காந்தப் படுக்கைக்குக் கீழே ஒளிந்துகொண்டிருந்த ராகு, சூரியதேவனை விழுங்குவதற்குச் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன், சந்திரன் இருவரும் அவனது அழகை அழித்துச் சாயா நிழலாக அலையவிட்டார்கள் என்பதால் அவர்கள் இருவர்மீதும் அசாத்தியக் கோபம் இருந்தது.
உண்மையில் ராகுதேவன் சூரியனைவிட அழகானவனாக இருந்தான். பொன்னிறத்தில் இருந்ததால் பானு என்ற அவனை ஸ்வர்ண பானு என்றே அழைத்தார்கள். ஸ்வர்ணபானுவுக்குத் தன் அழகில் மகா கர்வம். பிறப்பால் அசுரனாக இருந்தாலும் தேவலோக ஆடல் அரசிகள் அனைவரும் அவனைச் சுற்றியே வந்தார்கள்.
ஸ்வர்ணபானுவின் ஆசைக்கோ அளவில்லை. சந்திரனின் இருபத்தேழு மனைவியர்மீதும் மையல் கொண்டான். சந்திரனின் ஒளி இல்லாத அம்மாவாசையன்று அவனுடைய மனைவியர் அனைவரையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான். களை இழந்த சந்திரன் சூரியனிடம் வேண்டிக்கொள்ள சூரியதேவன் கோபம்கொண்டு ஸ்வர்ணபானுவுடன் போருக்குப் போனான்.
ஸ்வர்ணபானு அசுரன் ஆனதால் மாயையால் முகத்தை மறைத்து நிழல் வடிவத்தில் வந்து சூரியனைத் தாக்கினான். சூரியனால் அவன் நிழல் வடிவத்தை உடைக்க முடியவில்லை. சூரியதேவனின் அக்னிக் கணைகள் ஸ்வர்ணபானுவின் பொன் உடலில் பட்டுப் பிரதிபலித்ததேதவிர அவனை அழிக்க முடியவில்லை. கோபவேகத்தில் சூரியதேவன் மிக உக்கிரமாகப் போரிடத் தொடங்கினான். மகாவிஷ்ணு அளித்த நாராயண அஸ்திரத்தைக் கொண்டு ஸ்வர்ணபானுவின் உடலை இறுக்கக் கட்டினான். தன் சக்தியையெல்லாம் வெப்ப சக்தியாகமாற்றி அக்னிப் பிழம்பை ஸ்வர்ணபானுவின்மீது பொழிந்தான்.
அந்த அக்னிக் குழம்பின் ஜ்வாலை அவன் உடலை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் நாராயண அஸ்திரம் அவன் உடலைச் சுற்றியிருந்ததால் அது கவசம்போல் அவனைப் பாதுகாத்தது. ஆனால் நிழற்சாயை பூசியிருந்த முகத்தில் அது தன் தீவிரத்தைக் காட்டியது. அழகான முகத்தைக்கொண்ட ஸ்வர்ணபானுவின் முகம் தீப்பற்றி எரிந்த கரிய முகமாக மாறிவிட்டது.
அழகிழந்த ஸ்வர்ணபானு சந்திரனின் மனைவிகளை விட்டுவிட்டுத் தப்பித்தால் போதுமென்று பாற்கடலில் ஆதிசேஷனின் பின்னால் மறைந்துகொண்டான். சூரியதேவனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எரிந்து சாம்பலாகிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு சூரியனும் தன் உலகிற்குத் திரும்பினான்.
அப்போதுதான் பாற்கடலிலிருந்து அமுதம் எடுப்பதற்காகத் தேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். வாசுகி என்ற பாம்பு கயிறாயிற்று. மேரு மலை மத்தாக மாறியது. மகாவிஷ்ணு ஆமை உருவில் மத்தைத் தாங்கும் ஆதாரமாக மாறினார். அசுரர் தேவர் இருவரும் கடையப் பாற்கடலிலிருந்து பல திவ்யப் பொருட்கள் தோன்றின. முதலில் வந்த மகாலக்ஷ்மியைத் திருமால் தன்னுடையவளாக்கிக் கொண்டார். அடுத்து வந்த ஐராவதம், காமதேனு, அட்சயப் பாத்திரம் ஆகியவற்றை இந்திரன் எடுத்துக்கொண்டான்.
அமுதம் திரண்டு வந்தது. ஆனால் அதற்குமேல் பொறுக்க இயலாத வாசுகி தன் விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் அமுதத்தில் கலப்பதற்குமுன் பரமசிவன் அதை எடுத்து விழுங்கினார். அதனால் தன் கணவன் நீல வண்ணமாக மாறிவிடுவாரோ என்ற பயத்தில் அருகிலிருந்த பார்வதி அவர் கழுத்தில் அதை நிறுத்த, பரமசிவன் நீலகண்டராகமட்டும் மாறினார்.
அதன்பின் அமுதம் பொங்கிவந்தது. அதற்காக அசுரர்களும் தேவர்களும் போரிட்டுக் கொள்ளும் நிலைமைக்கு வந்தனர். அதைத் தடுக்க மகாவிஷ்ணு மோகினி வடிவம்கொண்டு வந்து அமுதக் கலசத்தை எடுத்துத் தேவர்களுக்கே அனைத்தையும் வழங்கினார்.
ஆதிசேஷன் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஸ்வர்ணபானு தன் தலையைப் பொன்னாடையால் மறைத்து தேவவுருவெடுத்துத் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தை அருந்தினான்.
ஆனால் சூரியனின் கூரிய விழிகள் ஸ்வர்ணபானுவைக் கண்டுபிடித்துவிட்டன. சந்திரனைக்கொண்டு அவன் முக்காட்டை நீக்கச்செய்தான். மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை தலைவேறு உடல்வேறாகத் துண்டாக்கினார் .
அமிர்தம் உண்ட காரணத்தால் அவன் உயிர் நீங்கவில்லை. அவன் திருமாலின் பாதங்களில் பணிந்து வேண்டிநிற்க , அவரும் வடக்கில் தலையை வைத்துப் படுத்திருந்த பாம்பைத் துண்டித்து பாம்பின் உடலை ஸ்வர்ணபானுவின் தலையுடன்கூட வைத்தும் பாம்பின் தலையை அவன் உடலுடன்கூட வைத்தும் அவனை இரண்டாக்கினார்.
அவர்கள் இருவரும் ராகு , கேது என்ற பெயருடன் கடும் தவம் செய்ய, மகாவிஷ்ணு அவர்கள் தவத்திற்கு இரங்கி அவர்கள் இருவரையும் கடக மகர ஆழியின் வேதங்களைக் கற்றுவருமாறு பணித்தார். அவற்றை முழுதும் கற்று ஓதியபின் நவக்கிரகப் பதவி தருவதாகக் கூறினார்.
ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு, கேது என சாகாவரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.
இந்த இருவித உடல் அமைப்பே நவகிரகங்களின் குணத்தைக் காட்டும். ராகு அசுர முகம், பாம்பு உடல். அதனால் ராகு போக காரக கிரகமாகமாறி வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று பதவிக்கு வருகிறான். கேதுவோ பாம்பின் தலை அசுர உடல் . அதனால் பொருட்பற்றையும், உடல் பற்றையும் அழிக்கும் சக்தி பெறுகிறான். அதன் மூலம் மோட்சக்காரன் என்று அழைக்கப்படுகிறான்.
இவ்வளவு நற்கதிகள் அடைந்தாலும் சூரிய சந்திரர்கள்மீது அவர்கள் இருவரும் கொண்ட பகைமட்டும் மனதிலிருந்து போகவில்லை.
அவர்கள் சூரிய சந்திரர்களைப் பழி வாங்கும்பொருட்டு மீண்டும் தவம் இருந்தனர். முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும், சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதற்கான வரத்தைப் பெற்றனர்.
இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் வெளிவந்துவிடலாம் என்று அருளினார். ஆகவே அதுமுதல், ஸ்வர்ணபானு சந்தர்ப்பம் கிடைத்தபோது சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடுவது வழக்கமாகிவிட்டது.
இன்றைக்கு ஸந்த்யாவின் அறையில் சந்திர காந்தச் சிகித்சைக்குக் காத்திருக்கும் சூரியதேவனை விழுங்க ஆவலுடன் காத்திருக்கிறான் ராகு .
(தொடரும்)
விஞ்ஞானம்:
சந்திரனின் சுற்றுவட்டப் பாதை சூரியனின் சுற்றுவட்டப் பாதையை வெட்டும் புள்ளியே ராகு கேது எனப்படும். இவைகளுக்கு உருவம் இல்லை. சந்திரன், பூமியின் சூழற்சியின் வேகத்தால் ஏற்படும் இணையற்ற காந்தப்புயலே ராகு கேது ஆகும். இந்த காந்தப் புயலின் சூழற்சியால் பூமியில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்குப் புலனாகாத (கற்பனை – மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனைப் புள்ளிகள்.
இரண்டாம் பகுதி
எமபுரிப்பட்டணத்துக்கு முதன்முறையாக வந்திருக்கும் அந்த நால்வரும் தங்கள் அறையில் அமர்ந்து எப்படி இந்த மாபெரும் பிராஜெக்டை சமாளிப்பது என்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
பிராஜெக்ட் மேனேஜர் அரசு நல்ல பழுத்த அனுபவசாலி. சுந்தாவும் , மாணிக்கும் தகவல் துறையில் ஜீனியஸ். ஞானி சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மேதை. இவர்கள் நால்வரும் வெவ்வேறு கம்பெனிகளில் இருந்தவர்கள். சிவா கன்சல்டிங் சர்வீஸஸ் (எஸ்சிஎஸ்) என்ற புதிய நிறுவனத்தை இவர்கள் நால்வரும் சேர்ந்து ஆரம்பித்தார்கள்.
எஸ்சிஎஸ் வந்தபிறகு மற்ற நிறுவனங்கள் எல்லாம் இவர்களுடன் போட்டி போடமுடியாமல் திணறினார்கள். அரசு, தான் முதலில் இருந்த ஜெய்ன் இன்போ நிறுவனத்திலிருந்து திறமைசாலிகள் அனைவரையும் எஸ்சிஎஸ்க்கு மாற்றி அந்த நிறுவனத்தை செயலற்றதாக மாற்றிவிட்டார். அது மட்டுமல்ல, பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த கௌதம் டெக்னாலஜியையும் முற்றிலும் அழித்து விட்டார்கள்.
அதே சமயத்தில் ராம் டெக் என்ற தகவல் துறை நிறுவனமும் மிகவும் பிரபலமாக இருந்தது. அதன் பன்னிரண்டு பாகஸ்தர்களும் திறமையாக நடத்திவந்தார்கள். இவர்களுடன் எஸ்சிஎஸ் இம் சேர்ந்துதான் மற்ற நிறுவனங்களை அழிக்க முடிந்தது. இவர்கள் இருவருக்கும் இடையேகூட யார் நம்பர் ஒன் என்ற போட்டி அடிக்கடி வரும். இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரு கூட்டணி அமைத்துப் பல பிராஜெக்ட்களை முடித்ததால் ஒருவரை ஒருவர் அழிக்காமல் இணைந்து செயல்படுவதே லாபம் என்பதை உணர்ந்தார்கள்.
சித்திரகுப்தன் தன் பிராஜெக்ட்டுக்கு எஸ்சிஎஸ் – ராம் டெக் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலத்த ஆலோசனை செய்தான். சிவபெருமான் எஸ்சிஎஸ் க்கு ஆதரவாக இருப்பது புரிந்தது. மகாவிஷ்ணு ராம் டெக்கின் பக்கம் ஆதரவுக் கரம் நீட்டுவதும் புரிந்தது. எமனிடம் சென்று விவாதித்தான்.
எமன் சிவபெருமானை எதிர்த்து எதுவும் செய்யத்தயாராயில்லை. அதுவும் மார்க்கண்டேயன் விவகாரத்தில் தலையிட்டு அவரிடம் அடிபட்டபிறகு எமனுக்கு வேறுவழியே கிடையாது. இருப்பினும் தர்மராஜாவான அவன் பிரும்மாவிடம் சென்று ஆலோசனை நிகழ்த்தினான். முதலில் அவருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. மெத்தப்படித்த மனைவி சரஸ்வதியுடன் கலந்து ஆலோசித்தார். முடிவில் எஸ்சிஎஸ் க்குக் கொடுப்பது தான் சிறந்தது என்றும் ஆனால் அவர்கள் ராம் டெக்குடன் இணைந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும் தீர்மானித்தார். இவர்கள் எமபுரிப்பட்டணத்தின் மற்ற துறைகளுடம் இணைந்து செயல்பட வசதியாக ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனத்தையும் அமைத்தார்.
அதுதான் நாரதா கம்யூனிகேஷன்ஸ். அவர்கள்தான் இந்தப் பிராஜெக்டுக்கு நாமகரணம் சூட்டினார்கள்.
பெயர் “எமபுரிப்பட்டணம்”
(தொடரும்)