மணவினை ஓலை

திருமணச்செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன்மூலம் திருமணச்செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.

*சாவோலை

இறப்புச் செய்திகளைக்கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:

மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%

சாதாரண பனைமரம் வருடத்திற்கு ஒருமுறை காய்காய்க்கும். ஆனால், அரியவகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைமட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர்.

தஞ்சையில் ஓலைச்சுவடி பயிலரங்கம் நடத்தப்பட்டது. 

தஞ்சை சரஸ்வதி மஹாலில் பல ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

உ வே ஸ்வாமிநாத அய்யர் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றை ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த பின்னரே வெளியிட்டிருக்கிறார். 

நமது மக்களுக்கு நன்றாகத்தெரிந்த ஓலை -நாடி ஜோதிடம். பழைய ஓலைகளைவைத்து அவர்கள் காட்டும் சித்துவேலைகளைப்  புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஜன்மம் போதாது!