“தூளி” யில் துயிலும் சிந்தனைகள்!
கே கே நகரின் குறுகிய சந்து ஒன்றில் திரும்பினேன்; மூன்று மாடிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று முளைத்துக்கொண்டிருந்தது. வாசலில் செங்கற்கள், சிமெண்ட்-மணல் கலவை, சற்றுத்தள்ளி, சரளைக் கற்களை சிமெண்டுடன் கலக்கும் வாய்பிளந்த பெரிய இரும்புக் கலவை இயந்திரம் – இவற்றையெல்லாம்தாண்டி அந்த வீட்டு வேப்ப மரக்கிளையில் வெளிறிய நீலத்தில் வெள்ளைப் பூக்கள்போட்ட கிழிந்த புடவை தூளியாய் ஒரு குழந்தையுடன் தொங்கிக்கொண்டிருந்தது!
“ஆள் ஆரவாரமற்றுக் கிடக்கிறது வேப்ப மரத்தில் தூளி”
எங்கோ படித்த கவிதை வரிகள் நினைவில் வந்து, மனதில் தூளி ஆடின!
தூளி, ஏணை, புழுது, குழந்தைத் தொட்டில் (CRADLE CLOTH) எனப் பல பெயர்கள் – நம் கலாச்சார பாரம்பரியம் பேசும் இவ்விதத் ”தூளிப் படுக்கை”கள் இப்போதெல்லாம் அரிதாகவே தென்படுகின்றன!
“காடா” துணியில் (முரட்டு, பழுப்புநிறக் காட்டன் துணி) ‘ஏணை ரெட்டு’ என்று இருமுனைகளையும் தைத்துத் (லுங்கிமாதிரி) தூளியாய்த் தொங்கவிடுவார்கள்.
வீசி ஆட்டினாலும் தரை குழந்தையைத் தொடாதவாறும், விழுந்தாலும் அடிபடாதவாறும், தரையிலிருந்து இரண்டு அடி உயரத்துக்குள் தூளி கட்டப்படும் – தூளித் துணியின் இரண்டு முனைகளையும் நல்ல கயிற்றால் இறுகக்கட்டி, தேவைக்கேற்ற உயரத்தில் பரண் சட்டத்திலோ, கூரையின் விட்டத்திலோ தொங்கவிடப்படும்!
ஒரு சுங்கடிப் புடவையைக் கொசுவி, விட்டத்தில் சொருகி, இழுத்து, இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து தூளி கட்டிவிடுவாள் அம்மா! தூளியைக் கொஞ்சம் தொங்கியமாதிரி இழுத்து ‘தாங்குமா?’ என்று ‘சரி’ பார்ப்பாள்! சில சமயங்களில் நான் (பள்ளிச் சிறுவனாக என்று அறிக!) உட்கார்ந்து பார்ப்பதுவும் உண்டு. இருந்தாலும் ‘பெரியவர்கள் தூளியிலாடக்கூடாது, குழந்தைக்குத் தலை வலிக்கும்’ என்பாள் – அதன் காரணம் இன்றுவரை எனக்குத் தெரியாது. (தெரிந்தவர்கள் உதவலாம்!).
பள்ளி நாட்களில் என் கடைசித் தம்பியையும் (பதினைந்து வயது வித்தியாசம்!), பின்னர் எங்களுடன் தங்கிய என் சித்தியின் குழந்தையையும் இரவு முழுவதும் தூளியில் ஆட்டியவாறே, நான் தூங்கி வழிந்த நாட்கள் மறக்கமுடியாதவை.
இரவில் குழந்தை தூளியை நனைத்துவிட்டால், கொஞ்சம் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் இழுத்து, ஈரமானபகுதி மேலேயும், காய்ந்தபகுதி கீழேயும் வரவைத்துக் குழந்தையைத் திரும்பவும் தூளியில்விடுவாள் அம்மா – ஈரத்தில் அழுத குழந்தை, சிரித்தபடியே தூங்கிப்போகும்! தூக்கத்தில், ஒருகால் அல்லது ஒருகை, சில சமயம் தலை தூளியிலிருந்து எட்டிப்பார்க்கும். கிழிந்த புடவையிலிருந்து எட்டிப்பார்க்கும் கால், வீட்டின் வறுமை சொல்லும்!
குழந்தைக்குக் காற்றும், வெளிச்சமும் வருவதற்காக, தூளிக்கிடையில் குறுக்காக ஒரு மரக்கட்டையை – (வேலைப்பாடமைந்த வர்ண மர உருளைகள் வசதியுள்ளவர்களுக்கு!) – வைத்து சிறிது அகலப்படுத்துவதும் உண்டு! கிலுகிலுப்பை, பொம்மைகளைக் கட்டிவிட்டால், மல்லாந்து படுத்திருக்கும் குழந்தை அதைப் பார்த்தவாறே சிரித்து, விளையாடி, தூங்கிவிடும்!
குழந்தை அழுகையின் டெசிபலைப் பொறுத்து, தூளியை வீசியோ, முன்னும் பின்னும் குலுக்கியோ ஆட்டுவது நல்ல பலனைக் கொடுக்கும்! தூளியில் ஒரு கயிற்றைக்கட்டி, தள்ளி அமர்ந்து, ஒரு கையில் புத்தகம் வைத்துப் படித்துக்கொண்டே, மறுகையால் சோம்பலாய்க் கயிற்றை இழுத்து ஆட்டுவது, படிக்கும் புத்தகத்தின் சுவாரஸ்யத்தைப் பொறுத்து சீராகவோ, கோணலாகவோ அமையும்! புதிதாய்ப் பாட்டு கற்றுக்கொள்பவர்களுக்கும், பாத்ரூமில் சாதகம் செய்பவர்களுக்கும், பாடிக்கொண்டே தூளி ஆட்டுவது நல்லதொரு வாய்ப்பாக அமையும் – குழந்தை பயந்து தூங்கும் வரை!
தூளி ஆட்டுவதை மெதுவாக நிறுத்தினால், கை, கால் அசைவு, அல்லது ‘உம்’ என்ற சத்தம் மூலம் குழந்தை தொடர்ந்து ஆட்டச் சொல்வது சில சமயங்களில் நம் பொறுமையை சோதிக்கும்!
தமிழ் சினிமவின் ஏழ்மைக்கான குறியீடு தூளி – மரத்திலோ, குடிசையிலோ தொங்கும்.புடவைத் தூளி, சோகத்தையும் சேர்த்தே சொல்லும். கணவனை இழந்த (அ) கணவனால் கைவிடப்பட்ட ஓர் அபலைப் பெண் தன் குழந்தையைத் தூங்க வைப்பது தூளியில்தான் – அவளே பாடுவதாகவோ அல்லது இசையமைப்பாளர் குரல் பின்னணியில் பாடுவதாகவோ, ஒரு தத்துவம் கலந்த சோகப்பாட்டு நிச்சயம் உண்டு (பீடி, சிகரெட் பிடிக்க சிலருக்கு இது எக்ஸ்ட்ரா இடைவேளை!).
ஹை பிச் ”ஆரீராரோ….”, மரக் கிளையில் தூளி, கண்ணீருடன் ரவிக்கை போடாத அம்மா (ஏழ்மை காரணமில்லை – விரக்தி அல்லது உடை பற்றாக்குறை!). ஒரு ஹை கிரேன் ஷாட் – ஒரு ஜூம் அவுட் லாங் ஷாட் – தியேட்டரில் கண்ணீரும் கம்பலையுமாகத் தாய்குலம் – எழுபதுகளின் கிராமீய மணம் கமழும் படங்களில் இது ரொம்ப பிரசித்தம் !
பணக்காரக் குழந்தைக்குத் தொட்டில் – தொங்கும் பிளாஸ்டிக் பொம்மைகள், சுழலும் கிலுகிலுப்பை, கை தட்டும் பபூன் எல்லாம் உண்டு – தூளி கிடையாது!
ஐம்பது வயதுத் தமிழ்க் கதாநாயகன், தூளியில் உட்கார்ந்து கொண்டு, கையையும், காலையும் உதைத்துக் கொண்டு, கையில் ஃபீடிங் பாட்டிலுடன், இருபது வயதுக் கதாநாயகியைப் பார்க்கும் காதல் பார்வை (கழுகுப் பார்வை), ரசிகக்குஞ்சுகளுக்கு குஷியாய் இருக்கலாம் – ஆனால் அது தூளிக்கு அவமானம்!
கர்மயோகி ‘சாவித்ரி’ புத்தகத்தில் (அரவிந்தர் புத்தகத் தமிழாக்கம்), “விதியின் விளையாட்டு, விரும்பி நாடிய ஏணை தூளி” என்கிறார். தமிழ் இலக்கியங்களில் தூளிக்குத் தனி இடம் உண்டு!
தூளியினால் ஏற்படும் சில மருத்துவ நன்மைகள் வியக்க வைக்கின்றன – நம் முன்னோர்கள் இவற்றை அறிந்துதான் தூளியை உருவாக்கினார்கள் என்று ஜல்லியடிக்க விரும்பவைல்லை. ஆனால் ஆராய்ச்சியில் கண்டறிந்த சில உண்மைகள் இன்றைய தலை முறையினரைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும்.
- ‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு ‘SENSORY’ OCCUPATIONAL THERAPY க்குத் தூளி பயன்படும்.
- குழந்தைகளின் சமநிலை உணர்வுக்கு (BALANCING SENSE) தூளி உதவுகிறது.
- குதிப்பது, ஊஞ்சலில் ஆடுவது, குட்டிகரணம் போடுவது, ஸ்கேடிங் – இவற்றின் ஆரம்பப் பயிற்சியாய் தூளி இருக்கிறது.
- தூளியின் அரவணைப்பில் குழந்தை அமைதிப்படுகிறது. பாதுகாப்பு உணர்வு மேம்படுகிறது.
- முழு உடலுக்கும் சப்போர்ட் கொடுத்து, குழந்தை வளைந்து, நெளிவதற்குத் தோதாக இருக்கிறது.
- தன் உடல் அசைவது பற்றிய அறிதலும், பறத்தல் உணர்வும், நிலைப்படுதல் உணர்வும் குழந்தைக்கு ஏற்படுகிறது.
அம்மாவின் சீலையில் தூளி ஆடுவதால், அம்மாவின் மணத்துடன் மடியில் உறங்கும் நிம்மதியும், அமைதியும் குழந்தைக்குக் கிடைக்கிறது – தூளியும் ஒரு வகையில் அரவணைக்கும் அம்மாதானோ?
அதோடு முக்கியமான விசயம், தூளி, மழலைக்கு, அம்மாவின் பத்து மாத கர்ப்ப வாசத்தை நினைவுட்டுகிறது. இன்னும் அம்மாவின் வயிற்றில் தான் இருக்கீறோம் என்கிற சந்தோஷத்தில் அது தூங்கி விடுகிறது.
LikeLike