6. மறக்கப்பட்ட வாங்மெங்.
வருடம் 1014. அந்த நாள், சோழ சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட மறக்கமுடியாத நாள். சக்ரவர்த்தி ராஜராஜன் மனதில் ஏதோ ஒரு இனந்தெரியாத உளைச்சல், வேதனை, வருத்தம், ஏக்கம். ‘ஏனென்று தெரியவில்லையே, உடலை வாட்டுகிறதே, ஏன் ஏன்? வடக்கே சாளுக்கியர்களை வீழ்த்திக் கலிங்கம்வரை சோழ சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரித்தேன். பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் அடிபணிய வைத்து மும்முடிச்சோழனானேன். மாபெரும் கடல் படையைத் திரட்டி ஈழத்தீவு, மாலத்தீவு முதலியவைகளை வென்று அளவில்லாச் செல்வங்களுக்கு அதிபதியானேன். மணிமணியான புத்திரச் செல்வங்களைப் பெற்றேன். உலகமே வியக்கும் மஹோன்னத ராஜராஜேஸ்வர ஆலயத்தையும் கட்டினேன். இவ்வளவு பெருமைகளையும் தாங்கமுடியாமல் தாங்கி இன்பவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தச் சோதனை?’ என்று தவித்தான்.
குருநாதர் அருள்மிகு கருவூரார் மடத்திற்குச் சென்று, ‘என்னை நீங்கள்தான் இந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து மீட்கவேண்டும்’ என்று கதறி, விஷயத்தை விளக்கி, அவர் பாதாரவிந்தங்களில் சரணடைந்தான். கருவூரார் கண்களை சிறிது நேரம் மூடியபிறகு அவனை உற்றுநோக்கினார். அவர் முகம் ஏனோ அளவில்லா சோகமடைந்து சுருங்கியது. சுதாகரித்துக் கொண்டார். “ராஜ ராஜா! பெருவுடையார் ஆலயத்திற்குச் சென்று அவரைத் தஞ்சமடை! உனக்கு அதற்கான விடை அங்கு கிடைக்கும்” என்று அருளினார். அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மடத்திலிருந்து வெளியில் வந்ததும், ‘குருநாதர் என்னை எப்போதும் வாழ்த்திவிட்டுதானே வழியனுப்புவார். இன்று ஏன் அப்படிச் செய்யவில்லை?’ என்ற வினா அவன் மனதில் எழுந்தது. ஒரு கணம்தான். சமாதானப்படுத்திக்கொண்டு மைந்தன் ராஜேந்திரனுடன் கோவிலுக்குக் கிளம்பினான்.
அவன் சென்றதும் கருவூரார், ‘நடப்பது நடந்தே தீரும். ஆண்டவன் இட்ட கோட்டை யாரால் தாண்டஇயலும்?’ என்று நினைத்துக் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
வழக்கமாகச் செல்லும் வடக்கு வாசலின் வழியாக ராஜராஜன் கோவிலுள் நுழைந்தான். விமானத்தினுள் செல்ல அமைத்திருந்த படிக்கட்டுகளில் மெதுவாக ஏறத்தொடங்கினான். பாதி வழிசென்றதும் தலை தானாகவே உயர்ந்து அவனை அண்ணந்து பார்க்கவைத்தது. ஒரு கணம் அவன் பார்வை இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த வாங்மெங் சிலையை நோக்கியது. அதில் குத்திட்டு நிலைத்து நின்றான். திடுக்கிட்டு நீண்ட கனவிலிருந்து விழித்துக்கொண்டதை அறிந்தான். ‘கோவிலின் கல்வெட்டுக்கள் எல்லாம் முடிந்துவிட்டனவே. எப்படி என் உயிர்காத்த தெய்வம் வாங்மெங்கைப்பற்றி உலகுக்கு அறிவிக்க அதில் குறிப்பிட மறந்தோம், உடனே நடவடிக்கை எடுத்து அதை சேர்க்கவேண்டும்’ என்று தீர்மானம் செய்துகொண்டான். “என்ன நேர்ந்தது தந்தையே? ஏன் நின்றுவிட்டீர்கள்?” என்று கேட்ட ராஜேந்திரனுக்குப் பதில் அளிக்காமல் மற்ற படிகளில் ஏறிக் கோவிலுள் நுழைந்தான்.
காலியான வெற்றுவிமானத்தின் முதல்தளத்திற்குச் செல்ல அமைத்திருந்த சிறு படிகளில் ஏறி வழக்கமாகதித் தான் பூஜைசெய்யும் பிரஹதீஸ்வரனின் மேற்பகுதி முன்வந்து வணங்கி வலம் வந்தான். வலம் வரும்போது அதைச் சுற்றிச் செதுக்கியிருந்த சிவாபார்வதி கரணங்கள் முற்றுப்பெறாமல் விட்டுப்போயிருந்ததை நினைத்து ராஜேந்திரன்மேல் சிறிது சினம்கொண்டு சுதாகரித்துக்கொண்டான். ராஜேந்திரன் தட்டில் எடுத்து வந்த பூக்களை இரு கைகளாலும் எடுத்து லிங்கத்தின்மேல் தூவியபிறகு கைகளிரண்டையும் கூப்பி வணங்கினான். ‘இறைவா என் மறதித் திரையை நீக்கி வாங்மெங்கின் ஞாபகம்வர அருள்புரிந்து என் நீங்கா மனவருத்தத்தை அகற்றினாயே, உன் கருணயே கருணை. நான் உடன் ஆவனசெய்து கல்வெட்டுகளில் அவன் செய்த தியாகத்தை விளக்கி உலகுக்கு உணர்த்துவேன்.’ என்று இறைவனை மனதாற நினைந்துருகினான்.
தரையில் தன் எட்டு உறுப்புகளும்படுமாறு வைத்து சாஷ்டாங்க நமஸ்காரம்செய்தான். எழுந்திருக்க எத்தனித்தான். முடியவில்லை. மூச்சுவிடமுடியாமல் திணறினான். ‘ஆ’ என்ற அலறல் முதலில் அவன் வாயிலிருந்து தடுமாறி வந்தது. ராஜேந்திரன் திடுக்கிட்டுத் தந்தையை மடியில் சாய்த்துக்கொண்டான். உடனே கையைத் தட்டி வைத்தியர்களை வரவழைக்க உத்தரவிட்டான். ராஜராஜன் ஏதோ சொல்லமுயன்றான். ராஜேந்திரன் சிரத்தைத் தாழ்த்தி என்ன சொல்ல முயல்கிறார் என்பதைக் கவனமாகக் கேட்க முற்பட்டான். ராஜராஜன் ‘வா…..’ என்று சொல்லி …… மேலும் தொடர சிரமப்பட்டான். ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. அவன் கண்கள் மங்கின. உடல் தளர்ந்தது. ஒரு வினாடி அவன் முகத்தில் ஒரு கோடிப் பிரகாசம் தென்பட்டது. உலகையே பிரமிக்க வைக்கும் கோவிலைக் கட்டிய ராஜராஜனின் உயிர் அதே கோவிலில் அவன் பூதஉடலை விட்டு நீங்கியது.
ராஜராஜனின் நல்லடக்கத்திற்குப் பின் அவனின் கடைசி வார்த்தையான ‘வா…’க்கான விளக்கத்தை எல்லோரும் அலசி அறிய முயன்று அதில் தோல்வியுற்றனர்.
அதன்பின் வாங்மெங் சிலையை அறிந்த மக்கள் தன் சந்ததியார்களுக்கு அதன் மகத்துவத்தைப்பற்றி விளக்கினர். இது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவந்தது. வாய்மொழியால் பரிமாறப்படும் விஷயங்கள் எப்படி நாளடைவில் ஒட்டல், சேர்த்தல், நீக்கல், மாற்றப்படுதல் முதலியவைகளால் பாதிக்கப்படும் என்பதை யாவரும் அறிவர். அதற்கு இதுவும் விலக்கல்ல. இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் சிலையைப் பற்றிய விவரங்கள் சிதைந்து முழுவதுமாய் உருத்தெரியாமல் மறைந்து, தியாகி வாங்மெங்கின் சிலை ஒரு கேள்விக்குறியாகிவிட்டது.
அதனால்தான் அந்த சிலையின் பின்னணி உண்மை ஒருவருக்கும் தெரியாமல்போய்விட்டது.
(இன்னும் வரும்)