உலக ஆன்மீகத்தில், “அம்மா” என்று அனைவராலும் போற்றப்படும் மதியொளி சரஸ்வதி அம்மா அவர்களின் “முன்னேறு” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.
அந்தப் புத்தகத்தின் முகப்பும் மதிப்புரையும் உங்கள் பார்வைக்கு:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நான் யுத்தம் புரியமாட்டேன்’ என்று குருஷேத்திரப் போர்முனையில் தேரில் சாய்ந்துவிட்ட அர்ஜுனனுக்குக் கூறிய அறிவுரைகளின் தொகுப்புதான் பகவத்கீதை என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சுருக்கமாக ஒரே ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “முன்னேறு” என்ற சொல்லைத்தவிர வேறு வார்த்தையில் சொல்லமுடியாது.
அப்படிப்பட்ட கீதையின் சாரத்தைத் தலைப்பாக்கிக்கொண்டு கீதையைப்போலப் பதினெட்டு அத்தியாயங்களில் நாம் வாழ்வில் செல்லுவதற்கான பாதையைச் சுட்டிக்காட்டி அதில் “முன்னேறு” என்று நம் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் நமது மதிப்பிற்குரிய மதியொளி அம்மா அவர்கள்.
கவலையை ஒழி, புலன்களை அடக்கு, மனதையும் அடக்கு, ஆசையை விடு, ஞானத்தைத் தேடு, சந்தேகத்தைத் துற, பக்தியில் திளை, தர்மத்தைக் கடைப்பிடி, கர்மத்தைச் செய், பலனை மற, சர்வம் கிருஷ்ணார்ப்பணம் – இவையே கீதை காட்டிய தத்துவக் கோட்பாடுகள்.
அம்மா அவர்களும் கிருஷ்ணனைப்போல, அன்பு, கருணை, ஈகை, பாசம், இன்பம், உண்மை, ஆனந்தம், அக்கறை, வரம், விவேகம், காலம், முக்தி போன்ற அறிவதற்கு அரிதான தத்துவங்களைத் தன் சொல்லாட்சியால் எளிமைப்படுத்தி நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வடிவில் வடிவமைத்துக்கொடுத்திருக்கிறார்.
இதை ‘அன்னையின் அமுது’ என்றும் ‘அன்பின் ஆசி’ என்றும் சொல்லலாம்.
இந்த “முன்னேறு” என்ற நூல் ஒரு புதுமையான முறையில் அமைந்திருக்கிறது. உரைநடையும் கவித்துவமும் கலந்த இனிமையான நடை, இந்த நூல் முழுவதும் அழகாகப் படர்ந்துள்ளது. கவிதை என்றால் மரபுக் கவிதையும் புதுக் கவிதையும் சேர்ந்த புதிய பாணி. பல இடங்களில் சொற்கள் ஹைக்கூ வடிவில் பரிணமிக்கின்றன. கதையுடன் கட்டுரையும் கலந்த சர்க்கரைப் பொங்கல் இது. எளிமையான சொற்கள் மூலம் கருத்துள்ள கதைகளைக் கவிதை விதைகளுடன் சேர்த்து, படிப்பவர் மனதில் விதைக்கும் புதிய நடை அம்மா அவர்களின் உரைநடை.
இந்தப் புத்தகத்தின் மூலம் நம் மனதில் எழும் பலவித சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இந்த நூல் விடைகளைத் தந்திருக்கிறது என்றால் அது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. அவற்றுள் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
அவற்றிற்கான விடைகளைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- முன்னேற்றத்தின் மூச்சு என்பது என்ன?
- ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணிய பாகவதர் பாடும்போது ஏன் தன் மடியில் தாளம் போடுவதில்லை?
- பகவான் என்ற சொல்லின் பதம் என்ன?
- கலக்கம் எப்போது ஓடிப்போகும்?
- முதுமையின் சோர்வை விலக்குவது எப்படி?
- இறைவன் எப்படி விளங்குகிறான்?
- உண்மையை உபாசித்த சந்திரசேனன், கெளதமரிஷி மனம் உருகும்படி என்ன கூறினான்?
- காலம் என்ன செய்யும்?
- மகிழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவது எது?
- தில்லை நடராசப் பெருமான் ஏன் ஆடுவதை ஒருகணம் மறந்தார்?
- அன்னை எப்போது வரமாகி வருவாள்?
- தர்மதத்தர் என்னும் அந்தணர் எப்படித் தசரதன் ஆனார்?
- சுதீட்சனரின் சாபம் எப்படி ராமருக்குப் பாலம் கட்ட உதவியது?
- அம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் தர்மோபதேசம் செய்யும்போது திரௌபதி ஏன் சிரித்தாள்?
- புத்தர் தன் மகன் ராகுலுக்குக் கூறிய அறிவுரை என்ன?
இப்படிப் பல வினாடி வினாவிற்கான விடைகள் கொண்ட அற்புதப் புத்தகம் இது.
மொத்தத்தில், பகவத்கீதையின் சாரத்தைப் பிழிந்து, வடித்து, இளஞ்சூட்டில் இறக்கி, பொடித்து, குவித்துக் கொடுத்த ஆயுர்வேத கேப்ஸ்யூல்தான் அம்மா அவர்கள் நமக்கு அளித்த “முன்னேறு” என்ற நூல்.
மன அமைதிக்கும், ஊக்கத்திற்கும் இதைவிடச் சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.