நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா?
….
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
முதலில் எப்போதாவது வெட்டிச்சங்கத்துக்குப் (அரட்டை கோஷ்டிக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்) போய்க்கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி என்றாகி நாளடைவில் நிரந்தர உறுப்பினன் ஆகிவிட்டேன். (இங்குமங்கும் – ஆங்காங்கே – விட்டுவிட்டு – பரவலாக – மிகப் பரவலாக என்றெல்லாம் சொல்வார்களே அந்தக் கால வானொலி வானிலை அறிக்கை நினைவிற்கு வருகிறதோ?)
அந்த இடத்திற்கு அருகில் இருந்ததாலோ என்னவோ, வரதராஜன் சார் முதலில் ஆஜர். பின்னர்தான் ஒருவர் ஒருவராக மற்றவர்கள் வந்து சேர்ந்துகொள்வோம். ஆக, வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சூயன்லாய் மற்றும் நான் என்று அரை டஜன் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா நாளிலும் கூடுவோம் .
வரதராஜன்தான் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். எப்போதேனும் அரட்டை விவாதமாக மாறிவிடும். சற்று நேரத்தில் வேறு விஷயத்திற்குத் தாவிவிடும். சில சமயம் விவாதம் முற்றி சூடாகத் தொடங்கினாலோ அல்லது வெகுநேரம் தொடர்ந்தாலோ அதற்கு முடிவுகட்டுவது தலைவர்தான். பல சமயம் ஏதாவது ஜோக் அடித்து முடித்து வைப்பார். மிக அரிதாக அதட்டல் போட்டு முடித்துவைப்பதும் உண்டு.
வேலை தேடும் சந்துருவிற்கு அவர் உறவினர் ஒருவர் சில புத்திமதிகள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்களும், விதமும் சந்துருவிற்கு எரிச்சல் ஏற்படுத்தியிருந்தாலும் சொன்னவர் அவரது தமக்கையின் புகுந்தவீட்டுப் பெரியவர் என்பதால் ஏதும் பேசமுடியவில்லை.
அங்கிருந்து அதே எரிச்சலுடன் சங்கத்திற்கு வந்திருந்தார். தனக்குச் சொல்லப்படும் எந்தப் புத்திமதியையும் தான் மதிக்கத் தயாரில்லை என்று சொன்னார்.
சர்ச்சை தொடர்ந்தது. சொல்வது சரிப்படுமா, உபயோகப்படுமா என்றுதான் பார்க்கவேண்டும் என்று மகேந்திரனும் ஏகாம்பரமும் வாதிட்டார்கள்.
வயதோ, அனுபவமோ மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதியை எவருக்கும் அளிப்பதில்லை. புத்திமதி சொல்ல யாருக்கும் அருகதையில்லை என்று ஒரு போடு போட்டார் சந்துரு.
மகேந்திரன் “யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டீர்களோ?” என்று குறுக்கிட்டார்.
“அப்படியில்லை. உருப்படியான யோசனை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.”
“சரி, ஒருத்தர் சொல்வது புத்திமதியா இல்லை அறிவுரையா என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்?” என்றார் ஏகாம்பரம் சந்துருவை மடக்குகின்ற தொனியில்.
அதுவரை பேசாமலிருந்த வரதராஜன் குறுக்கிட்டு, “என்ன ஏகாம்பரம், புரியாம பேசுறீங்களே?” என்றார்.
தொடர்ந்து ஏதோ சொல்லத்தானே போகிறார் என்று அனைவரும் அவரையே பார்த்தோம்.
“ஒரு விஷயத்தை சந்துருகிட்டே சொல்லுங்க. அவர் எடுத்துக்கிட்டா அது யோசனை. இல்லாட்டா புத்திமதி. அவ்வளவுதானே?”
எல்லோரும் சிரித்துவிட்டோம். சூடாகிக்கொண்டிருந்த விவாதம் முடிந்துபோனது.
வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நீங்கள் என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். நானும் சீனாவும் தவிர.
சுமார் இரண்டு மூன்று மணிநேரம் வெட்டி அரட்டை என்றாலும் பொது அரட்டையைத்தவிர சில சொந்த விஷயங்களும் வந்து விழும் என்பது இயல்புதானே. அப்படித் தெரிந்துகொண்ட அல்லது ஊகித்த விஷயங்கள்தான் இவை.
வரதராஜன் சங்கத்தில் கிட்டத்தட்ட ‘பாஸ்’ போல இருந்தாலும், எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தாலும், குடும்பத்தில் அப்படியில்லை என்பது என் அனுமானம்.
நான்கைந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்த வரதராஜனின் தந்தை குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத ஒரு சுயநலப் பிறவியாம். பெரிய சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுவாராம். தனது சௌகரியத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாதாம். மனைவி, குழந்தைகளுக்குத் தேவையான சாப்பாடு இருக்கிறதா என்றுகூடப் பார்க்கமாட்டாராம்.
அண்ணன் சமையல்காரனாக யாருடனோ சேர்ந்து ஊரைவிட்டே போய்விட்டான். இரு தமக்கைகளில் ஒருத்தி பள்ளியில் படிக்கும்போதே தற்கொலை செய்துகொண்டாள். ஏன் என்று இதுவரை தெரியாதாம்.
இவர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே ஒரு கடையில் கணக்கு எழுதும் ஒரு தூரத்து உறவினரைப் பிடித்துக்கொண்டார். வேலை பார்க்கும் கடையைத்தவிர மற்ற சிலருக்கும் அரசாங்கப் படிவங்கள் நிரப்புவது, லைசன்ஸ் வாங்க உதவி ய்வது என்று அவருக்கு சம்பாத்தியம்.
வரதராஜனின் சாமர்த்தியமான உதவி நல்ல வரும்படியைத் தந்தது. அந்த உறவினர் வயதாகி முடியாமல் போனபோது முழு விவகாரத்தையும் வரதராஜன் பார்த்துக்கொள்ளவும், அந்தப் பெரியவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுக்கவும் ஏற்பாடு ஆகியது.
பெரியவருக்குப் பின் எல்லாம் வரதராஜன்தான்.
தம்பியைப் படிக்க வைத்தார். மீதமிருந்த சகோதரிக்குத் திருமணம் செய்துவைத்தார். பெற்றோர்கள் இருக்கும்வரை திருமணமும் செய்துகொள்ளவில்லை
அம்மாவும், அப்பாவும் ஒருவர்பின் ஒருவராக மறைய, தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார். இரு பெண்களும் ஒரு மகனும். இப்போது எல்லோருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில்.
அண்ணன் எங்கே என்றே தெரியாது. தம்பி மற்றும் சகோதரி குடும்பத்துடன் அவ்வளவு போக்குவரத்தும் கிடையாது. எனவே குடும்பம் என்பதே இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும்தான்.
பிள்ளையோ, பெண்களோ, பேரக்குழந்தைகளோ இங்கு வருவதில்லை. அவர்களைப் பார்க்க இவரும் போவதில்லை. மனைவியோ பெரும்பாலும் அவர்களோடுதான். இவர் இங்கே சொந்தச் சமையல்தான்.
தினமும் சந்திப்பதால் அவர் வீட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம் எங்கள் யாருக்கும் ஏற்படுவது மிகக் குறைவு. ஒருமுறை சீனாவின் சித்தப்பா ஒருவருக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட வேலையில் வரதராஜனின் உதவி தேவைப்பட்டது. அன்று மாலை இரயிலில் அவர் ஊருக்குத் திரும்புவதால் வரதராஜனை வீட்டிலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. அறிமுகம் செய்துவைக்க சீனா போனான். அவர்கள் இருவரும் காரியம்பற்றிப் பேசும்போது தனக்குப் போரடிக்கும் என்று என்னைக் கூடவரச் சொன்னான் சூயன்லாய் என்கிற சீனா.
வீட்டின் முன் பகுதியில் ஒரு அறையில்தான் தான் பார்த்துவரும் கணக்கு வழக்குகள் மற்றும் இதர காகிதங்கள் போன்றவற்றை வைத்திருந்தார் வரதராஜன். ஒரு மேஜை, அவருக்கும் வருபவர்களுக்குமாக மூன்று நாற்காலிகள்… ஒரு சிறு அலுவலகம்தான் அது.
யாரிடம் என்ன மனு கொடுக்கவேண்டும், அதில் குறிப்பிடவேண்டிய தகவல்கள் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சீனாவின் சித்தப்பா ஒரு தெளிவு பெற்றவராய் மற்ற ஆவணங்களுடன் வந்து சந்திப்பதாகவும் அந்த மனுவை எழுதி யாரைப் பார்க்கவேண்டுமோ அதற்கு வரதராஜன் துணைபுரியவேண்டும் என்றும் கூறி எழுந்துகொண்டார்.
“சீனா, நான் கடைத்தெருவிலே ஒரு நபரைப் பார்த்துவிட்டு வரேன் என்று அண்ணியிடம் சொல்லிவிடு” என்றார்.
நாங்கள் சற்று நேரம் கழித்துக் கிளம்பினோம். அந்த சிறிது நேரத்திலேயே ஒன்று கவனத்திற்கு வந்தது. எங்கள் சிறு கோஷ்டிக்கு அறிவிக்கப்படாத தலைவர் வரதராஜன். ஆனால் அவர் வீட்டிலோ உறவிற்குள் ஏதோ நெருடல் இருந்துவருவது ஊகிக்க முடிந்தது.
எங்கோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவர் மனைவி, தான் வர தாமதமாகலாம் என்று எங்கோ பார்த்துக்கொண்டு பொதுப்படையாகச் சொல்லிவிட்டுப் போனது விசித்திரமாக இருந்தது. மாலை நேரங்களில் எங்களுடன் அவ்வளவு ஜோக்கும் சிரிப்புமாக இருக்கும் வரதராஜனும் வீட்டில் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார்.
ஒரு நாள் சங்கம் முடிந்து கிளம்பிக்கொண்டிருக்கும்போது, வரதராஜன், “நாளை மதியம் இரண்டு மணி சுமாருக்கு வீட்டுக்கு வர முடியுமா?” என்று மற்றவர்கள் காதில் விழாதவாறு என்னிடம் கேட்டார். நானும் தலையை ஆட்டினேன்.
நான் – தனியாகத்தான் சென்றேன்.. சூயன்லாய் கூட வரவில்லை. முன்னறையில்தான் அவர் இருந்தார். ஒரு அலமாரியிலிருந்து பாட்டில், சோடா, மற்றும் க்ளாஸ் எடுத்து மேசைமீது வைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்துவதும் அமல்படுத்துவதுமாக இருந்த காலகட்டம் அது.. (ஒரு பிரபல மாலை தினசரி போஸ்டரில் “மதுவிலக்கு விலக்கு ஒத்திவைப்பு ரத்தாகுமா?” என்று போட்டிருந்தார்கள்.)
“என்ன! தண்ணி அடிக்கும்போதுத் துணைக்குக் கூப்பிட்டிருக்கேனே என்று யோசிக்கிறீங்களா? எனக்குத் தெரியும், உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லைன்னு. வீட்டிலே யாரும் இல்லாதபோது எப்பவாவது தாகசாந்தி உண்டு. ஓரிருமுறை யாரவது நண்பர் கம்பெனி கொடுப்பாங்க. நீங்க கம்பெனி கொடுக்கமாட்டீங்கன்னும் தெரியும். தனியா உட்கார்ந்து சாப்பிடறது சரியாவராது. அதுதான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்க ‘ரா’வா எவ்வளவு சோடா வேணும்னாலும் குடிக்கலாம்.” என்றார்.
வழக்கம்போல நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார். “எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒருத்தர்தான் ‘ஒன்வே டிராபிக்’ ஆளு. விஷயம் உள்ளே போகுமேதவிர வெளியே வாராது.”
கொஞ்சம் கொஞ்சமாக சொந்த சமாசாரம் வெளியே வந்தது. அரசாங்கத்திலே ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் நெளிவு சுளிவு தெரிந்து காரியம் சாதித்துக் கொடுக்கும் சாமர்த்தியசாலி என்று அறியப்பட்ட அவர் பேச்சிற்கு வீட்டில் எந்த மதிப்பும் இல்லையாம். இவர் தனது சகோதர சகோதரிகளுக்கும், மனைவி மக்களுக்கும் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் ஏன் இப்படி என்று அவருக்கே புரியவில்லை. ஒட்டுதல் என்பதே இல்லை என்றாகிவிட்ட நிலையில் மாலையில் சங்கத்தில் பொழுதுபோவது மனதிற்கு இதமளிக்கிறதாம்.
அவர் தூங்கப் போனார். நான் வீட்டிற்குக் கிளம்பினேன். தெருவில் யார் வீட்டிலிருந்தோ ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு கேட்டது.
அப்படி ஒன்றும் மொடாக் குடியரும் இல்லை அவர். எதிலிருந்தோ தப்பிக்கும் முயற்சியாகவே அவருக்கு ஆல்கஹால் போலும். பின்னாளில் சங்கத்தில் அவர் வழக்கம்போலவே இருந்தார். அன்று எனக்கு சொன்ன ஒரே ‘தேங்க்ஸ்’ தவிர எந்த வேறுபாடும் இல்லை.
சங்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது
(அடுத்தது யார்…?)