ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – 7 புலியூர் அனந்து

Image result for in a village house in tamilnadu

நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா?
….
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

முதலில் எப்போதாவது வெட்டிச்சங்கத்துக்குப் (அரட்டை கோஷ்டிக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்) போய்க்கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி என்றாகி நாளடைவில் நிரந்தர உறுப்பினன் ஆகிவிட்டேன். (இங்குமங்கும் – ஆங்காங்கே – விட்டுவிட்டு – பரவலாக – மிகப் பரவலாக என்றெல்லாம் சொல்வார்களே அந்தக் கால வானொலி வானிலை அறிக்கை நினைவிற்கு வருகிறதோ?)

அந்த இடத்திற்கு அருகில் இருந்ததாலோ என்னவோ, வரதராஜன் சார் முதலில் ஆஜர். பின்னர்தான் ஒருவர் ஒருவராக மற்றவர்கள் வந்து சேர்ந்துகொள்வோம். ஆக, வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சூயன்லாய் மற்றும் நான் என்று அரை டஜன் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா நாளிலும் கூடுவோம் .

வரதராஜன்தான் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். எப்போதேனும் அரட்டை விவாதமாக மாறிவிடும். சற்று நேரத்தில் வேறு விஷயத்திற்குத் தாவிவிடும். சில சமயம் விவாதம் முற்றி சூடாகத் தொடங்கினாலோ அல்லது வெகுநேரம் தொடர்ந்தாலோ அதற்கு முடிவுகட்டுவது தலைவர்தான். பல சமயம் ஏதாவது ஜோக் அடித்து முடித்து வைப்பார். மிக அரிதாக அதட்டல் போட்டு முடித்துவைப்பதும் உண்டு.
வேலை தேடும் சந்துருவிற்கு அவர் உறவினர் ஒருவர் சில புத்திமதிகள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்களும், விதமும் சந்துருவிற்கு எரிச்சல் ஏற்படுத்தியிருந்தாலும் சொன்னவர் அவரது தமக்கையின் புகுந்தவீட்டுப் பெரியவர் என்பதால் ஏதும் பேசமுடியவில்லை.

அங்கிருந்து அதே எரிச்சலுடன் சங்கத்திற்கு வந்திருந்தார். தனக்குச் சொல்லப்படும் எந்தப் புத்திமதியையும் தான் மதிக்கத் தயாரில்லை என்று சொன்னார்.

சர்ச்சை தொடர்ந்தது. சொல்வது சரிப்படுமா, உபயோகப்படுமா என்றுதான் பார்க்கவேண்டும் என்று மகேந்திரனும் ஏகாம்பரமும் வாதிட்டார்கள்.

வயதோ, அனுபவமோ மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதியை எவருக்கும் அளிப்பதில்லை. புத்திமதி சொல்ல யாருக்கும் அருகதையில்லை என்று ஒரு போடு போட்டார் சந்துரு.
மகேந்திரன் “யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டீர்களோ?” என்று குறுக்கிட்டார்.

“அப்படியில்லை. உருப்படியான யோசனை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.”

“சரி, ஒருத்தர் சொல்வது புத்திமதியா இல்லை அறிவுரையா என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்?” என்றார் ஏகாம்பரம் சந்துருவை மடக்குகின்ற தொனியில்.

அதுவரை பேசாமலிருந்த வரதராஜன் குறுக்கிட்டு, “என்ன ஏகாம்பரம், புரியாம பேசுறீங்களே?” என்றார்.

தொடர்ந்து ஏதோ சொல்லத்தானே போகிறார் என்று அனைவரும் அவரையே பார்த்தோம்.

“ஒரு விஷயத்தை சந்துருகிட்டே சொல்லுங்க. அவர் எடுத்துக்கிட்டா அது யோசனை.  இல்லாட்டா புத்திமதி. அவ்வளவுதானே?”
எல்லோரும் சிரித்துவிட்டோம். சூடாகிக்கொண்டிருந்த விவாதம் முடிந்துபோனது.

வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நீங்கள் என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். நானும் சீனாவும் தவிர.

சுமார் இரண்டு மூன்று மணிநேரம் வெட்டி அரட்டை என்றாலும் பொது அரட்டையைத்தவிர சில சொந்த விஷயங்களும் வந்து விழும் என்பது இயல்புதானே. அப்படித் தெரிந்துகொண்ட அல்லது ஊகித்த விஷயங்கள்தான் இவை.

வரதராஜன் சங்கத்தில் கிட்டத்தட்ட ‘பாஸ்’ போல இருந்தாலும், எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தாலும், குடும்பத்தில் அப்படியில்லை என்பது என் அனுமானம்.

நான்கைந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்த வரதராஜனின் தந்தை குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத ஒரு சுயநலப் பிறவியாம். பெரிய சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுவாராம். தனது சௌகரியத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாதாம். மனைவி, குழந்தைகளுக்குத் தேவையான சாப்பாடு இருக்கிறதா என்றுகூடப் பார்க்கமாட்டாராம்.

அண்ணன் சமையல்காரனாக யாருடனோ சேர்ந்து ஊரைவிட்டே போய்விட்டான். இரு தமக்கைகளில் ஒருத்தி பள்ளியில் படிக்கும்போதே தற்கொலை செய்துகொண்டாள். ஏன் என்று இதுவரை தெரியாதாம்.
இவர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே ஒரு கடையில் கணக்கு எழுதும் ஒரு தூரத்து உறவினரைப் பிடித்துக்கொண்டார். வேலை பார்க்கும் கடையைத்தவிர மற்ற சிலருக்கும் அரசாங்கப் படிவங்கள் நிரப்புவது, லைசன்ஸ் வாங்க உதவி ய்வது என்று அவருக்கு சம்பாத்தியம்.
வரதராஜனின் சாமர்த்தியமான உதவி நல்ல வரும்படியைத் தந்தது. அந்த உறவினர் வயதாகி முடியாமல் போனபோது முழு விவகாரத்தையும் வரதராஜன் பார்த்துக்கொள்ளவும், அந்தப் பெரியவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுக்கவும் ஏற்பாடு ஆகியது.

பெரியவருக்குப் பின் எல்லாம் வரதராஜன்தான்.
தம்பியைப் படிக்க வைத்தார். மீதமிருந்த சகோதரிக்குத் திருமணம் செய்துவைத்தார். பெற்றோர்கள் இருக்கும்வரை திருமணமும் செய்துகொள்ளவில்லை

அம்மாவும், அப்பாவும் ஒருவர்பின் ஒருவராக மறைய, தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார். இரு பெண்களும் ஒரு மகனும். இப்போது எல்லோருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில்.

அண்ணன் எங்கே என்றே தெரியாது. தம்பி மற்றும் சகோதரி குடும்பத்துடன் அவ்வளவு போக்குவரத்தும் கிடையாது. எனவே குடும்பம் என்பதே இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும்தான்.
பிள்ளையோ, பெண்களோ, பேரக்குழந்தைகளோ இங்கு வருவதில்லை. அவர்களைப் பார்க்க இவரும் போவதில்லை. மனைவியோ பெரும்பாலும் அவர்களோடுதான். இவர் இங்கே சொந்தச் சமையல்தான்.
தினமும் சந்திப்பதால் அவர் வீட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம் எங்கள் யாருக்கும் ஏற்படுவது மிகக் குறைவு. ஒருமுறை சீனாவின் சித்தப்பா ஒருவருக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட வேலையில் வரதராஜனின் உதவி தேவைப்பட்டது. அன்று மாலை இரயிலில் அவர் ஊருக்குத் திரும்புவதால் வரதராஜனை வீட்டிலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. அறிமுகம் செய்துவைக்க சீனா போனான். அவர்கள் இருவரும் காரியம்பற்றிப் பேசும்போது தனக்குப் போரடிக்கும் என்று என்னைக் கூடவரச் சொன்னான் சூயன்லாய் என்கிற சீனா.

வீட்டின் முன் பகுதியில் ஒரு அறையில்தான் தான் பார்த்துவரும் கணக்கு வழக்குகள் மற்றும் இதர காகிதங்கள் போன்றவற்றை வைத்திருந்தார் வரதராஜன். ஒரு மேஜை, அவருக்கும் வருபவர்களுக்குமாக மூன்று நாற்காலிகள்… ஒரு சிறு அலுவலகம்தான் அது.

யாரிடம் என்ன மனு கொடுக்கவேண்டும், அதில் குறிப்பிடவேண்டிய தகவல்கள் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சீனாவின் சித்தப்பா ஒரு தெளிவு பெற்றவராய் மற்ற ஆவணங்களுடன் வந்து சந்திப்பதாகவும் அந்த மனுவை எழுதி யாரைப் பார்க்கவேண்டுமோ அதற்கு வரதராஜன் துணைபுரியவேண்டும் என்றும் கூறி எழுந்துகொண்டார்.

“சீனா, நான் கடைத்தெருவிலே ஒரு நபரைப் பார்த்துவிட்டு வரேன் என்று அண்ணியிடம் சொல்லிவிடு” என்றார்.

நாங்கள் சற்று நேரம் கழித்துக் கிளம்பினோம். அந்த சிறிது நேரத்திலேயே ஒன்று கவனத்திற்கு வந்தது. எங்கள் சிறு கோஷ்டிக்கு அறிவிக்கப்படாத தலைவர் வரதராஜன். ஆனால் அவர் வீட்டிலோ உறவிற்குள் ஏதோ நெருடல் இருந்துவருவது ஊகிக்க முடிந்தது.
எங்கோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவர் மனைவி, தான் வர தாமதமாகலாம் என்று எங்கோ பார்த்துக்கொண்டு பொதுப்படையாகச் சொல்லிவிட்டுப் போனது விசித்திரமாக இருந்தது. மாலை நேரங்களில் எங்களுடன் அவ்வளவு ஜோக்கும் சிரிப்புமாக இருக்கும் வரதராஜனும் வீட்டில் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார்.

ஒரு நாள் சங்கம் முடிந்து கிளம்பிக்கொண்டிருக்கும்போது, வரதராஜன், “நாளை மதியம் இரண்டு மணி சுமாருக்கு வீட்டுக்கு வர முடியுமா?” என்று மற்றவர்கள் காதில் விழாதவாறு என்னிடம் கேட்டார். நானும் தலையை ஆட்டினேன்.

நான் – தனியாகத்தான் சென்றேன்.. சூயன்லாய் கூட வரவில்லை. முன்னறையில்தான் அவர் இருந்தார். ஒரு அலமாரியிலிருந்து பாட்டில், சோடா, மற்றும் க்ளாஸ் எடுத்து மேசைமீது வைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்துவதும் அமல்படுத்துவதுமாக இருந்த காலகட்டம் அது.. (ஒரு பிரபல மாலை தினசரி போஸ்டரில் “மதுவிலக்கு விலக்கு ஒத்திவைப்பு ரத்தாகுமா?” என்று போட்டிருந்தார்கள்.)

“என்ன! தண்ணி அடிக்கும்போதுத் துணைக்குக் கூப்பிட்டிருக்கேனே என்று யோசிக்கிறீங்களா? எனக்குத் தெரியும், உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லைன்னு. வீட்டிலே யாரும் இல்லாதபோது எப்பவாவது தாகசாந்தி உண்டு. ஓரிருமுறை யாரவது நண்பர் கம்பெனி கொடுப்பாங்க. நீங்க கம்பெனி கொடுக்கமாட்டீங்கன்னும் தெரியும். தனியா உட்கார்ந்து சாப்பிடறது சரியாவராது. அதுதான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்க ‘ரா’வா எவ்வளவு சோடா வேணும்னாலும் குடிக்கலாம்.” என்றார்.

வழக்கம்போல நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார். “எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒருத்தர்தான் ‘ஒன்வே டிராபிக்’ ஆளு. விஷயம் உள்ளே போகுமேதவிர வெளியே வாராது.”

கொஞ்சம் கொஞ்சமாக சொந்த சமாசாரம் வெளியே வந்தது. அரசாங்கத்திலே ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் நெளிவு சுளிவு தெரிந்து காரியம் சாதித்துக் கொடுக்கும் சாமர்த்தியசாலி என்று அறியப்பட்ட அவர் பேச்சிற்கு வீட்டில் எந்த மதிப்பும் இல்லையாம். இவர் தனது சகோதர சகோதரிகளுக்கும், மனைவி மக்களுக்கும் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் ஏன் இப்படி என்று அவருக்கே புரியவில்லை. ஒட்டுதல் என்பதே இல்லை என்றாகிவிட்ட நிலையில் மாலையில் சங்கத்தில் பொழுதுபோவது மனதிற்கு இதமளிக்கிறதாம்.
அவர் தூங்கப் போனார். நான் வீட்டிற்குக் கிளம்பினேன். தெருவில் யார் வீட்டிலிருந்தோ ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு கேட்டது.

அப்படி ஒன்றும் மொடாக் குடியரும் இல்லை அவர். எதிலிருந்தோ தப்பிக்கும் முயற்சியாகவே அவருக்கு ஆல்கஹால் போலும். பின்னாளில் சங்கத்தில் அவர் வழக்கம்போலவே இருந்தார். அன்று எனக்கு சொன்ன ஒரே ‘தேங்க்ஸ்’ தவிர எந்த வேறுபாடும் இல்லை.

சங்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது

(அடுத்தது யார்…?)

திரைப் படங்கள் 2017

 
 பாகுபலி -2
 
 
 விக்ரம் வேதா
 
Image result for விக்ரம் வேதா
 
அருவி
 
Related image
 
மாநகரம்
Related image
 அறம்

Nayanthara in Aramm

தீரன்
 
Image result for தீரன் படம் 2017
 
துருவங்கள் 16
Image result for துருவங்கள் பதினாறு
 
துப்பறிவாளன்
 
Related image
 
 
வேலைக்காரன்
Image result for வேலைக்காரன் photos
 
மெர்சல்
 
Image result for மெர்சல் hd

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Related image

காந்தப் படுக்கைக்குக் கீழே ஒளிந்துகொண்டிருந்த ராகு, சூரியதேவனை விழுங்குவதற்குச் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன், சந்திரன் இருவரும் அவனது அழகை அழித்துச் சாயா  நிழலாக அலையவிட்டார்கள் என்பதால் அவர்கள் இருவர்மீதும் அசாத்தியக் கோபம் இருந்தது.

உண்மையில் ராகுதேவன் சூரியனைவிட அழகானவனாக  இருந்தான். பொன்னிறத்தில் இருந்ததால் பானு என்ற அவனை ஸ்வர்ண பானு என்றே அழைத்தார்கள்.   ஸ்வர்ணபானுவுக்குத் தன் அழகில் மகா கர்வம். பிறப்பால் அசுரனாக இருந்தாலும் தேவலோக ஆடல் அரசிகள்  அனைவரும் அவனைச் சுற்றியே  வந்தார்கள்.

ஸ்வர்ணபானுவின் ஆசைக்கோ அளவில்லை.  சந்திரனின் இருபத்தேழு மனைவியர்மீதும் மையல் கொண்டான்.  சந்திரனின் ஒளி இல்லாத அம்மாவாசையன்று  அவனுடைய மனைவியர் அனைவரையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான். களை இழந்த சந்திரன் சூரியனிடம் வேண்டிக்கொள்ள சூரியதேவன் கோபம்கொண்டு ஸ்வர்ணபானுவுடன் போருக்குப் போனான்.

ஸ்வர்ணபானு அசுரன் ஆனதால் மாயையால் முகத்தை மறைத்து  நிழல் வடிவத்தில் வந்து சூரியனைத் தாக்கினான். சூரியனால்  அவன் நிழல் வடிவத்தை உடைக்க  முடியவில்லை. சூரியதேவனின் அக்னிக் கணைகள் ஸ்வர்ணபானுவின் பொன் உடலில் பட்டுப் பிரதிபலித்ததேதவிர அவனை அழிக்க முடியவில்லை.  கோபவேகத்தில் சூரியதேவன் மிக உக்கிரமாகப் போரிடத் தொடங்கினான். மகாவிஷ்ணு  அளித்த நாராயண அஸ்திரத்தைக் கொண்டு ஸ்வர்ணபானுவின் உடலை இறுக்கக் கட்டினான். தன் சக்தியையெல்லாம் வெப்ப சக்தியாகமாற்றி அக்னிப் பிழம்பை ஸ்வர்ணபானுவின்மீது பொழிந்தான்.

அந்த அக்னிக்  குழம்பின் ஜ்வாலை அவன் உடலை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் நாராயண அஸ்திரம் அவன் உடலைச் சுற்றியிருந்ததால்  அது கவசம்போல் அவனைப் பாதுகாத்தது. ஆனால் நிழற்சாயை  பூசியிருந்த முகத்தில் அது தன் தீவிரத்தைக் காட்டியது. அழகான முகத்தைக்கொண்ட ஸ்வர்ணபானுவின் முகம் தீப்பற்றி எரிந்த கரிய முகமாக மாறிவிட்டது.

அழகிழந்த   ஸ்வர்ணபானு சந்திரனின் மனைவிகளை விட்டுவிட்டுத் தப்பித்தால் போதுமென்று பாற்கடலில் ஆதிசேஷனின் பின்னால்  மறைந்துகொண்டான்.   சூரியதேவனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எரிந்து சாம்பலாகிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு சூரியனும் தன் உலகிற்குத் திரும்பினான்.

Image result for planet rahu eating sunஅப்போதுதான் பாற்கடலிலிருந்து அமுதம் எடுப்பதற்காகத் தேவர்களும் அசுரர்களும் ஒரு  ஒப்பந்தம்   செய்துகொண்டார்கள்.  வாசுகி என்ற  பாம்பு  கயிறாயிற்று. மேரு மலை மத்தாக மாறியது.  மகாவிஷ்ணு ஆமை உருவில் மத்தைத் தாங்கும்  ஆதாரமாக மாறினார். அசுரர் தேவர் இருவரும் கடையப் பாற்கடலிலிருந்து பல திவ்யப் பொருட்கள் தோன்றின. முதலில் வந்த மகாலக்ஷ்மியைத் திருமால்  தன்னுடையவளாக்கிக் கொண்டார். அடுத்து  வந்த ஐராவதம், காமதேனு, அட்சயப்  பாத்திரம் ஆகியவற்றை இந்திரன் எடுத்துக்கொண்டான்.

அமுதம் திரண்டு  வந்தது. ஆனால் அதற்குமேல் பொறுக்க இயலாத வாசுகி தன் விஷத்தைக்  கக்கியது. அந்த விஷம் அமுதத்தில் கலப்பதற்குமுன் பரமசிவன் அதை எடுத்து விழுங்கினார்.  அதனால் தன் கணவன் நீல வண்ணமாக மாறிவிடுவாரோ என்ற பயத்தில் அருகிலிருந்த பார்வதி அவர் கழுத்தில் அதை நிறுத்த,  பரமசிவன் நீலகண்டராகமட்டும் மாறினார்.

அதன்பின் அமுதம் பொங்கிவந்தது. அதற்காக அசுரர்களும் தேவர்களும் போரிட்டுக் கொள்ளும் நிலைமைக்கு வந்தனர். அதைத் தடுக்க மகாவிஷ்ணு மோகினி வடிவம்கொண்டு வந்து அமுதக் கலசத்தை எடுத்துத் தேவர்களுக்கே அனைத்தையும் வழங்கினார்.

Related image

ஆதிசேஷன்  பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஸ்வர்ணபானு தன் தலையைப் பொன்னாடையால் மறைத்து தேவவுருவெடுத்துத் தேவர்கள் வரிசையில் அமர்ந்து  அமிர்தத்தை அருந்தினான்.

ஆனால் சூரியனின் கூரிய விழிகள் ஸ்வர்ணபானுவைக் கண்டுபிடித்துவிட்டன. சந்திரனைக்கொண்டு அவன் முக்காட்டை நீக்கச்செய்தான். மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு     சக்ராயுதத்தால்  ஸ்வர்ணபானுவை  தலைவேறு உடல்வேறாகத் துண்டாக்கினார் .

அமிர்தம் உண்ட காரணத்தால் அவன் உயிர் நீங்கவில்லை.  அவன் திருமாலின் பாதங்களில் பணிந்து வேண்டிநிற்க , அவரும்  வடக்கில் தலையை வைத்துப்  படுத்திருந்த பாம்பைத் துண்டித்து பாம்பின் உடலை ஸ்வர்ணபானுவின்  தலையுடன்கூட வைத்தும் பாம்பின் தலையை அவன்  உடலுடன்கூட வைத்தும் அவனை இரண்டாக்கினார்.

அவர்கள் இருவரும் ராகு , கேது என்ற பெயருடன் கடும்  தவம்  செய்ய, மகாவிஷ்ணு  அவர்கள்  தவத்திற்கு  இரங்கி அவர்கள் இருவரையும் கடக  மகர ஆழியின் வேதங்களைக் கற்றுவருமாறு பணித்தார். அவற்றை முழுதும்  கற்று ஓதியபின் நவக்கிரகப் பதவி தருவதாகக்  கூறினார்.

ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு, கேது என சாகாவரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.

இந்த இருவித உடல் அமைப்பே நவகிரகங்களின் குணத்தைக் காட்டும். ராகு அசுர முகம், பாம்பு உடல்.  அதனால்  ராகு போக காரக கிரகமாகமாறி  வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று பதவிக்கு வருகிறான்.  கேதுவோ  பாம்பின் தலை அசுர உடல் . அதனால்  பொருட்பற்றையும், உடல் பற்றையும் அழிக்கும் சக்தி பெறுகிறான்.  அதன் மூலம்  மோட்சக்காரன்  என்று அழைக்கப்படுகிறான்.

இவ்வளவு நற்கதிகள் அடைந்தாலும் சூரிய சந்திரர்கள்மீது அவர்கள் இருவரும் கொண்ட பகைமட்டும் மனதிலிருந்து போகவில்லை.

அவர்கள் சூரிய சந்திரர்களைப் பழி வாங்கும்பொருட்டு மீண்டும் தவம் இருந்தனர். முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும், சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதற்கான வரத்தைப் பெற்றனர்.

இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில்  வெளிவந்துவிடலாம் என்று அருளினார். ஆகவே அதுமுதல், ஸ்வர்ணபானு  சந்தர்ப்பம்  கிடைத்தபோது  சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடுவது வழக்கமாகிவிட்டது.

இன்றைக்கு ஸந்த்யாவின் அறையில் சந்திர காந்தச் சிகித்சைக்குக் காத்திருக்கும் சூரியதேவனை விழுங்க ஆவலுடன்  காத்திருக்கிறான் ராகு .

(தொடரும்)

விஞ்ஞானம்:

சந்திரனின் சுற்றுவட்டப் பாதை  சூரியனின் சுற்றுவட்டப் பாதையை  வெட்டும் புள்ளியே ராகு கேது எனப்படும். இவைகளுக்கு உருவம் இல்லை. சந்திரன், பூமியின் சூழற்சியின் வேகத்தால்  ஏற்படும் இணையற்ற காந்தப்புயலே ராகு கேது ஆகும். இந்த காந்தப் புயலின் சூழற்சியால் பூமியில்  உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்குப் புலனாகாத (கற்பனை – மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனைப் புள்ளிகள்.

 

இரண்டாம் பகுதி

Image result for system integration team

 

எமபுரிப்பட்டணத்துக்கு  முதன்முறையாக  வந்திருக்கும் அந்த நால்வரும் தங்கள் அறையில் அமர்ந்து எப்படி இந்த மாபெரும் பிராஜெக்டை சமாளிப்பது என்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

பிராஜெக்ட் மேனேஜர் அரசு நல்ல பழுத்த அனுபவசாலி.  சுந்தாவும் , மாணிக்கும் தகவல் துறையில் ஜீனியஸ். ஞானி  சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மேதை. இவர்கள் நால்வரும் வெவ்வேறு கம்பெனிகளில் இருந்தவர்கள். சிவா  கன்சல்டிங் சர்வீஸஸ் (எஸ்‌சி‌எஸ்) என்ற புதிய நிறுவனத்தை  இவர்கள் நால்வரும் சேர்ந்து ஆரம்பித்தார்கள்.

எஸ்‌சி‌எஸ்  வந்தபிறகு மற்ற நிறுவனங்கள் எல்லாம்   இவர்களுடன் போட்டி போடமுடியாமல் திணறினார்கள். அரசு, தான் முதலில் இருந்த ஜெய்ன் இன்போ நிறுவனத்திலிருந்து திறமைசாலிகள் அனைவரையும் எஸ்‌சி‌எஸ்க்கு மாற்றி அந்த நிறுவனத்தை செயலற்றதாக  மாற்றிவிட்டார். அது மட்டுமல்ல, பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த கௌதம் டெக்னாலஜியையும் முற்றிலும் அழித்து விட்டார்கள்.

அதே சமயத்தில்  ராம் டெக் என்ற தகவல் துறை நிறுவனமும் மிகவும் பிரபலமாக இருந்தது.  அதன் பன்னிரண்டு பாகஸ்தர்களும் திறமையாக நடத்திவந்தார்கள். இவர்களுடன் எஸ்‌சி‌எஸ் இம் சேர்ந்துதான் மற்ற நிறுவனங்களை அழிக்க முடிந்தது.  இவர்கள் இருவருக்கும் இடையேகூட யார் நம்பர் ஒன் என்ற போட்டி அடிக்கடி வரும்.  இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரு கூட்டணி அமைத்துப் பல பிராஜெக்ட்களை  முடித்ததால் ஒருவரை ஒருவர் அழிக்காமல் இணைந்து செயல்படுவதே லாபம் என்பதை உணர்ந்தார்கள்.

Image result for project team

சித்திரகுப்தன் தன் பிராஜெக்ட்டுக்கு எஸ்‌சி‌எஸ் – ராம் டெக் இரண்டில் எதைத்  தேர்ந்தெடுப்பது என்று பலத்த ஆலோசனை செய்தான்.    சிவபெருமான் எஸ்‌சி‌எஸ் க்கு ஆதரவாக  இருப்பது புரிந்தது. மகாவிஷ்ணு ராம் டெக்கின் பக்கம் ஆதரவுக் கரம் நீட்டுவதும் புரிந்தது. எமனிடம் சென்று விவாதித்தான்.

எமன் சிவபெருமானை எதிர்த்து எதுவும் செய்யத்தயாராயில்லை. அதுவும் மார்க்கண்டேயன் விவகாரத்தில் தலையிட்டு அவரிடம்  அடிபட்டபிறகு எமனுக்கு வேறுவழியே கிடையாது. இருப்பினும் தர்மராஜாவான அவன் பிரும்மாவிடம்  சென்று ஆலோசனை நிகழ்த்தினான். முதலில் அவருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது.  மெத்தப்படித்த மனைவி சரஸ்வதியுடன் கலந்து ஆலோசித்தார்.  முடிவில்   எஸ்‌சி‌எஸ் க்குக் கொடுப்பது தான் சிறந்தது என்றும் ஆனால் அவர்கள் ராம் டெக்குடன் இணைந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும் தீர்மானித்தார். இவர்கள் எமபுரிப்பட்டணத்தின் மற்ற துறைகளுடம் இணைந்து செயல்பட வசதியாக ஒரு  ஒருங்கிணைப்பு நிறுவனத்தையும் அமைத்தார்.

அதுதான் நாரதா கம்யூனிகேஷன்ஸ். அவர்கள்தான்  இந்தப் பிராஜெக்டுக்கு நாமகரணம் சூட்டினார்கள்.

பெயர்  “எமபுரிப்பட்டணம்”

(தொடரும்)

இலக்கியவாசல்

ஸ்ரீனிவாச காந்தி நிலையம்,                              அம்புஜம்மாள் தெரு ,                                ஆழ்வார்ப்பேட்டை

சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில்

இலக்கிய சிந்தனையின் 572 வது நிகழ்வு

திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் உ வே சுவாமிநாத ஐயா  அவர்களைப்பற்றிப் பேசுகிறார்கள் !

அதே நாள், அதே இடத்தில்

7.00 மணி அளவில்

இலக்கிய வாசலின் 34  வது நிகழ்வு

” புத்தகக் கண்காட்சியில் கற்றதும் பெற்றதும் “

அனைவரும்  கலந்து கொள்ளும் கலந்துரையாடல்

=================================================

          குவிகம் BookXchange

நிகழ்ச்சிக்கு வரும் அன்பர்கள் மறக்காமல் தாங்கள் படித்த புத்தகம் ஒன்றைக் கொண்டுவாருங்கள்.

அதைக் கொடுத்துவிட்டு ,

அங்கு இருக்கும் புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள் !

DROP ONE – TAKE ONE

இதுதான்   நமது  புத்தகப் பரிமாற்றம் !!!

=================================