இந்த இதழ் குவிகத்தின் 50 வது இதழ் !
நவம்பர் 2013 இல் துவங்கி இன்றுவரை குவிகம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ( டிசம்பர் 2013 தவிர).
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கார்ட்டூன், தொடர்கள் என்று பல பகுதிகள் மூலம் இலக்கியம், அரசியல், திரைப்படம், தொலைக்காட்சி, படங்கள், விஞ்ஞானம் போன்ற பல துறைகள் சார்ந்த தகவல்களை உங்களுக்கு அளித்து வருகிறோம்.
இந்த மின்னிதழை உங்களுக்குச் சேர்ப்பிப்பதில் எனக்கு உதவிய என் துணைவி விஜயலக்ஷ்மி, என் மகன் அர்ஜூன், என் மகள் அனுராதா, இணையாசிரியர் கிருபாநந்தன் ஆகியோருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
‘குவிகம் எத்தனைபேரைச் சென்றடைகிறது? எத்தனைபேர் படிக்கிறார்கள்?’ என்பதுபோன்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.
‘குவிகம்’ என்ற பெயருக்கு விளக்கம் கேட்டு இன்னும் பலர் பல இடங்களில் கேள்விகள் எழுப்பியவண்ணமே இருக்கின்றனர்.
‘குமுதம், விகடன், கல்கி, குங்குமம் ‘ என்ற பிரபலப் பத்திரிகைப் பெயர்களின் சுருக்கமா? ‘ என்று வினவுபவர்கள் அதிகம்.
ஆனால் ‘குவிகம் ‘ என்ற பெயர் இப்போது சென்னையில் இலக்கிய வட்டங்களில் சற்று நன்கு அறிமுகமான பெயர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதற்கு இணையாசிரியர் கிருபாநந்தன் அவர்களின் பங்கு மகத்தானது.
அவருடன் இணைந்து ” குவிகம் இலக்கிய வாசல் ” என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 33 மாதங்களாக இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருகிறோம். அதன் மூலம் பல இலக்கிய மேதைகளை நம் அரங்கத்தில் சந்தித்து அவர்கள் கருத்துக்களைக் கேட்கமுடிந்தது. குறைவாக இருந்தாலும், நிறைவான வாசகர்களின் கலந்துரையாடல்கள், கதை சொல்லல் , கவிதை படித்தல், எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
குவிகத்தின் அடுத்த வளர்ச்சியாக, குவிகம் பதிப்பகம் என்ற ஒன்றைத் துவக்கி இதுவரை 8 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். அவற்றுள் குவிகம் இதழில் வெளிவந்த தொடர்கள் இரண்டு புத்தகமாக வந்துள்ளன. ( சில படைப்பாளிகள், சரித்திரம் பேசுகிறது). குவிகத்தில் வந்த ‘மணிமகுடம்’ தொடர் நாவல் விருட்சம் வெளியீடாக வந்து அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளது. விரைவில் குவிகத்தில் வந்த ‘ஷாலு மை வைஃப்’ தொடரும் புத்தக வடிவில் வரப்போகிறது.
மேலும், குவிகம் BookXchange என்ற ஒரு திட்டத்தையும் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் துவக்கியுள்ளோம். அதன்படி, படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் புத்தகங்களில் பிடித்ததை எடுத்துச் செல்லலாம். இதை இனிவரும் இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து செய்யவும் உத்தேசம்.
அடுத்தபடியாக, “குவிகம் இலக்கிய அன்பர்கள்” என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம் . அதில் Rs 50 கொடுத்து அங்கத்தினர்கள் ஆகலாம். 200-300 அங்கத்தினர்களைச் சேர்த்து அவர்கள் விரும்பும் வகையில் இலக்கியப் பரிமாற்றம் செய்யலாம் என்பது எங்கள் திட்டம்.
அடுத்த இதழிலிருந்து குவிகத்தில் மாபெரும் மாற்றங்களைச் செய்ய எண்ணியுள்ளோம்.
என்னென்ன என்று கேட்பது கேட்கிறது.
கைவிரல்களைக் கட்டிக்கொண்டு காத்திருங்கள்.
உங்கள் எதிர்பார்ப்புகளையும் எழுதுங்கள்.
எல்லாவற்றையும் சேர்த்துப் புதிய குவிகம் படைப்போம் !
Thangal sevaiyai paaraatta vaarththaigal illai
Thodarattum ungal pani
LikeLike