ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
வரதராஜன் சார்தான் அறிவிக்கப்படாத தலைவர் என்றாலும் மகேந்திரன் சாரும் எங்களுக்கு ஒரு உந்துதல் என்றுதான் சொல்லவேண்டும். எப்போதும் ஒரு புன்னகையுடன்தான் இருப்பார். யாரையும் கோபித்தோ கடிந்துகொண்டோ நான் பார்த்ததில்லை. பொதுவாக தமாஷ், கிண்டல் கேலி என்று வரும்போது ஒரு புன்னகைதான் அவர் பங்களிப்பாக இருக்கும். ஒவ்வொரு விவாதத்திலும் அவரது கருத்து மற்றவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கும். ஒரு அரசியல் கட்சி இவ்வளவு செலவு செய்து பந்தலும் மற்ற அலங்காரங்களும் செய்வது வேஸ்ட் என்று ஒருமுறை பேச்சு வந்தது. மகேந்திரன் மட்டும் “போகட்டும் சார், பந்தல்காரரும் அவரது தொழிலாளர்களும் பிழைச்சுட்டுப் போகட்டுமே…” என்றார்.
“கலப்பற்ற வரம் என்று ஏதும் இல்லை என்பார்கள். அப்படியானால் கலப்பற்ற சாபம் எப்படி இருக்கமுடியும்?” என்பதுதான் அவரது அடிப்படை வாதம். மற்றவர்களிடமிருந்து தான் எப்போதும் வித்தியாசமாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ என்றும் தோன்றும்.
அதற்காக எல்லா விஷயங்களிலும் மாற்றாகத்தான் பேசுவார் என்றில்லை. மௌனமாக இருந்துவிடுவார். அவர் மௌனமாக இருக்கிறார் என்றால் அவர் கருத்தை ஆதரிக்கிறார் என்று கொள்ளவேண்டும். ‘மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்பதன் மொத்த உருவம் என்று வரதராஜன் சார் கிண்டல் செய்வார்.
முதல் முறை அவ்வாறு சொன்னபோது ஏகாம்பரம், “பாருங்க பாருங்க… இதற்குப் புன்னைகையோட மௌனம் சாதிக்கிறார் மகேந்திரன் சார். அப்படின்னா, அவர் இத ஒப்புக்கொள்கிறார் எனத்தானே அர்த்தம்” என்றார். அதற்கும் ஒரு புன்னகையும் மௌனமும்தான் பதில்.
மகேந்திரன் சார் பெரும்பாலும் தனியாகத்தான் வசித்து வந்தார். அவர் குழந்தைகளும் மனைவியும் இவர் பெற்றோருடன் சுமார் 120 கி.மி தூரத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தார்கள். விடுமுறை சமயங்களில் குழந்தைகளும் மனைவியும் இங்கு வருவார்கள். பண்டிகை சமயங்களில் இவர் ஊருக்குப் போவார். எங்கள் குழுவிலேயே அதிகம் மட்டம் போடுவது இவர்தான். நியாயம்தானே?
இது தவிர அடிக்கடி வேறு உறவினர்களைப் பார்க்க பல்வேறு ஊர்களுக்கும் போகவேண்டி நேரிடும். மெல்ல மெல்ல ஒரு சங்கதி புரிந்தது. அவரது உறவினர் வட்டாரத்தில் இவர் சொல்லும் முடிவுகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி போவது பஞ்யசாத்திற்காகவாம். இவர் முடித்து வைத்த பிரச்சினைகளைப்பற்றிக் கூட்டத்தில் விவரமாகச் சொல்வதெல்லாம் கிடையாது. பொதுவாக ஒரு திருமணப் பிரச்சினை என்றோ சொத்து விவகாரம் என்றோ சொல்லிவிடுவார். குழுவில் எவரும் மேற்கொண்டு கேள்வி கேட்டு “வம்பன்” என்று பெயர் வாங்கிக்கொள்ள விரும்புவதில்லை. வேறு ஏதேனும் பேச்சு வரும்போது ‘இப்படித்தான் போனவருஷம் தூரத்து சொந்தத்தில ஒரு பிரச்சனை…’ என்று விஷயம் வெளியில் வரும்
கால்நடை உதவியாளர் என்பதால் இவரைத்தேடி சங்கத்திற்குக்கூட ஆட்கள் வருவார்கள். அருகில் உள்ள ஊர்களிலும், ஏன் எங்கள் ஊரில்கூட, இவரைப் போன்ற சில வைத்தியர்கள் இருந்தாலும் இவர் சற்றுத் திறமைசாலி என்று பெயர் பெற்றிருந்தார். வருபவர்கள் இவரை மாடு டாக்டர் என்றுதான் குறிப்பிடுவார்கள். உண்மையில் இவர் டிப்ளமா படித்த உதவியாளரேதவிர, டிகிரி வாங்கிய டாக்டர் இல்லை. இதனைச் சொல்லிச்சொல்லி அலுத்துப்போய் எப்படியோ சொல்லிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார் மகேந்திரன்.
12 கி.மி தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இவரது கால்நடை மையம். ஒரு டாக்டர் பொறுப்பில் உள்ள மையங்களை ஆஸ்பத்திரி என்றும் இவர் போன்ற உதவியாளர் பொறுப்பில் இருந்தால் அதனை மையம் என்றும் சொல்வார்களாம். ஆனால் ஊர்க்காரர்களுக்கு இரண்டுமே ‘மாட்டாஸ்பத்திரி’தான்.
“நாங்களும் குழந்தை மருத்துவர்களும் பல சமாசாரங்களில் ஒன்றுதான். நோயாளிக்கு என்ன என்பதைக் கூடவந்தவங்கதான் சொல்லணும். சீக்கிரம் சரியாகுதோ இல்லையோ, கூடவந்தவருக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் நமக்கு நல்ல பிராக்டீஸ்”
மகேந்திரன் சார் தனது ஊர்ப்பக்கம் மாற்றலுக்கு விண்ணப்பம் கொடுத்தபடியே இருப்பார். என்ன காரணமோ, அது தாமதமாகிக்கொண்டே வந்தது. வரதராஜன் ஒருமுறை தனக்குத் தெரிந்த யார் மூலமாகவாவது முயற்சி செய்யட்டுமா என்று கேட்டபோது, மகேந்திரன் ‘வரும்போது வரட்டும்’ என்று சொல்லிவிட்டார்.
ஒரு தூரத்து உறவினர் வீட்டில் ஒரு விசேஷம். பெரியவர்கள் கலந்துகொள்தற்கு ஏதோ இடைஞ்சல். என்னைப் போய்வருமாறு சொல்லிவிட்டார்கள். முதல்நாள் மதியம் சென்று மறுநாள் மதியம்தான் திரும்ப முடியும் அந்த ஊர் மகேந்திரன் சார் மையம் இருக்கும் ஊரின் பக்கத்தில்தான். சரி, காலாற நடப்போமே என்று வயல் வெளி என்று சுற்றினேன். யாரோ ‘சார், சார்’ என்று கூப்பிட்டது காதில் விழுந்தாலும் நம்மை யார் ‘சார்’ என்று கூப்பிடப்போகிறார்கள் என்று நான் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். தொடர்ந்து என் பெயருடன் சார் என்று கூப்பிட்டதும் சற்று சுதாரித்துத் திரும்பினால் … மகேந்திரன் சார்.
எங்கோ ஒரு எருமை மாட்டிற்கு வைத்தியம் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களாக அவர் வேலை பார்க்கும் ஊர் கோவில் விசேஷம் என்பதால் அந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மேலும் நான் இங்கு வருவது முதல்நாள்தான் தீர்மானமாயிற்று. எனவே நான் அங்கு வருவேன் என்று அவருக்குத் தெரியாது. மறுநாள்தான் கிளம்பவேண்டும் என்பதால் இன்று அவருடனேயே தங்கிவிட்டுக் காலையில் விசேஷத்திற்குப் போகலாமே என்று சொன்னார்.
அவர் தங்குவதற்காகத் தற்காலிகமாக ஒரு வீடு இருந்தது. ஒரு சிறு ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். என் குடும்பம்பற்றியெல்லாம் விசாரித்தார். பேச்சு எப்படியோ அவரது சொந்த சமாச்சாரங்களுக்குத் திரும்பியது.
மகேந்திரன் குடும்பம் சில தலைமுறைகளுக்குமுன் அவர் ஊரிலேயே பணமும் செல்வாக்கும் உள்ள குடும்பமாக இருந்ததாம். இவர் தாத்தா காலத்தில் ஏதோ உடல்நலக் குறைவு காரணமாக வியாபாரம் கவனிக்க ஆளின்றியும், மருத்துவச் செலவுகளாலும் குடும்பத்திற்குச் சிரமதசை தொடங்கியது. மற்ற பங்காளிக் குடும்பங்களைவிடப் பொருளாதார ரீதியில் பின்தங்கிவிட்டர்கள்.
மரியாதை மிகுந்த குடும்பப் பின்னணி என்பதால் இவர்களுக்குக் கொடுத்துவந்த மரியாதை மதிப்புகளில் எந்தக் குறையும் வைக்கவில்லை மற்றவர்கள். ஆனால், அவர்கள் காட்டும் அதிகப்படி சலுகைகள் இவருக்குப் பெரும் மனச் சங்கடம் விளைவித்ததாம்.
உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவமோ, கால்நடை மருத்துவ பட்டப்படிப்போ படிக்க இயலாமல், டிப்ளமா கோர்ஸ் படித்து இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார்.
பெரிய குடும்பம் என்பதால், பெரும்பாலும் உறவுகளுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதுதான் அதிகம். அப்படி நேராமல் ஏதேனும் திருமணம் நடந்தால், அசலில் சம்பந்தம் செய்வதாகப் பேசிக்கொள்வார்கள்.
இவரது முறைப்பெண்களில் பலருக்குச் சொந்தத்தில் முடிவாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் இவருக்கு மாமன் முறையுள்ள ஒருவர் சில பெரியவர்களுடன் வந்து இவருக்குத் தன் பெண்ணை நிச்சயம் செய்யலாமா என்று கேட்க வந்திருந்தார்.
பொருளாதார ரீதியில் பலபடிகள் மேலிருக்கும் அவர், தன்னொத்த பணக்காரார்களை விட்டுவிட்டு இவர்கள் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று அம்மா அப்பா இருவருக்கும் முதலில் ஆச்சரியம்.
தங்களுக்கு விருப்பம்தான் என்றும் மகனைக் கேட்டுவிட்டுச் சொல்லி அனுப்புவதாகச் சொன்னார்கள். எல்லாம் நன்றாக முடிந்து திருமணமும் நடந்த பிறகுதான் ஒரு ரகசியம் வெளிப்பட்டது.
பல நாட்களாகப் பல சந்தர்ப்பங்களில் மகேந்திரனைக் கவனித்துவந்த மகேந்திரனின் மனைவிதான் தன் தோழி மூலமாகப் பெற்றோருக்குச் சொல்லிச் சம்பந்தம் பேசவைத்தார்களாம்.
இது மகேந்திரனைப் பலவாறு யோசிக்க வைத்தது. பணம் என்பதே அந்தஸ்திற்கும் மரியாதைக்கும் அடிப்படை என்று கருதுகிற லௌகீக உலகில் நாம் பணமும் சேர்க்கவேண்டும், மரியாதையும் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார். தெளிவான நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள இது முக்கிய படியாக இருந்திருக்கிறது.
வரதராஜன் சாருடன் ஒருநாள் அவர் வீட்டில் உடனிருந்து அவர் வேதனைகள் வருத்தங்களைக் காதில் போட்டுக்கொண்டது நினைவிற்கு வந்தது. அவர் சொன்னது சோகக் கதை. இவர் சொல்வது தத்துவக் கதை. இருவரும் மனம் திறந்து பேசியதற்கு ஒரே காரணம் … நான் ஒரு ஒன்வே டிராபிக்.
நாளடைவில், திருடன் தனது கத்தி, கடப்பாறை ஆகியவற்றைச் சாத்திவைக்கத் தேடும் மூலையாக நான் ஆகிவிடுவேனோ என்று தோன்றியது